தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழா, தமிழ் அறவாரியம் கொண்டாடுகிறது

 

Tamil foundation logoமலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை பெற்றுள்ளன. ஒரு பள்ளியில் தமிழ் கற்பித்தல் அக்டோபர் 21, 1816 இல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு 2016 அக்டோபர் 20 துடன் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை எட்டுகின்றன.

இந்த வரலாற்று நிகழ்ச்சி நாடு முழுவதும் பெரும் விழாவாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அறவாரியம் மலேசியா முன்னெடுத்துள்ளது. அதன் அடிப்படையில், முதல் கட்ட நடவடிக்கையாக நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் “மரக்கன்றுகள்” நடும் திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது..

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அறவாரியம் மாநில கல்வி இலாகாகள், கல்வி அமைச்சு, மாநில அரசுகள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளி மேளாலர் வாரியங்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், இதர பொதுமக்களமமற்றும் சீனமொழிக்கல்வி ஆர்வலர்கள் ஆகியோருடன் நெருக்கமாக செயல்பட்டு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் வலுவூட்டி வந்திருக்கிறது என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியறிக்கையில் கூறுகிறார்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழாவை கடந்த 19 அக்டோபர், 2015 இல் கல்வி அமைச்சு கோலாலம்பூர் பத்து மலையில் கொண்டாடியது. அந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட்டும் கலந்து கொண்டார். இது மகிழ்ச்சிக்குரியது என்றாரவர்.

இந்நாட்டில் பள்ளியில் தமிழ் கற்பித்தல் பினாங்கு ஃபிரி ஸ்கூலில் அக்டோபர் 21, 1816 மரியாதைக்குரிய ரோபர்ட் ஸ்பார்க்கி ஹட்சிங்ஸ்சன் அவர்களால் தொடங்கப்பட்டது என்று கூறிய இராகவன், அதன் பின்னர் பல்வேறு தனிப்பட்ட ஆர்வலர்கள், தோட்ட நிருவாகங்கள், தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், நகர்புற பொது அமைப்புகள், காலனித்துவ பிரிட்டீஷ் அரசு மற்றும் சுதந்திர மலாயா அரசு ஆகியவற்றின் விடா முயற்சிகள் மற்றும் ஆதரவுடன் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்டன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. தற்போது 524 தமிழ்ப்பள்ளிகள் இருக்கிறன.

கூடுதல் தமிழ்ப்பள்ளிகள் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதைச் சுட்டிக் காட்டிய இராகவன், தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை கூடும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்ச்சியை தமிழ் அறவாரியம் மலாயாப் பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடாக நடைபெறுகிறது. “தமிழ்ப்பள்ளியில் 200 ஆண்டு தமிழ்க்கல்வி மீதான மாநாடு” என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர் என்று இராகவன் தெரிவித்தார்.

இம்மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 31, 2015 இல் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00 வரையில் நடைபெறும்.

பெரு விழாவாகக் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வியின் தரம், தமிழ்ப்பள்ளிகளுக்கான சமமான அரசாங்க நிதி ஒதுக்கீடு போன்ற சம்பந்தப்பட்ட விவாகாரங்களும் விவாதிக்கப்படும் என்று இராகவன் மேலும் கூறினார்.