தமிழ்ப்பள்ளிகளின் காவலன் மஇகாவா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 4, 2015.

kulaதமிழ்ப் பள்ளிகளின் வயது 200,ம.இ.கா.வின் வயது 58. தமிழ்ப்பள்ளிகளின் காவலன் ம.இ.க வா? தமிழ்ப்பள்ளிகளை  கட்டுவதற்கென அரசாங்கம் 2012 இல் 100 மில்லியன்  ரிங்கிட்டை ஒதுக்கியது. அதில் பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கென ரிம44.3 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஜோகூரில் 5, கெடாவில் 1, மலாக்காவில் 1,நெகிரி செம்பிலானில் 4, பஹாங்கில் 3 பேராக்கில் 2, பினாங்கில் 1, சிலாங்கூரில் 2 என 19 பள்ளிகள் இடமாற்றம் செய்தவதற்காக  ஒதுக்கப்பட்ட நிதி அது.

இதில் எத்தனைப் பள்ளிகள்  உண்மையிலேயே இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கட்டிடத்தை  பெற்றுள்ளன என்ற விவரங்கள்  தெளிவாக இல்லை. உதாரணத்திற்கு,  சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செரெண்டா தமிழ்ப்பள்ளி 2012ஆம் ஆண்டிலிருந்தே இன்னும் கட்டப்படாமலேயே இருக்கின்றது. அதே போல பேராக்கில் உள்ள டோவன்பி தோட்டப்பள்ளியும் கட்டப்படாமலேயே உள்ளது. இது போல மற்ற பள்ளிகளின்  விவரங்கள் தெளிவாக இல்லை.

 

எங்கே போனது?

 

அவ்வாறே, 2013 இல் அரசாங்கம் ரிம100 மில்லியனை தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கியது. அதில்18 பள்ளிகள்அடையாளம்  காணப்பட்டு இடமாற்றம் செய்வதற்காக ரிம62 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக அறிவிப்பு செய்தது. அந்த இடமாற்றங்கள் நடைபெற்றதா என்பதும் தெரியவில்லை. மேலும் அந்த ஒதுகீட்டின் வழி மிஞ்சிய ரிம 38 மில்லியன் எங்கே போனது என்ற விவரமும் புரியவில்லை?

 

ஜோகூரில் 3, கெடாவில் 1, மலாக்காவில் 2, நெகிரி செம்பிலானில் 3, பஹாங்கில் 1, பேராக்கில் 2, பினாங்கில்1, சிலாங்கூரில் 5 என மொத்தம் 18 Tamil school - finance6பள்ளிகளில் எந்தப் பள்ளிகள் என்ன நிலையில் உள்ளன என்ற  விவரம் முழுமையாக இல்லை. எனக்கு  தெரிந்து  தைப்பிங்கிலுள்ள தாமான் காயாவில் கட்டப்படவேண்டிய  தமிழ்ப் பள்ளி இன்னும் கட்டப்படாமலேயே இருக்கிறது. இது போல ஈப்போ, குனோங் ராப்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கென ஒதுக்கீடு இருந்தும் அப்பள்ளி இன்னும் கட்டப்படாமலேயே உள்ளது.

 

2014 இல் ரிம50 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்காக  ஒதுக்கப்பட்டது. அப்பணத்தில்  சமீபத்தில்  துணைக் கல்வி அமைச்சர் ரிம15 மில்லியனை தமிழ்ப்பள்ளிகளுக்காக  கொடுத்தார். மீதம் 35 மில்லியன் என்ன ஆனது ?

 

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கென ரிம250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கல்வி அமைச்சு செலவு செய்ததாக அறிவித்தது ரிம121 மில்லியன். அந்நிதி இன்னும் உள்ளதா அல்லது வேறு மொழிப் பள்ளிகளுக்குத் திசை திருப்பப்பட்டுவிட்டதா?. உண்மை நிலையை விளக்க  துணைக் கல்வி அமைச்சர் முன் வர வேண்டும்.மேலும் எவ்வளவு  தொகை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்கும் பழுது பார்த்தலுக்கும்  செலவிடப்படுள்ளது  போன்ற விவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை.

 

நாட்டில் உள்ள எத்தனை தமிழ்ப்பள்ளிகள் பாழடைந்த நிலையிலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மின்சாரமும் தண்ணீரும் இல்லாமலும், பாலர் பள்ளிகள் இன்றியும்  உள்ளன என்பது அமைச்சருக்கு தெரியுமா? இருக்கின்ற பாலர் பள்ளிகளில் எத்தனை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பதாகிலும்  அவருக்கு தெரியுமா ?

 

கிள்ளிக் கொடுக்கும் நாடகம்?

 

சமீபத்தில்  ஈப்போவில் நடந்த மாதிரி காசோலை வழங்கும்  நிகழ்ச்சியில் வெறும் கண்துடைப்புக்காகவும் அரசியல்  ஆதாயத்திற்காகவும், Seaport Tamil school1கமலநாதன் கூட்டத்தைக் கூட்டி இந்த இந்தப் பள்ளிகளுக்கு இவ்வளவு கொடுக்கிறேன் என்று அரசாங்கம் அள்ளிக் கொடுத்த பணத்தில் கிள்ளிக் கொடுத்தார். அதோடு தமிழ்ப் பள்ளிகளுடன் நேரடி தொடர்பில்லாத, ஒன்றுமே செய்யாத சில ம.இ.கா வட்டாரத் தலைவர்களை மேடைக்கழைத்து, அவர்களுக்கு முகஸ்துதி பாடி ஏதோ இப்பணம் ம.இ.காவினரின் முயற்சியினால்தான் அரசாங்கம் கொடுத்தது போன்ற நாடகம் நடத்தியதை அங்கு  வந்திருந்தவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். மேடையில் ஏறிய சில ம.இ.கா தலைவர்கள் முகத்தில் அசடு வழிந்தபோதே இது தெளிவாகத் தெரிந்தது.

 

அப்படியென்றால், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், அரசு சார இயக்கங்கள், பொதுமக்கள்தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒன்றும் செய்யவில்லையா?

 

kamalanatahanஇது போன்ற அரசியல் நாடகங்களை கமலநாதன் நிறுத்திக்  கொள்ள வேண்டும். இந்தியர்களின் உயிர்நாடியாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் 200 வருடகால வரலாற்றைக் கொண்டது என்பது கமலநாதனுக்கும் தெரியும். ம.இ.கா அரசியல் கட்சி  வெறும் 58 ஆண்டுகளே இந்நாட்டில் இருகின்றது. ம.இ.கா வின் அரசியல்  பலம் நலிந்து வரும் இவ்வேளையில் கமலநாதன் அதன் பலவீனத்தை பலமாகக் காட்ட இப்படியெல்லாம் நாடகமாடக் கூடாது. ம.இ கா மட்டுமல்ல வேறு எந்த கட்சியும் இல்லையென்றாலும் தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்து நிற்கும். அதற்கு வலு கொடுக்க ம.இ.கா தேவையில்லை , இந்தியச்முதாயமே போதும்.

 

இப்பெறும் தொகையை  நிர்வகிக்க  அவரால்  இயலவில்லை என்றால்,  ஒரு  தொழிற்நுட்ப செயற்குழு அமைத்து அதன் பரிந்துரையின் கீழ் ஒதுக்கீடுகள் பள்ளி மேலாளர் வாரியத்திடம் கொடுக்கப்படலாம். இந்த தொழிற்நுட்ப செயற்குழுவில் அங்கதினர்களாக பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் , கட்டுக்கோப்பாக இயங்கும் அரசு சார இயக்கங்கள் மற்றும் தமிழ்ப்பற்றாளர்கள் போன்றவர்களை  இடம் பெறச் செய்யலாம்.

 

ஒதுக்கீடுகள் அவற்றின் இலக்கை அடையவும், நடவடிக்கைகள்  வெளிப்படையாகவும், பொறுப்பாகவும் இருப்பதையும் இந்தத் தொழிற்நுட்ப  செயற்குழு  உறுதி செய்யலாம்.

 

அரசியலைத் தள்ளிவைத்துவிட்டு கமலநாதன் தமிழ்ப்பள்ளிகளின்  சீரமைப்புக்கு கடிமான உழைப்பையும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட   முழு ஒதுக்கீட்டையும் பெற்று தர வேண்டும்.