தமிழ் அறவாரியத்தின் “இம்பாக்” திட்டம் சீன மற்றும் மலாய் பெற்றோர்களுக்கும் விரிவாக்கம் காண்கின்றது

 

 

GBM-Impakமலேசியாவில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. சீன மற்றும் மலாய்ப்பள்ளி மாணவர்களும் இருக்கின்றனர். இந்நிலைமை இந்நாட்டில் மட்டுமல்ல, உலகமுழுவதும் காணப்படுகிறது.

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று தங்களுடைய குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு. தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பதில் நல்லதோர் வழிகாட்டியாக இருக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதை எப்படிச் செய்வது என்பதுதான் பெற்றோர்களுக்கு புரியாததாக இருந்தது.

இப்பிரச்சனைக்கு ஜோன் ஆர். பர்ன் மற்றும் விக்கி பர்ட் என்ற இரு அமெரிக்கர்களும் இதில் ஆர்வம் கொண்ட பெற்றோர்களும் கல்வியாளர்களும் இணந்து “பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்” (Parents Assuring Students Success (PASS)) என்ற திட்டத்தை வரைந்து செயல்படுத்தினர்.

“தமிழ் அறவாரியம் நமது நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப இத்திட்டத்தில் தேவையான சில மாற்றங்களைச் செய்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பயன்படுத்துவதற்காக தமிழ்ப்பள்ளிகளில் அறிமுகப்படித்தியது”, என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் இராகவன் அண்ணாமலை நேற்று கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பெற்றோர்களுக்கான இப்பயிற்சியில், 1. பெற்றோர் மனப்பாங்கு, 2. வீட்டுச் சூழல், 3. கற்றல் திறன்கள், 4. கற்றலைத் துரிதப்படுத்தும் காரணிகள், 5. குறிப்பு எடுக்கும் திறன், 6. மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராக்குதல், 7. நினைவாற்றலும் சிந்திக்கும் திறனும் மற்றும் 8. வாசிப்புத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது என்று இராகவன் விளக்கம் அளித்தார்.

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பயிற்சி திட்டத்தில் இதுவரையில் 10,000 க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர் என்ற விபரத்தையும் அவர் வெளியிட்டார்.

மேலும், இந்த இம்பாக் திட்டம் இப்போது அரசாங்கத்தின் கவனத்தையும் ஈற்றுள்ளது என்றாரவர்.

 

இம்பாக் திட்டம்

 

இப்போது இத்திட்டம் “Ibubapa Memastikan Peningkatan Akademic Anak (IMPAK) என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் அறவாரியம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள இந்த இம்பாக் திட்டத்தை சீன மற்றும் தேசிய தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதற்குப் பொறுப்பான ஜிபிஎம்-சிடிஎஸ்சி குழுவின் தலைவர் ஷாருல் அமான் அச்செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தமிழ் அறவாரியம் அறிமுகப்படுத்திய இம்பாக் திட்டம் மாண்டரின் மற்றும் பகசா மலேசியா ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழ் அறவாரியம் செயல்படுத்தும் திட்டத்தின் 8 பகுதிகளுடன் இன்னும் இரண்டு பகுதிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவை: நிதி நிருவாகம் மற்றும் உடல் நலம் மற்றும் உணவூட்டம் ஆகும்.

ஜிபிஎம்-சிஎஸ்டிசி தொடங்கவுள்ள இப்பயிற்சித் திட்டத்தின் முதல் கட்டமாக பயிற்சியாளருக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஷாருல் தெரிவித்தார்.

 

கடுமையான சமுதாயப் பிரச்சனைகள்

 

GBM Klang5பள்ளி மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடுவது பெரியதோர் சமுதாயப் பிரச்சனையாக உருவாகி வருகிறது. சீன தொடக்கப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் அங்கு பகசா மொழியைக் கற்பதில் பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர் என்று 2003 ஆம் ஆண்டில் ஜியாவ் ஸோங் என்ற சீனப்பள்ளி ஆசிரியர்களின் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் அதன் விளைவாக பள்ளிப் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை 24 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜிபிஎம் தலைவர் டான் யு சிங் கூறினார்.

அரசுப்பள்ளிகளில், குறிப்பாக புதுமுக வகுப்பில்,  சேர்ந்த மாணவர்கள் படிப்பைக் கைவிடும் அளவு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிய டான் யு சிங், இது ஒரு மொழிப் பிரச்சனை என்றார்.

படிப்பைக் கைவிட்ட இவர்கள் எங்கே போகிறார்கள் என்று கேட்ட அவர், இது ஒரு மிகப் பெரிய சமுதாயப் பிரச்சனை என்றார்.

ஆனால், தாம் இம்பாக் பயிற்சி பட்டறைக்குச் சென்று அங்கே கண்ட காட்சி வேறுவிதமாக இருந்ததோடு அது நம்பிக்கை அளித்தது என்று கூறிய டான், அங்கிருந்த மாணவர்களின் குடும்பங்களில் சிறையிலடைக்கப்பட்ட பெற்றோர்கள், மது அருந்துதல், போதைப் பொருள் பாவித்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் குண்டர்கள் கும்பலில் சேரக்கூடியவர்கள் என்றார்.

ஆனால், அப்பட்டறையில் நடத்தப்படும் பயிற்சிகளின் விளைவாக அங்கிருந்த குழந்தைகளின் செயல்பாட்டில் ஆக்கமுறைகள் காணப்பட்டன. அவர்களிடம் நற்பண்பு காணப்பட்டது என்றாரவர்.

இந்த அனுபவத்தின் விளைவாக, இப்பயிற்சி முறையை இதர சமூகங்களுக்கும் விரிவுபடுத்தும் தூண்டுதல் எழுந்தது என்று டான் யு சிங் மேலும் கூறினார்.

இப்பிரச்சனைகள் குறித்து அமைச்சு எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று கூறிய டான், தமிழ் அறவாரியம் அறிமுகப்படுத்திய இம்பாக் திட்டம் வெற்றி கண்டுள்ளது என்றார்.