அரசாங்கம் தற்போது அறிமுகம் செய்துள்ள இரு மொழித் திட்டம் வழி ஆங்கில மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைத் தொடக்கப்பள்ளிகளில் போதிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைத் தமிழ்ப்பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் கருத்துக் கணிப்பு நடக்கிறது. இது சார்பாக கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம், அதை ஏற்றுக்கொள்வது தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்தாக அமையும் என எச்சரிக்கிறார்.
தமிழ்ப்பள்ளி வேண்டும், தமிழ்க்கல்வி நமது உரிமை, தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பது நமது முழக்கம். இப்படி நாம் முழங்க காரணம் தமிழ்க்கல்வி மீது நாம் கொண்டுள்ள பற்றும் நம்பிக்கையும்தான்.
இது உணர்ச்சி வசப்பட்டு உருவாக்கப்பட்டது அல்ல என்கிறார் ஆறுமுகம்.
இருமொழி கொள்கைகள் தமிழ்ப்பள்ளிக்கு உகந்தது என்ற வாதத்தை முன்வைக்கும் தரப்பினர், ஆங்கில மொழியின் வழி அறிவாற்றல் அதிகமாகும் என்றும் மேலும் இடைநிலைப்பள்ளிக்கு போகும்போது மாணவர்கள் சிரமம் இல்லாமல் அறிவியல் கணிதப் பாடங்களை கற்க இயலும் என்றும் கருதுகின்றனர்.
‘ஆங்கில மொழிதான் அறிவியல் மொழி. அதுதான் அறிவாற்றலுக்கு வித்திடும் என்றால் நாம் தமிழை எதற்காக கற்க வேண்டும்?’, என்று வினவும் ஆறுமுகம், தமிழும் வேண்டும், ஆங்கிலமும் வேண்டும் என்பவர்கள், எந்த அளவுக்கு தமிழ் வேண்டும் என்பதை விளக்க வேண்டும் என்கிறார்.
தமிழ்ப்பள்ளி வேண்டும் என்பது தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் காப்பதற்காகத்தான். அதன்வழிதான் தமிழர்களின் பண்பாட்டை ஓர் உயரிய வாழ்வியலுக்கு உயர்த்த முற்பட வேண்டும்.
வெறுமனே தமிழ் வேண்டும் என்ற எண்ணம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவாது. எனவே தமிழ் மொழி சார்பாக விவாதிக்கும் போது, விவாதங்கள் மொழியின் பயன்பாட்டை ஒரு முழுமையான மானிட வாழ்வியலுக்கு தேவைப்படும் உயிரோட்டமுள்ள தொடர்பாக கருத வேண்டும் என்கிறார் அவர்.
தொடக்கக்கல்வியை தாய்மொழியில் கற்பதுதான் மொழி வளர்ச்சிக்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் உகந்தது என்கிறது ஐக்கிய நாட்டு சபையின் கீழ் இயங்கும் யுனஸ்கோ என்ற ஆய்வு மையம். மேலும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை உற்றரிதல் வழிதான் கற்க இயலும். மாணவர்கள் இவற்றின் அடிப்படையில் கருத்தையும் தத்துவத்தையும் தாய்மொழியில்தான் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். தமிழ்ப்பள்ளி வேண்டும் என்பவர்களும் தமிழ்ப்பள்ளியே சிறந்த தேர்வு என்பவர்களும் ஆங்கிலத்தில் அறிவியல் கணிதம் வேண்டும் என்பது எந்த ஆய்வின் அடிப்படையில் என்பதை விளக்க வேண்டும்.
நமக்கு சிறந்த தமிழ்க்கல்வி வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட சிறந்த தமிழ்க்கல்வியை எப்படி ஆங்கில மொழி வழி பெற இயலும்?
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டால், தமிழ்ப்பள்ளிகளின் அமைப்புமுறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக முடியும் என்கிறார் ஆறுமுகம்.
மலேசியாவில் இருநூறு ஆண்டுகள் தமிழ்க்கல்வி விழாவை அடுத்த ஆண்டு கொண்டாட உள்ளோம். இருநூறு ஆண்டுகளாக படிப்படியாக பல போரட்டங்கள் வழி வளர்க்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இந்த இருமொழிக் கொள்கையால் பாதிப்படையக்கூடாது.
நமக்கு சிறந்த தமிழ்க்கல்வி வேண்டும், அவற்றை வழங்கும் மையங்களாக தமிழ்ப்பள்ளிகள் உருவாக வேண்டும் என்ற வகையில்தான் நமது சிந்தனை இருக்க வேண்டும் என்கிறார் ஆறுமுகம்.
‘Double-edged sword’.
நான் தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது என்பதில் நம்பிக்கை உள்ளவன் எனினும், ஐயா கா.ஆறுமுகம் அவர்களே, உங்கள் அறிக்கை குழப்பமாக உள்ளது. தமிழ் அறவாரியம் தமிழுக்காகப் போராடுகிறதா அல்லது தமிழருக்காகப் போராடுகிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். நன்றி.
தமிழ் பள்ளியில் அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என்பாரின் கருத்து. அப்பாடங்கள் இன்றைய நிலையில் தொழில்துறைக்கு அவசியம் என்பதால், ஆரம்பப் பள்ளியில் அதனை ஆங்கிலத்தில் கற்று அவ்வாறே இடைநிலைப் பள்ளியிலும் தொடர்வதற்கு வழிவகை செய்தால் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவார் என்பதாகும். இந்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மேற்கல்வி படிப்பதற்கும் இவ்வழியானது சிறந்தது என்பது இவ்வழியாரின் கருத்தாகும். இதில் நியாயமிருக்கின்றது. இவ்வழியைப் பின் பற்ற விரும்பும் பெற்றோரில் பெரும்பாலோர் தத்தம் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழி வழி இப்பாட போதனைப் பெற்றால் போதும். 5-ம் படிவத்திர்க்குப் பின்பு நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டிய வழியை ஏற்படுத்திக் கொள்வோம் என்பதாகும். இவ்வாறான பெற்றோர் தமிழ் பள்ளியை நாடி வருவதர்க்குக் காரணம் தமிழ் மொழி பற்றால் அல்ல மாறாக மலாய்மொழி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில போதனா தரத்தில் அவநம்பிக்கை கொண்டிருப்பதால். இது ஓரளவு உண்மைதான். இதனால்தான் தமிழ் பள்ளியில் ஆங்கில மொழி வழி அறிவியல் கணித பாடமும் போதிக்கப் பட்ட ஆரம்ப காலத்தில் அதிகமான இண்டிய பெற்றோர் அவர்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேர்த்தனர். இந்நாட்டில் மொத்த இண்டிய மாணவர்களில் 50% மேல் தமிழ் பள்ளியில் பதிந்தர்க்கும் இதுதான் காரணம். இது சுயநலம். பின்னர் மீண்டும் அறிவியல் கணித பாடம் தாய்மொழிக்கு 2014 -ல் திரும்பி வந்ததால் இவ்வாறான சுயநல இண்டிய பெற்றோரில் சிலர் மீண்டும் மலாய் பள்ளிக்கே அவர்தம் பிள்ளைகளை பதிந்தனர். தமிழ் பள்ளியில் படித்தால் என்ன மலாய் மொழி பள்ளியில் படித்தால் என்ன? எல்லாமே எங்களுக்கு ஒன்றாகத்தான் தெரிகின்றது என்றனர் இவ்வாறான சுயநல இண்டிய பெற்றோர்கள். அதனால்தான் 2014-ம் & 2015-ம் ஆண்டுகளில் தமிழ் பள்ளியில் புதிய மாணவர்களின் சேர்க்கை குறைந்து காணப்பட்டது. இவ்வாறான கருத்துடையோர் பெரும்பாலும் நகர்புற இண்டிய பெற்றோரே. தொடரும்.
தமிழ் பள்ளியில் அறிவியல் கணித பாடங்களைத் தமிழில் போதிக்க வேண்டும் என்பாரின் கருத்து. இவ்விரு பாடங்களையும் தமிழில் போதிக்க வேண்டும் என்று வாதிடும் பெற்றோர், தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவதின் நோக்கம் அவர் தமிழ் மொழியில் இப்பாடங்களைக் கற்று தம் தமிழ் மொழி வளத்தையும், அதே வேளையில் தாய்மொழிக் கல்வியில் போதிக்கப் படும் பாடத்தை சுலபமாக புரிந்துக் கொண்டு வேண்டிய கல்வி அறிவை வளப்படுத்திக் கொள்ள முடியும். இது நகர் மற்றும் கிராமப்புற தமிழ் பள்ளிகள் இரண்டிற்குமே ஏற்புடையதாகும் இதன் காரணமாகத்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றோம். இப்பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப் படுமானால் மாணவர்கள் அப்பாடக் கலைச் சொற்களை ஆங்கிலத்தில் தெரிந்து வைத்திருக்கின்றனர் ஆனால் அதற்கான தமிழ் வார்த்தைகளை அறிந்திருக்கவில்லை என்பதாகும். அப்புறம் ஏன் நாங்கள் எங்கள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்?. மலாய் மொழி ஆரம்பப் பள்ளியிலேயே சேர்த்து விடலாமே. இதனை உண்மையாக்கும் வண்ணம் ஒருமுறை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இருந்து பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக் கூட்டத்திற்கு வந்த தமிழ் விரிவுரையாளர் இப்படிச் சொன்னார்.
“வரும் வழியில் பள்ளியின் ஓரம் ஒரு குளத்தைக் கண்டேன் அங்கே நீந்திக் கொண்டிருந்தது அனைத்தும் ஆங்கில மீன்களே தமிழ் மீன்களைக் காணோம்”
அவர் மேலும் விவரித்தார். குளத்தில் இருக்கும் மீன்களுக்கான பெயரை ஆங்கிலத்தில் அட்டை ஒன்றில் எழுதி சொருகி வைத்திருந்தனர். அதற்கு சமமான மீனின் தமிழ் பெயர்களைக் காணவில்லை என்றார். இப்படி ஆங்கிலத்தை நாம் மேம்படுத்தி முன் நிறுத்தினோமானால் தமிழ் பள்ளியில் ஆங்கிலம் வளரும், தமிழ் தேயும். இது தமிழ் பள்ளிக்குத் தேவைதானா? தமிழ் பள்ளி என்பது பின்னாளில் இண்டிய பள்ளி என்று மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியும் பேசி இப்படியும் பேசினால் இதற்கு விடிவுதான் என்ன என்று செம்பருத்தி வாசகர்கள் கேட்கக் கூடும். தொடரும்.
பாவம் அறிவியலும் கணிதமும். அவை மலேசியாவில் படும் பாடை நினைத்தால் கவலைதான் வருகிறது. இவற்றை ஆங்கிலத்தில் கற்பித்தால் நான் எங்கோ போவோமென்று சொன்னார்கள். ஆனால் நடந்ததோ அதற்கு நேரெதிர். ஆதனால்தான் மீண்டும் தாய்மொழிவழி கற்பிக்கத் தொடங்கினர். இப்போது என்ன நடந்துவிட்டதென்று மீண்டும் ஆங்கிலத்துக்குச் செல்கிறோம்? பெருந்திட்டத்தில் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? பாவம் அறிவியல். அதனால் பேச முடிந்தால், அது “முட்டாள்களே! என்னைப் பற்றிப் பேசி முடிவெடுக்கும் நீங்கள் என்னைக் கொஞ்சம் பயன்படுத்துங்களேன்,” என்று சொல்லி அழும்.
மகாதீர் பிரதமராக இருந்து இறங்கும் கால கட்டத்தில் அறிவியல் கணித பாடம் ஆங்கில மொழி போதனா முறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கல்வி அமைச்சின் முடிவை வெகுவாக எதிர்த்தவர்கள் சீன கல்வி இயக்கங்களும், சீன மொழி ஆரம்ப பள்ளிகளுமே. தமிழ் மொழி பள்ளிகளுக்கான முடிவை யாரையும் கேட்டுச் செய்யவில்லை. மலேசிய தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கமும், ம.இ.க. தலைமைத்துவமும் சேர்ந்து எடுத்த முடிவே தமிழ் பள்ளிகளுக்கான முடிவானது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு கல்வி அமைச்சால் வலுக்கட்டாயமாக கொண்டு வந்த பொழுது சீன மொழி ஆரம்ப பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஒரு நூதமான முறையைக் கையாண்டார்கள். அறிவியல் கணித பாடத்தை ஆங்கிலத்தில் போதிக்கும் அதே வேளையில் ஒவ்வொரு நாளும் பாட நேரத்தைக் கூட்டி அப்பாடங்களை மேண்டரின் மொழியிலும் போதித்து வந்தார்கள். இரு மொழியிலும் சீன பள்ளி மாணவர்கள் அப்பாடத்திர்க்கான கலைச் சொற்களை அறிந்து வைத்திருந்தனர். தாய் மொழியிலும் அப்பாடங்கள் மேற்படி நேரத்தில் போதிக்கப்படதால் அப்பாடங்களை மாணவர்கள் சுலபமாகப் புரிந்து கொண்டனர். இதற்கு அப்பள்ளிகளின் ஆசிரியர் ஒத்துழைப்பும், பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைத்தது. ஆசிரியர் அவர்தம் பாட நேரத்தை அதிகரித்துப் போதிக்க ஒப்புக் கொண்டனர். பெற்றோர் கால தாமதாக பள்ளி முடிந்து அம்மாணவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் வழி ஒற்றுமை கண்டனர். தமிழ் பள்ளிகளிகளிலும் இம்முறை கையாளப் பட்டால் தமிழ் மொழி போதைனக்கு பங்கம் வராமல் இரு மொழி கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தலாம். ஒப்புக் கொள்வார்களா தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டிராத பெற்றோர்?
இந்த மாற்றங்களுக்கான நோக்கம் ஆங்கிலத்தில் மலேசியர்களுக்கு புலமை ஏற்பட வேண்டும் என்பதாகும் .ஆங்கிலத்தை கட்டாய பாடமாக்குவதாலும் ,ஆங்கிலம் கற்பிக்கும் நேரம் சிறிது அதிகரிப்பதாலும் இதை நாம் அடைய முடியும் .
இல்லை.இல்லை. தவறு தேனீ அவர்களே! மகாதீரின் கூற்றுக்கு கடைசிவரை சீன சமூகம் தலைசாய்க்கவில்லை.அவர்கள் இன்றுவரை கணிதத்தையும் அறிவியல்லையும் முழுவதுமாக தங்கள் தாய் மொழியிலேயே கற்று தேறிவருகின்றனர்.இரு மொழி கொள்கையை அவர்கள் பின்பற்றவில்லை என்றே கருதுகிறேன். நாம்தான் இந்த விஷயத்தில் இன்னும் மதில் மேல் பூனைகளாக இருக்கின்றோம்.
தமிழ் மொழியில் கல்வி பயிலாதவர்கள் தமிழ் மொழியி்ன் பயனை உணர மாட்டார்கள். இவர்களுக்கு ஆங்கில மொழி மீது மோகம் உண்டு. அதனால், தமிழ் மொழியின் ஆற்றலை அறியாமல் தமிழ் மொழியை புறக்கணிக்க முற்படுவது இயல்பாகும். இப்படி பட்டவர்கள் தமிழ் பள்ளியை தேர்வு செய்யும் போது அவர்கள் அதை ஆங்கிலப் பார்வையில் தான் பார்ப்பார்கள்.
பகலவன் – நல்ல கேள்வி – தமிழ் அறவாரியம் தமிழ் கல்விக்காக உருவாக்கப்பட்டது அதன் வழி – உயரிய மக்களை உருவாக்க இயலும் என்பது அதன் நோக்கம் – Its vision is to realize the linguistic and cultural potential of Tamil education towards achieving a high level of personal well-being as well as being able to contribute to the harmony and betterment of the family, the society and the country as a whole. என்கிறது அதன் அகப்பக்கம்.
உடனே தேவமணி இவ்வாறு அறிக்கை விடுவானே தமிழ் பள்ளிக்கு போகாதேங்க என் பிள்ளைகளை நான் மலாய் பள்ளிக்கு அனுப்பிய மாதிரி என் முன்றைய உதவியாளன் prakash ராவ் அவன் பிள்ளையை மலாய் பள்ளிக்கு அனுப்பிய மாதிரி அனுப்புங்கள் அங்கே ஆங்கிலம் சிறப்பாக கற்று கொடுப்பார்கள் எப்படி video தமிழ் ஆசிரியர் science ஆங்கிலத்தில் கற்று கொடுப்பார் சம்பந்த பட்ட மலாய் ஆசிரியரோ please tengok தட் teacher taught video நந்தி jawab question ya . இது தான் நடக்கும் . தமிழ் பள்ளியில் மாணவர்கள் மொழி ஆற்றல் நிறைந்தவர்கள் உதாரணம் என்னை எடுத்து கொள்ளுங்கள் நான் தமிழ் பள்ளியில் கற்ற ஒரு மாணவன் . i CAN WRITE AND SPEAK GOOD ENGLISH AND MALAY ALSO TAMIL . எங்களுக்கு என் ஆசிரியர்கள் தமிழில்தான் அறிவியல் சிறந்த முறையில் கற்று கொடுத்தனர் . WHEN we WENT TO SECONDARY SCHOOL WE EXCEL IN ALL THE THREE LANGUAGES எதிர்காலத்தில் நம் தமிழ் பள்ளிகள் அழியாமல் இருக்க தமிழ் ஆசிரியர்கள் மூச்சுவிட தமிழ் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்கு ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பது நல்லது , ஏற்கெனெவே ஒன்று நடந்ததை எல்லாரும் கவனிக்க மறந்த்ருப்பீர்கள் அதாவது malay இனத்தவரை கணிதம் அறிவியல் கற்று கொடுக்க தமிழ் பள்ளியில் கொண்டுவந்ததை , இவர்கள் வந்தவுடன் நல்லா இருந்த பள்ளியின் நிலைமை மேலும் மோசம் அடைந்ததை எல்லோருக்குமே தெரியும் தமிழனிடம் ஒற்றுமை இல்லாவிட்டாலும் அவன் ஒரு தவறை செய்ய மாட்டான் தன்னை நம்பி வந்த தமிழ் குழந்தைகளை நன்கு கற்று கொடுக்க முயல்வதை என் கண்ணாலேயே நான் பார்த்ததுண்டு . அவ்வகையில் தமிழ் வாழ தமிழன் இந்நாட்டிலே வாழ அன்பர் ஆறுமுகம் அவர்கள் கூறியதை கருத்தில் கொண்டு ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பது நலம் . தமிழில் கற்று கொடுத்தாலும் FREE perioddil மற்ற இரு மொழிகளிலும் தமிழ் ஆசிரியர்கள் இம்மாணவர்கள் சிறக்க வழி அமைத்து கொடுக்க வேண்டுகிறேன் .
மகாதீர் காலத்தில் கொண்டு வரப்பட்ட அறிவியல் கணிதம் ஆங்கிலத்தில் போதிக்கப் பட வேண்டும் என்ற முடிவிற்கு மலாய்க்காரர்களும் சீன கல்வி இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருமொழி பாட திட்டம் அன்றே இருந்தது. ஆங்கிலத்தில் போதிக்கும் அதே வேளையில், அவர்தம் தாய் மொழியிலும் போதிக்கப் பட்டு வந்தது. பரீட்சை கேள்விகள் ஆங்கிலத்திலும் அவர்தம் தாய் மொழியிலும் தயாரிக்கப் பட்டு அதற்கான தேர்வு விடைகளையும் இரு மொழிகளிலும் தந்தனர். இதில் தமிழ் பள்ளி மாணவர்கள் அவ்விரு பாடங்களையும் முழுமையாக ஆங்கில மொழியிலேயே படித்து யு.பி.எஸ்.ஆர். தேர்வில் ஏறக்குறைய 95% -க்கு மேலானோர் ஆங்கில மொழியில்
பதில் அளித்து வந்தனர். மலாய் ஆரம்ப பள்ளியில் ஏறக்குறைய 70% மாணவர்கள் அவ்விரு பாடங்களுக்கும் மலாய் மொழியில் பதில் அளித்து வந்தனர். சீனப் பள்ளியின் புள்ளி விவரம் தெரியவில்லை. இருந்தாலும் சீனப் பள்ளிகளில் பாதிக்கும் மேல் யு.பி.எஸ். ஆர் தேர்வில் சீன மொழியிலேயே பதில் அளித்து வந்ததாக கேள்வி. இப்படிப்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு பி.எம்.ஆர். பரீட்ச்சை வரை இவ்விரு பாடங்களும் ஆங்கிலத்தில் நடத்தப் பட்ட பொழுது பிற பள்ளி மாணவர்களை விட தமிழ் பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்கினர் என்பது உண்மை. இவ்வகை இருமொழி பாட திட்டத்தில் அதிகமாக பாதிக்கப் பட்டது புறநகர் மற்றும் கிராமப்புற மலாய் மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியில் போதிய தேர்ச்சியின்மையால், இடைநிலைப் பள்ளிகளிலும் அவ்வாறே ஆங்கிலப் போதனையில் பிற இன மாணவர்களை விட பின் தங்கி இருந்தனர். இதன் காரணமாகவே கல்வி அமைச்சு இத்திட்டத்தைக் கை விட்டது. மீண்டும் அவர்தம் தாய்மொழியிலேயே போதிக்கும் திட்டம் உருவானது. இது தமிழ் மற்றும் சீன மாணவர்களின் நன்மைக்காக செய்யப் படவில்லை மாறாக மலாய்கார பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு மாற்றப் பட்டது. தொடரும்
இன்றைய கல்வி அமைச்சர் வந்தவுடனே ஒரு சில திட்டங்களை இன வாரியாக பார்க்கப்பட்டது என்பதை அவ்வப்பொழுது வரும் செய்தி அறிக்கைகள் உர்ஜிதப் படுத்தின. அதன் அடிப்படையிலும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கையின் புதிய வரைத்திட்டத்தைக் கொண்டு இவ்விரு மொழி கல்வித் திட்டம் கொண்டு வரப் படுவதில் மறைக்கப் பட்ட உண்மைகள் இருப்பதாக உணர முடிகின்றது. நாமே கேட்காமல் நம்மைத் தேடி கல்வி அமைச்சு வருவதின் நோக்கமென்ன? முதலில், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு குழு என்ன மாதிரியான கல்வித் திட்டத்தை முன் வைத்தனர் என்று தெரியவில்லை. அறிவியல் கணித பாடங்கள் முழுமையாக ஒரே மொழியில் மட்டும் போதிக்கப் படும், தாய்மொழியில் போதிக்கப்படாது என்ற அடிப்படையில் முன் வைக்கப் படுகின்றதா அல்லது இதற்கு முன் இருந்தபடியே மீண்டும் அமுல்படுத்தப் படவிருக்கின்றதா என்பது தெரியவில்லை. இது ஆங்கில மொழியில் மட்டும் போதிக்கப் படும் என்றால் இதில் நமக்குத் தீவினையும் சேர்ந்தே வரவிருக்கின்றது. ஆங்கில மொழியில் மட்டும் போதிக்கப் படும் என்று கல்வி அமைச்சு திட்டம் கொண்டு வந்தால் தமிழ் சீன பள்ளிகளின் நிலை என்னவாகும்? இப்பாடங்களை தமிழ் சீனர் அல்லாத ஆசிரியர்களும் போதிக்கலாம் என்று கூறி பிற இன ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக தாய்மொழிப் பள்ளிகளில் திணிக்க கூடும். பிற இனத்தில் இருக்கும் 100,000 -க்கும் மேற்பட்ட வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கும் திட்டமா இது என்று நாம் என்ன வேண்டியுள்ளது! இன்று அவ்வாறு எல்லாம் நடக்காது என்று சொல்லி விட்டு பின்னர் இதனை சட்டமாக்கினால் யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இதனை கடந்த புதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவில் சீன மொழி இயக்கங்கள் கடினமான எதிர்ப்பு தெரிவித்தும் கல்வி அமைச்சு செவி சாய்க்காமல் தன்மூப்பாக அத்திட்டத்தை அமூல்படுத்த தொடங்கியது நாம் அறிந்ததே. அதே போல் பின்னாளில் இவ்விரு மொழி பாட திட்டத்தால் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கு பெரிய ஆபத்து ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் இப்பொழுதே உணர்ந்தாக வேண்டும். பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு குழு ஒரு அலுவலகப் பையன் (‘Office Boy’) செய்யும் வேலையைத்தான் செய்கின்றது. கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாங்கள் திட்டத்தை உருவாக்கித் தருகின்றோம். அவ்வளவே எங்கள் வேலை. இதனால் பிற்காலத்தில் தமிழ் பள்ளிக்கு வரப்போகும் அபாயத்தைப் பற்றி நாங்கள் எந்தவொரு உத்தவாரதமும் கொடுக்க முடியாது என்று இப்பொழுதே சொல்லி விடுவார்கள். அப்புறம் நாம் யாரிடம் சென்று ஒப்பாரி வைத்தாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை. அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகத்தான் முடியும். ஆதலால், தற்சமயம் நடைபெற்று வரும் தாய்மொழி வழி பாட போதனையையே மேற்கொள்வோம். நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள வேண்டாம். தமிழ் அறவாரியம் இத்திட்டத்தை முழு மூச்சாக எதிர்ப்பது அவசியம். அதுபோலவே தமிழர்களும் தமிழ் அறவாரியத்தின் பின் உறுதியாக நிற்பது அவசியம்.
திரு ஜோஷ் அவர்கள் அருமைய சொன்னார் , தமிழ் அழிவுக்கு தமிழன்தான் காரணமாய் இருக்க முடியும் …
தமிழ்ப்பள்ளியின் எதிர்காலத்தைக் கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் கலந்துரையாடி முடிவு செய்ய வேண்டாம் எனத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவினரைக் கேட்டுக் கொள்கிறேன். மலேசியா முழுதும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
மலேசியத் தமிழன் அவர்களே நன்கு சொன்னீர். தமிழன் அழிவுக்குத் தமிழ் பயன்பட்டுவிடுமோ என ஐயுறுகிறேன்.
வளர்ச்சி அடைந்த /வளர்ச்சி அடைந்த ஜப்பான் சீனா கொரியா இன்னும்பல நாடுகள் தங்கள் தாய்மொழியில் கற்கிறார்கள் .
சிந்திக்கும் ஆற்றல் தாய்மொழியில்தான் அதிகம் ..
ஆங்கிலம் ஒரு மொழி (தொடர்பு மொழிய )அவ்வளவுதான் ..
ஆங்கிலம் கற்றால்தான் அறிவு வரும்ன்னு சொல்வது சுத்த பைத்தியகாரத்தனம் .
இந்த திட்டத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் அறியவேண்டும் ..
மலேசிய மாணவர்கள் வெளிநாட்டில் பொறியியல் துறையில் படிக்க அரசாங்க கல்வி உபகாரத் தொகை கொடுக்கும் நாடுகளின் பட்டியல். ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான். இந்த நான்கு நாடுகளிலும் பொறியியல் படிக்க வேண்டுமானால் அந்த நாட்டு மக்களின் தாய் மொழியை கற்று அறிந்திருக்க வேண்டும். இல்லையேல், கல்வி ‘தடா’. வளர்ந்த நாடுகளுக்கு தாய்மொழியின் அவசியம் தெரிகின்றது. வளராத இந்த நாட்டு அரசாங்கத்திற்கு அது புரியவில்லை.
தமிழ்ப்பள்ளி தமிழர்களின் மாபெரும் வரலாற்றுச் சான்று. அதன் பயிற்று மொழிக்கு ஊறுவிளைவிக்க முனையாதீர்கள். மலேசிய தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவினரே தயவுசெய்து உங்கள் முயற்சியைக் கைவிடுங்கள். இல்லையேல் வரலாறு உங்களைத் தூற்றும். பின்னொரு காலத்தில் அறிவியல் , கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க ஏற்கும் நீங்கள் மலாய் மக்கள்மொழியில் கற்பிக்க மறுப்பது ஏன் எனும் கேள்வி எழுமானால் அதனைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? எனவே தயவுசெய்து வரலாற்றுப் பிழைகள் செய்யாதீர்?
தமிழ் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாதவர்கள் தமிழ் பள்ளியைப் பற்றி கருத்து கூறக் கூடாது
அப்படி போடுங்க பகலவன் !
தேனீ அவர்களின் கருத்தும் தொடர்ச்சியான விவாதமும் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள் தேனீ !
இத்திட்டத்தை எந்த ஒரு தமிழ் பள்ளியிலும் பரிட்சார்த்த முறையில் நடத்தப் போகின்றோம் என்று கல்வி அமைச்சு கொண்டு வந்ததால் அந்தந்த பள்ளியின் பெற்றோர் முழுவீச்சாக இத்திட்டத்தை எதிர்க்க வேண்டியது அவசியம். இல்லையேல், தமிழ் பள்ளிகளுக்கு இருண்ட காலம் தொடங்கி விட்டது என்று பொருள். எல்லோரும் விழிப்புடன் இருப்போம்.
நமது நாட்டு கல்வித் துறையை கல்வி அமைச்சராக வரக்கூடியவர்கல் அவர்கள் ஏதோ புதுமையாக எல்லா இன மாணவர்களுக்கும் நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு குழப்பத்தை தான் ஏற்ப்படுத்தி செல்கிறார்கள். அந்த வகையில் நாம் நமது பள்ளிகளில் தாய் மொழிக் கல்வியிலே எல்லா பாடங்களையும் கற்பதற்கு நிலை நிறுத்திக் கொள்வோம். அதற்க்கு நாம் தயாராகவும் இருப்போம். தமிழ்ப் பள்ளிகளை காப்போம்.
கடந்த காலத்தில் மலாய் பள்ளிகளில் நடத்திய ஆங்கிலம் வழி அறிவியல் மற்றும் கணித பாட போதனை ஒரு பெரிய தோல்வி என்று ஆய்வறிக்கையை கொடுத்த பேராசிரியரிடம் அது வெற்றிப் பெற்றது என்று மாற்றிக் கொடுக்கும்மாறு வற்புறுத்தி அறிக்கையை மாற்றி பெற்றுக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கல்வி அமைச்செல்லாம் இருக்கும் வரையில் இந்த இருமொழி கல்வித் திட்டம் வெற்றிப் பெறாது. நம்புங்கள். மலாய் மொழி தேசியவாதிகள் இதற்கு எக்காலமும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதற்கு முன்னமே ‘Gapena’ போன்ற இயக்ககங்களின் வழி நாம் பெற்ற அனுபவம் நமக்கு நல்லதொரு படிப்பினையை ஊட்டியுள்ளது.
தேனி அவர்களே! சீனப்பள்ளிகளில் ஏழு கணித பாடநேரத்தில் 2ஐயும் 5 அறிவியல் பாடநேரத்தில் 2ஐயும் மட்டுமே ஆங்கிலத்திற்குப் பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் தாய்மொழிக்குத்தான் இன்றுவரை முக்கியத்துவம் தந்து வருகின்றனர். நான் தேசிய மொழிக்கோ ஆங்கிலத்திற்கோ எதிர்ப்பானவனல்ல. இந்த நாட்டு சூழலில், ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியே சிறந்த முறை என்பேன். ஆங்கிலத்தில் அறிவியலையும் கணிதத்தையும் தங்கள் பிள்ளைகள் கற்க வேண்டுமென விரும்பும் பெற்றோர்கள் தமிழ்ப் பற்று இல்லாதவர்களே. அவர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியிலாவது போட்டுக் கொள்ளட்டும். ஆரம்பக் கல்வியைத் தமிழில் கற்கும் மாணவன் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றையும் கற்கிறான். ஆங்கிலம் முக்கியம் என்பதற்காக தமிழுக்குச் சாவுமணி அடித்திடாதீர். தமிழனுக்கு வேலை வாய்ப்பு இல்லாமலாகி மலாய்க்காரர் ஆதிக்கம் தமிழ்ப் பள்ளிகளில் மேலோங்கும். இடைநிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்துவதால் எந்தக் கேடுமில்லை. தமிழுக்கும் பாதிப்பில்லை.
கீரன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி. தங்களின் கருத்துக்களை வெகுவாகப் பார்ப்பதில்லை. வேறு புனைபெயரில் எழுதுகின்றீர்களோ? வருகைக்கு நன்றி.