தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய இருமொழி பாடத்திட்டம் வேண்டாம், தமிழ் அறவாரியம்

 

 

Tamil foundation logoதேசியப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கற்பிக்கப்படுவதற்காக கல்வி அமைச்சு அறிவித்துள்ள முன்னோடித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் துறையின்  மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவு குழு முன்வைத்த கோரிக்கையை மலேசியத் தமிழ் அறவாரியம் இன்று நிராகரித்தது.

தற்போது தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தமிழில் கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை தொடர வேண்டும் என்று இன்று பெட்டாலிங் ஜெயாவில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் மலேசியத் தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவு குழு ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலில் தமிழ் அறவாரியம் அதன் நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தது.

கல்வி அமைச்சு, பிரதமர் துறை அல்ல, கடந்த அக்டோபரில் அறிவித்திருந்த இருமொழி பாடத்திட்டம் (Dual Language Programme, Pilot Project) தேசியப்பள்ளியில் பகசா மலேசியாவை மேன்மைபடுத்துவதற்கும் ஆங்கில மொழியை வலுப்படுத்துவதற்கும் வரையப்பட்ட அமலாக்கத் திட்டமாகும். இதற்காக பட்ஜெட் 2016 இல் ரிம38.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருமொழி பாடத்திட்டம் அறிவியல், கணிதம் மற்றும் தகவல் தொழில் துறை ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் பகசா மலேசியா மொழிகளில் கற்பிக்கும் திட்டத்தை அமலாக்கம் செய்யும் என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

இந்த முன்னோடித் திட்டம் 300 தேசியமொழிப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும். அதுவும், முதல் கட்டமாக 20 லிருந்து 30 பள்ளிகள் மட்டுமே பங்கேற்கும்.

இந்த இருமொழி பாடத்திட்டம் அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை அல்ல. அமைச்சரவையின் ஒப்புதலோடு அரசாங்கம் வெளியிட்ட மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் இக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.  அதை அமல்படுத்துவதற்குத்தான் இருமொழி பாடத்திட்டம்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ள பகசா மலேசியாவை மேன்மையாக்கும் ஆங்கிலத்தை வலுப்படுத்தும் பரிந்துரையில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளுக்கு இடமில்லை.  ஏனெனில் கல்விப் பெருந்திட்டத்தின் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நோக்கமே தேசியப்பள்ளியை மட்டுமே பெற்றோர்களின் முதன்மைத் தேர்வுப் பள்ளியாக்குவதாகும்.

தேசியப்பள்ளியில் பகசா மலேசியாவையும் ஆங்கிலத்தையும் முதன்மைப்படுத்துவதின் வழி தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தேசியப்பள்ளியின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதுதான் கல்விப் பெருந்திட்டத்தின் இறுதி குறிக்கோள். அதன் அமலாக்க நடவடிக்கைதான் தற்போது கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ள இருமொழி பாடத்திட்டம். தமிழ் அறவாரியத்திற்கு இதில் உடன்பாடு இல்லை. தமிழ் அறவாரியத்தின் கடப்பாடு தமிழ்ப்பள்ளியை மேம்படுத்துவதான்; தாரைவார்ப்பதல்ல.

Tamil school our choice with studentsதமிழ்ப்பள்ளி மாணவர்கள் மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் அவற்றை மலாய் அல்லது ஆங்கில மொழியில்தான் கற்க வேண்டும், தமிழில் கற்பது சாத்தியமல்ல என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. தாய்மொழியின் வழி எதையும், அறிவியல் உட்பட, கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு சான்றுகள் நிறைய இருக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணிதம், அறிவியல் ஆகிய பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டன. பின்னர், தீடீரென்று தமிழுக்கு மாற்றப்பட்டது. இப்போது அந்த நடைமுறையை மாற்றி தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பரப்பும் நடவடிக்கையில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரவுக் குழு இறங்கியுள்ளது. இக்குழுவின் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று எண்ணுவதே தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும், தமிழ் மொழியால் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் பேரிழப்பைக் கொண்டுவரும் என்பது நிச்சயம். ஆகவே, தமிழ் அறவாரியம் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு குழுவின் இருமொழி பாடத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை நிராகரிக்கிறது.