2016- ஆம் கல்வி ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய விடையம் ஒன்று மிக அமைதியாக சில தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு (மாற்று கருத்துகளுக்கு இடமளிக்காமல்) தங்களுக்குச் சாதகமான முடிவுகளும் செய்யப்பட்டுவிட்டிருப்பதை அறிய முடிகிறது.
சில மாதங்களுக்கு முன் கல்வி அமைச்சு ஒரு திடீர் அறிவிப்பைச் செய்தது. அதன்படி, 2016-ஆம் ஆண்டுமுதல் பள்ளிப்போதனை முறையில் இரு மொழிக் கொள்கையைக் கடைபிடிக்க சில பரிச்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதே அச்செய்தியின் சாரம். இக்கொள்கையின் படி ஆரம்பப்பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்களை மலாய் அல்லது ஆங்கிலம் வழி போதிக்க பள்ளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
தனது பள்ளி இப்புதிய ஆங்கில போதனா முறைக்கு தகுதி உடைய பள்ளி என்பதையும் தனது பள்ளியில் அதற்குறிய ஆங்கில போதனா பயிற்சி ஆசிரியர்கள் உண்டு என்பதையும் தனது பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் போதிய தகுதிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உறுதி செய்தால் அப்பள்ளி மேற்கண்ட நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிக்க வசதி செய்து தரப்படும். ஆகவே இப்பரிச்சார்த்த முயற்சிக்கு 300 மலாய் தொடக்கப்பள்ளிகளை நாடு முழுவதும் அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.
நிற்க, இந்தத் திட்டம் இப்போதைக்குத் தேசியப் பள்ளிகளில் மட்டுமே அமல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால், தமிழ்ப் பள்ளிகளில் இப்போதே இதன் தாக்கம் வேகமாக பரவத்தொடங்கி விட்டது.
முதலாவதாக, இத்திட்டத்தை வழக்கம் போல சீனப் பள்ளிகள் முற்றாக புறக்கணித்து விட்டன. அரசாங்கமும் இதை யூகித்துதான் தேசியப் பள்ளிகளை மட்டும் இத்திட்டத்திற்கு உட்படுத்தியுள்ளது. மலாய் சமூகத்திலும் இது பல்வேறு சந்தேக மற்றும் எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இந்த இரு மொழிக் கொள்கையின் நோக்கம் மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவது என்று அரசாங்கம் கூறியுள்ளதை அவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் எனில் அந்த மொழியைப் போதிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும் அல்லது ஆங்கில பாடத்தைப் போதிக்க சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதை விடுத்து மற்ற பாடங்களை ஆங்கிலத்திற்கு மாற்றுவது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று மலாய் கல்விமான்கள் கூட மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர்.
தமிழ்ப் பள்ளிகளிலும் இப்பிரச்சனை தொடர்பாக இருவேறு தரப்புகள் உருவாகியுள்ளன.
முதல் தரப்பு, தமிழ்ப்பள்ளிகளையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கோரும் தரப்பாகும். தமிழ்ப்பள்ளிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாணவர் எண்ணிக்கைச் சரிவைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் நிலைக்கவும், இத்திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் இணைந்து கொள்வது மிக முக்கியம் என்று இத்தரப்பினர் கருதுகின்றனர். மேலும் நாட்டில் பிற இன மாணவர்களுடன் போட்டியிட்டு முன்னேறவும் உலக சவால்களை எதிர்கொள்ளவும் அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பதே நல்லது என்றும் கூறுகின்றனர்.
மேலும் இத்திட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி பக்கம் தலைவைக்காது இருக்கும் தமிழ்க்கல்வி இல்லாத மேல் தட்டு மக்களைக் கணிசமான அளவுக்குத் தமிழ்ப்பள்ளியின் பால் ஈர்த்துவிட முடியும் என்றும் இத்தரப்பு நம்புவதாகப்படுகிறது. இத்தரப்புக்கு பேரா. என் .எஸ் ராஜேந்திரன் தலைமைதாங்குகிறார். தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களையும் தலைமையாசிரியர்களையும் தொடர்புகொண்டு மேற்படி இருமொழிக் கொள்கையில் தங்கள் தமிழ்ப்பள்ளிகளையும் இணைத்துக்கொள்ளும்படி கல்வி அமைச்சரிடம் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொண்டு வருவதாகவும் அறிகிறேன்.
இரண்டாவது தரப்பு, அரசாங்கம் முன்மொழியும் இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவையற்றது என்று கூறும் தரப்பாகும். இத்தரப்பினர், இத்திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளில் நேரக்கூடிய தமிழ்மொழி சார்ந்த வீழ்ச்சிகள் குறித்தும், தமிழ்ப்பள்ளிகளின் பாரம்பரியமாக இந்நாட்டில் கடந்த இருநூறு ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த தமிழ் வழிக் கல்வி என்ற சாராம்சங்கள் மெல்ல சிதைக்கப்படுவது குறித்தும், தமிழாசிரியர்கள் எதிர்நோக்கக்கூடிய வேலை இழப்புகள் குறித்தும் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ்ப்பள்ளிகளில் நான்கு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் சூழல் நேர்ந்தால் அப்பாடங்கள் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான துறைசார்ந்த தமிழ் கலைச்சொற்கள் பயன்பாடற்று அழிந்து போகும் என்பதையும் அப்பாட நூல்களை இயற்றவும், (யூ.பி.எஸ்.ஆர் போன்ற தேர்வுகளுக்கு) அப்பாடங்கள் தொடர்பாக கேள்விகள் தயாரிக்கவும், கேள்வித்தாட்களைத் திருத்துவதற்கும் இதுவரை தேவைப்பட்ட இந்திய ஆசிரியர்கள் குறைக்கப்படலாம் அல்லது தேவை இன்றிப் போகலாம் என்கிற அபாயத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
மேலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விடையாக, அது மலேசிய இந்தியர்களிடையே ஏற்பட்டிருக்கும் பிறப்பு விகிதாச்சார வீழ்ச்சியால் நேர்ந்ததே அன்றி தமிழ்ப்பள்ளிகளின் கல்வி தொடர்பாக இந்திய மக்கள் அடைந்த அதிருப்தியின் விளைவு அல்ல என்கிற வாதமும் கவனிக்கத் தக்கதே. இக்கருத்துகளை அழுத்தமாகக் கூறும் தரப்பாக தமிழ் அறவாரியமும் மேலும் சில மொழி சார்ந்த இயக்கங்களும் செயல்படுகின்றன.
ஆக இரு தரப்பிலும் உடன்பாடான கருத்துகளும் எதிர்மறை கருத்துகளும் இருப்பது தெளிவு. நிலைமை இவ்வாறு இருக்க,
கடந்த வாரம் முதல் சில மாநிலங்களில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் படி கோரும் விண்ணப்பக் கடித்தத்தை அவசர அவசரமாக கல்வி அமைச்சுக்கு அனுப்பியிருப்பது பெரும் வியப்பையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் இச்செயல் அவசரகதியில், பின் விளைவுகளைப் பற்றி தீர ஆராயாமல் முன்னோக்கு சிந்தனை இன்றியோ அல்லது வேறு ஏதாகினும் கண்ணுக்குப் புலப்படாத நிர்பந்தங்களுக்குப் பணிந்தோ எடுக்கப்பட்ட முடிவு என்றே எண்ணத் தோன்றுகிறது.
காரணம் சீன மொழிப் பள்ளிகள் ஒதுக்கி விட்ட ஒரு திட்டத்தை, மலாய் கல்வி மான்களே கேள்வி எழுப்பும் ஒரு திட்டத்தை, அரசாங்கம் கூட முழுமையான திட்ட வரைவைக் கொண்டிராத ஒரு திட்டத்தை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது புரியாதப் புதிராக உள்ளது.
இந்த இரு மொழிக் கொள்கையை ஏற்பதா இல்லையா என்ற வினாவிற்கு முன் நாம் சில முக்கிய விடையங்களைக் கருத்தில் கொள்வதும் சிந்திப்பதும் அவசியமாகிறது. அவை :-
1. மேற்கண்ட நான்கு பாடங்களை இருமொழிகளில் போதிக்கும் திட்டத்தை அரசாங்கம் இன்னும் முழுமைப்படுத்தவில்லை. அதன் செம்மையான செயல்திட்டமும் எதிர்கால நிலைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அரசாங்கம் தற்போது பரிச்சார்த்த முறையில் இத்திட்டத்தை தேசியப்பள்ளிகளில் பரிசோதிக்க முனைந்துள்ளது. இதன் பின்னரே பூர்வாங்க ஆய்வு முடிவுகள் வெளிவரக்கூடும். ஆகவே, அதன் உண்மை நிலையும் இச்செயல்பாட்டு திட்டங்களால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளும் விவாதிக்கப்படாமல் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தாமே இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
2. இதுநாள்வரை தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர், அந்தப் பள்ளியின் சூழலிலும் போதனை முறைகளிலும் நம்பிக்கை வைத்தே அனுப்புகின்றனர். தங்கள் பிள்ளைகள் அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பதில் அவர்களுக்கு எந்தவித எழுத்துப்பூர்வமான புகாரும் இருந்ததில்லை. ஆகவே, பள்ளி போதனை முறையில் இதுபோன்ற தடாலடி மாற்றங்கள் நிகழ்த்தும் முன் பள்ளி நிர்வாகம் முழுமையாக பெற்றோர்களிடம் திட்டக் கொள்கையை விளக்கி , கலந்து பேசி முடிவெடுத்திருக்க வேண்டும். பள்ளி வாரியக் குழுவுக்கும் இந்த மாற்றங்கள் குறித்த தெளிவு இருக்க வேண்டும். ஏனெனில் இன்று தமிழ்ப்பள்ளிகளில் ஏற்படும் மாற்றங்கள் இனிவரும் பல ஆண்டுகளுக்கு இந்நாட்டில் தமிழ் வழிக் கல்வியைப் பாதித்து நிற்கும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளல் வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து பள்ளிகளில் அவ்வகையான கூட்டங்களோ கலந்துரையாடல்களோ இதுவரை நிகழ்த்தப்படவில்லை.
3. இத்திட்டத்திற்கு ஆதரவு தரும் தரப்பும் மாற்று கருத்தாளர்களும் நாடுதழுவிய அளவில் கருத்தரங்குகளும் விளக்கக் கூட்டங்களும் நடத்தியிருக்க வேண்டும். பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைபாடுகள் குறித்த போதுமான புள்ளி விபரங்களும், விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அக்கூட்டங்களில் கிடைக்கப்பட்ட ஆய்வடங்களை அடிப்டையாக வைத்தே பள்ளிகள் தங்களுக்குப் பொருத்தமான போதனா முறையைத் தேர்வு செய்ய சுதந்திரம் தந்திருக்க வேண்டும்.
4. இத்திட்டத்தில் சீனப் பள்ளிகள் பங்கேற்க மறுப்பது ஏன் என்ற ஆய்வை ஆதரவு தரப்பு செய்யவேண்டியது மிகவும் அவசியம். அதோடு, இப்புதிய திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் மீது அரசாங்கத் தரப்பில் இருந்து எந்தவொரு அழுத்தமும் வைக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே இத்திட்டத்தை அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் மீது சுமத்தாத போது அவசரப்பட்டு இத்திட்டத்தில் நாமே இணைய வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்விக்குப் போதுமான ஆதாரங்களும் விளக்கங்களும் தேவைப்படுகின்றன. துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன், பேரா. என் எஸ் ராஜேந்திரன் தரப்பினர் தாங்களே முன்வந்து இத்திட்டத்தில் இணைந்துகொள்ள போராடுகின்றனர். அவர்களின் போராட்டம் சரியானது என்றே எடுத்துக் கொண்டாலும், மாற்றுக் கருத்தாளர்கள் முன்வைக்கும் பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்கள் தெளிவான விரிவான பதில் தரவேண்டியது அவசியம்.
5. ஆரம்பப் பள்ளிகளில், ஆங்கிலத்தில் போதிக்கப்படும் கணிதமும், அறிவியலும், தொழில் நுட்பமும் இடை நிலைப் பள்ளியிலும் தொடரும் என்ற உறுதிப்பாடு ஏதும் அரசிடம் இருந்து வந்துள்ளதா? அப்படியே வட்டாரத்திற்கு ஓரிரு இடை நிலைப்பள்ளில் ஆங்கிலத்தில் போதிக்கப்படுமேயானால் நமது மாணவர்கள் அனைவரும் அந்தப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளனவா? இல்லை என்றால் மற்ற பின் தங்கிய மாணவர்கள் அரை குறை ஆங்கிலத்தோடு மலாய் வழி கணித அறிவியல் பாடங்களை இடை நிலைப் பள்ளிகளில் தொடர்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்க மாட்டார்களா? என்ற கேள்விகளுக்கும் இன்னும் யாரும் பதில் காண முடியவில்லை என்பதையும் சிந்திக்க வேண்டும்.
6. மலேசிய பள்ளிகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது என்பது அண்மையக் காலமாக ஊடகங்களில் பெரிய தலைப்புகளில் வெளிவந்த நிதர்சன உண்மையாகும். மேலும் மலேசிய பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தக்க திறன் பெற்ற ஆசிரியர் போதாமையால் ஓய்வு பெற்ற ஆங்கில ஆற்றல் பெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஆங்கில போதனைக்குப் பணியில் அமர்த்த திட்டம் வைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலை மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆக ஆங்கில மொழி ஆற்றல் குறைந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்த இரு மொழிக் கல்விக் கொள்கை நடத்தப் படுமேயானால் நன்மைக்குப் பதில் பாதகமே விளையும். என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. சாதாரணமாக தமிழ் அல்லது மலாய் மொழியில் போதனா பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் திடுதிப்பென ஆங்கிலத்தில் பாடத்தை நடத்த முடியாது என்பது கடந்த கால PPSMI நமக்கு கற்பித்த பாடமாகும். ஆக இந்த இரு மொழிக் கொள்கைக்கு அடித்துப் பிடிக்கும் தமிழ்ப்பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் போதுமான அளவு கணித அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வழி போதனா பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உண்டு என்பதை நிரூபிக்க முடியுமா? அல்லது அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
7. 2011-உடன் ‘மென் முடிவுற்ற’ (soft landing) PPSMI திட்டம் 2002-ல் அவசரமாக அமலுக்கு வந்ததில் அரசியல் அதிகாரம் நிரம்ப இருந்ததை மறைக்க முடியாது. முன்னால் தலைவர்கள் மகாதீரும் சாமிவேலும் அதில் முக்கிய பங்காற்றியதாக அந்தக் காலக் கட்டத்தில் பரவலாக பேசப்பட்டது. அத்திட்டதில் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிவியல் கணிதப்பாடங்களைப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆகவே மாணவர்கள் தங்கள் மொழி ஆளுமைக்கேற்ப ஒரு மொழியைப் பயன்படுத்தி அப்பாடங்களைப் பயின்றனர். ஆனால், இத்திட்டம் MBMMBI எனப்படும் புதிய மொழிக் கொள்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள போதனாமுறையாகும். ஆகவே இத்திட்டம் மலாய் அல்லது ஆங்கிலத்திற்கு மட்டுமே முன்னுரிமை தரும் என்பது தெளிவு. எனவே இந்த புதிய இருமொழிக் கொள்கை திட்டத்தில் தமிழ் சீனம் போன்ற தாய்மொழிகளின் நிலைப்பாடு புதிராகவே உள்ளது. மேலும் தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை இந்தக் கல்விக் கொள்கையால் என்னாகும் என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படாமலேயே இத்திட்டத்தைத் தமிழ்ப்பள்ளிகளுக்குள் கொண்டுவருவது நம் இன மாணவர்களுக்கு நாமே இழைக்கும் துரோகமாகும்.
இறுதியாக, இதுவரை தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் மிக மெத்தனமாக செயல்படும் பலர், தமிழ்ப்பள்ளிகளை ஆங்கில மயமாக்களில் மட்டும் இரவோடு இரவாக தமிழ்ப்பள்ளிகளின் மொத்த கட்டமைப்பையும் தங்கள் விருப்பத்துக்கு வடிவமைத்துக் கொள்ள துடிப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. ஆகவே, தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதியை முடிவுசெய்யக்கூடிய ஒரு மிக முக்கியத் திட்டத்திற்கு, போதுமான ஆய்வுகள் இன்றி வெற்று உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, அதிகார அழுத்தங்களுக்கு பணிந்து போகும் முகமாகவோ செயல்படுவது ஓர் இனத்திற்கே செய்யும் பிழையாக முடியக்கூடும். முறையான உரையாடல்கள் வழியும் ஆய்வுகள் வழியும் எது சரியானதோ அதைச் செய்வதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ் மொழிக்கும் .தமிழர்களுக்கும் இந்த அரசாங்கம் ஏதோ ஒரு எதிர்வினை அல்லது செய்வினை செய்யப்போவதாக உணர்கிறேன்.
பேராசிரியர் “தமிழ்ப்பளியே எனது தேர்வு” என்றதும் ஏன் தமிழ் மொழியே ஏன் தேர்வு என்று இல்லை என்று கேட்டேன். தமிழ்ப்பள்ளியில் என்றால் எதை வேண்டுமானாலும் எதையும் புகுத்தலாம், கழட்டலாம், உடைக்கலாம், ஊதலாம் என்ற மனபோக்கு மலாய் அரசியல் வாதி முதல் கல்வித்துறையில் அரசியல் உயர் அதிகாரிகளுக்கும உண்டு .இந்த ஊக்கிவிப்புகுத்தான் அரசு அதிகாரிகளுக்கு KPI அவதாரம்.
நாட்டின் கல்வி கொள்கை 2013 -2025 டில் இந்த இரு மொழி பாடத்திட்டம் இல்லை. PT 1,2,3 கே இன்னும் வழி வலி விழி பிதிங்கி நிற்கும் கலவி அறிவாளி கூட்டங்கள் தமிழ் தொடக்க பள்ளிகளில் குறிப்பா 300 தேசிய தொடக்கப் பள்ளிகளில் நடந்த ஆய்வின் நாடகத்தை முன் வைக்க வேண்டும். குறிப்பாக தேசிய சீன, தமிழ் மலாய் மாணவர்கள் விவேகத்தை முன் வைக்க வேண்டும். அடுத்து 524 தமிழ் பள்ளிகளிலும் மும்மொழி பாலர் வகுப்புக்கு வழி வகுத்துவிட்டு இந்த புரட்சிக்கு வர வேண்டும். 2016 ல் 100 மில்லியனை பிரதமர் துறை ஓதிக்கிவுள்ளது முதலில் 524 தமிழ் பள்ளிகளில் பாலர் பள்ளியும் மும்மொழி மேம்பாட்டையும் கவனித்தால் 2018 வாக்கில் இருமொழி வளப்பம் மேலோங்கலாம்.
அதை விடுத்து இந்த இந்த இரு மொழி ஆர்ப்பரிப்பு அபத்தம். இதை வெறும் இன பாகுபாடு மலாய்மொழி மொழி அரசியலாக்காமல் இந்நாட்டு பல்லின உரிமைக்கும் மொழிக்கும் மதிப்பளித்து கல்வியில் குறிப்பா தமிழ்ப்பள்ளிகளின் தமிழ் மொழி கலை கலாசார தொன்மையில் கைவைக்காமல் இருப்பது நன்று. தமிழ் ப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் அவர்களின் மன்றமும் தமிழ் ஆசிரியர்களும் சம்பளம் கிம்பளம் என்று ஊமையாய் இல்லாமல் உங்கள் உணர்வுகளை தைரியமாக பதிவு செய்ய வேண்டுகிறேன். முதலில் கல்வி அமைச்சில் தமிழ் உணர்வும் உரிமையு மிக்க ஒரு இயக்குனர் Pengarah தகுதி அதிகாரியை பெறுவதை நாம் முதலில் உறுதி செய்ய வேண்டும்
தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ் மொழிக்கும் உரிமை கோரும் ஒரு உயர் அதிகாரியும் கல்வி அமைச்சில் இப்போது இல்லை என்பது ஒரு கேவலமான தகவல்.
“வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதளுக்கு உரிய கலாசாரமாம்”
மின்னல் FM சொல்கிறது .
வேற்றுமை என்பது தமிழ், தமிழ்ப்பள்ளி. ஒற்றுமை என்பது எங்கள் உரிமையில் கைவைக்காதே என்பதாகும்.
உலகத்திலே கடந்த 50 ஆண்டுகளாக கல்வி கொள்கையில் மாற்றங்களில் அதிகம் மாற்றம் செய்துக்கொண்டே இருக்கும் அரசில்
தனம் மலேசியா அரசியல் வாதிகளை சேரும். இவர்களுக்கு கல்வி ஆய்வு இல்லாவிட்டலும் யாரோ சொன்னான் இவர் அரசியலில் பெயர் போட இந்த வீண் விளையாட்டு போக்கு மாற வேண்டும்.
கடைசியாக திரு அ. பாண்டியன் அவர்களுக்கு இறுதி வரை நீங்கள் உங்கள் முடிவை சொல்ல வில்லை, ஆய்வுகளின் அடக்கம் முடிவை சொல்லவேண்டும் என்பது என் தாழ்மையான் வேண்டுகோள். நீங்கள் எழுதியது ஒரு தெரிந்த பரப்புரை. எனினும் விபரம் தெரியாதவர்களுக்கு புதிய விசியம்தான் அதற்கு உங்கள் நேரத்துக்கு நன்றி.
பொன் ரங்கன்
தமிழர் குரல் மலேசியா
நல்ல கருத்து. தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மை இது போன்ற மாற்றத்தால் கண்டிப்பாக பாதிப்புறும்.
இந்நாட்டு அரசாங்கம் தமிழ் மொழி அழிப்பை மறைமுகமாக இயற்றி/இயக்கி வருகிறது என்று வழக்கு தொடுப்பதை தவிர வேறு வழி இல்லை! மயிலே மயிலேன்ன இறகு போடாது….
திரு.அ.பாண்டியன் கருத்துக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் அது பற்றிய சில கருத்துக்களையும் முன் வைக்க விரும்புகிறேன்.மாற்று கருத்துக்கு இடமளிக்காமல் முடிவு எடுக்கப்பட்டது என்பது சரியான வாதமல்ல.மேலும் முடிவு எடுத்து அதை அமல் படுத்துவதும் நம் கையில் இல்லை. பேரா. ராஜேந்திரன் தலைமையில் கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது, கருத்துகள் பரிமாறப்பட்டன, பின்பு பெருபான்மையோரின் கருத்துக்கிணங்க இந்த இரு மொழிப் போதனையை தமிழ்ப் பள்ளிகளிலும் நடத்த பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த பரிசீலனையை அரசு ஏற்றுக்கொண்டதா அல்லது இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை.
சீனப் பள்ளிகள் முற்றாக புறக்கணித்து விட்டன. அரசாங்கமும் இதை யூகித்துதான் தேசியப் பள்ளிகளை மட்டும் இத்திட்டத்திற்கு உட்படுத்தியுள்ளது என்ற வாக்கியம் கட்டுரையாளரின் கற்பனை வளத்தை மட்டுமே விளக்குகிறது. அரசாங்கம் மலாய் பள்ளிகளுக்கு மட்டும் முன்னுருமை வழங்கியுள்ளது. அதனால்தான் இது சீன, தமிழ்ப் மொழிப் பள்ளிகளில் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தால் அந்த கருத்துக்கு நானும் உடன் பட்டிருப்பேன்..
பேரா. என் .எஸ் ராஜேந்திரன் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தலைமையாசிரியர்களை வற்புறுத்துகிறார் என்கின்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று நான் என்ணுகிறேன். கட்டுரையாளர் சொல்வதைப்பார்த்தால், அரசாங்கம் இந்த திட்டத்தை தமிழ்ப் பள்ளிகளில் அமல் படுத்த முடிவெடுத்துவிட்டது போலவும் , அதை தமிழ்ப்பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பேரா.ராஜேந்திரன் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களையும் வற்புறுத்துகிறார் என்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறது .இதை நீங்கள் ஆதரத்துடன் நிரூபிக்க முன் வரவேண்டும். விருப்பமுள்ள தமிழ்ப் பள்ளிகள் மனு செய்யலாம் என்று தான் கல்வி அமைச்சின் அறிக்கை சொல்லுகிறது,
கலைச் சொற்கள் பயன்படுத்துவது முக்கியாமா அல்லது இந்திய மாணவர்கள் போட்டித்தன்மை மிக்க மாணவர்களாக மாற்றுவது முக்கியமா? வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே கலைச்சொற்களை பயன் படுத்தி விட்டு மீதமுள்ள 10 ஆண்டுகள் (பலகலைக்கழகம்) வரை அச்சொற்களை பேச்சுவாக்கிலும் , தொழிற் ரீதியாகவும் பயன்படுத்தாமல் இருப்பது என்ன நன்மையை மாணவர்களுக்கு கொண்டு வரப்போகிறது? இந்திய ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது விவாதத்திற்குறியது. இந்திய ஆசிரியர்கள் வேலை இழக்கப்போவதில்லை. அப்பாடங்கள் தொடர்பாக கேள்விகள் தயாரிக்கவும், கேள்வித்தாட்களைத் திருத்துவதற்கும் இதுவரை தேவைப்பட்ட இந்திய ஆசிரியர்கள் இப்பொழுது தேவைப்படாமல் போகலாம் என்பதே உண்மை.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் குறைவு பிறப்பு விகிதத்தால் வருவது ஒரு காரணம். நாம் அதை மறுக்கவில்லை. எப்படி தேசிய/சீன பள்ளிகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களை தமிழ்ப் பள்ளிகளுக்கு ஈர்ப்பது என்பதே நமது சிந்தனை. அதற்கு இந்த இரு மொழித் திட்டம் உதவும் என்பது நமது வாதம். சீனப்பள்ளிகளுக்கு 90% சதவிகத்தை அனுப்பும் சீனர் சமூகத்தினருடன் ஒப்பிடும் போது வெறும் 55% இந்திய மாணவர்களே தமிழ்ப் பள்ளிக்கு போகின்றார்கள் என்பது இன்றைய நமது நிலை..
பெற்றோர் ஆசிரியர் சங்கம் , அனுமதியோடுதான்தான் இந்த இரு மொழிப் பாட திட்ட வின்ணப்பம் நடைபெறுகிறது என்பது நான் அறிந்த செய்தி.
நம் மாணவர்கள் மற்ற இன மாணவர்களுடன் போட்டி போடும் ஆற்றலை இழந்து விடக்கூடாது என்கின்ற நோக்கில்தான் தலைமை ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் இந்த இருமொழி பாடத்திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவிக்கின்றார்கள். தமிழ்ப் பள்ளிகள் தேசிய நீரோட்டத்தில் விடு பட்டு விடக்கூடாதே என்பதுதான் என்னை போன்றோரின் ஆதங்கம். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு தமிழ்ப் பள்ளிகளின் தோற்றமும் அதன் சிறபுத் தன்மைகளும் சிதைபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த இரு மொழி திட்டத்தை வேண்டாம் என்று ஒதுக்குகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்..தமிழிலேயே கணிதத்தையும அறிவியலையும் படித்த நம் மாணவர்கள் இடை நிலை பள்ளிக்கு போய் ஆங்கிலம் வழி அப்பாடங்களை பயிலும்போது எவ்விதமான பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள் என்பதைப் பற்றி நீங்கள் எண்ணியதுண்டா ? அதே சமயம் தேசியப்பள்ளிகளிலிருந்து வரும் தமிழ், சீன ,மலாய் மாணவர்கள் அப் பாடங்களை ஆங்கிலத்தில் பயின்று வந்து நம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுடன் போட்டி போடும்போது யார் முன்னிலை வகிப்பார்கள் என்பது பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
அப்படியே தமிழ்ப் பள்ளிகள் ஆங்கிலத்தை புறக்கணித்து தமிழிலேயே அப்பாடங்களை போதிக்க வேண்டும் என்கின்ற ஒரு முடிவு எடுத்தால் அது தமிழ்ப்பள்ளிகள் அழிய முதல் சாவு மணியை நாமே அடித்துக் கொண்டதாக நான் கருதுகிறேன். தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பெற்றோர்கள் இந்தியப் பிள்ளைகளின் அறிவு வளரவேண்டும் என்பதிலும், எதிர்காலத்தில் மேன்புற வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை கொண்டவர்களாக இருகிறார்கள். தமிழ் மொழி , தமிழ்ப்பள்ளிகள் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால இலக்கை அடைய ஒரு வழிதானே அன்றி அதுவே இலக்கு அல்ல. ஆங்கிலம் உலக மொழி. அதனை தங்கள் பிள்ளைகள் கற்றுத் தெரிதல் வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்கும் உள்ள எதிர்பார்ப்பு. அம்மொழியை அதிகமாக தமிழ்ப்பள்ளிகளில் பயன் படுத்தினால் நிச்சயமாக நமது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள. அதே வேளையில் அது அங்கே கிடைக்க வில்லையென்றால் , தேசிய பள்ளிகளுக்கு ஆங்கிலம் அதிகமாக போதிக்கப்படும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகளை மாற்ற இந்தியப் பெற்றோர்கள் தயங்க மாட்டார்கள் என்பதும் உண்மை. முன்பு சொன்னது போல பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு தமிழ்ப் பள்ளிகள் ஒரு தடம் மட்டுமே . அதே போல தமிழ்ப் பள்ளிகளின் தோற்றமும் சிறப்பும், ஆங்கில வரவினால் சிதைவுறும் என்பது ஓரளவு உண்மையேயாயினும் , அது வராமல் போனால் தமிழ்ப் பள்ளிகள் மெல்லச் சாவதற்கு அதுவே காரணமாகிவிடும் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
மலாய் கல்வி மான்கள் எதிர்க்கிறார்கள் என்பது உண்மையாயியினும் அதையும் மீறி அரசாங்கம் இதை அறிமுகப்படுதுகின்றது என்றால் ஆங்கிலத்தின் நன்மையை கல்வி அமைச்சு நன்கு உணர்ந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
தாய் மொழியை கற்பதற்கும், தமிழ்ப் பண்பாட்டை பேணிக்காப்பதற்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை இந்திய பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். அதை ஒரு தமிழ்ப்பள்ளி, சிறந்த போதான முறையுடன் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் இந்தியப் பெற்றோர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். அதோடு ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் தேசிய பள்ளிகளைபோன்று தமிழ்ப் பள்ளிகளிலும் அறிமுகப்பட்டால் அதை பெற்றோர்கள் பெரிதும் வரவேற்பார்கள். அதோடு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கூட அது ஒரு வாய்ப்பாகவும் அமையும்…
ஆங்கிலத்தில், அறிவியலையும் கணிதத்தையும் கறபது முக்கியமென்றால் எதற்கையா இருமொழி கொள்கை??? ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தலாமே!! சீனப் பள்ளிகளின் முடிவின் நோக்கத்தை நன்கறிந்து தமிழ்ப்பள்ளியும் சிறந்த முடிவினை எடுக்க வேண்டும்!! பல ஆண்டுகளுக்கு முன்பு நமது மாணவர்கள் தமிழ் மொழியில் கற்ற பிறகு, இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலத்தில் படித்து சிறப்புத்தேர்ச்சி பெற்றுள்ளதை கவனம் கூறவும்!! “சோலையன் குடுமி சும்மா ஆடாதையோ”!!! தெரிஞ்சுக்கொங்க!!!!!
தடுமாற்றதை தவிர்க்க வுதவும் அதாவது இடைநிலை பள்ளிக்கு செல்லும்போது,பெரளிஹன் வகுப்பில் ஒரு வருடம் வீணே கழிப்பதை தவிர்க்க வுதவும்,
வாழ்க நாராயண நாமம்.
DLP (Dual Language Programme) பற்றி நானும் கேள்வி பற்றிருகிறேன். முதல் கட்டமாக 300 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் SJK(T) & SJK(C) இடம் பெறவில்லை. DLP திட்டம் PPSMI போன்றதாகும்.
தற்போது உள்ள உலகமயம் (Globalisasi) என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் கல்வி அமைச்சு Science & Mathemathics பாடத்திற்கு முக்கியதுவம் கொடுத்துள்ளது. காலதிற்கு ஏற்றவாறு நம் தமிழ்ப்பள்ளி பயணம் செய்ய வேண்டுமென்றால் இந்த DLP & HIP
(Highly Immers Programme) ஏற்று கொள்ளத்தான் வேண்டும். ஒரு பள்ளியில் 15 மாணவர்கள் இருந்தால் இந்த திட்டதை ஆரம்பிக்கலாம். மற்ற மாணவர்கள் தன் தாய் மொழியிலே படிக்கலாம். அப்படிதான் நான் கேள்விப்பட்டேன்.
கனிதம் ,அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படித்தாம் மேதையாகிவிடுவார்களா ? .என்னே ஓர் அறிவான்ர்ந்த செயல் ? .விஞ்ஞானம் ,தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள ஜெர்மன் ,பிரான்ஸ் ,சீனா ,கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அவரவர் தாய்மொழியில்தான் பயில்கிறார்கள் .ஆங்கிலம் என்பது அறிவல்ல ! அது ஒரு மொழி .தமிழ் பள்ளி ஆசிரியர்கள் இரு மொழி கல்வி திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க துடிப்பதேன் ? ஆய்வு செய்து பார்த்தால் அவர்களில் பலர் மஇகா வில் முக்கிய பதவி வகிப்பவர்கள் அல்லது தலைமை பொறுப்பை வகிபவர்கள் அநேகர் மொத்தத்தில் யாரையோ குஷி படுத்த இந்த அவசரம் (நான் எல்லா தமிழ் பள்ளி ஆசிரியர்களையும் குறிப்பிட வில்லை ) .அதான் இந்த கேடு .அது சரி நம்ம மூஞ்சி குத்து கமலநாதர் @ மலேசிய இயேசு நாதர் இதற்க்கு என்ன சொல்றாப்ல ?
தமிழ் தமிழர் என்று பிதற்றும் கூட்டம் ஒரு தமிழர் துணை அமைச்சர் அந்நியரால் தாக்கபட்டார் என்று மகிழும் அவலம் இந்த இனத்தில் மட்டும் காணமுடியும்.அரசியல் கட்சி பாகுபாட்டை விடுங்கள்,அவர் ஒரு தமிழர்.தெலுங்கர் மீது காவல்துறை கைவைத்தால் மலேசியா அரசு ம்
பகிரங்க மன்னிப்பு கேட்டது.இங்குமட்டும் அன்றி வுலகேங்கும் கேட்பாரின்றி அடிவுதை நடக்கிறது.கேர்லிங் சம்பவம் ஒன்றே ஆண்மயானது,
வாழ்க நாராயண நாமம்.
நமக்குதான் ஆங்கிலம் பிரியம், தமிழ் எரியும். கவலையை விடுங்கள் தமிழை அழிக்கும் காரியத்தைப் பாருங்கள்.
ஆண்மைக்கு அழகு அடி உதை கொலையா? இப்படிதான் அவரவர் சமூகத்திற்கு சொல்லிக் கொடுக்கின்றார்களோ? என்ன ஒரு நல்லெண்ணம் பாருங்கள். தமிழன் என்றால் அவன் அடி உதையில் முன் நின்று பெயர்போட வேண்டும் என்று வழி சொல்லும் நாராயணன் புண் நெஞ்சனே!
நாம் இங்கு தமிழன் ,தமிழ்மொழி தமிழ்ப்பள்ளி என்று நாளும்
புலம்பிக்கொண்டிருக்கிறோம் தஞ்சோங் மாலிம் இந்து சங்கத் தலைவர் தன் பிள்ளையை சீனப் பள்ளியில் சேர்த்துல்லாரம் இன்று “பார்வை” பத்திரிக்கையில் “வெளியாகி உள்ள செய்தி தமிழ் பற்று இல்லாத ஒருவர் இந்து சங்கத்திற்கு தலைவர் இதுதான் காலக்கொடுமை !
இந்து சங்கத் தலைவர் தானே. தமிழ் சங்கத் தலைவர் அல்லவே.. அவர் பிள்ளையை எந்தப் பள்ளியில் படிக்க வைப்பது என்ற முடிவு அவரைச் சார்ந்ததே. ஓர் இந்து சங்கத் தலைவர் தன பிள்ளையை தமிழ்ப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயாமா என்ன ?
இதென்ன பெரிய விஷயம். தமிழே படிக்கத் தெரியாத, ஒரு திருமுறை பாடலை கூட வாயல பாட தெரியாத ஒருவருக்கு இந்து சங்க வட்டாரத் தலைவர் பதவி? இப்படிபட்டவரை பதவியில் தூக்கி நிறுத்த வட்டார பேரவைத் தேர்தலில் போராடியது மாநிலமும், மத்தியமும். இதுதான் இந்நாட்டு இந்து சங்கத்திற்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை.
“உங்களில் ஒருவன் ” சொன்ன வியக்கியானம் உப்பும் சப்பும் இல்லாத ஒன்று. தனிப்பட்ட ஒரு மனிதர் செய்தால் அது அவர் உரிமை என்று விட்டு விடலாம். ஒரு இந்து சங்கத் தலைவர் இதை செய்யும் பொழுது அது சமுதாயத்தைதைப் பாதிக்கிறது. அவர் கற்ற தமிழ் மீதே அவருக்கு நம்பிக்கை போயிற்று என்பதனை காட்டுகிறது. அவர் போதிக்கும் தேவராமும் திருவாசகமும் தமிழில் இருப்பதால் அம்மந்திரச்சொற்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை ,அவர் மகன் அதனைக் கற்றால் உபயோகம் ஒன்றுமில்லை என்பதை நிரூபிப்பதாக அர்த்தம் கற்பிக்கப்படும்.ஒன்று கூழ் இல்லையென்றால் மீசை , அவர்தான் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்நாட்டில் தென் இண்டியன்களில் 90% தமிழர்களாக இருக்கும் பொழுது, அவர்களுக்கு நாங்கள் சமய வழிகாட்டி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த சங்கத்தின் தலைவர்களே தமிழருக்கு எடுத்துக் காட்டாக வாழத் தெரியவில்லையென்றால், இவர்களை யார் தமிழருக்கு சமய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டது? சைவ சமயம் என்றால் அதன் நெறியே என்னவென்று அறியாமல் இருக்கும் இந்த சங்கத்தின் தலைவரா தமிழருக்கு வழிகாட்டி? அதற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு ஒரு வக்காலத்து வேற!
திரு. அ. பாண்டியன் அவர்களின் இக்கட்டுரையை முழுமையாகப் படிக்க இன்றுதான் நேரம் கிடைத்தது. படித்ததில், தமிழ் பள்ளியில் ஆங்கிலம் வழி கணிதம் அறிவியல் பாட போதிப்புத் திட்டத்தில் அரசாங்கமே நம்மை நிர்பந்திக்கவில்லை ஆனால் தங்களை அதி மேதாவி என்று பட்டமிட்டுக் கொள்வோரே வலிந்துச் சென்று இணைத்துக் கொள்வது எவ்வகையில் மேதாவித் தனமாகும்? புலையச் சேரியில் காளை புகுந்தால் என்னவாகும்? அந்த காளை உயிரோடு உரிக்கப்படும் என்பது உண்மையல்வா! அதுபோலவே, மலாய் மொழி அல்லாத தாய்மொழி பள்ளிகளை, காளையை உயிரோடு உரிக்கப் படுவது போல, வேரோடு அழிக்க போட்ட திட்டத்தில் தானே உவந்து சென்று மாட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய அறியாமை, மடமை. மேதாவிகளுக்கு, கல்வி ஞானம் உண்டு. ஆனால் ஊழ்வினைப்பயனை அறியும் ஞானம் இல்லை. இதுதான் இவர்கள் தன்னைத் தானே அறியாமல் தம் மீது சிலந்தி வலையை மாட்டிக் கொள்ளும் அறிவிலித்தனம். தொடரும்.
இக்கட்டுரையாளர் மேலும் ஒரு தகவலை இப்படிச் சொன்னார். “ஆரம்பப் பள்ளிகளில், ஆங்கிலத்தில் போதிக்கப்படும் கணிதமும், அறிவியலும், தொழில் நுட்பமும் இடை நிலைப் பள்ளியிலும் தொடரும் என்ற உறுதிப்பாடு ஏதும் அரசிடம் இருந்து வந்துள்ளதா? அப்படியே வட்டாரத்திற்கு ஓரிரு இடை நிலைப்பள்ளில் ஆங்கிலத்தில் போதிக்கப்படுமேயானால் நமது மாணவர்கள் அனைவரும் அந்தப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளனவா? இல்லை என்றால் மற்ற பின் தங்கிய மாணவர்கள் அரை குறை ஆங்கிலத்தோடு மலாய் வழி கணித அறிவியல் பாடங்களை இடை நிலைப் பள்ளிகளில் தொடர்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்க மாட்டார்களா? என்ற கேள்விகளுக்கும் இன்னும் யாரும் பதில் காண முடியவில்லை என்பதையும் சிந்திக்க வேண்டும்”. இது அப்பட்டமான உண்மை. ஒரு வட்டாரத்தில் இருக்கும் நான்கு தமிழ் பள்ளிகள் (‘feeder schools’) அவர்தம் மாணவர்களை அவ்வட்டாரத்தில் இருக்கும் ஒரே இடைநிலை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்நான்கு தமிழ் பள்ளிகளில், இரண்டு பள்ளிகள் ஆங்கிலம் வழி கணிதம் அறிவியல் பாடபோதனையை கொண்டிருந்து, மற்ற இரண்டும் தமிழ் வழியே இவ்விரு பாடங்களையும் போதனாமுறையாக கொண்டிருந்தால், அவ்வட்டாரத்தில் இடைநிலைக்குப் போகும் மாணவர்களின் கதி என்னவாகும். அவ்வட்டார இடை நிலைப் பள்ளியில், இவ்விரு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதித்தாலும் சரி, மலாய் மொழியில் போதித்தாலும், எவ்வாராகினும் இரண்டு தமிழ் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட போவது உறுதி. இத்தகைய எதிர்கால பாதிப்பை அதி மேதாவிகள் சிந்தித்துப் பார்த்தார்களா என்ன? இப்படி எல்லாம் பின் வரக் கூடிய பிரச்சனைகளை தீர ஆழ்ந்து சிந்திக்காமல் தான்தோன்றித் தனமாக செயல்படும் அதி மேதாவிகள் அப்பொறுப்புகளில் உட்கார தகுதி பெற்றவர்களா? அரசாங்க பணம் தங்கள் மூலமாக வெளியாக்கப் படும் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழ் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கையை முறுக்கி மகாத்தான சாதனை செய்ய முற்படும் அதி மேதாவிகளை, எவ்விதம் தமிழ் மொழி பற்றாளர்கள் என்று ஏற்றுக் கொள்வது? மேலும், பின்விளைவுகளைச் சற்றும் சிந்தியாமல், தமிழ் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் தகுந்த ஆலோசனனைகளைப் பெறாமலேயே, கலந்துரையாடல் இல்லாமலேயே, தலைமை ஆசிரியர்கள் தத்தம் பள்ளிகளை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளும்படி கல்வி அமைச்சுக்கு அவசர அவசரமாக கடிதம் அனுப்புவதானது, அவசர குடுக்கைத்தனமாக உள்ளது. இது ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்த மாதிரி இருக்கிறது. பின் வருவேன்.
அன்புள்ள நடுநிலையாளர் அவர்களே, உங்கள் கருத்துகளை வாசித்தேன். அவற்றில் பல நீங்கள் செய்திருக்கும் முடிவுக்கு ஏற்ப கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவை உண்மை நிலையை அறியாதோரின் கூற்று மட்டுமே.
இருமொழி கொள்கை முன்பிருந்த பிபிஎஸெமை போன்றது அல்ல. இரண்டு திட்டங்களும் வேறுபட்டவை. அடுத்து இத்திட்டத்தில் ஆரம்பத்தில் 300 பள்ளிகளில் சில தமிழ் சீன பள்ளிகளும் இருந்தன. ஆனால் சீன பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் 300 பள்ளிகளும் தேசியப்பள்ளிகளாயின. தொடர்ந்து, இத்திட்டத்தை அரசாங்கம் இப்போதைக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு விரிவு படுத்தவில்லை என்பது உண்மை. ஆனால் இத்திட்டம் பேரா. ராஜேந்திரன் போன்ற கல்வியாளர்களுக்கு மிகவும் உவப்பானது. ஆகவே அவர் முன்வந்து இத்திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளுக்கு கொண்டுவர முயல்கிறார். அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்திதான் மாநில அமைப்பாளர்களுடன் இதுதொடர்பில் பேசி சில மாதிரி ஆவனங்களையும் கொடுத்துள்ளார். இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பள்ளி தலைமையாசிரியர்களிடம் பேசிப்பாருங்கள். அந்த பாரம் மிகவும் சாதாரணமானது அதே சமயம் ஆபத்தானது. இந்த விபரம் குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்றோருடன் கலந்தாசோசிக்கவில்லை. பள்ளி விடுமுறை நாளில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டு அந்த விண்ணப்ப பாரம் கல்வி அமைச்சுக்கு அனுப்பபட்டுள்ளது. இப்படி அனுமதி பெற வேண்டும் என்பது பேராசிரியரின் ஆலோசனை அன்றி வேறு இல்லை. மேலும் இத்திட்டம் குறித்த முழுமையான புரிதல் ஆசிரியர்களிடமோ, தலைமைய்யாசிரியர்களிடமோ இல்லை. இத்ன் நல்லது கெட்டது பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாமலேயே பேராசிரிய்யர் சொல்லிவிட்டார் என்னும் காரணத்தாலேயே விண்ணபித்து உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு தகுட்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனுமதி கேட்டுள்ளனர். இது ஆற்றின் ஆழம் தெரியாமல் கால்வைப்பது போன்றது.
விஷயம் தெரிஞ்சவன் சொல்வதை வைத்துப் பார்க்கையில் கல்விமான் தன்னை ஒட்டு மொத்த தமிழர்களுக்கு பிரதிநிதி என்று நினைத்துக் கொண்டு தன்மூப்பாக செயல்படுவது அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிகின்றது. யார் என்ன சொன்னாலும் எமக்கு கவலை இல்லை. நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டால், இதன் பின் விளைவுகள் பாதகமானால் அவமானப் பட போவது தனி ஒரு மனிதராக இருந்து ஏற்க வேண்டும். மேலும் இவருக்குப் பிரதமரிடம் இருக்கும் செல்வாக்கு நிரந்திரம் இல்லை என்பதை அறியாமால் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவது, குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழப் போவதாக தெரிகிறது.
நடு நிலையான் சொன்னது: “பெரும்பான்மையோரின் கருத்துக்கிணங்க இந்த இரு மொழிப் போதனையை தமிழ்ப் பள்ளிகளிலும் நடத்த பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது”. யார் அந்த பெரும்பான்மையோர்? இங்கு பட்டியலிட முடியுமா? நாங்களும் பார்க்க வேண்டும். யார் யார் முகத்திரை போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர் என்பதை தமிழர்களாகிய நாங்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அந்த பெரும்பான்மையினரின் பட்டியலை இங்கே பிரசுரியுங்கள்.
நடு நிலையான் சொன்னது: “அதை தமிழ்ப்பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பேரா.ராஜேந்திரன் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களையும் வற்புறுத்துகிறார் என்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறது .இதை நீங்கள் ஆதரத்துடன் நிரூபிக்க முன் வரவேண்டும்” ‘விஷயம் தெரிஞ்சவன்’ சொன்னதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது. மேலிடத்தில் நின்று கொண்டு, தலைமை ஆசிரியர்களுக்கு தன் சொந்த செல்வாக்கில் தன் கருத்தைக் கொண்டு ஒரு முகமாக தயாரித்த ஆவணத்தை அனுப்பி வைத்து, அதன் வழி நீங்கள் பாரத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பி வையுங்கள் என்றால் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். இன்று இவரைப் பகைத்துக் கொண்டால் நாளை பள்ளிகளின் தேவைக்கு அரசாங்க மாணியத்திற்கு இவரை நம்பிதானே பொழப்பை நடத்த வேண்டும்! அப்புறம் அவர் சொல்வதை, அவரின் “வேண்டுகோளை” எப்படி தலைமை ஆசிரியர்கள் மறுக்கப் போகின்றார்கள்? இப்படிதானே தானைத் தலைவர் ‘என்னை விட்டால் யாருமில்லை’ என்ற சர்வாதிகாரத்தைப் பயன் படுத்தி தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்களை தமது கட்டுப்பாட்டில் ஒரு காலத்தில் வைத்திருந்தார். கல்விமானிடம் சர்வாதிகாரம் இல்லை. ஆனால் அதே பாணியை, வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் ஏற்றினால், அதனை கட்டுரையாளர் எங்ஙனம் ஆதரத்துடன் நிரூபிக்க முடியும்? திருடனின் தலைவனை முன் வைத்துக் கொண்டு திருடனிடம் கேள்வி கேட்டால், திருடன் அவன்தன் தலைவனைக் காட்டிக் கொடுப்பான? அப்படிதான் இருக்கின்றது ‘ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா’ என்று கேள்வி கேட்பது. மீண்டும் வருவேன்.
விஷயம் தெரிந்தவன் சொன்னது: “இருமொழி கொள்கை முன்பிருந்த பிபிஎஸெமை போன்றது அல்ல. இரண்டு திட்டங்களும் வேறுபட்டவை.”
CITIZEN சொன்னது: DLP (Dual Language Programme) பற்றி நானும் கேள்வி பற்றிருகிறேன். முதல் கட்டமாக 300 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் SJK(T) & SJK(C) இடம் பெறவில்லை. DLP திட்டம் PPSMI போன்றதாகும்.
இப்படிதான் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்காமல் அரசாங்கம் செய்யும் மூடுமந்திரத்திர்க்குள் பலர் நின்று கொண்டு கருத்து தெரிவிக்கின்றனர். PPSMI – யும், இரு மொழி வழி பாடத் திட்டமும் ஒன்றல்ல. இவை வெவ்வேறான நிலைப் பாடுகளைக் கொண்டு அமுலாக்கப் படுகின்றன என்பதை நாம் தெரிந்துக் கொண்டு கருத்துரைக்க வேண்டும். வெறும் கேள்வி ஞானம் மட்டும் நம் கருத்தை முன் வைக்க பயன்படாது.