தமிழ் அறவாரியம்: தேசிய, தேசிய-வகைப்பள்ளிகளில் மலாய்மொழியை சமநிலைப்படுத்தல் மற்றும் அறிவியல், கணிதம் ஆகியவற்றை இருமொழிகளில் கற்பித்தல் தாய்மொழிப்பள்ளிகளை ஒழிப்பதற்கான செயல்திட்டங்கள்

 

Satu-sekolah-untuk-semua-logoகடந்த சில மாதங்களாக தேசியப்பள்ளி மற்றும் தேசிய-வகைப்பள்ளி ஆகியவற்றுக்கான மலாய்மொழிப் பாடத்திட்டத்தை சமநிலைப் படுத்துதல் மற்றும் இருமொழித் திட்டம் ஆகிய இரு செயல்திட்டங்கள் பற்றி கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் துறை ஆகியவற்றின் ஊழியர்கள் கூட்டங்கள் நடத்தியும், கருத்துதள் தெரிவித்தும் வருகின்றனர்.

அரசாங்கம் அறிவித்துள்ள இவ்விரு செயல்திட்டங்களும் பெற்றோர்கள் தேசியமொழிப்பள்ளியைத் தங்களுடைய முதன்மையான பள்ளியாக தேர்வு செய்வதை அமல்படுத்த வகைசெய்யும் செயல்திட்டங்கள் என்று தமிழ் அறிவாயத்தின் தலைவர் அ. இராகவன் கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதில் பிரதமர் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சற்று தீவிரமாக செயல்படுகிறார்கள் என்பது நாளிதழ்களின் செய்திகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது என்று கூறிய இராகவன், மலாய்மொழி பாடத்திட்டத்தை சமநிலைப் படுத்துதல் பற்றி பேசும் கல்வி அமைச்சின் ஊழியர்கள் தேசிய-வகைப்பள்ளியில் போதிக்கப்படும் மலாய்மொழியின் தரத்தை தேசியப்பள்ளியில் போதிக்கப்படும் மலாய்மொழியின் தரத்திற்கு உயர்த்துவதுதான் சமநிலைப்படுத்துவதின் நோக்கம் என்று விளக்கம் அளித்தனர் என்று தெரிவித்தார்.

இருமொழித் திட்டம் பற்றி விளக்கம் அளிக்கும் பிரதமர்துறை ஊழியர்கள் அத்திட்டம் தேசிய-வகைப்பள்ளியான தமிழ்ப்பள்ளிக்கும் Tamil foundation logoவிரிவுப்படுத்தப்பட வேண்டும் என்ற அவர்களுடைய சொந்தக் கோரிக்கையை பிரதமர் நஜிப்பிடம் வைக்கப்போவதாகவும் அதற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் தமிழ் ஆர்வலர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறி வருவதோடு இக்கோரிக்கையை அவர்கள் பிரதமரிடம் விரைவில் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய இராகவன், . அவர்களின் உற்சாகமான, உரிமை உணர்விலான பேச்சின்படி அநேகமாக அவர்களின் கோரிக்கை பிரதமரிடம் இந்நேரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

பிரதமர்துறையைச் சேர்ந்த இவர்கள்தான் “உருமாற்றத்தின் வழி தமிழ்ப்பள்ளிகளை வலுப் பெறச் செய்தல்” என்ற செயலறிக்கையை பிரதமர் நஜிப்பிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 இல் கொடுத்தனர். அவ்வறிக்கையை நேரடியாகப் பெற்றுக்கொண்ட பிரதமர் நஜிப், அந்த அறிக்கையை தாம் நேரடியாக கல்வி அமைச்சர் முகைதின் யாசினிடம் கொடுக்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிக்கை என்ன ஆயிற்று என்பது பற்றி எவருக்கும் எதுவும் இன்று வரையில் தெரியாது என்று இராகவன் தெரிவித்தார்.

 

புதிய கல்விக் கொள்கை அல்ல

1. மலாய் மொழி பாடத்திட்டத்தை சமநிலைப்படுத்துதல்

கல்வி அமைச்சின் ஊழியர்கள் மலாய்மொழி பாடத்திட்டத்தைச் சமநிலைப் படுத்துதல் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். இதுMEB-2013-2025 அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை அல்ல. இது அரசாங்கத்தின் செயல்திட்டம்.  இதனை அரசாங்கம் முன்பே வரைந்து, மக்களின் கருத்துகளைப் பெற்று, கல்விமான்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து, அதன் பின்னர் ஏற்றுக்கொண்ட மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) இன் ஓர் அங்கமாகும்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த அங்கத்தை அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசாங்கம் உருவாக்கியுள்ள அதன் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் என்ன சிரமம், ஏன் கலந்துரையாடல்கள் என்று கேட்கலாம். அரசாங்கத்தின் கல்விக் கொள்கை மலேசியாவிலுள்ள தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் அம்னோவின் “இறுதிக்குறிக்கோள்” கொள்கையை முற்றாகப் பிரதிபலிக்கிறது என்று வலியுறுத்திய இராகவன், இந்நாட்டின் சீன சமூகம் அக்கொள்கைய முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது என்றார்.

1956 ஆம் ஆண்டில் அன்றையக் கல்வி அமைச்சர் அப்துல் ரசாக் குழு பரிந்துரைத்த “ஒரே மொழி”, “ஒரே பள்ளி” என்ற கொள்கையை சீனAbdulrazak200 சமூகம் கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக அந்தக் குறிப்பிட்ட பரிந்துரையில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அந்தக் குறிக்கோள் இன்று வரையில் அம்னோவின் கொள்கையாக இருந்து வருவதை சீன சமூகம் உறங்கும் போதும் கூட  மறந்துவிடத் தயாராக இல்லை என்பதை அரசாங்கமும் மறந்து விடவில்லை என்று விளக்கமளித்த இராகவன்  அதனால்தான் மலாய்மொழி பாடத்திட்டை சமநிலைப்படுத்தும் செயல்முறை திட்டம் குறித்து கல்வி அமைச்சின் ஊழியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கினர் என்றார்.

கடந்த ஆகஸ்ட் 18 இல், கோலாலம்பூரில் கல்வி அமைச்சின் ஊழியர்கள் ஒரு கலந்துரையாடலை நடத்தினர். இதற்கு முன்பும் இரண்டொரு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 18 இல் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் அறவாரியம், ஏழு சீன அமைப்புகள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தேசிய மன்றம், இடபுள்யுஆர்எப், மஇகா ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சால் அழைக்கப்பட்டிருந்த ஒரு சீன கல்விமான் ஆகியோர் பங்கேற்றனர். கல்வி அமைச்சின் ஊழியர்கள் இச்செயல்முறை திட்டம் அமலாக்கப்பட வேண்டியதின் அவசியம் பற்றி விளக்கினர். சீன சமூகத்திலும் கூலிக்கு மாரடிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிருபிக்கும் வகையில் கல்வி அமைச்சால் கொண்டுவரப்பட்டிருந்த அந்த சீன கல்விமான் கல்வி அமைச்சின் செயல்முறைதிட்டத்தை வரவேற்று ஆதரித்து பேசினார். மஇகாவின் பிரதிநிதியும் இச்செயல்முறைதிட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மற்ற அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனத் தொடர்ந்து இச்செயல்முறைதிட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் ஊழியர்கள் அக்கூட்டத்திலேயே கூறினர் என்ற தகவலை இராகவன் வெளியிட்டார்.

கல்வி அமைச்சின் ஊழியர்கள் கூறியதை நாங்கள் நம்பினோம். ஆனால், இப்போது நடந்தது வேறு. சமீபத்தில் சீனமொழித் kamalanatahanதொடக்கப்பள்ளிகளுக்கு திடீரென்று இந்த சமநிலைப்படுத்தும் பாடநூல்களை கல்வி அமைச்சு அனுப்பி வைத்தது. எப்படியாவது சீனமொழிப்பள்ளிகளின் ஒப்புதலைப் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இது செய்யப்பட்டது என்று கூறலாம் என்று கருத்து தெரிவித்த இராகாவன், இதனைச் செய்தது கல்வி அமைச்சின் பாடநூல்கள் பிரிவாகும். இந்நடவடிக்கையால் சீனப்பள்ளிகள் சீற்றமடைந்தன.  துணைக் கல்வி அமைச்சரான பி. கமலநாதன் இப்பாடல்நூல்கள் பயன்படுத்தப்படும் என்றும், ஆனால் ஆண்டு இறுதிச் சோதனையின் போது கேள்விகள் தேசிய-வகைப்பள்ளிகளுக்கான அடிப்படையில் இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டார் என்று இராகவன் கூறினார்.

கல்வி அமைச்சின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாத மசீசவின் இளைஞர் பிரிவு தலைவர் இப்பாடநூல்களை கல்வி அமைச்சின் குட்டிநெப்போலியன்களின் முகத்தில் விட்டெறியுங்கள் என்று சாடியிருந்ததை இராகவன் நினைவுறுத்தினார்..

அதே கல்வி அமைச்சின் இன்னொரு துணைக் கல்வி அமைச்சரான சோங் சின் வூன் இப்பாடநூல்கள் சீனப்பள்ளிகளுக்கு அனுப்பி chong sin woonவைக்கப்பட்டது அமைச்சரவையின் முடிவிற்கு முரணானது என்று பகிரங்கமாக அறிவித்திருந்ததச் சுட்டிக் காட்டிய இராகவன்,  அடுத்து, மசீச தலைவர் லியோவ் இவ்விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்பினார் என்றும் அதனைத் தொடர்ந்து சீனமொழிப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடநூல்கள் திரும்பப்பெறப்படும் என்றும் தாய்மொழிப்பள்ளிகளுக்கான புதிய மாலாய்மொழி பாடநூல்கள் உடனடியாக அச்சடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது என்றார்.

சீன சமூகத்தின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து சீன துணைக் கல்வி அமைச்சர் வூன் அவரது கடமையைச் செய்துள்ளார். அதனால், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். தமிழ் அறவாரியம் சீன துணைக் கல்வி அமைச்சர் வூனுக்கு அதன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்று இராகவன் கூறினார்.

 

2. இருமொழி பாடத்திட்டம்

 

அரசாங்கம் அறிவித்துள்ள இருமொழி பாடத்திட்டமும் ஒரு புதிய கல்விக் கொள்கை அல்ல என்று கூறிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் இராகவன், இதுவும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2015) இல் இடம்பெற்றுள்ள கல்விக் கொள்கையாகும். தேசிய மொழியான மலாய் மொழியை மேன்மைப்படுத்தவும், ஆங்கில மொழியை வலுப்படுத்தவும் இக்கொள்கை வகைசெய்கிறது.  இக்கொள்கையை அமலாக்கம் செய்வதற்கான முதல்கட்ட முன்னோடி செயல்திட்டத்தைத்தான் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இந்த முன்னோடி திட்டத்தை அமல்படுத்துவதற்காக ரிம38.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அறிவியல், கணிதம் மற்றும் தகவல் தொழிற்நுட்பம் ஆகிய பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய இருமொழிகளிலும் கற்பிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் விளக்கமளித்துள்ளார்.

இந்த முன்னோடி இருமொழி செயல்திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ள 300 தேசியமொழித் தொடக்கப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார் என்றும் இராகவன் தெரிவித்தார்.

மேலும், தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பள்ளிகள் பட்டியலில் இடம்பெறாத பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் கொண்டிருந்தால், அவை மூன்று முக்கியமான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்: 1. சரியான வளங்கள் இருக்க வேண்டும், 2. ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கற்பிக்கும் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்க வேண்டும், மற்றும் 3. இச்செயல் திட்டத்தை ஆதரிக்கும் பெற்றோர்கள், ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தாய்மொழிப்பள்ளிகள் கல்வி அமைச்சு நிர்ணயித்திருக்கும் மலாய்மொழி தேர்ச்சித் தரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்தச் செயல்திட்டத்தில் பங்கேற்க மேற்கண்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் வலியுறுத்தியிருந்ததை இராகவன் சுட்டிக் காட்டினார்.

ஒவ்வொரு பள்ளியிலுமுள்ள ஒவ்வொரு மாணவனும் தேசிய மொழியான மலாய் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் திறமைMEB-2013-2025 பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கை மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) இடம் பெற்றுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவனும் ஒரு கூடுதல் மொழியைக், மூன்றாவது மொழியைக் (சீனம், தமிழ், அரேபிய மொழி, இபான் மற்றும் கடாஸான் டூசுன் மொழிகளைக்), கற்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். என்றும் அப்பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றை தேசியப்பள்ளிகளில் கற்கலாம் என்றும் அப்பெருந்திட்டத்தில் கோடிகாட்டப்பட்டுள்ளது. ஆக, மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ள அரசாங்கத்தின் இருமொழிக் கொள்கையில் மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தமிழும் சீனமும் மூன்றாவது தேர்வு மொழியாக, விருப்பப் பாடமாக, கற்கலாம். இக்கொள்கையின் இறுதி குறிக்கோள் தாய்மொழிப்பள்ளிகள் தேவை இல்லை என்பதாகும் என்று இராகவன் மேலும் கூறினார்.

இக்கொள்கைகள் அடங்கிய மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) வரையப்பட்ட வேளையில் அவற்றை புனராய்வு செய்து ஆலோசனை கூறும் மலேசியக் குழுவில் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். டான்ஶ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்ணான்டஸ் (ஏர் ஏசியா) மற்றும் பேராசிரியர் டாக்டர் இரேஜேந்திரன் நாகப்பன் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்த இந்தியர்கள் ஆவர். மக்களுடனான கலந்துரையாடல் மற்றும் வட்டமேசை விவாதங்களுக்குப் பொறுப்பேற்றிருந்த 12 உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் யுஎஸ்எம் பல்கலைக்கழக துணைப்பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் பாண்டியன் இடம்பெற்றிருந்தார் என்ற தகவலையும் இராகவன் வெளியிட்டார்.

மலாய் மற்றும் ஆங்கில மொழிகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை மேன்மைப்படுத்தி வளப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை அமல்படுத்துவதற்குத்தான் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிற்க இந்த இருமொழி செயல்திட்டம் வகைசெய்கிறது என்று வாதிட்ட இராகவன், இதுவும் புதிதல்ல. 2003 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினர். 2013 இல் அதை மாற்றினர். இப்போது அதை மீண்டும் மாற்ற வேண்டும் என்கின்றனர் என்றாரவர்.

 

தமிழ் அறவாரியம் எதிர்ப்பது ஏன்?

 

தமிழ் அறவாரியம் கல்வி அமைச்சு தற்போது அமல்படுத்த முயற்சித்த மலாய் மொழி சமநிலைப் பாடத்திட்டத்தின் செயல்திட்டத்தை மட்டும் எதிர்க்கவில்லை. இக்கொள்கை வரையப்படும் போதே தமிழ் அறவாரியம் அதற்கு இதர அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றாரவர்.

இந்த எதிர்ப்புக்கான முதல் காரணம்: மலாய்மொழி தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளி மாணவர்களின் தாய்மொழியல்ல. ஆகவே, அது இரண்டாம் மொழியாக கற்பிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் அறவாரியத்தின் நிலைப்பாடாகும் என்பதைத் தெரிவித்த இராகவன், இதுதான் இவ்வுலகிலுள்ள கற்றறிந்த கல்வி நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அளித்துள்ள அறிவுரையாகும் என்றார்.

ஐநாவின் யுனெஸ்கோ மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள மலேசியாவுக்கு குழந்தைகளுக்கு அவரவரின் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதுதான் சிறந்த முறையாகும் என்ற யுனெஸ்கோவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் பரிந்துரை தெரிந்திருக்க வேண்டும். மேலும், மலேசிய சீன சமூகத்தில் கூலிக்கு மாரடிக்காத சீன கல்விமான்களும் இதனை வலியுறுத்துகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

Tamil foundation logoகடந்த செப்டெம்பர் 5 இல், தமிழ் அறவாரியம் இவ்விவகாரம் சம்பந்தமாக கோலாலம்பூரில் மக்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலானோரின் பொதுவான கருத்து அரசாங்கம் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இருந்தது. மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தமிழ் அறவாரியம் ஒரு மகஜரையும் கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்தது.

இரண்டாவது காரணம்: இக்கொள்கை தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளி மாணவர்களை தேசியப்பள்ளிக்கு இழுத்து தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும்  உள்நோக்கம் கொண்டதாகும் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டார்.

1956 ஆம் ஆண்டில், அப்துல் ரசாக் ஒரே மொழி, ஒரே பள்ளி அரசாங்கத்தின் இறுதிக் குறிக்கோள் என்று அறிவித்த பரிந்துரைக்கு சீன சமூகம் தெரிவித்த எதிர்ப்பால் அரசியல் வழியில் தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம் இப்போது பெற்றோர்கள் மூலமாகவே தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் ஒரு புதிய இறுதிக் குறிக்கோள் ஒன்றை வகுத்துள்ளது. பெற்றோர்களே தேசியமொழிப்பள்ளிகளை தங்களுடைய குழந்தைகளுக்கான முதன்மையான பள்ளியாக தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்துவதுதான் இந்தப் புதிய இறுதிக் குறிக்கோள். இக்குறிக்கோளை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொள்ளும் என்று மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) இல் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இராகவன் சுட்டிக் காட்டினார்.

இப்புதிய இறுதிக் குறிக்கோளை அடைவதற்காக நகர்த்தப்படும் காய்களில் ஒன்றுதான் தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளில் மலாய்மொழி பாடத்திட்டத்தை சமநிலைப்படுத்தும் செயல்திட்டம் என்று கூறிய அவர் சமநிலைப்படுத்தும் திட்டத்தை அறிவித்து விட்டு அதற்கான பாடநூல்களை மாணவர்களிடம் திணித்துவிட்டால் மட்டும் தாய்மொழிப்பள்ளி மாணவர்களின் மலாய்மொழித் திறன் தேசியப்பள்ளிகளின் மலாய் மாணவர்களின் தரத்திற்கு தானாகவே உயர்ந்து விடாது என்பது கல்வி அமைச்சின் ஊழியர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

முதலில், தேசியப்பள்ளிகளில் பயிலும் இந்திய மற்றும் சீன மாணவர்களின் மலாய்மொழித் திறன் அதே பள்ளிகளில் பயிலும் மலாய் மாணவர்களின் மலாய்மொழித் திறனுக்குச் சமமானதாக இல்லை என்பதை கல்வி அமைச்சு ஒப்புக்கொள்ள வேண்டும். சமமானதாக இல்லை என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.

தேசியப்பள்ளிகளில் அனைத்துப் பாடங்களும் மலாய்மொழியில் கற்பிக்கப்படுகின்றன. அது முழு நேர மலாய்மொழி கற்பித்தலாகும். தாய்மொழிப்பள்ளிகளில் மலாய் மற்றும் ஆங்கிலமொழிப் பாடங்கள் தவிர இதர பாடங்கள் அனைத்தும் தாய்மொழியில் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் மலாய்மொழியின் திறனை உயர்த்துவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்படும் இந்த கூடுதல் நேரத்தைப் பெறுவதற்கு இதர தாய்மொழிப் பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் குறைக்கப்பட்டாக வேண்டும். இதனால் தாய்மொழிப் பாடங்களின் தரம் நிச்சயமாகச் சரியும். அந்நிலை கல்வி அமைச்சுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஏனென்றால் கல்வி அமைச்சு இந்தக் கூட்டல் கழித்தல் வேலையில் தீவிர கவனம் செலுத்தி வருவது தெரிந்த ஒன்றாகும் என்றார்.

ஆனால், அந்நிலை தமிழ் அறவாரியத்திற்கு ஏற்புடையதல்ல. தாய்மொழிப் பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் எக்காரணைத்திற்காகவும் குறைக்கப்படக்கூடாது. தாய்மொழிப்பள்ளிகள் தாய்மொழிப்பள்ளிகளாக இருக்க வேண்டும். அவை மலாய்ப்பள்ளியாகவோ ஆங்கிலப்பள்ளியாகவோ மாற்றப்படக்கூடாது என்பது தமிழ் அறவாரியத்தின் உறுதியான நிலைப்பாடாகும் என்பதை இராகவன் வலியுறுத்திக் கூறினார்.

அதே நேரத்தில், தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி மாணவர்களின் மலாய் மற்றும் ஆங்கிலமொழிகளின் தரம் உயர வேண்டும் என்பதில் தமிழ் அறவாரியத்திற்கு தீவிர ஈடுபாடு உண்டு. வறுமையான சூழலிலும் தமிழ் மற்றும் சீனப்பள்ளி மாணவர்கள் மலாய், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் அவர்களுடைய திறமையைப் பறைசாற்றியுள்ளனர் என்பதை நேர்மையான உள்ளங்கள் ஏற்றுக்கொள்ளும் என்றாரவர்.

மலாய் மற்றும் ஆங்கிலமொழிகளை தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளில் சமநிலைப்படுத்த விழையும் அரசாங்கமும் கல்வி அமைச்சும் தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மலேசிய ஐந்தாண்டு திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் ஏன் சமமான நிலைப்பாட்டைக் கடைபிடிக்கவில்லை? ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்Image result for najib at malaysian community chestபடையில் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் ஐந்தாண்டு திட்ட நிதி ஒதுக்கீட்டில் பெரும் வேறுபாடு காட்டப்படுகிறது. ஒதுக்கீடு சமமானதாக இல்லை. எடுத்துக்காட்டு: ஒன்பதாவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்தில் தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30தும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95தும், சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50தும் ஒதுக்கப்பட்டது. இப்போக்கு இன்றும் மாறவில்லை. அது மட்டுமல்ல. தாய்மொழிப்பள்ளிகள் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடாது. சூதாட்ட மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பெட்டகம் என்று கூறப்படும் அமைப்பிலிருந்து நிதி உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் நஜிப் அறிவித்திருக்கிறார். ஒருபுறம் தாய்மொழிப்பள்ளி மாணாவர்கள் பட்டினி போடப்படுகிறார்கள். மற்றொருபுறம் அவர்கள் தேசியப்பள்ளி மாணவர்களுக்கு சமமாக ஓட வேண்டும் என்கிறார்கள். இதன் உள்நோக்கம் தாய்மொழிப்பள்ளிகளை பட்டினி போட்டு வீழ்த்திடலாம் என்பதாகும் என்று அவர் விளக்கமளித்தார்.

இப்படி பல்வேறு வழிகளில் தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் கொள்கைகளை அரசாங்கம் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளில் மலாய்மொழி பாடத்திட்டதை சமநிலைப்படுத்தும் செயல்திட்டம். இதற்கு தமிழ் அறவாரியம் நிச்சயமாக ஆதரவு அளிக்காது என்றாரவர்.

மேலும், இச்செயல் திட்டம் அமலாக்கப்படுவதை தடுத்து நிறுத்த மசீச துணைக்  கல்வி அமைச்சர் சூன் எடுத்துக்கொண்ட நடவடிக்கையை தமிழ் அறவாரியம் பாராட்டுகிறது. மற்றவர்கள் இவ்வாறு விழிப்புடன் செயல்பட்டு தாய்மொழிப்பள்ளிகளுக்கு தீங்கு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் தமிழ் அறவாரியம் வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறினார்.

 

இருமொழி செயல்திட்டம்

 

அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளில் கற்பித்து அதன் மூலம் மலாய்மொழியை மேன்மைப்படுத்தி, ஆங்கிலமொழியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை இச்செயல் திட்டம் அமல்படுத்த வகை செய்கிறது.

அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கில மொழியில்தான் கற்க வேண்டும் என்ற இயற்கை விதி ஏதும் இல்லை. தங்களுடைய தாய்மொழிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கற்று உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகத் திகழும் ரஷ்யா, சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிக் காட்டி, மலேசியாவிலும் இப்பாடங்களை தாய்மொழிகளில் கற்கலாம், கற்க வேண்டும் என்று தமிழ் அறவாரியம் கருத்து தெரிவித்திருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கூறப்பட்டுள்ள நாடுகளில் தொடக்கப்பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் தாய்மொழியில் கல்வி கற்க முடியும். ஆனால், இந்நாட்டில் அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலை இந்நாட்டில் இல்லை என்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்ட இராகவன், ஏன் இல்லை என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கான ஆர்வம் மற்றும் ஈடுபாடு இல்லை என்று கூற முடியாது. சீனமொழியை போதனை மொழியாகக் கொண்ட மெர்தேக்கா பல்கலைக்கழம் நிறுவப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தால் இந்நாட்டிலும் அறிவியில் மற்றும் கணிதம் ஆகிய போன்ற பாடங்கள் சீனமொழியில் போதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அப்பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் மறுத்து விட்டது. இந்நாட்டில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்குக்கூட அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாரவர்.

தாய்மொழியில் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை கற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தமிழ் அறவாரியத்தின் நிலைப்பாடு என்பதை இராகவன் வலியுறுத்தினார்.

கணினியில் பதிவு செய்யப்படும் தகவல்களை சேமித்து வைப்பதற்கும் கோப்புகளை மாற்றிக்கொள்வதற்கும் விரலி (“பென்டிரைவ்”) என்ற ஒரு சிறிய கருவியை உருவாக்கி உலகிற்கு வழங்கியது மலேசிய சீனமொழிப்பள்ளியில் படித்த ஒரு மாணவன் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்றாரவர்.

மேலும், தாய்மொழிப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளில் போதிக்க அனுமதிப்பதின் மூலம் தாய்மொழிப்பள்ளிகள் அவற்றின் தனித்தன்மையைப் பறிகொடுக்க நேரிடும் என்பதோடு அவை காலப்போக்கில் ஆங்கிலப்பள்ளிகளாக மாற்றப்பட்டு பின்னர் தேசியப்பள்ளிகளாக்கப்படும். இப்படியும் அரசாங்கம் தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் அதன் இறுதிக் குறிக்கோள் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்பது தமிழ் அறவாரியத்தின் கணிப்பு என்றாரவர்.

மலாய்க்காரர்கள்கூட அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் ஆங்கில மொழியில் போதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாமும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழ் அறவாரியத்தின் நோக்கம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

ஆங்கிலமொழி ஒரு பாடமாகப் போதிக்கப்படலாம். ஆனால், ஆங்கிலம் என்ற மாயையின்முன் தமிழ்ப்பள்ளியை மண்டியிட வைத்து அது மடிவதற்கு எந்த வகையிலும் இடமளித்துவிடக்கூடாது. அதன் அடிப்படையில்தான் தமிழ் அறவாரியம் அரசாங்கத்தின் இருமொழி செயல்திட்டத்தை நிராகரிக்கிறது.

hamidiadmitsஆகஸ்ட் 18, 2015 இல், ஷா அலாமில் கெராக்கான் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நஜிப் சீனமொழிப்பள்ளிகள் நிலைத்திருக்கும். அது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது என்றார். ஆனால், அவரது துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தாய்மொழிப்பள்ளிகள் நமது உரிமை. அந்த உரிமையைத் தற்காத்து இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளும் அவற்றில் பயிலும் மாணவர்களும் மேம்பாடடைவதற்கு தேவையான நிதி, நிலம், நிருவாகம் போன்ற அனைத்தையும் அரசாங்கம் தேசியப்பள்ளிகளுக்கு வழங்குவது போல் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அளிப்பதை உறுதி செய்வது நமது கடமையாகும். இது தமிழ் அறவாரியத்தின் நிலைப்பாடு என்று அதன் தலைவர் இராகவன் திட்டவட்டமாகக் கூறினார்.