கம்போங் மேடான் வன்முறைக்கு இடைநிலை நீதி வேண்டும்!, கா. ஆறுமுகம்

 

Arumugamkampongpandanஇந்தியர்களுக்கு எதிரான கம்போங் மேடான் வன்முறை சம்பவம் நடந்து  இன்றோடு பதினைந்து  ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். வெட்டுக் காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அவர்.

மார்ச் 8-இல், பழைய கிள்ளான் சாலையில் உள்ள கம்போங் மேடானில் தொடங்கிய இந்த இனவாத வன்முறை தாக்குதல் மார்ச் 23-ஆம் தேதிவரை நீடித்தது.

வாசுவை போல் சுமார் 90-க்கும் அதிகமானோர் வெட்டுக் குத்துகளுக்கு ஆளானார்கள். ஆறு நபர்கள் உயிர் இழந்தனர். இத்தாக்குதல்கள் நடந்த போது பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு இருந்தது. சுமார் ஓர் இலட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த இடத்தைப் பாதுகாக்க அப்போது 2,053 காவல் அதிகாரிகள் ஆயுதங்களுடன் பணியில் இருந்தனர். ஆனால், இந்த வன்முறை மார்ச் 23-ஆம் தேதி வரையில் தொடர்ந்தது.

இந்த வன்முறை தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவில்லை.

மனித உரிமை அடிப்படையில் இது போன்ற இன வன்முறைக்குத் தீர்வாக இடைநிலை நீதி (Transitional Justice) transitional justiceஎன்ற கோட்பாடு அனைத்துலக ரீதியில் அமுலாக்கம் கண்டு வருகிறது.

இடைநிலை நீதி என்பது ஒரு நாட்டின் அரசாங்கம்  அதன் மோசமான கடந்த கால மனித உரிமை அத்துமீறல்களை நீதியின் அடிப்படையில் மறுசீராக்கவும்,  நிவர்த்தி செய்யவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கைகள் குற்றவியல் வழக்குகள் வழியும், உண்மை ஆணையம் அல்லது அரச விசாரணை ஆணையம் வழியும் உண்மையாக என்ன நடந்தது என்பதை அலசி ஆராயும்.

முடிவாக  இழப்பீட்டு தொகைகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசாங்கத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு வழி முறைகள் வழியாக இது போன்ற சம்பவங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும்.

இப்படிச் செய்வதன் வழி, இனங்களுக்கிடையே சமூக முரண்பாட்டையும் அவநம்பிக்கையையும் வளர்க்கும்  சூழல் இருக்காது. மக்களை இனவாத ரீதியில் பிரித்துப் பிளவாக்கும் சூழல்  உருவாக்கம் காணாது. சட்டம் இது போன்ற நிகழ்ச்சிகள் வன்முறை சுழற்சியாக மீண்டும் ஒரு மறுநிகழ்ச்சிக்கு வருவதைத் தடுக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு  அங்கீகாரமும் நீதியும் கிடைக்கிறது.  நாட்டின் பாதுகாப்பு மீதும்,  சட்டம்,  சனநாயக வழி முறைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை  உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனால், மூடி மறைப்பதால், நீதி மறைக்கப்படுகிறது. ஓர் எளிமையான உழைக்கும் வர்க்கத்தின் சமூகத்தினர் அந்த நிகழ்ச்சி உண்டாக்கிய அநீதியை மறக்கவும் இயலாமல் மறைக்கவும் இயலாமல், ஆத்மத் திருப்தியற்ற நிலையில் விதிக்கும் இயலாமைக்கும் இடையில் சங்கமமாகி வாழ்கிறார்கள்.

kampung medan 2இதுவரையில் இந்த இன வன்முறை பற்றி எந்த விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. சம்பவத்தின் போது 153 நபர்கள் கைது செய்யப்பட்டும் குற்றவாளி என யாரும் தண்டிக்கப்பட வில்லை. இது சார்பாக நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் தீர்ப்பும் கையாண்ட விதமும் மனித நீதிக்கு அப்பாற்பட்ட வகையில் இயந்திரத்தனமாகத்தான் கையாளப்பட்டது.

இந்த இன வன்முறை பற்றிய ‘மார்ச்-8’ என்ற எனது நூலை மலேசிய அரசாங்கம் தடை செய்ததற்கான காரணம்,  அது தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக உள்ளதாம்.

ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் கம்போங் மேடான் தாக்குதலை “ஓர் இனக் கொலை” என்கிறார். இத்தாக்குதலை “ஓர் இனக் கலவரம்” எனப் போலீசார் வர்ணித்து மக்களை ஏமாற்றினர் என்றாரவர். “நாட்டின் மனச்சாட்சிக்குப் பதில் அளிக்க இத்தாக்குதலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்”, என்கிறார்.

kampung medan bookஇடைநிலை நீதியற்ற நிலையில், இன ஒற்றுமையை ஓவிய வடிவில் பாடப்புத்தகங்களிலும் பல்வேறு சுற்றுலா சுவரொட்டிகளிலும்தான் பார்க்க முடியும். சுமார் 50 ஆண்டுகளுக்குத் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்த இந்தியர்களுக்கு ஒரு தீர்க்கமான வகையில் இந்த வன்முறைக்கான தீர்வை கையாண்டிருக்கலாம். ஆனால், தேசிய முன்னணி அரசு கைவிட்டது விசுவாசத்திற்குக் கிடைத்த வேதனையாகும்.

[குறிப்பு: இந்நிகழ்ச்சியை நினைவு கூருவதற்கான காரணம், இதனால் இறந்தவர்களும், படுகாயங்களின் வடுக்களுடன் வாழ்பவர்களும், நமக்குச் சொல்லும்பாடம்: இப்படி ஒரு மோசமான நிகழ்ச்சி மீண்டும் வரக்கூடாது என்பதாகும். அதற்கு ஓர் இடைநிலை நீதி தேவை. இல்லையென்றால், இது போன்ற இன்னொரு நிகழ்ச்சி நமது நிழலில் நடமாடிக்கொண்டே இருக்கும்.]