ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாகும்!

1 hindrafவேதமூர்த்தி தலைமையேற்றிருக்கும் பதிவுபெற்ற பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (PHM) அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத  கொள்கை பிளவைத்  தொடர்ந்து, அவ்வமைப்பிலிருந்து  வெளியேறிய 7 தேசிய நிலையிலான தலைவர்கள், வறுமையில் உள்ள  மலேசிய இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளுக்கு தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய இந்தியர்களின் உணர்வால் உண்டாக்கப்பட்ட  ஹிண்ட்ராப் அதன் உண்மையான நோக்கத்தை அடைவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மக்களால் , மக்களுக்காக தோன்றிய இந்த இயக்கம் தொடர்ந்து மக்கள் இயக்கமாகவே இனி “ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம்” என்ற அடையாளத்துடன் தமது பயணத்தைத் தொடர  இருப்பதாக இயக்கத்தின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளதாக அதன் முன்னாள் ஆலோசகர் கணேசன் தனது பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்திற்கு ”  மூத்த தலைவர்காளாகிய  திரு.நா.கணேசன், திரு.வி.சம்புலிங்கம், திரு.கி. தமிழ்செல்வன், திரு.பெ.ரமேஷ் , திரு க.கலைச்செல்வன்  ஆகிய ஐவர்  அடங்கிய தலைமைத்துவச்  சபை (senate)  தலைமைப் பொறுப்பேற்கும்.   பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா அமைப்பில் இருந்து கொள்கை அடிப்படையில் வெளியேறிய எழுவரில் ஐவர் இந்த தலைமைச் சபை பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

1ganesanகடந்த காலங்களின்  கசப்பான அனுபத்தை கருத்தில் நிறுத்தி, தனி மனித தலைமைக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதை இனி “ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம்” தொடரப்போவதில்லை . மாறாக, தலைமைத்துவச் சபையில் பரிசீலிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற, வெளிப்படையான போக்கை அமல்படுத்தி, கடை பிடிக்கவே இத்தகைய தலைமைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் கணேசன்.

இவ்வாறு செயல்படுவதின் மூலம் எந்த தனி நபரும்  மலேசிய இந்தியர்களின் பரிதாபமான,  சமூக மற்றும் பொருளாதார அவலங்களை தமது சுயநல கனவுகளை நினைவாக்கிக் கொள்ள ஒரு காரணியாக பயன்படுத்துவதை தவிர்த்து, நிறுத்தமுடியும் என்கிறார் அவர்.

மேலும் விவரிக்கையில், “கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் மக்களால் போற்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஹிண்ட்ராப் இயக்கம் சுயநலங்களுக்கு அப்பாற்ப்பட்ட  தலைமைத்துவத்தை எதிர்பார்த்து, எத்தகைய தியாகங்களுக்கும் தயாராக முன்நின்றதை யாரும் மறந்திருக்க  முடியாது. அந்த உண்மையான , நியாமான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு  “’ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின்’  தலைமைத்துவச் சபை நிச்சயம் புத்துயிர் அளிக்கும்.”

“ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின்  முயற்சிக்கு சில தரப்பினர் தொடர்ந்து தடங்கல்களையும், பிரச்சனைகளையும், ஏற்படுத்தக் கூடும். நாங்கள் தொடர்ந்து சமுதாயப் பணி ஆற்றுவதை தடுக்கும் முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபடலாம். எங்கள் மீது வழக்கைக்கூட பதிவு செய்யலாம். ஆயினும், மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்தை விரும்பும் நல்ல உள்ளங்களும், மலேசிய இந்தியர்களும் எங்களின் இந்த அறப்பூர்வமான முயற்சிக்கு நல்லாசியும் பேராதரவும் நல்குவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

“மலேசிய இந்தியர்களின் சுபிட்சத்தை இலக்காகக்  கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட விரும்பும் அனைத்து  நல்லுள்ளங்களோடும் ஒத்துழைக்க  இனி ‘ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம்’ தயாராக இருக்கிறது”, என்றாரவர்.

இது சார்பான அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்ச்சி குறித்த விவரங்கள் வெகுவிரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்கிறார் அதன் தலைமைத்துவச் சபை உறுப்பினர் நா. கணேசன்.