-ஜீவி காத்தையா. மார்ச் 26, 2016.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று உலகின் பிரசித்த பெற்ற, அதாவது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்ற வகையில், தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.
அவருடைய தலைமையில் இயங்கி வரும் 1எம்டிபி நிதி ஊழல் விவாகரங்கள் உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்நாட்டில் அதுதான் மக்களின் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவாக ஏற்றம் கண்டுள்ளது. திருடுவதற்கும் தனித் திறமை இருக்க வேண்டும். அது இல்லாமல், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல், வெளிநாட்டிலிருந்து ஓர் அருள் கந்தா கந்தசாமியை கொண்டு வந்து விவகாரத்தை தீர்த்துவிட முயன்றனர். அதுவும் பலிக்கவில்லை. இப்போது இந்த 1எம்டிபி குறித்து விசாரணை நடத்துவதில் ஈடுபட்டிருந்த அரசாங்க அமைப்புகளைச் சார்ந்தவர்கள், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் பல இடையூறுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் கேள்வி கேட்பவர்களை தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்குவதை நஜிப் இப்போது ஒரு தொழிலாகக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்டுள்ள ஊழல் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலை அன்றாட அடிப்படையில் சீரழிந்து வருகிறது. இச்சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும், நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சரிப்படுத்தி நாட்டு மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்குப் புதிய தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அது அமைவதற்கு தற்போதைய பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு தழுவிய அளவில் எழுப்பப்பட்டு வருகிறது, அதில் ஆளுங்கட்சியான அம்னோவின் உறுப்பினர்களில் பலரும் அடங்குவர்,.
பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நஜிப்பும் அவரது நெருங்கிய சகாக்களும் தயாரக இல்லை. மாறாக, பிரதமரை பதவியிலிருந்து விலகச் சொல்வது, அகற்ற முயல்வது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக மற்றும் நன்னெறி கோட்பாடுகளுக்கும் முரணானது என்று அவர்கள் வாதிடுகின்றனர். பொதுத் தேர்தல் வழிதான் அதனைச் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
அதுதான் பதவியிலிருக்கும் ஒரு பிரதமரை அகற்றுவதற்கான ஒரே வழி என்றால், பிரதமர் அஹமட் அப்துல்லா படாவி எந்த அடிப்படையில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்?
1எம்டிபி நிதி ஊழல் பற்றிய முழு விபரங்களும் அறிந்தவர்கள் எழுப்பி வந்த கேள்விகளுக்கு நேரடியாக நாடாளுமன்றத்திலோ, அதற்கு வெளியிலோ பதில் அளிப்பதை இதுவரையில் தவிர்த்து வரும் பிரதமர் நஜிப் தாம் ஒரு திருடன் அல்ல என்றும் மக்கள் சொத்தில் ஒரு காசையோ, ஓர் அங்குல நிலத்தையோ தனக்காக எடுத்துக்கொண்டதில்லை என்றும் அவருடை பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் மார்ச் 19 ஆம் தேதி 5,000 க்கு மேற்பட்ட அவரது ஆதரவாளர்களிடம் பேசுகையில் கூறினார் (“If I had wanted to rob, I would have robbed the forest here long ago. I didn’t even take an inch, I didn’t take a single tree in Pahang, I didn’t take the bauxite mine, I didn’t take anything.”).
நஜிப் ஓர் அங்குல நிலத்தையோ, ஒரு மரத்தையோ கொள்ளையடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பகாங் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டவுடன் 7,000 ஏக்கர் வெட்டுமர நிலத்தை சுல்தானுக்கு வழங்க உடனடியாக அவர் ஒப்புதல் அளித்தார் (Syed Husin Ali, “The Malay Rulers Regression or Reform?”, p.25). இது மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதுதானே?
இக்கொள்ளைக்கு அனுமதி வழங்கியவர் மகாதீர்தான். நஜிப்புக்கு முன்னர் பகாங் மந்திரி புசாராக இருந்த அப்துல் ரஹிம் பாகார், சுல்தான் முன்னதாக கோரியிருந்த 30,000 ஏக்கர் வெட்டுமர நிலத்தை கொடுக்க மறுத்து விட்டார். ரஹிம்மை பகாங் மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றி மத்திய அரசாங்கத்தில் ஒரு துணை அமைச்சர் பதவியை அளித்து சுல்தானின் கோரிக்கையை புதிய மந்திரி புசார் நஜிப் நிறைவேற்ற வழிவகுத்தவர் மகாதீர்.
தமது 22 ஆண்டுகால ஆட்சியில் தமக்கு எது சரி என்று தோன்றியதோ அதனைச் செய்து முடித்தவர் மகாதீர். அதற்காக, நாட்டின் அரசாங்கத்தில் தன்னிச்சையாக இயங்க வேண்டிய, இயங்கிய மூன்று முதன்மைக் கூறுகளான சட்டம் இயற்றும் துறை (Parliament), நீதிபரிபாலனத்துறை (Judiciary) மற்றும் ஆட்சித்துறை (Executive) ஆகியவற்றை தமது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நாட்டை ஆண்டவர் மகாதீர். தமக்குப் பின்னர் பிரதமரான அஹமட் அப்துல்லா படாவியை பதவியிலிருந்து அகற்றி நஜிப் ரசாக்கை பிரதமராக்கியதும் மகாதீர்தான்.
மகாதீரின் நிழலின் கீழ் வளர்ந்து இன்று ஊழல் மன்னனாகி விட்ட நஜிப், தமக்கு வரம் கொடுத்த மகாதீரின் தலையிலேயே கையை வைக்க எத்தனிக்கும் பத்மாசூரனாகி விட்டார்.
இந்த பத்மாசூரன் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதையும், அவற்றை களைவதற்காக இதுவரையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதை உணர்ந்து கொண்டுள்ள மகாதீர், ஆட்சி மாற வேண்டும், நஜிப் அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தற்போது வந்துள்ளார். அதற்கான நடவடிக்கையை மகாதீர் முடுக்கி விட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவர்
அஹமட் அப்துல்லா படாவியை பிரதமர் பதவியிலிருந்து அகற்றி நஜிப்பை பிரதமராக்கும் முயற்சியில் மகாதீர் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், நஜிப் அப்பதவிக்கு பொருத்தமற்றவர் என்றும் அவரால் நாட்டிற்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று போர்க் கொடி உயர்த்தினார் அம்னோ உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்த ஸைட் இப்ராகிம். மங்கோலியப் பெண் அல்தான்துயா கொலை மற்றும் பல சம்பவங்களைச் சுட்டிக் காட்டி பிரதமர் பதவி ஏற்பவர் பழிகூறல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்பதை ஸைட் வலியுறுத்தினார்.
மகாதீரின் கடும் போக்கு மீண்டும் தொடரப்பட வேண்டும் என்ற அம்னோவின் தீவிரப் போக்கை கண்டித்த அவர், பிரதமராக நியமிக்கப்படுபவர் அம்னோவின் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தகுதி பெற்ற அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மக்களின் நம்பிக்கைக்குரிய, ஊழலற்ற, பழிச்சொல்லுக்கு அப்பாற்பட்ட, அனைத்துலக சமூகத்தால் மதிக்கக்கூடிய ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று பேரரசருக்கு ஸைட் இப்ராகிம் வேண்டுகோள் விடுத்தார்.
நஜிப் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர். அவரை பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மாமன்னருக்கு வேண்டுகோள் விடுத்த ஸைட் இப்ராகிம், அவசரகாலச் சட்டத்தின் கீழ் ராஜா பெட்ரா கமாருடின், தெரசா கோ மற்றும் டான் ஹூன் சோங் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து சட்டத்துறை அமைச்சர் பதவியைத் துறந்தார்.
குடிமக்கள் பிரகடனம்
மார்ச் 19, 2009 இல், ஸைட் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு நஜிப் பொருத்தமானவர் அல்ல என்ற அறிக்கையை வெளியிட்டார். அதே காலக்கட்டத்தில், நஜிப்பை பிரதமாக்குவதற்கான நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் மகாதீர் ஈடுபட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் 4 இல், மகாதீரும் ஸைட் இப்ராகிமும், இதர தலைவர்களுடன் இணைந்து, பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய குடிமக்கள் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
37 கூறுகளைக் கொண்ட இப்பிரகடனம் நஜிப்பின் நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டி அவர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது.
இப்பிரகடனத்திற்கு மலேசியாவின் அனைத்து இன மக்களும் ஆதரவு நல்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பிரகடனம் பேரசரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
முதல்கட்ட நடவடிக்கையாக, நஜிப்பின் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கோரும் வழக்கை மகாதீர் பதிவு செய்துள்ளார்.
நிச்சயமாக நஜிப் ஆதரவாளர்கள் இப்பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து களமிறங்குவார்கள். நேற்று (மார்ச் 24) நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து கிளந்தான் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அம்னோவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி கையொப்பமிட்டுள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், நஜிப் பிரதமராக நியமிக்கப்படும் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து எதிரும்புதிருமாக இருந்து வந்த மகாதீரும் ஸைட் இப்ராகிமும் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து அகற்றக் கோரும் குடிமக்கள் பிரகடனத்தில் கையொப்பமிட்டிருப்பது சிலருக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை சீர்குலைத்த மகாதீருடன் உறவா? மகாதீரை எப்படி நம்புவது? அவரிடம் தனித் திட்டம் ஏதாவது உண்டா? அவர் மீண்டும் பிரதமராகும் எண்ணம் கொண்டுள்ளாரா? – இப்படி பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், இந்த அம்னோக்காரர்களை கையாள்வதற்கு மகாதீரை விட்டால் வேறு வழி இல்லை. ஆகவே, மகாதீரை பயன்படுத்தி நஜிப் கூட்டத்தினரின் அட்டூழியங்களை அடக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டோரும் இருக்கின்றனர்.
மேலும், ஒரு பிரதமரை பதவியிலிருந்து அகற்றி ருசி கண்டு விட்டால், பிறகு வரும் பிரதமர்களை, அவர்கள் மகாதீர்களாக இருந்தாலும் கூட, ஒரு கைபார்த்து விடலாம் என்ற மனப்பான்கு கொண்டவர்கள் இப்பிரகடனத்தை வரவேற்கின்றனர்.
குடிமக்கள் பிரகடனம் காலத்தின் கட்டாயத்தை பறைசாற்றுகிறது என்று கூறலாம். நாடும் நாட்டு மக்களும் தலைமையத்துவத்தின் தவறான போக்கினால் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பற்ற ஒன்றிணைவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று கூறலாம். அரசியல் நாகரீகம் ஒரு படி முன்னேறியுள்ளது.
மேலும், அரசியலில் நிரந்தரமான நண்பர்கள் என்றோ நிரந்தரமான எதிரிகள் என்றோ இல்லை. எதிரிகளான மகாதீர், லிம் கிட் சியாங், ஸைட் இப்ராகிம் போன்றோர் இன்று நாட்டின் நலன் கருதி ஒன்றுகூடியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் ஒன்றையொன்று குண்டுகளை வீசித் தாக்கிக் கொண்ட நாடுகள் இன்று நட்பு நாடுகளாக இருக்கின்றன.
கெட்டவர்கள் என்றும் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. கெட்டவர்கள் செய்த நல்லவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற விதிமுறையும் இல்லை.
பெருங்காவியமான இராமாயனத்தை தீட்டியவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரர் என்பதற்காக அக்காவியம் நிராகரிக்கப்படவில்லை. கிறிஸ்த்துவத்தை எதிர்த்த சால் என்றவர் பால் என்ற புனிதரானார். பல போர்களில் படைவீரர்களைக் கொன்று குவித்த சக்கரவர்த்தி அசோகன் புத்த சமயத்தைத் தழுவினார். நமது முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் சீனாவுக்குச் சென்று இலட்சக்கணக்கான சீனர்களைக் கொன்றவர் என்று வர்ணிக்கப்படும் சீனாவின் தலைவர் மாவ் சே துங்கின் கையைத்தொட்டு குலுக்கியுள்ளார்.
இவர்களுடன் ஒப்பிடுகையில் மகாதீர் ஒரு குழந்தை. ஆனால், கொடுமையானவர்தான். அவர் இழைத்த கொடுமைகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அக்கொடுமைகளை நாம் மறந்து விடக்கூடாது. நமக்கு நாமே இட்டுக்கொள்ளும் இந்த நிபந்தனையுடன் நாட்டையும் நாட்டு மக்களையும் நஜிப்பின் பிடியிலிருந்து அகற்ற குடிமக்கள் பிரகடனத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். அது குடிமக்கள் என்ற முறையில் நமது கடமையாகும்.
ஜீவி காத்தையாவின் கருத்துக்களை அப்படியே ஏற்றுகொள்ள மனம் இடம்தரவில்லை ! நீங்கள் ஒரு நாடு என்ற வகையில் சிந்திப்பது மகிழ்ச்சியே, ஆனால் இந்த நாட்டிலுள்ள இந்தியர்களை மட்டும் நிலைநிறுத்தி சிந்திப்பதில் நான் கொஞ்சம் சுயனலவாதியாகிறேன். இந்த மகாதிர் பாதி இந்திய ரத்தம் கொண்டவர், ஆனால் இவரின் பிற்காலத்து செயல்பாடுகள் எல்லாம் இந்தியர்களை உயிரோடு குழி தோண்டி புதைத்தார் என்பது சீனியர் அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும் ! இரண்டாம் உலகப்போரின் கொடுங்கோலன் ஹிட்லரும் பாதி யூத ரத்தம் கலந்தவன், ஆனால் அவனால் 6 மில்லியன் யூதர்கள் கொடுமையாக கொல்லப்பட்டார்கள் என்பது சரித்திரம் ! பாருங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை !! ஒரேஒரு வித்தியாசம், ஹிட்லர் யூதர்களை கொன்றான், இவர் இந்தியர்களின் பொருளாதாரத்தை கொன்றார். பணம் இல்லாதவன் பிணத்துக்கு சமம் என்று சொல்வதற்கு ஏற்ப மகாதிர் செய்ததும் ஒருவகையில் கொலையே ! மகாதிர் ஆட்சி காலத்தில் இவர் முழுக்க முழுக்க தன்னை மலாய்காரர்களுக்கு மட்டுமே பிரதமர்போல காட்டிக்கொண்டார். இவர் எழுதிய ” MALAY DELIMA ” என்ற புத்தகத்தின் வழியாக நம்மை வந்தேறிகள் ( PENDATANG ) என்று சொல்லி இரண்டாம் தர குடிமக்களாக்கிய பெருமை இந்த குள்ளநரிக்குதான் சேரும். இவர் மலேசிய இந்தியர்களுக்கு செய்த துரோகங்கள் ஒன்றல்ல இரண்டல்ல . மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருந்த நம்மவர்களுக்கு ” முன்கூட்டியே பதவி ஓய்வு கொடுத்து அந்த இடத்தில் அவருக்கு வேண்டியவர்களை போட்டு நம் குடிகெடுத்தார். முப்பது சதவிகிதம் அரசாங்க வேளையில் இருந்த இந்தியர்களை , இன்று ஒரு சதவிகிதம் ஆனதற்கு காரணகர்த்தா இவரே என்றால் அதுமிகையாகாது . கோட்டா அடிப்படையில் இருந்த விதிகளை மாற்றி தகுதி அடிப்படைக்கு கொண்டுவந்து நம் இன மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்புக்களை குறைத்த புனிதமான செயலுக்கு வித்திட்ட புண்ணியவான் இவரே ! இன்னும் தென்னிந்திய தொழிலாளர் நிதி காணாமல் போனது இவர் ஆட்சி காலத்தில் தான் , எதற்கு சொல்கிறேன் என்றால் , மறைமுகமாக நமது சமுதாய சொத்துகளுக்கு ஆப்பு அடித்த மகானும் இவரே. இன்று இவருக்காக வக்காலத்து வாங்கி எழுதும் ஜீவி காதையாவை என்னவென்பேன் ! துணைக்கு ராமாயனகதையையும், பைபிள் புனித பவுல் அவர்களின் சரித்திரத்தையும் குறிப்பிட்டுஇருகிறிர்கள். அவைகளெல்லாம் ஒரு உதாரணமே தவிர கட்டாய கருத்துக்களாக எடுத்துக்கொள்ள முடியாது ! அதைதான் மாமேதை சாக்ரடிஸ் அவர்கள் ” அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று தடுமாற்றம் அடைய வேண்டாம் எவர் சொன்ன சொல்லாகினும் உன் பகுத்தறிவால் நீ அறிவாய் ” என்று அழகாக எடுத்துரைத்தார். 1998ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இந்த மகாதிர் கைவைக்ககூடாத EPF பணத்தில் கைவைத்தால் இன்று வரை அதன் வட்டி விகிதம் பழைய 8 காசுக்கு இன்னும் வரமுடியாமல் இருப்பது மறைமுகமாக தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததற்கு சமம். இப்படி இந்த மகாதிர் இந்திய சமுதாயத்திற்கு செய்ததெல்லாம் துரோகம் ! துரோகம் !! துரோகம் !!! இதற்கு பிறகும் இவரோ அல்லது இவருக்கு வேண்டியவர்களோ ஆட்சிக்கு வந்தால் நமது சமுதாயத்திற்கு இன்னும் வில்லங்கமாக முடியும் என்பது என் கருத்து !
சகோதரர் தாப்பா பாலாஜி கூறுவது அனைத்தும் மறுக்க முடியாத உண்மை ஆனால் இன்னொரு உண்மையும் இதில் இருக்கிறது தேசிய முன்னணியின் அணைத்து தலைவர்களுக்கும் இதில் சம பங்குண்டு
TAPAH BALAJI கூறுவது அனைத்தும் உண்மை!!! 80 களில் இந்த காக்கா உயர்கல்வி கூடங்களில் குவோட்ட முறையை முன்வைத்து இட ஒதுக்கீடில் முறைகேடு செய்ததால் நம் மாணவர்கள் பெரும் பதிப்புக்கு உள்ளானார்கள்.
தோழர் ஜி.வி.காத்தையா தற்போதைய அரசியல் சூழலுக்கேற்ப தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அதே வேலை தோழர் TAPAH BALAJI அவர்களின் கருத்துக்களும் மறுப்பதற்கில்லை. பதவிக் காலம் முடியும் முன்பே அப்துல்லா படாவியின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. படாவி மட்டுமல்ல,21-4-1982ம் நாள் முடிவடைய வேண்டிய முன்னாள் பிரதமர் துன் ஹுசேன் ஒன அவர்களின் பதவிக்காலம் 15-7-1981ல் பறிக்கப்பட்டு, 16-7-1981ல் அரியணை ஏறியவர் இதே மகாதிமிர்.
இது அறிவுசால் மாந்தர்கள் நிரம்பிய கருத்துக்களம் . இந்நாட்டின் பிரஜை என்ற முறையில் எனது கருக்களையும் தங்களின் கவனத்திற்கு கொன்டு வர விரும்புகிறேன்.
திரு.தாப்பா பாலாஜி அவர்களின் கருத்து 100க்கு 100 உண்மையே. இருப்பினும் தற்போதைய காலத்தின் கட்டாயம் என்னவென்பதை நினைவில் வைத்து செயல்படுவதே அறிவுடமையாகும். மகாதிமிர் “குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு” என்பதை அவரால் அதிகம் பாதிக்கப்பட்ட சமுதாயம் என்ற முறையில் நாமனைவருமே அறிவோம். என்றாலும் இச்சூழலில் நம்மை அச்சுறுத்தும் அரசியல் நச்சுமரங்களை வீழ்த்த இந்தக் கோடரி நிச்சயம் நமக்குப் பயன்படும்தானே ?
(XXX) – (TRIPLE X ) எனும் ஓர் ஆங்கிலப்படம், நம்மில் பலரும் பார்த்திருக்கக்கூடும். திருடனை வைத்தே திருடனை வீழ்த்தும் வித்தையை விவரிக்கும் படம். அதைப்போல நம்பிக்கை நாயகனின் ஆட்டத்தை அடக்க மகாதிமிரின் அரசியல் சாணக்கியத்தை நாமும் பயன்படுத்திக்கொள்ளலாமே.
நம் சமுதாயம் எப்பொழுதுமே தெளிவாக இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து நம்மினத்து படித்த புல்லுறுவிகளைக் கொன்டே நம்மை தவறான முடிவுகளுக்கு மூளைச்சலவை செய்யும் முறை நெடுங்காலமாகவே அமுலில் இருந்து வருகிறது. சில எழும்புபொறுக்கிகள் தங்களுக்கு வீசப்படும் எழும்புத்துண்டுகளுக்கு வாலாட்டிக்கொன்டு நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறமின்றி சுயநலத்தோடு சில நாளிகைகளில் உண்மைக்கு புறம்பாக எழுதுவதைக் காண்கையில் உள்ளம் கொதிக்கின்றது. அந்த புறம்போக்குகளுக்கு மத்தியில் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொன்டு செயல்படும் ஜீ.வீ ஐயா போன்றோர் நமது முதல் மரியாதைக்கு உரியவர்கள். செம்பருத்தி இதழ்வழி அவரின் படைப்புகள் வழியே அரசியல் எமக்கும் பாலபாடமாகியது. உணமையை உணர்ந்து செயல்படுவோம், நாளை நமது சந்ததி இம்மண்ணில் கெளரவத்துடனும் மகிழ்வுடனும் வாழ புத்திசாலித்தனமான முடிவுகளை ஆதரிப்போம்.
ANONYMOUS அவர்களுக்கு ! ” உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், பலவீனமான எதிரியோடு கூட்டு சேர்ந்து உன் பலமான எதிரியை சாய்த்து விடு, பிறகு உன் பலவீனமான எதிரியை சுலபமாக சாய்துவிடலாம், ” போன்ற அரசியல் சாணக்கியம் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்தது !! ஆனால் இந்த காக்கா மாமா நம் எதிரியல்ல ! அதற்கும் மேலாக நயவஞ்சகன். இவனுடைய குடிமக்கள் பிரகடனம் எல்லாம் ஒரு கண்துடைப்பே !! சாவதற்கு முன்னாள் தன் மகனை எப்படியாவது பிரதமராக்கிவிடவேண்டும் என்பதே இவனின் தலையாய நோக்கம் ! இது உலகறிந்த விஷயம் .முன்பு வாழ்ந்த நம் சமூகம் இன்று இவனால் வஞ்சிக்கபட்டு விட்டதே என்ற ஆதங்கத்தில் அவசரப்பட்டு வார்த்தையை உதித்திருந்தால் மன்னிக்கவும். ஜி வீ காத்தையா அவர்களின் கருத்துக்கள் நிச்சயமாக நல்ல நோக்கத்தில் எழுதப்பட்டது என்பது எனக்கும் தெரிந்ததே !
எல்லாம் சரி….ஆனால் ஒரு சிறு திருத்தம்! காக்கா மகன் ஆட்சிக்கு வந்தபின் கோடாரிகாம்பு அங்க வெட்றதுக்கு பதில மீண்டும் இங்கே வெட்டினா என்ன செய்விங்க?
நண்பர் தாப்பா பாலாஜி அவர்களுக்கு வணக்கம், தங்களின் மேலான கருத்துக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். என் வருத்தம் ஆதங்கம் எல்லாம் நம் சமுதாயம் இப்படி தாழ்ந்து கிடக்கிறதே என்பதும், நமது இளவல்கள் முன்னேற வாய்ப்புகளின்றி தடம் மாறிச் செல்வதும் தான். வறுமையின் பிடியில் நிலை குலைந்து, “எதைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற அவல நிலை நமக்கு (இதற்கு மூல காரணம் மகாதிமிர் என்பதும் உண்மைதான்). இதற்கெல்லாம் ஒரு விடிவு வேண்டும், அது அரசியல் மாற்றத்தால் கைகூடும் என்ற ஒரு ஏக்கம். பூனைக்கு யார் மணி கட்டுவது ?
ஆட்சியை முழுமையாக மாற்ற நமக்கு வேண்டியது பலவீன நண்பர் நம்பிக்கை நாயகன்…அதுதான் இந்த நாட்டின் தலை எழுத்தும் கூட, இதற்கு மேல் சொல்ல தேவை இல்லை!
இடி அவர்களே காக்கா எட்டடி பாய்ந்தால் அவர் வாரிசு 16 அடி பாயும் என்பதை நாம் அறியாமலில்லை. இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும், சீனப்பள்ளிகளும் அவசியமில்லை என்று வாய் விட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட ஆசாமிதான் இந்த குள்ள நரியின் குலக்கொழுந்து, அவரை ஆதரிக்கும் முகாந்திரத்தை மகாதிமிர் முன் வைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரியாதா ? முதலில் முள்ளை அகற்ற வேண்டும், அத்ற்கு ஆவன செய்ய வேண்டும் என்பது தான் நாம் கூற விழைவது. இன்னும் என்னதான் மிஞ்சியிருக்கிறது இந்த சமுதாயத்தில் உயிரைத்தவிர ?
இடி அவர்களே மக்கள் நாயகன் பலவீனமானவரா ? அப்போ அந்த பல கோடிகளுக்குப் பதில் என்ன ? சேவை வரி நீங்கள் கட்டுவதில்லையா ? யார் பலவீனமானவர் ? பதிவியில் இருப்பவரா ? பெட்ரோனாஸ் பதவியையும் படாவியிடம் பறிகொடுத்துவிட்டு தமது சக்தியை இழந்து மக்கள் சக்திக்காக நமது ஆதரவை நாடுபவரா ? எங்கே யோசித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்
Anonymous! முள்ளை முள்ளால் எடுக்க நம் உயிரை பணயம் வைக்க தேவை இல்லை! இங்கே நமக்கு எதிரி அம்னோ….அவனோ இவனோ கிடையாது.இப்போது புரியும் என்று நினைக்கிறேன்! 2.6 B யை மையமாக கொண்ட தற்போதைய இந்த நாடகத்தை எளிதாக தீர்த்துவிடலாம் என்பதை நன்கு அறிந்தவர் நம்பிக்கை நாயகன். உலகின் மிக பெரிய Sovereign Wealth Fund:Norway,Abu Dhabi,China மற்றும் Saudi Arabia வில் இயங்குகிறது.எனவேதான் அருள் கந்தா அலுவலகம் Abu Dhabi யில் செயல் பட்டது.இதன் பரிவர்த்தனை அளவை விளக்க இங்கு நேரம் போதாது.ஆகையால் உங்கள் கேள்விக்கு வருவோம்..யார் பலவீனமானவர்? பண பலம் குறைவாக உள்ளவரே பலவீனமானவர்! காக்காவின் சொத்து மதிப்பு இங்கே பெரும்பாலோருக்கு தெரிய வாய்ப்பில்லை! இருந்தாலும் அந்த பனிப்பாறையின் நுனியை சிறிதளவு விளக்குகிறேன்; Petronas கச்சா எண்ணெய் ஒரு ஜப்பானிய நிறுவனம் பீப்பாய்க்கு சில டாலர் (குறிப்பிட விரும்பவில்லை) தரகு வருமானம் நிரந்தரமாக வழங்கி வந்தது.நாள் ஒன்றுக்கு 4M பீப்பைகள் (பல வருடங்கள்) கை மாறின.எல்லவற்றையும் துல்லியமாக (குறிப்பிட விரும்பவில்லை) இது போன்று ஏராளம் ஏராளம்! காக்கா யாரை வேண்டுமாலும் வாங்கி விடுவான்! மக்கள் ஆதரவை தவிர! அதையும் 27.3.2016 இல் மிக சாமர்த்தியமாக நடத்தி விட்டான்! மற்றவை நேரம் வரும் பொது விவரிக்கிறேன்.
காலை வணக்கம் இடி, சிரத்தையுடன் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள், தங்களின் பதிலின் நியாயங்களை நான் மறுக்கவில்லை, இருப்பினும் ஆட்சி மாற்றம் இப்போதைய காலத்தின் கட்டாயம் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி
சகோதரர் தாப்பா பாலாஜி அவர்களுக்கு நன்றி .
மறுக்க முடியாத உண்மை .
மக்கள் பிரகடனத்தால் தமிழர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை.