-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்.
நமது மலேசிய நாட்டின் மீது அக்கறையும் பற்றும் கொண்ட எந்த மலேசியராலும் அல்லது அவர் குடும்பம் மற்றும் தனது பிற்கால சந்ததியின் எதிர்காலத்தின் மீது அக்கறைக் கொண்ட எவராலும் இந்நாட்டு பிரதமர் மற்றும் அவரின் துணைப் பிரதமர் ஆகிய இருவரையும் கண்டிக்காமல் இருக்க முடியாது.
கடந்த சில நாட்களாக 2.6 பில்லியன் அன்னிய நிதி விவகாரத்தின் மீது பிரதமரும், துணைப் பிரதமரும் அளித்து வரும் பதில்கள் அவர்களின் கடைந்தெடுத்த முட்டாள்தனத்தைக் காட்டவில்லை,. மாறாக அவை இந்நாட்டு மக்களை முட்டாள்களாகக் கருதி விடும் அறிக்கைகளாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திர மூட்டுவதாகவும் உள்ளது.
நஜிப்புக்கு வந்தது 2.6 பில்லியனா அல்லது அதற்கும் மேலாகவா?
இந்த 2.6 பில்லியன் அன்னிய நிதி குறித்து அரேபிய வெளிவிவகாரத்துறை கடந்த ஆண்டே அல்லது இவ்விவகாரம் பத்திரிக்கைகளில் பிரபலப் படுத்தப்பட்டபொழுதே அதன் கருத்தை தெரிவித்திருக்கலாம். குறைந்தது, பிரதமராவது மலேசியர்களுக்கு அந்நிதி குறித்து விளக்கி, குற்றச்சாட்டை மறுத்திருக்கலாம்.
ஆனால், இந்த விவகாரம் இந்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் பூதாகாரமாக வெடிச்சு உலகமே மலேசியாவை ஒரு கேவலமான நாடாமாக, உலகத்தில் ஊழல் மிக்க ஒரு நாடாக கருதி, நம்பிக்கை இழந்து மலேசிய நாணயத்தின் மதிப்பு இழந்து இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அதன் தொடர்பில் பல வகையில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பின், இது முடிந்து விட்ட பிரச்சனை என்று கருத்துரைத்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவுள்ளது.
இப்பொழுது பிரதமர் பதில் செல்ல வேண்டியது 2.6 பில்லியன் அன்னிய நிதிக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் ஏபிசி நிறுவனத்தைச் சேர்ந்த ‘போர் கார்னர்ஸ்’ குறிப்பிட்டுள்ள 4.202 பில்லியன் நிதிக்கும் அவர் மீதான பற்பல குற்றச்சாட்டுக்கும் என்பதை உணராதவர்கள் போல் அவரும், துணைப் பிரதமரும் நாடகமாடக் கூடாது.
கடந்த ஓர் ஆண்டாக வலுவற்ற மலேசிய ரிங்கிட்டால் நாட்டின் பொருளாதாரமும் வலுவிழந்து கிடக்கிறது. ரிங்கிட் வலுவிழந்ததற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், பிரதமர் மற்றும் அவரின் அமைச்சரவையின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பதே மிக முக்கியக் காரணமாகும்.
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் 1எம்.டி.பி மகா ஊழல் குறித்துக் கேள்விகள் தலையெடுத்த பொழுது பிரதமர் நஜிப்பிடம் அதற்கு விடையில்லை. மாறாக அவரின் அமைச்சர்கள் வழங்கிய முன்னுக்குப்பின் முரணான விடை மற்றும் விளக்கங்களினால் மக்கள் தெளிவடைவதை விட மிகுதியாகக் குழப்பமடைந்து விட்டனர்.
மேலும், 1எம்.டி.பி மீதான முறையான விசாரணைக்கான வழிமுறைகளைத் தடுக்க அமைச்சரவை மேற்கொண்ட நடவடிக்கைகளும், வரம்புமீறல்களும் பிரதமர் மீதான ஐயங்களை வலுப்படுத்தியுள்ளது.
பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரமலி கைது
குறிப்பாகச் சட்டத்துறை தலைவர் (அட்டானி ஜெனரல்) அப்துல் கனி படேலின் திடீர் பதவி நீக்கம், அவரின் கீழ் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய கெவின் மொராய்ஸ் திடீர் மறைவு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை விசாரணை அதிகாரிகள் பணி மாற்றம், பேங் நெகாரா கவர்னரை கட்டாய மருத்துவ விடுவிப்பில் அனுப்பத் திட்டமிட்டது,. பி.ஏ.சி எனப்படும் நாடாளுமன்றக் கணக்காய்வுக் குழு தலைவருக்குத் துணை.அமைச்சர் பதவி வழங்கியது, பி.கே.ஆர் தலைமை செயலாளரும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸி ரமலி இரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டது போன்ற பல செயல்கள் பிரதமர் மீதான ஐயங்களைப் பலப்படுத்துகிறது.
நஜிப் அவரின் துணைப் பிரதமர், முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்னோ உறுப்பினர்களுக்குக் கூடச் சரியான விளக்கமளிக்கத் தவறியுள்ளார். முக்கியமாக அம்னோவின் துணைத் தலைவரும், துணைப் பிரதமருமான முகைதின் யாசினும் தமது பதவியை பொருட்படுத்தாமல் போர்க் கொடி தூக்கும் நிலைக்குச் சென்றிருப்பது, 1எம்.டி.பி விவகாரத்தில் பிரதமர் நஜிப் எதனையோ மறைக்கிறார் என்ற மக்களின் ஐயத்திற்கு மகுடம் வைத்தது போல் ஆகிவிட்டது.
பிரதமர் நஜிப்பை காப்பாற்ற ஊடகங்கள் மீது அழுத்தமா?
1 எம்.டி.பி குறித்து உண்மைகளை வெளியிடும் செய்தி சாதனங்களுக்கு எதிராக அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், பல வகையான அழுத்தங்களும் கொடுக்கப்படுவதேன்?.
இப்பொழுது சமூக வலைத்தளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளும், கட்டாயங்களும் விதிக்கப்படுகிறது. இதில் வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களும் கூட விடுபடவில்லை. அதற்கும் கிரீடம் சூட்டுவதைப் போல் 1எம்.டி,பி பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பிய 2 ஆஸ்திரேலியச் செய்தியாளர்களைக் கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றிய செயல் இருந்தது. நாட்டு மக்களுக்கு அது பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் 1எம்.டி,பி மற்றும் பிரதமர் பற்றிய ஊழல், முறைகேடு, கடத்தல், கொலை போன்ற குற்றக் கூறுகளைக் கொண்ட சிறப்பு காணொலியைத் தயாரித்து வெளியிட்டு மலேசியாவின் இருண்ட அரசியல் நிலையை, மக்களின் அவல நிலையை மற்றும் முறைகேடுகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
நஜிப் அரசின் இப்படிப்பட்ட செயல்பாடுகளும் கட்டுப்பாடுகளும் அரசாங்கத்தின் மீது வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிகுதியான வெளிநாட்டு முதலீட்டாளர்களும், நாட்டு மக்களும் கொண்டிருந்த எஞ்சிய நம்பிக்கையும் தகர்த்துவிட்டது. அதனால் வெளி முதலீட்டாளர்களைக் கவர வேண்டிய பல இயற்கை கூறுகளைக் கொண்ட மலேசியா, அதிகமான பயன்மிக்க அறிவார்ந்த முதலீடுகளை இழந்து வருகிறது.
ஒரு காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சொர்க்கமாக விளங்கிய நாடு, இன்று அவர்களை அஞ்சி வெளியே ஓட வைத்துள்ளது. நாட்டில் உருவாக்கப் பட்டுள்ள இப்படிப்பட்ட அதீதச் சூழ்நிலைகள் மலேசிய மக்களுக்குக் கடும் இன்னல்களை உருவாக்கியுள்ளன.
மலேசியாவைப் பற்றி 2016 இல் *விழுக்காடு |
வாணிக உபரி 1998 ஆம் ஆண்டுக்குப் பின் மிகச் சிறியது 539 கோடி |
பணவீக்கம் 2008ஆம் ஆண்டுக்குப் பின் மிகக் கடுமையானது 4.2% |
விலைவாசி குறியீடு கடந்த 22 மாதங்களில் உயர்வானது ஜனவரி 3.7% |
தேசிய உற்பத்தி கடந்த 30 மாதங்களில் மிகத் தாழ்வானது 4.5% |
வேலை இல்லாதோர் விழுக்காடு 1998 க்கு பின் சராசரி 3.26% ஆனால் ஜனவரி 3.4 % |
வெகு விரைவில் கடுமையான பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்க மக்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. உலக மயத்திட்டதில் தனக்கும் தன் குடும்பத்தினரின் அன்றாட உடை, உணவு, ஆரோக்கியம், கல்வி தேவைகளுக்கு வேண்டிய பொருளாதாரத்தை ஈட்ட வேண்டிய மலேசியர்கள், மிகுதியான வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
தங்கள் பிள்ளைகளின், குடும்பத்தின், நாட்டின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
ஆனால், பிரதமரும் அமைச்சர்களும், அரசாங்க ஊடகங்களும் தேசிய நலன் சார்ந்த தேச அரசியலை விட்டு விட்டு, சாலை, போக்குவரத்து, கால்வாய், குப்பைகூளங்கள் சம்பந்தமான நகராட்சி அரசியலை நடத்தி வருகின்றனர். இது மக்களின் உண்மையான சிக்கல்களிலிருந்து அவர்களைத் திசை திருப்புவதாகும்.
செல்வச் சுவர்ணபூமியாண மலேசியா ‘’திவாலின் உச்சவரம்பில்’’
சாலை, போக்குவரத்து, கால்வாய், குப்பைகூளங்கள் அகற்றுவது கட்டாயந்தான். ஆனால் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் ஜீவாதாரம் அதனை விட முக்கிய அம்சமில்லையா?
மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தால், சிறந்த ஊதியத்தை அளிக்கும் தொழில்துறையை இழந்தால் நாட்டின் பொருளாதாரம் நலிவடையும், நலிவடைந்த பொருளாதாரத்தால் நாட்டின் நாணயம் மதிப்பிழக்கும், மதிப்பிழந்த நாணயத்தைக் கொண்டு அன்னியக் கடன்களைத் திரும்பச் செலுத்த அரசாங்கத்திற்கு மிகுதியான பணம் தேவைப்படும், அந்தப் பணத்தேவையை ஈடுகட்ட மக்கள் மீதும் பொருட்கள் மீதும் மிகுதியான வரியை அரசாங்கம் விதிக்கும். அதனால் உணவு முதல் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏற்றம் காணும்.
ஏற்கனவே தவறான ஆட்சிமுறையினால், ஒழுங்கற்ற நிதி ஆட்சியால் செல்வம் கொழிக்கும் சுவர்ணபூமியாண மலேசியா ‘’நொடிப்பு நிலையின் வரம்பில்’’ உள்ளதை நாட்டின் பொருளாதார ஆலோசகர்கள் முதல் பிரதமர் நஜிப்பே ஒப்புக்கொண்டுள்ளதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மலேசியா எல்லா வகை பொருளாதார வளப்பங்களுடன் செழித்துக் கொண்டிருக்கும் போது மிகுதியாகச் சேமித்துக் கையிருப்பைப் பலப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் உலக மகா கடனையல்லவா மக்கள் தலையில் சுமத்தியுள்ளது இந்தப் பாரிசான் அரசாங்கம். கடந்த ஜூன் 2015 இன் புள்ளி விவரப்படி ரிங்கிட் 794.3 பில்லின் நாட்டின் மொத்தக்கடன்.
நாட்டின் முக்கிய உற்பத்தியான எரிபொருளின் விலை வீழ்ந்துள்ளதால் இறங்கு முகமாக இருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த அறிவார்ந்த, தொழில்நுட்பத் துறை, வெளிநாட்டு முதலீடுகளைப் பெற வேண்டிய நம் நாடு, நஜிப்பின் தவறான தலைமைத்துவத்தால் இருப்பதையும் இழந்து ஒரு ஆபத்தான காலக்கட்டத்தை நோக்கி நகர்வதே அச்சமளிப்பதாகவுள்ளது.
இப்படிப்பட்ட மலேசியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சுரண்டல், பசி, பட்டினி, கொள்ளை, கொலை, ஏமாற்று தனங்கள் அதிகரிக்கும். நாட்டில் அமைதி, நிலைத்தன்மை அழிந்து குழப்பங்களும் குற்றச்செயல்களும் அதிகரிக்கும்.
நாடே கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்ட நிலையில் வீட்டைச்சுற்றி முள் சுவரைக் கூரை வரை அமைத்தா வாழ முடியும்? அப்படிப்பட்ட வாழ்வுதான் நிம்மதி தருமா?
தனியார் மயமா, நாடு அன்னியர்களிடம் அடமானமா?
இப்படிப்பட்ட வேளைகளில் மற்ற நாடுகளிடம், நாடு அடைந்துள்ள அன்னியக் கடனையும் கருத்தில் கொள்ள வேண்டாமா?
1எம்.டி.பியில் நாடு அடைந்துள்ள இழப்பை ஈடுகட்ட, மின் உற்பத்தி நிலையங்களையும் கோலாலம்பூரின் விலைமதிப்பு மிக்க அரசாங்க நிலங்களையும் அன்னியச் சீன நிறுவனங்களுக்கு விற்றுள்ளது அந்நிறுவனம்.
ஆக, இதன் பின் வெளிநாடுகள் தாங்கள் கொடுத்த கடனுக்கு ஈடாக, இந்நாட்டுச் சொத்துகளை, செல்வங்களைத் தனியார் மாய மேம்பாடு, கூட்டுத் திட்டம் என்ற தோரணையில் ஆட்படுத்திக் கொள்ளுமா?
தனது கடனிலிருந்து மீள 1எம்.டி.பி செய்த, அடமானம் போன்ற அடமான சூழ்நிலைகள் தொடர்ந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதனை உணர இதுபோன்ற கடன் மற்றும் பொருளாதாரச் சுமைகளினால் சீரழிந்த மற்ற நாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அல்லல்படும் அந்நாட்டு மக்களின் துன்பங்களை நாம் முன்னுதாராணமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதுபோன்ற இடர்பாட்டிலிருந்து நாட்டை மீட்கத் துணிவும், பகுத்தறிவும், ஆக்கச் சிந்தனையும் கொண்ட சீரிய தலைமைத்துவம் அவசரமாக நாட்டிற்குத் தேவை. அதுவும் எல்லா இனங்களையும் ஒன்றிணைத்து, ஏழை மக்கள் வாழ்வுக்கு ஏற்றம் அமைத்திடும் நேர்மையான ஒரு தலைமைத்துவம் தேவை. அப்படிப்பட்டவர்கள் நாட்டிற்குத் தலைமை ஏற்பதைத் தவிர்க்கவே இன்றைய அம்னோ-பாரிசான் அரசு அன்வார் இப்ராகிம் போன்றவர்கள் மீது அடாத வழக்குகளை ஜோடித்துச் சிறையில் தள்ளியுள்ளது.
2015 இல் நிறுவனங்களின் மலேசியர் வேலை நீக்க பட்டியல்
சாட்டர்ட் வங்கி 770 | நாசா உற்பத்தி 225 |
சி.ஐ,எம்.பி வங்கி 2000 | உத்துசான் பத்திரிக்கை 200 |
ஆர்.எச்.பி வங்கி 2700 | ஜே.வி.சி 500 |
மாஸ் விமான நிறுவம் 8000 | பேர்ஜய்ல்டு 1000 |
அஸ்ட்ரோ தொலைகாட்சி 60 | ஜாரிங் 297 |
இண்டல் இலோக்ரோனிக் 600 | ஷெல் 1400 |
2016 ஆம் ஆண்டில் பெட்ரோனாஸ் அதன் 51 ஆயிரம் ஊழியர்களில் பலரை வேலை நீக்கம் செய்வதைத் தவிர்க்க முடியாது என்கிறது | |
பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் சிறு குத்தகைகளை வைத்திருந்த பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது | |
பெட்ரோனாஸ் அடுத்த மலேசியாவைக் காக்க ஒன்றுபடும் துருவங்கள்4 ஆண்டுகளில் அதன் நிர்வாகச் செலவினத்தில் 5000 கோடியைக் குறைக்கவுள்ளதாம். எப்படி-? நிர்வாக தொடர்பான பணியாளர்கள் நீக்கம்தானே! |
மலேசியவைக் காக்க ஒன்றுபடுவோம்
அன்பான நண்பர்களே, மலேசியக் குடிமக்களே, இந்நாட்டின் அடித்தட்டு மக்களின் அவல ஓலங்களை அறவே செவிமடுக்காத அம்னோ அதிகார வர்க்கம் மக்களிடையே நிலவும் இன, சமய வேறுபாடுகளை இலாபகரமாக அதன் அரசியலுக்குப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலை நீண்ட நாட்களாக உல்லாசமாக அனுபவித்துச் சுகம் கண்டு வருகிறது.
பிரதமரை வாரிய ஆலோசனை குழுத் தலைவராகக் கொண்டும் வாங்கிய கடனுக்கு வட்டியைக்கூடச் செலுத்த முடியாத நிறுவனமான 1 எம்.டி.பி ஒரு புறம், அடையாளம் தெரியாதவர் மூலம் நம்ப முடியாத 260 கோடிகளைப் பிரதமர் நன்கொடையாகப் பெற்ற கூற்று மறு புறம்.
இப்படிப்பட்ட அதிர்ச்சிகளினால் நலிவடைந்து வரும் நமது ரிங்கிட், மற்றும் பொருளாதார ஒழுங்கீனங்களிலிருந்து நம் நாட்டைக் காக்க வேண்டும். இந்நாட்டு மக்களின் வாரிசுகள் அன்னிய நாட்டில் அகதியாகக் கையேந்தி நிற்கும் அவல நிலை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற வேட்கையுடன், கடமை உணர்வுடன் களமிறங்கிய மலேசியர்களின் ஒரு பகுதியே இந்தக் குடிமக்கள் குழு..
இரு துருவங்களாக இருக்கும் அரசியல் கட்சிகளாகட்டும், தனி மனிதர்களாகட்டும் அரசாங்கச் சார்பற்ற பொது இயக்கங்களாகட்டும் அனைத்தும் ஒன்று பட்டு ‘’மலேசியாவை காப்போம்’’ என்ற கோட்பாட்டுடன் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வரக் காரணமாக இருப்பது இந்நாட்டின் இக்கட்டான நிதி நிலை.
படிப்படியாக இன்னும் அதிகமான நாட்டின் வளம் அன்னியர்களின் பிடியில் சிக்காமலிருக்க, சுதந்திர மலேசியா தனது அரசாண்மையை இழக்காமலிருக்க, அன்னியர்களுக்குச் சோறு போடும் இந்நாட்டுக் குடிமக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் கூடிய விரைவில் பிற நாடுகளில் தங்கள் பிழைப்புக்குக் கையேந்தும் பெரியதொரு பொருளாதாரச் சிக்கலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.
நாட்டைப் பீடித்த மகா பீடையான அம்னோவின் அதிகார வெறியும், ஊழலும் உழைக்காமல் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள அது கொண்டுள்ள வேட்கையும் இந்நாட்டையே திவாலாக்கி விட்டது என்பதனை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் நன்றாகவே உணர்ந்து விட்டனர்.
அடுத்த தேர்தலில் எதிரணிகள் 1எம்.டி.பியை முன் நிறுத்தி அம்னோ நஜிப்பை எதிர்கொண்டால், சுலபமாக அதிக ஓட்டுகள் பெற்றுப் புத்ரா ஜெயாவையே வெற்றி கொள்ள முடியும் என்பதை அவை நன்றாக உணர்ந்துள்ளன.
இருப்பினும் எவரின் தனிப்பட்ட நலனுக்காகவோ பதவிக்காகவோ அரசியல் ஆதாயத்திற்காகவோ அதுவரை நாட்டின் நலனைப் புறக்கணித்து, காத்துக் கிடக்காமல், தேச நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டைக் காப்பாற்ற நஜிப்பை பதவி இறக்க, அம்னோவுக்கே உதவிபுரியவும் இந்த ”மலேசியாவைக் காப்போம்” குடிமக்கள் குழு சித்தமாகவுள்ளது.
அதனால், அரசியல் ஆதாயம் மற்றும் இழப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், இன, சமய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிரதமர் நஜிப்பை வீட்டுக்கு அனுப்ப ‘’நாட்டுக்காக ஒன்றுப் படுவோம் மலேசியாவைக் காப்போம்.’’ வாரீர்
பழைய ஓவியத்துக்கு புது கோடு…கடந்த
இரண்டு ஆண்டுகளாக நாறிக்கிடகம் கணக்கை
இபோதுதான் தணிக்கை செய்து தெளிவுக்கு
வந்தார் போலும் ..நியாயமான துக்கமான தூக்கம்தான் !
பழைய ஓவியத்துக்கு புது கோடு…கடந்த
இரண்டு ஆண்டுகளாக நாறிக்கிடந்த கணக்கை
இபோதுதான் தணிக்கை செய்து தெளிவுக்கு
வந்தார் போலும் ..நியாயமான துக்கமான தூக்கம்தான் !
அனக் லெளகி என்ற தன் அடையாளத்தை மாற்றி ,மேலயு என்று மற்ற இனங்களின் மேம்பாட்டை சீர் குழைத்து , தன் இனத்து நலனுக்காக பாடு பட்ட நீண்ட நாள் பிரதமர் சொல்லியே கேட்க வில்லை !! அவர்களுக்கு நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது !! உங்களுக்கும் சமுதாயம் மேம்பாடடைய வேண்டும் என்ற அக்கரை எல்லாம் கிடையாது !! புத்ரா ஜெயாவை உங்கள் கச்சி கைபற்ற வேண்டும் , எவன் காலிலாவது விழுந்து மந்திரி யாகி விட வேண்டும் !! அதுதான் உங்கள் லட்சியம் !! அப்போது மில்லியன் திருடினார்கள் !! இப்போது பில்லியன் திருடுகிறார்கள் !! அடுத்து வரும் ஆட்சியில் திரிலியன் திருடுவார்கள் !! ஒரு மாநிலத்தையே உங்கள் காட்சி உருப்படியாய் வழிநடத்த முடியவில்லை !! பல முரண்பாடுகள் !! அடுத்து உங்கள் கட்சி உங்கள் மாநிலத்தில் ஆச்சியை இழப்பதற்குள் பேசுவதை நிறுத்தி கொண்டு நாலு காசு சேர்க்க முடியுமா பாருங்கள் !!
பி கே ஆர் உங்களை நம்பீ அடுத்த பொது தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கனவு காண வேண்டாம் சிலாங்கூர் மாநிலத்தை இழக்கபோவது நிச்சயம் அஸ்மின் அலி உங்கள் பி கே ஆர் கட்சியை பாஸ் கட்சியுடன் இணைந்து ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கி கொள்வது உத்தமம் முடிந்தால் அம்னோவுடன் கூட்டு சேர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அம்னோவுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்….அஸ்மின் அலியை நம்பினால் பின்னால் பெரிய ஆப்பு நிச்சயம்
இந்தியர்கள் ஒன்றுபடவேண்டும் என்று சொன்ன வாய் , இப்போ நாட்டுக்காக ஒன்று பட வேண்டுமாம் ! என் கண்ணு !! என் செல்லம் !!! என் …ரு!!!