சேவியர்: போலீசார் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வதை ஐஜிபி உறுதி செய்ய வேண்டும், இல்லையேல் பதவி துறக்க வேண்டும்

 

xavierஈப்போவில் ஓர் இந்து கோயிலில் புகுந்து சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று கோரியுள்ள போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முதலில் போலீசாரின் செயல்கள் முறையானதா, போலீசார் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.

 

நாட்டில்  அச்சம், சந்தேகம் மற்றும் ஊகங்கள் போன்றவை வலுக்கக் காரணமாக  இருப்பதே போலீஸ் துறையின் செயல்பாடுகளாக இருக்கும்  வேளையில் ஏன் மக்களை மிரட்ட வேண்டும்? போலீசார் தங்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்யவே நாங்களும் அமைதியாக இருக்கிறோம் என்றார் கிள்ளான்  ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

ஆகவே, தனது துறையின் செயல்பாட்டை மேம்படுத்தி மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய போலீஸ் துறையின் தலைவர், மற்றவர்களுக்கு மிரட்டல் விடுவதையும், ஆலோசனை கூறுவதையும் தவிர்த்து விட்டு குற்றங்கள் மீதான புகார்களை ஒழுங்காக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

 

ஆலயத்தில் சிலைகளை உடைத்தவர், அதன் பின் அங்கிருந்து ஓடாமல் ஆலயத்தில் படுத்துக் கொள்ளவில்லை, ஆலயத்தில் கூட்டம்  அதிகம் உள்ள நேரத்தில் சாமி சிலைகளை உடைக்க முற்படவில்லை அல்லது ஒரு பைத்தியக்காரர் மேற்கொள்ளும் மற்றச் செயல்களை அங்கு செய்யவில்லை.

 

ஆனால், மதத் தீவிரவாதிகள் மேற்கொள்ளும் செயலையே ஆலயத்தில் சிலைகளை உடைக்க வந்த போது செய்துள்ளார். அதற்கான ஆயத்தங்களுடன் வந்தது மட்டுமல்லாமல் தனது காரில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியுடன் வந்தும்  இறங்கியுள்ளார்.

 

அத்துடன் அவர் படித்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவர், தனது செயலைத் திட்டமிட்டு வடிவமைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவரை பித்தம், மனநிலை என்ற காரணம் கூறித் தப்பவிடுவது மாபெரும் தவறுமட்டுமல்ல, தேசத்துரோகமாகும் என்பதைத் தனது போலீஸ் படைக்கு உணர்த்த வேண்டியது அப்படைத் தலைவரின் கடமையாகும்.

 

IGPnospeculationஅந்தக் குற்றவாளி கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தனது வேலையை 24 மணி நேர கால அவகாசத்தில் ராஜினாமா செய்துள்ளார் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மா ஹேங் சூன்  கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது. ஆக, ஒரு பைத்தியக்காரரையா சுகாதாரத்துறை ஒரு மருத்துவராக நியமித்தது என்ற கேள்வி ஒரு புறமிருக்க, புத்தி சுகவீனம் கொண்டவர் தான் செய்யப் போகும் அடாத செயலின் தன்மைக்கு ஏற்ப முன்கூட்டியே தனது பணியை ராஜினாமா செய்துள்ளது, அவர் ஒரு காரியக்கார பைத்தியமா என்ற வினாவையும் தொடுக்கிறது.

 

அப்படி தகுதியற்றவரை மருத்துவமனையல்லவா பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்! அவர் ஏன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும்? அதன் பின் ஒரு கீழறுப்பு வேலையில் ஈடுபடுவதும், சிலகளை உடைக்கும் முன் அல்லாகு அக்பர் என்று கூச்சலிடுவதும் தான் என்ன செய்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தே அவர் செயல்பட்டுள்ளார். அவரையா போலீஸ் படைத் தலைவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்?

 

போலீசாரின் மீதும் நாட்டின் சட்டத்தின் மீதும்  நம்பிக்கை வைத்து அமைதிகாக்கும் மக்களுக்கு மதிப்பளித்துக் கடமை உணர்வுடன் நடந்து கொள்வது போலீஸ் துறையின் செயல்பாடாக இருக்க வேண்டும். அதனைச் சரியாகக் கண்காணிக்க முடியாத போலீஸ் துறை தலைவரான காலிட் மற்றவர்களுக்கு வழிவிட்டு பதவியிலிருந்து விலகிக் கொள்வதே அவர் இந்நாட்டிற்குச் செய்யும் பெரும் சேவையாக இருக்கும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.