தேர்தலில் வெற்றி பெற யாகமா?

 

கி. சீலதாஸ், மே 17, 2016.

 

siladassஜனநாயகம்  என்றால் மக்களின்  ஆட்சி என்று பொருள்படும்.  மக்கள் நேரிடையாக ஆட்சி செய்வதில்லை.  ஆனால் தங்களை (மக்கள்)  ஆளுவதற்கான தகுதியை,  அதிகாரத்தை சிலருக்குத் தந்துவிடுவார்கள்.  அதாவது தேர்தல் வழியாக நாடாளுமன்றம்,  அல்லது சட்டமன்றங்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவது மக்கள் பொறுப்பாகும்.  பொதுத் தேர்தல் என்கின்றபோது  வாக்காளர் – எந்தவித மனச்  சஞ்சலமின்றி – சலனமும் இன்றி – வாக்களிக்க வேண்டும்.  அதைவிடுத்து தேர்தலின்போது வாக்காளர்களைக் கவரும் பொருட்டு பணத்தை வாரி இறைப்பது,  வாக்காளர்களின் உரிமையைப் பணம் கொடுத்து வாங்குவது போன்றவற்றை இலஞ்சம் என்று  சொல்லாமல்  வேறு  என்ன  என்பது?   இப்படிப்பட்ட அநாகரிகங்கள் அரங்கேற்றப்படுவது சகஜமாகிவிட்ட  காலத்தை  நினைவுப்படுத்துவது  தேர்தல்  காலம்.

வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து வாக்கை பெறலாம் என்றால் அது ஜனநாயகக் கோட்பாட்டை அவமதிப்பதற்குச்  சமம்.

சரி, பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது ஒரு பக்கம் இருக்க, ஒரு சில தலைவர்கள் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ யாகச் சடங்கு செய்து தேர்தலில் வெற்றிக்காக வேண்டிக் கொள்கிறார்கள்.  இது  தமிழ்  நாட்டில் மட்டுமல்ல, இந்த  நாட்டிலும்  இந்தச்  சடங்கு பிரபலமடைந்து  வருகிறதாம்.  மக்கள்  மீது நம்பிக்கை உள்ளவர்களாகச் சொல்லித் திரியும் இந்த அரசியல்வாதிகள் வியக்கத்தக்க வகையில் தெய்வீகத் தலையீட்டை வேண்டுவானேன்?  தெய்வத்தின் துணை இருந்தால் போதுமென செயல்படும் இந்த அரசியல்வாதிகள் மக்களிடம் வருவானேன்?  இலஞ்சம் கொடுப்பானேன்?  பலவித உத்திரவாதங்களைத்  தருவானேன்?   தேர்தல் அறிக்கை எதற்கு?  கோயில் தோறும் போய் வழிபாடு நடத்தினால் போதுமே!

இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், கடவுள் மீதான நம்பிக்கையை சர்ச்சைக்குள்ளாக்குவதற்கு அல்ல.  மாறாக, இலஞ்சம் கொடுத்து வாக்குகளை வாங்கத் துணிந்தவர்களுக்கு ஓர் அச்சம்!  எங்கே வாக்காளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கையை விரித்து விடுவார்களோ என்ற அச்சம்!  எனவே  தெவீகத்  தலையீட்டின்  வழி  தங்களின்  வெற்றியை  உறுதிப்படுத்த  முயலுகிறார்கள் – இது  தவறான  போக்கு  என்று  சொல்வது  குற்றமாகுமா?  தேர்தல்  காலங்களில்  தெய்வீகத் தலையீட்டை வேண்டுவது ஆச்சரியமல்லவா?  இவ்வளவும்  செய்துவிட்டு,  தோல்வி  கண்டால்  யார் மீது  பழிபோடுவது – மக்கள்  மீதா? அல்லது  இறைவன்  மீதா?

இதே அணுகுமுறையைத்தான் வசதியானவர்கள் நீதிமன்ற  வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால் போமோ (bomoh) அல்லது வேறு ஏதாவது தெய்வீக தலையீட்டுக்குப் பிரார்த்தனை செய்வார்கள்.  அப்படியானால்,  நீதித்துறையின் மீதும் நீதிபரிபாலனம் செய்யும் நீதிபதிகள் மீதும் நம்பிக்கை இல்லை என்பதைத்தானே  இப்படிப்பட்ட  நடவடிக்கை புலப்படுத்துகிறது.  ஆச்சரியம்!  ஆச்சரியம்!  வெட்கக்கேடு என்று சொன்னால் தகுமா?  மக்களை நம்பாதவர்  மக்களுக்காகச் சேவை செய்வார்களா?  நீதியை நம்பாதவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாமா?  இரண்டுமே சந்தேகம்தான்!