ஹுடுட் விவகாரத்தால் தேசிய முன்னணி உடையும்!

Arumugamkampongpandanஹுடுட் சட்ட விவகாரத்தால் தேசிய முன்னணி உடையும் சாத்தியம் உள்ளதாகவும், அதனால் பயனடைவது மலாய் – இஸ்லாம் கூட்டமைப்பாக இருக்கும் என்கிறார் கா. ஆறுமுகம்.

நாடாளுமன்றத்தில் மாராங் நாடளுமன்ற உறுப்பினர் ஹாடி அவாங் கொண்டு வந்த அரசாங்க சார்பற்ற ஹுடுட் சார்புடைய மசோதாவை, கடந்த 26.5.2016-இல் தாக்கல் செய்ய பிரதமர் துறையின் அமைச்சர் அஸ்லினா ஒஸ்மான் முன்மொழிந்தார். இது நாடளுமன்ற உறுப்பினர்களிடையே பெரிய சலசலப்பை உண்டாக்கியது.

அரசாங்க சார்பற்ற மசோதாக்கள் இதுவரையில் விவாதம் வரை வந்தது கூட கிடையாது. அவை விவாதப்பட்டியலில் இருக்கும். ஆனால், சபநாயகரின் அனுமதி கிடைக்காதபட்சத்தில் தள்ளுபடியாகும். ஆனால், இம்முறை அரசாங்கமே இந்த மசோதாவை விவாதத்திற்காக  முன்னிலைப் படுத்தியுள்ளது.

இதற்கு காரணம், நடைபெற உள்ள இரண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காக தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு வியூகம் என்பது பலரின் கருத்தாகும். ஆனால் அதற்கு அப்பாற்பட்ட வகையில் உருவாகும் ஒரு  மலாய் – இஸ்லாம் கூட்டமைப்புக்கு இந்த வியூகம் வழி வகுக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்கிறார் சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவரான ஆறுமுகம்.

hudபாக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கு பாஸ் கட்சியின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதிகமான மலாய்க்காரர்கள் உள்ள கிளந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்களிலும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மலாய்காரர்களின் மத்தியிலும் பாஸ் கட்சி ஆழமாக வேரூண்றி உள்ளதால் அதன் ஓட்டு வங்கி கணிசமானதாகும். பாக்காத்தானிலிருந்து வெளியான பாஸ் தற்போது தனித்து நிற்கிறது.

பாஸ் கட்சியுடன் அம்னோ இணையுமானால் அது ஒரு முழுமையான மலாய் – இஸ்லாம் கூட்டணியாக திகழும். இதன் வழி இந்தக் கூட்டணி ஆட்சி வகிக்க குறைந்த பட்ச பெரும்பான்மையாக தேவைப்படும் 111 (222 –இல் பாதி) அதிகமான தொகுதிகளை கைப்பற்ற இயலும்.

இந்த மலாய்-இஸ்லாம் கூட்டணிக்கு சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆதரவு தேவைப்படாது என்கிறார் ஆறுமுகம். தற்போதுள்ள நிலையில், சுமார் 85 சதவிகித சீனர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிப்பதில்லை, அதேபோல், இந்தியர்களில் பாதிப் பேர் மட்டுமே தேசிய முன்னணிக்கு ஆதரவாக உள்ளனர்.

அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்தால் உருவாகும் கூட்டணிக்கு மசீச மற்றும் மஇகா போன்ற கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை எழாது. இந்தச்சூழல் ஓர் இக்கட்டாண அரசியலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று எச்சரிக்கிறார் ஆறுமுகம்.

பாஸ் கொண்டு வந்துள்ள ஹுடுட் சட்ட மசோத ஹுடுட் அல்ல என்கிறார் பிரதமர்.

notohududஉண்மையில், பாஸ் கொண்டு வந்துள்ள மசோத ஹுடுட் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் தாக்கம் மாநில அளவில் ஹுடுட் சட்டத்தை அமுலாக்கம் செய்யும் ஆற்றலை பெற்றுள்ளது. அரசமைப்பு சட்ட மாற்றத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநில அளவில் இஸ்லாம் சார்ந்த குற்றவியல் சட்டம் அமுலாக்கம் காணும். அதன் வழி ஹுடுட் எனப்படும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் அமுலாக்கம் காணும். நாட்டை ஓர் இஸ்லாமிய வழிமுறைக்கு கொண்டு செல்ல இதுதான் திறவு கோலாக அமையும் என்கிறார் ஆறுமுகம்.

மேலும், தற்போது இன அடிப்படையில்  செயல்படும் தேசிய முன்னணி ஓர் அரசியல் திருப்பு முணையில் உள்ளது. ஹுடுட் சட்டத்தை ஏற்க மறுக்கும் மசீச மற்றும் மஇகா போன்ற இன அடிப்டையிலான கட்சிகள் தேசிய முன்னணியிலிருந்து வெளியாகலாம் என்ற நிர்பந்தம் உண்டாகும். அந்நிலையில் தேசிய முன்னணி என்பது ஓர் அனைத்து இனம்-சமயம் சார்ந்த கட்சிகளின் கூட்டணி என்பதை விட இஸ்லாம் சார்ந்த கூட்டணி என்ற வகையில்தான் செயல்படும்”, என்கிறார்.