அறிவாற்றலுக்கு, தமிழ்ப்பள்ளியே முதன்மை வழியாகும்!

Arumugamஇவ்வளவு காலம் தமிழ்க்கல்வியை புறக்கணித்து வந்த மத்திய வர்க்கத்தினருக்கு தமிழ்க்கல்வி  மட்டுமே தகுந்த அறிவாற்றலை வழங்க இயலும் என்கிறார் கா. ஆறுமுகம். இந்த அதிநவீன காலத்தில் அனைத்துலக அளவில் மாற்றம் கண்டு வரும் கல்வியின் மதிப்பீடுகள் தமிழ்க்கல்வியை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகிறார்.

ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தோட்டப்புறங்களில் அமைக்கப்பட்டன. அதன் வளர்ச்சி தோட்ட மக்களின் சமூக, பொருளாதார கட்டமைப்புள்ளேயே இருந்தது. அந்நிலையில் தமிழ்ப்பள்ளிகள் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி  என்பதை வெளிக்கொணர தவறி விட்டது என்று பல கல்விமான்கள் தங்களின் ஆய்வுகளின் வழி வெளிக்காட்டியிருந்தனர். அந்தத் தரவுகள் தற்போது தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம் கூறுகிறார்.

tamil school children21970ஆம் ஆண்டுகள் முதல் வெளிவந்த கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள் தமிழ்ப்பள்ளிகளை தோல்வியடைந்த ஒரு கல்விச்சாதனமாகவே காட்டின. அதன் பின்னணியில் அவை ஏழைக் குழந்தைகளுக்கான அடைக்கலமாக  கருதப்பட்டன.  மத்திய வர்க்கத்தினர் தமிழ்ப்பள்ளிகளை முற்றாக புறக்கணித்தனர். சுமார் 50 சதவிகித குழந்தைகள் மட்டுமே தமிழ்ப் பள்ளிக்கு சென்றனர். இந்நிலைக்கு காரணம் உணர்ச்சியுடனும் உணர்வுடனும் தமிழ்ப்பற்றாளர்கள் மேற்கொண்ட செயல்களாகும்.

சிறந்த கல்வியை தமிழ்ப்பள்ளி மட்டுமே வழங்கும் 

இனிவரும் காலங்களில் இந்நிலை முற்றாக மாறும். தமிழ்க்கல்வியை தேர்வு செய்யாத பெற்றோர்கள் இதனால் வருத்தப்படுவர். தங்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை தேடும் பெற்றோர்களுக்கு தமிழ்ப்பள்ளி மட்டுமே அறிவாற்றலை  அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட சூழலை வழங்கும் என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம். இது உணர்ச்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் உருவாக்கம் கண்டு வருகிறது.

“பல வகையான ஆய்வுகள் பன்மொழி கல்வி கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இவை சார்ந்த தகவல்களை முதன்முதலாக கடந்த பிப்ரவரி மாதம் பேரா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் நடத்திய ஒரு பயிலரங்கத்தில் பகிர்ந்து கொண்டேன். அப்போது உடன் இருந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவைச்சார்ந்த முனைவர் முனியாண்டியும் சுங்கை சிப்புட்  தியாகராஜனும்  இந்தக்  கருத்துகளை மக்கள் புரிந்து கொள்ளும் அளவில் தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். காரணம் இவை சார்ந்த விவாதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன”,  என்றனர்.

tamil_schoolஇந்த ஆய்வுகளை உறுதிப்படுத்தும் அளவில் சிலாங்கூர் மாநில அரசு  200 ஆண்டுகால தமிழ்க்கல்வி விழாவின் போது மேற்கொண்ட ஓர் அறிவுத்திறன் போட்டியின் முடிவுகள் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் 24 தமிழ்ப்பள்ளிகளை சார்ந்த 240 மாணவர்கள் 39 கேள்விகள் அடங்கிய நுண்ணறிவு (IQ TEST) தேர்வில் பங்கு கொண்டனர். இதன் முடிவுகள் உலக அளவில் 250,000 நபர்கள் பங்கெடுப்பின் விளைவாக பெற்ற தேர்ச்சியுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பள்ளிகளைச் சார்ந்த சராசரி மாணவர்கள் பெற்ற தேர்வு நிலை சற்று உயர்வாக காணப்பட்டது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆறுமுகம்.

இதில் வியப்பெதுவும் இல்லை. சுவீடன் நாட்டின் உயிரியல் நிபுணர் நினா கரௌஸ் உச்சந்தலையில் மின்முனைகளைப் பொருத்தி மூளையில் செவிபுலன் பகுதியை ஆராய்ந்தார். இந்த ஆய்வில் பன்மொழி பேசுபவர்கள் பேச்சு தொடர்பான ஒலிகள், முக்கிய தொனிகள், தாளங்கள், குழப்பமளிக்க கூடிய சப்தங்கள் போன்றவற்றை எளிதில் ஏற்றுக்கொள்கின்றனர். “மக்கள் சப்தங்களை அர்த்தமுள்ளதாக பயன்படுத்தும் போது நரம்பு மண்டலம் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.”, என்கிறார் கரௌஸ். அறிவுத்திறன் வளர்ச்சிக்கு இது அடித்தளமாகும்.

இதே போல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் ப்ரிபேன் 1985 முதல் 2008 வரையில் வெளியிட்ட 15 லட்சம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் பன்மொழி படித்தவர்களின் தாக்கம் அக்கட்டுரைகளின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கணித்துள்ளார். இதே போல் இன்னும் பல ஆய்வுகள் உள்ளன

தமிழ்ப்பள்ளியை புறக்கணிப்பது அறியாமையாகும்  

தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்று ஒரு பொறியியல் நிபுணராகவும் இருக்கும் ஆறுமுகம், தமிழ்ப் பள்ளியின் தாக்கம் மிகவும் அபாரமான பயன்களை கொடுக்கும் என்கிறார்.

IQ Test2“ஆய்வாளர்கள் இதை மிகவும் சுலபமான வகையில் விளக்குகிறார்கள். ஒரு குழந்தை விளையாட ஒரு விளையாட்டுப் பொருளை மட்டும் கொடுப்பதா அல்லது பல விதமான விளையாட்டுப் பொருள்களை  கொடுப்பதா? எந்த சூழல் உகந்தது? பல வகையான பொருள்களோடு விளையாடும் குழந்தைகளின் ஆற்றல் பன்மடங்கு அதிகமாகும். சுவீடன் உயிரியல் நிபுணர் இதை பன்மொழி பயன்பாடு வழி குழந்தைகள் பெரும் ஆற்றலை நிருபித்துள்ளார்.

அதே போல் இயற்கை வனத்தில் ஒரே வகையான தாவரங்கள் மட்டுமே இருந்தால், அவை பருவ கால மாற்றம் நிகழும் போது முழுமையாக அழிந்து விடும். ஆனால், பல வகையான தாவரங்கள் உள்ள காடுகள் மாறுபட்ட பருவ கால தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மையைப் பெற்றிருக்கும் என்கிறார்கள் தாவிரவியலாளர்கள்.

தமிழ்மொழியின் தொன்மையும் ஆற்றலும் ஆழமானதும் அறிவு சார்ந்ததுமாகும். தமிழை தாய்மொழியாக பெற்றிருப்பது மிகப்பெரும் பேராகும். ஆனால், அதன் ஆற்றல் அறியப்படாமல் பிற மொழி மோகத்தில் நாம் வாழ்வது நமது அறியாமையும் பலவீனமுமாகும்.

இந்தக்  காலகட்டத்தில் தமிழ்ப்பள்ளிக்காக நாம் எடுக்கும் முயற்சிகளும் முனைப்புகளும் ஒரு தரமான அறிவாற்றல் கொண்ட சமூகத்தை உருவாக்கும். இங்கு மட்டுமே நாட்டின் தேசிய மொழியும், உலகத் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலமும் அறிவாற்றலுக்கு உகந்த தமிழ்மொழியும் போதிக்கப்படுகின்றன. இவ்வாறு கல்வி கற்பவர்களால் மட்டுமே பரிட்சை தேர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் கூட உலகத்தரத்துடன்  சவால்களை எதிர்கொள்ள இயலும்.

அந்நிலைக்கு வர இயலுமா? கண்டிப்பாக இயலும் என்கிறார் ஆறுமுகம்.