துணைப் பிரதமர் இந்தியர்களை அவமதிக்கிறார்

[செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்]

அண்மையில் பாகோவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வொன்றில் நாடு சுதந்திரமடைந்த இந்த 54 ஆண்டுகளில் பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியுள்ளார். மேலும் இந்நாட்டில் உள்ள இந்தியர்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்னைகளைக் களைவதில் பி.என் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது உண்மைக்குப் புறம்பான கூற்று!

இதோ……கடந்த 54 ஆண்டுகளில் தே.மு அரசாங்கத்தின் கீழ், இந்திய சமூகம் எத்தகைய “வளர்ச்சியைக்” கண்டுள்ளது என்பதை கொஞ்சம் ஆராய்வோம்:

1.ரப்பர் தோட்டப் பகுதிள் நகரமயமாக்கப்பட்டபோது, பரிதாபத்துக்குறிய தோட்டத் தொழிலாளர்கள் மாற்று தொழில், இழப்பீடு ஏதுமின்றி வெறுமனே வெளியேற்றப்பட்டனர். புறநகரப் பகுதிகளில் தஞ்சமடைந்த அவர்கள் உருப்படியான தொழில், குடியிருக்க வீடின்றி அவதியுற்றனர். வறுமை தாக்கியதால் சிலர் சமூகச் சீர்கேடுகளில் ஈடுபட்டனர். இன்றளவும், இந்திய இளைஞர்களே சிறைச் சாலைகளை அதிகம் நிரப்பிக்கொண்டுள்ளனர்.    

2. அன்று உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களின் நுண்ணறிவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இன்று அவர்களின் எண்ணிக்கை பூஜியத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாராபட்ச ஒதுக்கீட்டு முறையால் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பிரவேசிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2 விழுக்காட்டுக்கு சரிந்து வருகிறது.

3. அரசாங்கத் துறை வேலைகளுக்கான இந்தியர்களின் தேர்வும் சுருங்கி ஒடுங்கி விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறது.

4. சாலை மற்றும் அரசாங்கக் குத்தகைகளை இந்தியர்கள் பெறக் குடிய வாய்ப்பும் சிறுகச் சிறுக பிழிந்து எடுக்கப்பட்டுவிட்டது.

5. விளையாட்டுத் துறைகளில் – குறிப்பாக திடல் தட போட்டிகளில் தொடக்க காலத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் இந்தியர்களே. இன்று அது அரிதாகிவிட்டது.

6. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர நிபுணத்துவ பிரிவுகளில் அன்று இந்திய வல்லுனர்களே மிகுந்து காணப்பட்டனர். இன்று எல்லாம் அத்திப்பூவாகி வருகிறது. 

7. வியாபார, வர்த்தகத் துறைகளில், முழுமையான நிதி உதவியும் ஆதரவும் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால், வணிகத் துறையிலும் இந்திய சமூகம் பின்னடைவு கண்டது. தங்கள் வியாபார நடவடிக்கைகளைப் பெருக்கிக்கொள்ள இந்திய வணிகர்களுக்கு எவ்வித   நிதி ஆதரவும் இல்லை.

8. அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடியதால், உடல் உழைப்பு  வேலை வாய்ப்புகளும் இந்திய சமூகத்திடையே இறக்கம் கண்டது.

9. பாரிசான் நேஷனல் கூட்டணியில் மிக சிறிய, பலவீன கட்சியாக அங்கம் வகிக்கும் மஇகாவிடமே இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் பாரிசான் அரசாங்கம் ஓப்படைத்து விட்டது. அரசாங்க ஒதுக்கீடுகளை மஇகா புள்ளிகள் சிலர் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு,தேசிய முன்னணி அரசாங்கம் மட்டுமே “தங்கள் துயரங்களை  துடைக்க முடியும்” என இந்திய சமூகத்துக்கு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி தெளித்துக் கொண்டு வந்தனர். எல்லாவற்றையும் நம்பிவந்த இந்திய சமூகம் பிறகு உண்மை நிலை உணர்ந்து 2008-ஆம் ஆண்டில் பொங்கி எழுந்தது.

பாரிசான் நேஷனல் ஆட்சியின் கீழ், இந்தியர்களிடையே வன்முறை கலாச்சாரம், மாணவர்கள் மட்டம்  போடுதல், திரனற்ற தொழிலாளர்கள், புறநகர்ப்பகுதிவாழ்        இந்தியர்களிடையே ஏழ்மை நிலை ஆகியவையேயே உருவாகியுள்ளன. பாரிசான் அரசாங்கம் இந்தியர் பிரச்னைகளைத் தமிழ்ப் பள்ளிகள் மற்றும் ஆலயங்களிடம் தள்ளிவிடுகின்றன.

இன்று இந்திய சமூகம் “அன்பளிப்பு கூடைகளுக்கு” கையேந்தும் சமூகமாக மாற்றியுள்ளது. ஒரு பொட்டலம் அரிசி கொடுப்பதன் வழி, தான் மாபெரும் சேவையை இந்திய சமூகத்துக்கு ஆற்றிவிட்டதாக அம்னோ அரசாங்கம் கனவு காண்கிறது.

பாரிசான் நேஷனல் ஆட்சியின் கீழ், இந்திய சமூகத்தின் பெரும் பகுதி ஓரங்கட்டப்பட்டது. இருந்தும், மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் ஜொகூர் மாநில மஇகா தலைவர் பாலகிருஷ்ணன் முன்னணியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில், இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பரிசான் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளது என துணைப் பிரதமர் மார்தட்டிக் கொண்டுள்ளார். முகைதின் யாசின் வாசிக்கும் இசைக்கு மஇகாவினர் தாளம் போடலாம். ஆனால் ஏற்கனவே காயமடைந்திருக்கும் சமூகத்தின் நெஞ்சை அவரின் பொய்யான வார்த்தை ஜாலங்கள் மேலும் புண்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.

TAGS: