நாயகன் படத்தில் கேட்ட கேள்விகள் மீண்டும் எழ, உண்மையிலேயே காட்டுப் பெருமாள் – நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்விக்கு பதிலாக பலத்த விவாதங்கள் எழுந்தன. 20.08.2016 (சனிக்கிழமை) மாலை, சுபாஸ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மண்டபத்தில் சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல் வெளியீடு கண்டபோது, அதில் உரையாற்றிய பலர் காட்டுப் பெருமாள் பற்றி அரசாங்கம் சாட்டிய குற்றச்சாட்டுகள் அவரை கலங்கப்படுத்தத் தவறி விட்டதற்கு சான்றாக தேவ் ஆனந்த் எழுதிய வாய்மொழி வரலாற்றுப் பதிவு அமைந்துள்ளது என்றனர்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை தமிழாக்கம் செய்த ஓய்வு பெற்ற மேஜர் காளிதாஸ் மணியம் தனது பதவி காலத்தின் போது பெருமாள் ஒரு கம்யூனிசவாதி என்றும் அவர் நாட்டின் எதிரி என்றும் போதிக்கப்பட்டதாக கூறிய அவர், தனது தந்தை அதன் பிறகு பெருமாள் தோட்ட மக்களுக்காக தியாக உணர்வுடன் காட்டிற்குச் சென்று போராடிய ஒரு வீரன் என்று கூறியதாக தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களும் படிக்க வேண்டும்
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஹஜி தஸ்லிம் அவர்கள், “நல்லது செய்யும் நோக்கம் கொண்ட காட்டு பெருமாள் வரலாறு இன்று மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்றார். இவரும் தனது தந்தை பெருமாளை ஒரு நல்லவர், என்று சொன்னதை பகிர்ந்தார். மேலும், “காட்டுப்பெருமாள் புத்தகத்தை தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வாசிக்க வழி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், இக்காலக்கட்டத்தில் காட்டுப் பெருமாள் வரலாற்றின் அவசியம் என்ன என்பதைப் பற்றிய ஆய்வுக்களமும் நடை பெற்றது. இதில் தோழி யோகியும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெயகுமார் தேவராஜும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தலைமை ஏற்றார்.
உள்வாங்கிய போராட்டம்
பல கோணங்களில் தனது பார்வையைச் செலுத்திய யோகி, காட்டுப் பெருமாளின் வரலாறு அடிப்படையில் ஒரு வர்க்க சிந்தனையையில்தான் உள்ளது என்றார். ஒடுக்கப்படும் மக்களிடையே காட்டுப் பெருமாள் போன்ற போராளிகள் எல்லாக் காலங்களிலும் எழுவார்கள் என்றார். அதுதான் நீதி, நியாயம் தேடும் சாமானிய மனிதனின் வேட்கையும் எதார்த்தமும் தார்மீகமும் ஆகும் என்றார்.
இவர்களின் பங்கெடுப்பு தற்போது சிலரிடையே உண்டாகும் வெளிப்படையாக “நானும் போராடுகிறேன்” என்ற போராட்ட உணர்வை உள்வாங்க இயலாத நிலையில் உணர்ச்சியை மட்டுமே பரப்புரைக்கு காட்டும் காட்சிப் பொருள் போராட்டவாதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் உயிரைப் பணயம் வைத்தவர் பெருமாள் என்றார் யோகி.
யாரு கெட்டவங்க?
ஜெயகுமார் எளிய தமிழில், காட்டுப் பெருமாள் எதற்காக போராட வேண்டும் என்பதை விளக்கினார். மலாயாவை செல்வம் கொழிக்கும் நாடாக உருவாக்கி அதை மக்களிடம் கொடுக்க வெள்ளைக்காரன் வரவில்லை. அவர்கள் இந்த நாட்டின் வளத்தை சுரண்ட வந்தார்கள். அதை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல வந்தார்கள் என்றார். அதில் சிக்கியவர்கள் தொழிலாளர்கள்.
தொழிலாளர்களை கட்டுப்படுத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதுதான் அவர்களின் கொள்கை. அந்த நிலையில் தொழிலாளர்களின் உயர்வுக்காக பெருமாள் குரல் கொடுத்தார். அதனால் அவர் வெள்ளைக்காரனுக்கு எதிரியானார். அதனால் காட்டுக்குள் ஓடி தலைமறைவானார்.
அவர் யாருக்காக இதைச் செய்தார் என்பது முக்கியம். மக்கள் நல்லா இருக்கனும்னு அடிமைப்படுத்தும் வெள்ளைக்காரனை அவர் எதிர்த்தார். அதனால அவரை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தினார்கள். மக்களிடையே கம்யூனிஸ்ட் என்றால் கெட்டவர்கள் என்று பிரச்சாரம் செய்து அவர்களை பிடித்தால் சன்மானம் கிடைக்கும் என்றது அரசாங்கம்.
இந்த காட்டுப் பெருமாள் பற்றிய விவாதம் மக்களிடையே ஓர் அரசியல் தெளிவை உருவாக்க இயலும். அடிப்படையில் மக்களுக்காக போராடும் யாரும் கெட்டவராகா இருக்க முடியாது. இவரது நோக்கம் மிகவும் முக்கியம். சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் வாழ்ந்த காட்டுப் பெருமாள் ஒரு நல்லவராக மக்களிடையே வாழ்ந்துள்ளார் என்பதை மக்களின் வாய்மொழி வழி கண்டறிந்து நூலாக்கியுள்ளார் தேவ் ஆனந் என்றார் ஜெயகுமார்.
நூலகங்களுக்கு இலவசம்
இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எழுத்தாளர் மோகன் பெருமாள், இந்த நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டதும் கலந்து கொள்ள ஆர்வம் உண்டானது என்றார். தனது தந்தையும் பெருமாள் என்ற பெயர் கொண்டவர் என்றும் அவரும் தொழிலாளர்களுக்கு தோழனாக வாழ்ந்தவர் என்றார். இந்த வரலாற்றை பலரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மலேசியாவில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு இந்நூலை இலவசமாக வழங்க ஏற்பாடும் செய்து அதற்கான காசோலையையும் வழங்கினார். இந்த நூலை இலவசமாக பெற விரும்பும் நூலகங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.