தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரிய உறுப்பினர்களே, ஏன் தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95 என்று மந்திரியை கேட்பீர்களா?

MALAYSIA-VOTE-INDIANSஇந்நாட்டிலுள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மலேசிய அரசாங்கம் அதன் ஐந்தாண்டு திட்டங்களில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு நிதி என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு 1991 ஆம் ஆண்டிலிருந்து (6 ஆவது மலேசியத் திட்ட காலத்திலிருந்து) அளித்து வருகிறது. இப்போது நடப்பிலிருப்பது 11 ஆவது மலேசியத் திட்டம்.

பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு தொடங்கப்பட்ட 6 ஆவது மலேசியத் திட்டத்திலிருந்து 9 ஆவது மலேசியத் திட்டம் வரையில் (1991 – 2010) தேசியப்பள்ளி, சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 11 ஆவது மலேசியத் திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு 6 லிருந்து 9 ஆவது திட்டங்கள் வரையில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களைப் போன்ற தகவல் கொடுக்கப்படவில்லை. 10 ஆவது திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கான புள்ளிவிபரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த அன்றைய கல்வி அமைச்சரை உடனே பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். கேள்வியை சரியாக கூறிவிட்டு பதிலை வேறுவிதமாக கூறியிருந்தார்.

பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஐந்தாண்டு திட்டங்களில்  அரசாங்கம் ஒதுக்கும் நிதியில் ஏன் பாகுபாடு? அன்றைய அமைச்சர் ச. சாமிவேலுவுடன் நடத்தப்பட்ட நீண்ட நேர்காணல் (பதிவு செய்யப்பட்டது, மலேசியாகினி/யுடியூப்), பதிவு செய்யப்படாத அன்றைய கெராக்கான துணை அமைச்சர் மா சியு மற்றும் அன்றைய துணைக் கல்வி அமைச்சர் வீ காசி யோங் ஆகியோருடனான நேர்காணல் ஆகியவற்றிலிருந்து ஏன் இந்தப் பாகுபாடு என்பதற்கு பதில் கிடைக்கவில்லை. கடைசியாக, நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரே சரியான பதிலை அளிக்கவில்லை. ஆனால், அந்த எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்வியிலிருந்தும், அதற்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலிருந்தும் மலேசிய ஐந்தாண்டு திட்டங்களில் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் அதில் பாகுபாடு இருக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு தேசியப்பள்ளிக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசாங்கம் மூடிமறைக்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. சில அரசு ஊழியர்கள் அப்படி ஏதும் இல்லை என்று கூறிவருகிறார்கள். கீழே தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் பாகுபாடுகள் ஏராளம் என்பதை உறுதிப்படுத்துகின்றன:

 

PlanNational schoolChinese schoolTamil schoolTotal %
6th 1991-199589.72%8.14%2.14%100%
7th 1996-200096.54%2.44%1.02%100%
8th 2001-200596.10%2.73%1.17%100%
9th 2006-201095.06%3.60%1.34%100%

 

ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த வகைப் பள்ளிக்கு எத்தனை விழுக்காடு கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டும் இந்த விளக்க அட்டவணையில் 9 ஆவது திட்டத்தில் 95.06% தேசியப்பள்ளிக்கும் எஞ்சியிருப்பதில் 3.60% சீனப்பள்ளிக்கும் 1.34% தமிழ்ப்பள்ளிக்கும் கொடுக்கப்பட்டது.

மேற்கூறப்பட்டுள்ள 9 ஆவது மலேசியத் திட்டத்தில் கொடுக்கப்பட்ட விழுக்காட்டு நிதியை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு எத்தனை ரிங்கிட் மற்றும் சென் என்று கணக்கிடுகையில், கீழ்க்கண்ட புள்ளிவிபரம் கிடைகிறது:

All primary schoolsNational Primary schools% of TotalChinese Primary schools% of TotalTamil Primary schools% of Total
Total no. of students3,044,9772,300,72975.6645,66921.298,5793.2
9 MP Development – Million4,837.34,598.295.1174.33664.81.3
RM per students for 5 years1,5891,998270659
RM per student per month26.8433.304.5010.95

 

சீனப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் காட்டப்படும் பாகுபாட்டை இப்போது கவனியுங்கள். மொத்த மாணவர்கள் மற்றும் ஒரு மாணவருக்கு ஒரு மாதத்திற்கு ரிம26.48 என்ற அடிப்படையில் 21.2 விழுக்காடு மாணவர்களைக் கொண்ட சீனப்பள்ளிகளுக்கு ரிம1025.5 மில்லியன் கிடைக்க வேண்டும்; 3.2 விழுக்காடு கொண்ட தமிழ்பள்ளிகளுக்கு ரிம154.8 மில்லியன் கிடைக்க வேண்டும். சீனப்பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டிய அரசு நிதியில் முறையே ரிம851.17 மில்லியன் மற்றும் ரிம90 மில்லியன் பிடிங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்நாட்டு குடிமக்கள். ஏன் இந்த வேறுபாடு?

10 ஆவது மலேசியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஜூன் 10, 2010 இல் தாக்கல் செய்த பிரதமர் நஜிப், சீன, தமிழ், சமய மற்றும் மிஷனரி பள்ளிகளைப் பழுதுபார்ப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும் 2011-2012 ஆண்டில் மொத்தம் ரிம280 மில்லியன், அதாவது ஒவ்வொன்றுக்கும் ரிம70 மில்லியன், ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். தேசியப்பள்ளிக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பது அறிவிக்கப்படவில்லை.

10 ஆவது மலேசியத் திட்டத்தில் தேசியப்பள்ளி, சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி ஆகிய ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற சரியான தகவலைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கீழ்க்கண்ட கேள்வியை கல்வி அமைச்சரிடம் 17.10.2011 இல் தாக்கல் செய்தார்:

“YB Tuan Kulassegaran A/l Murugesan (Ipoh Barat) minta MENTERI PELAJARAN menyatakan amaun wang yang dijangka dan telah dibelanjakan  untuk setiap murid setiap bulan untuk sekolah Kebangsaan, Cina dan Tamil di bawah rancangan Malaysia ke-9 dan ke-10. Sila nyatakan rasional perbezaan  perplanjaan ini.”

2011 டிசம்பர் கடைசி வாரத்தில் அவர் கீழ்க்கண்ட பதிலை கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றார்:

Ketegori SekolahRMKe – 9 (RM)RMKe – 10 (RM)
SJK(C)6,457,080,8071,716,393,676
SJk (T)2,481,674,380  584,382,340

 

கேள்வி என்ன, பதில் என்ன என்பதைக் கவனியுங்கள். ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு என்பது கேள்வி. மேலும், சீனப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் 9 ஆவது திட்டத்தில் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள முழுமதிப்பு தவறாகும். அவற்றுக்கு கொடுக்கப்பட்டது முறையே  ரிம174.33 மில்லியனும் ரிம64.8 மில்லியனே.

மேற்கூறப்பட்டுள்ள தகவல்படி, 10 ஆவது திட்டத்தில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மந்திரி சரியான பதில் அளிக்கவில்லை.

ஆனால், 9 ஆவது மலேசியத் திட்டத்தில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது: தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95; சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50.

இதில் மிகக் கடுமையான பாகுபாடு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக, தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரிய உறுப்பினர்கள் இந்தப் பாகுபாட்டை மறுக்க மாட்டார்கள்.

இப்பாகுபாடு தொடராமல் இருப்பதற்கு அவர்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

முதல் கட்ட நடவடிக்கையாக, இன்று தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மாநாடு 2016 ஐ நிறைவுசெய்து வைப்பதற்கு வரும் கல்வி அமைச்சரிடம் ஏன் தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95; சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50; தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 என்று மாநாட்டில் பங்குகேற்றுள்ள தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரிய உறுப்பினர்கள் கேட்க வேண்டும்.

மந்திரியை கேட்பார்களா?