கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்றத்தின் எல்லை சீரமைப்பில் பெரிய குளறுபடியை மலேசியத் தேர்தல் ஆணையம் புரிந்துள்ளதாக 11 ஆட்சேபணைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
மலேசிய அரசியல் அமைப்பு சட்ட விதி 116 மற்றும் 117 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுவரையை மலேசியத் தேர்தல் ஆணையம் தீபகற்ப மலேசியாவிலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கான தொகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இந்த எல்லை சீரமைப்பு மீது மலேசியர்கள் பரவலாகத் தங்கள் அதிருப்தியை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்றத்தின் எல்லை சீரமைப்பில் பெரிய குளறுபடியை மலேசியத் தேர்தல் ஆணையம் புரிந்துள்ளதாக அதன் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபணை மனு
கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி மற்றும் அதில் உள்ளடங்கியுள்ள ஸ்ரீ மூடா மற்றும் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், மேற்கண்ட தொகுதிகளின் எல்லை சீரமைப்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வட்டாரப் பிரதிநிதிகளும் 13-10-2016 ல் பிற்பகல் மணி 2.30க்கு ஷா ஆலாமிலுள்ள மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைமையகத்தில் ஆட்சேபணை மனுவைச் சமர்ப்பித்தனர்.
அதில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்கள் குறித்து மட்டும் மொத்தம் 11 ஆட்சேபணைகள் தெரிவிக்கப் பட்டன. இந்த ஒவ்வொரு ஆட்சேபணையும் அத்தொகுதியின் வெவ்வேறு வாக்களிப்பு மையங்களைப் பிரதிநிதித்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஒரு குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீ அண்டாலாசின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தமது ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத் தொகுதியின் இனப் பிரதிபலிப்பை முற்றாக மாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மலேசியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி கையேடுகளிலும், மலேசிய அரசியல் அமைப்பு சட்ட இணைப்பு பட்டியல் 13லும் குறிப்பிடப்பட்டுள்ள, எல்லைசீரமைப்பு மீதான கோட்பாடுகள் அப்பட்டமாக மீறப் பட்டுள்ளது என்றாரவர்.
1. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை, மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தொகுதியின் எல்லைகள் கடந்து செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
2. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கச் செல்ல வாய்ப்புகளை, அதாவது ஒரு பகுதியிலுள்ள வாக்காளர்கள் தெளிவாகத் தங்களின் வாக்களிப்பு மையங்களை அறிந்துகொள்ளும் வண்ணம் எல்லைகள் வரையறைக்கப் பட்டிருக்க வேண்டும்.
3. மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழச் சமமாக இருத்தல் வேண்டும்.
மேற்கூறப்பட்டுள்ள விதிகள் மீறப்பட்டுள்ளதைத் தங்கள் ஆட்சேபத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த உத்தேச எல்லை சீரமைப்பை நடைமுறைப்படுத்தினால், ஒரே வட்டாரத்தில் வாழும் மக்கள் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களிக்கும் நிலை ஏற்படும். இதனால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் உதவிகளைக்கூடஒரே சீராக வழங்க முடியாது. ஒரு வட்டாரத்தில் வாழுபவர் அவர் தொகுதிக்கு வெளியில் சென்று வாக்களிப்பதால், அவர் வாக்களிக்கும் தொகுதியின் உதவிகளும் அரசாங்க ஒதுக்கீடும் அந்த வாக்காளருக்குக் கிட்டாமல் போய்விடும் என்று அவர் கூறினார்.
மலேசியத் தேர்தல் ஆணையம் தொகுதிகளின் எல்லை சீரமைப்புக்கு வழங்கிய வரைபடங்களில் கூட எல்லைகள் தெளிவாக வரையறுக்கப் படவில்லை, அதனால் ஒரு கணவன் ,மனைவி அல்லது ஒரே வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களிக்க நேரிடும், இது தேர்தல் நேரங்களில் வீண் சலசலப்புக்கும் குழப்பத்துக்கும் வித்திடும் என்றார்.
மலேசியத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள புதிய எல்லைகள் இன வேறுபாட்டை வளர்க்கும் விதமாகவும் உள்ளது. ஒரே வரிசையில் குடியிருக்கும் மலாய்க்காரர்களுக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியும் இந்தியர்களுக்கு வேறு சட்டமன்றத் தொகுதியுமாகப் பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை சேவியர் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் அம்னோவின் கைப்பாவை
இது குறித்துக் கருத்துரைத்த ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் ஹாஜி மாட் சுகாய்மீ மாட் ஷாப்பிக் இந்த மாற்றங்கள் அனைத்தும் அம்னோவின் நன்மையை மட்டுமே கருதிச் செய்யப்பட்டுள்ளது என்றார். முறையற்ற தொகுதி வரையறையானது மலேசியத் தேர்தல் ஆணையம் அம்னோவின் கைப்பாவையாகச் செயல்படுவதைத்தான் உறுதிப்படுத்துகிறது என்றாரவர். தனது தொகுதியை முன்வைத்து 2 ஆட்சேபனைகளைத் தான் சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
மக்களுக்கு எளிதில் சேவைகள் கிட்டும் வண்ணம் தொகுதிகளின் எல்லைகள் வரையப் பட்டிருக்க வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையத்தின் வழி காட்டிகள். ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல வேறு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் எல்லையைக் கடந்து சென்றுதான் மக்களைச் சந்திக்க வேண்டும் என்றால், அதன் அர்த்தம் என்ன என்று அவர் வினவினார்.
தேர்தல் ஆணையத்தின் சொந்த வழி காட்டியை அதுவே மதிக்கவில்லையா அல்லது எதிர்க்கட்சி தொகுதிகள் என்பதால் விதிகளை எப்படியும் மீறலாம் என்ற எண்ணமா என்று கேட்டார் ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளருமான ஹாஜி மாட் சுகாய்மீ மாட் ஷாப்பிக் .
ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிட ஓர் இடம் போதுமா?
இது குறித்துக் கோலக்கிள்ளான் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னிசாம் கூறுகையில்,எல்லாம் அவசரக் கோலத்தில் செய்துள்ளதைப் போன்றுள்ளது என்றார்.
தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்க உத்தேசித்தால் அது குறித்துச் சிறந்த நுண்ணறிவு பெற்றிருக்க வேண்டும் என்றார். ஒரு தொகுதியில் எந்தெந்தச் சாலைகள் உள்ளடக்கி இருக்கின்றன, எவை வெளியேற்றப்படுகின்றன என்பதனை ஒரு தேர்தல் எல்லை வரையறையைச் செய்யும் அதிகாரி துல்லியமாக அறிந்திருக்க வேண்டும் என்றார்.
கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரே இடத்தில் மட்டுமே தொகுதி எல்லை சீரமைப்பு குறித்த விவரம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு உள்ள வரைபடம் தெளிவில்லாமல் இருந்ததாகவும் கூறினர்.
பல ஆயிரம் வாக்காளர்களை இடம் மாற்றி உள்ள தேர்தல் ஆணையம், மக்கள் அது குறித்து எளிதாக அறிந்துகொள்ள அல்லது அது மீது கேள்வி எழுப்பப் போதுமான வசதிகளைச் செய்து தரவேண்டாமா என்று அவர் வினாவினார். அவ்விடத்தில் பொது மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்க எவருமில்லை என்றார்.
அது குறித்து மேல் விவரம் பெற சிலாங்கூர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் முன்கூட்டியே சந்திப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகுவுடன் தானும் சென்றதாகவும், ஆனால் தங்களைச் சந்திக்க ஷா ஆலாம் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் எந்த அதிகாரியும் முன்வரவில்லை என்று மேலும் கூறினார்.
எதுவானலும், ஆட்சேபம் தெரிவிக்க வழங்கப்பட்ட காலத்திற்குப் பின்பே அது குறித்துப் பதில் அளிக்கப்படும் என்கின்றனர். ஒரு காரியத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் இல்லை, தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூட வாய்ப்பும் வழங்காவில்லை என்று கோலக்கிள்ளான் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னிசாம் கூறினார்.
இந்த ஆட்சேபணை எல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலைகள். நடைமுறைக்கு உதவாது. உடனடியாக நீதிமன்றம் மூலம் நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதி சீராமைப்பை தடை செய்யக்கோரி சட்ட நடவடிக்கை எடுங்கள். பிறகு தேர்தல் ஆணையத் தலைவரை அகற்றுங்கள். இந்த இரண்டையும் செய்ய முடிவில்லையா..பொத்திக்கொண்டு இருப்பதே நலம்.
இந்தியன், தமிழன், சீனன் தொகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கலாய்த்துக்கொள்ளும் நடப்பு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அதிபுத்தி சிந்தனையில் சுய வேட்டையில் பேசுகிறார்கள். இந்த மாற்றங்களின் இந்தியன் தமிழன் சீனன் மலாய்காரனோடு வாய்ப்புகளை பெற்று வென்று வரட்டும் என்ற பொது அரசியல் தர்மம் இல்லாமல் போவது ஏன் ? இவனும் வேலை செய்வது இல்லை வேலை செய்ய அரசு திட்டமிட்டால் அதுவும் சுடுது ! இது எந்த வகை ஏமாற்று அராஜகம் ?
பல்லின நாட்டில் அரசியல் வேட்பாளர்கள் எந்த நிலையிலும் ஜெயிக்க முயல வேண்டும். ஆமைபோல நகர்ந்து முயல் போல முயலாமல் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு அப்புறம் ஓடுவோம் என்றால் ஓட்டு ஓடுவனுக்கு போகும் . எல்லைகள் தேசத்தின் முடிவு. தேசம் மக்களின் கையில்.
நாட்டையே நாறடித்த அம்னோவின் குஞ்சுகள் தானே இந்த தேர்தல் ஆணையம்? இது அம்னோ ஆணையம். எதையும் நீதியோடு எதிர் பார்க்கமுடியாது. எப்படி அம்னோ எப்போதுமே ஆட்சியில் இருக்கமுடியும் என்பதே இவன்களின் நடவடிக்கைகள் எல்லாம்.
ஸ்ரீ அண்டாலாசின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்களே, மற்றும் இதர எதிர் கட்சி சட்டமன்றம், நாடலமன்ற உறுபினர்களே நீங்கள் இரண்டு தவனை இருந்தது போதும் என்று நினைக்கிறன். அடுத்து, நீங்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே. ஒருவன் இருந்தான் பல ஆண்டுகள் என்ன நடந்தது மக்கள்தான் பாதிக்க பட்டார்கள். அந்த தலைவர் இன்று நன்றாக சுகமாக வாழ்கிறார். பாதிஸ்ரீ அண்டாலாசின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்களே, மற்றும் இதர எதிர் கட்சி சட்டமன்றம், நாடலமன்ற உறுபினர்களே நீங்கள் இரண்டு தவனை இருந்தது போதும் என்று நினைக்கிறன். அடுத்தது, அடுத்து வரும் இளம் தலைவர்களுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே. ஒருவன் இருந்தான் பல ஆண்டுகள் என்ன நடந்தது மக்கள்தான் பாதிக்க பட்டார்கள். அந்த தலைவர் இன்று நன்றாக சுகமாக வாழ்கிறார். பாதிப்பு நாம் தான். தொடர்ந்து நீங்கள் அவனை போல் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையினர் எப்போது பதவிக்கு வருவார்கள் ஐயா. இது என் கருதுக்கள் இதுவே மற்ற கட்சி காரர்கள்களும் செய்தார்கள் என்றால் வரவேற்போமே. செய்விர்களா தலைவர்களே.ப்பு நாம் தான். தொடர்ந்து நீங்கள் இருந்தால் அடுது வரும் தலைமுறையினர் எப்போது பதவிக்கு வருவார்கள் ஐயா. இது என் கருதுக்கள் இதுவே மற்ற கட்சி காரர்கள்களும் செய்தார்கள் என்றால் வரவேற்போமே. செய்விர்களா தலைவர்களே.
இங்கே இரண்டு முறை சில தவறுதலாக பதிவு செய்ய பட்டு உள்ளது. நன்றி
வணக்கம். ஜி. மோகன் சொல்வது சரியே. ஆனால் இரண்டு தவணை என்பது சமூக/கிராம தலைவர் தொடங்கி மாவட்ட மன்றம், நகராண்மை கழகம், சட்டமன்றம், மட்ரும் நாடாளுமன்றம் வரை கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆட்சியில் எப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும்.