வங்காள தேச மாணவர்களின் குருதியில் உருவான அனைத்துலகத் தாய்மொழி நாள்

 

– சரவணன் இராமச்சந்திரன்,  பெப்ரவரி 21, 2017.

 

imld1அனைத்துலகத் தாய்மொழி நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரித் திங்கள் 21-ஆம் நாள் உலககெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் பின்னணியில் குருதி சிந்திய வரலாறும் நான்கு மாணவர்களின் மரணங்களும் இருக்கின்றன என எத்தனை பேர் அறிவோம்? வரலாற்று அறிவொன்றே இனத்தின் மீட்சியையும் நீட்சியையும் மேலோங்கச் செய்யும் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

 

1952-ஆம் ஆண்டு இதே நாளன்று கிழக்குப் பாக்கிதானில் (East Pakistan) தலைநகரான டாக்காவில் (Dhaka) வங்க மொழியை ஆட்சி மொழியாக அமர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமே  அனைத்லுலகத் தாய்மொழி நாள் உருவாக்கத்திற்குக் காரணியமானது. தாய்மொழியின் உன்னதத்தையும் மேன்மையையும் உலகுக்கு உணர்த்த நான்கு மாணவர்களின் உயிர் அதற்கு எருவானது. தாய்மொழி காக்க தங்கள் இன்னுயிரை நீத்த அந்நால்வரின் நினைவாக வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக யுனெசுக்கோ (UNESCO) அமைப்பின் பொதுக்கூட்டத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 21-ஆம் நாளை    அனைத்துலகத் தாய்மொழி நாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையயும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2008 ஆண்டு தொடங்கி உலக முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

அனைத்துலகத் தாய்மொழி நாள் கொண்டாடத்திற்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? நாம் இக்கொண்டாட்டத்தைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா எனப் பல்வேறு வினாக்கள் தொடுத்த வண்ணமாகவே நாம் இருக்கிறோம். வினாத் தொடுப்பவர் ஒருபுறமிருக்க இதுபற்றிய சிந்தனையில்லாதவரும் கண்டுகொள்ளாதவரும் மறுபுறம் பெருகிவருவதே வேதனை அளிக்கிறது. 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியைக் கொண்டாடிவரும் வேளையில் உலகத் தாய்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாய் இருக்கும் தமிழ்மொழிக்கு நாமென்ன செய்துவிட்டோம்? என்ன செய்யலாம்?

 

தமிழ்மொழியின் பெருமை தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது. அவ்வகையில் தமிழ்மொழி வளர்ச்சிக்கான தொடர்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதே நம்மொழிக்கு நாம் செய்யவேண்டிய முகாமைப் பணி, கடமை! அடுத்து, நம் வரலாற்றையும் தொன்மையையும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துரைப்பதும் நமது முகாமைக் கடமைகளுள் ஒன்று. இளம் தலைமுறையினருக்கு மொழியின் வரலாறு தெரியாமல் இருப்பது எதிர்காலத்திற்கு நன்மை பயக்காது. எளிய வழியில் வரலாற்றையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் முயற்சியை நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டுமென்பது நமது அவா!

 

அனைத்துலகத் தாய்மொழி நாளை அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் கொண்டாடுங்கள். நம் மாணவச் செல்வங்களுக்கு மொழிப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை சிறுபருவத்திலேயே விதையுங்கள். மொழிக்காப்பொன்றே இனக்காப்பென்ற வரலாற்று உண்மையையும் அறிவையும் பாய்ச்சுங்கள். அறிவூட்டப்பெறும் நம் குழந்தைகளுக்கு இனி தமிழுணர்வும் சேர்த்தூட்டப்பட வேண்டும். ‘கெடுதல் எங்கே தமிழின் நலம் – அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனப் பாவேந்தர் தமிழ் முழக்கம் இளம் தமிழ் உள்ளங்கள் தோறும் ஊறவேண்டும். வங்கமொழிக்காக வங்கநாடு பிறந்தது. தமிழ்மொழிக்காகத் தமிழ்நாடு பிறக்க வேண்டும்; பிறக்குமென்ற நம்பிக்கையை விதையுங்கள்.