இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்தம் 49 தமிழ்ப்பள்ளிகளும் (2016 இல் 30 பள்ளிகள், 2017 இல் 19 பள்ளிகள்) அந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கு கல்வி அமைச்சினால் விதிக்கப்பட்டிருக்கும் அடைவுநிலைகளை அடையவில்லை. இந்த 49 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இன்று இல்லை. ஆகவே, கல்வி அமைச்சு இருமொழித் திட்டத்தில் பங்கேற்க தமிழ்ப்பள்ளிகளுக்கு அளித்திருக்கும் அனுமதியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்ற இறுதிக்கோரிக்கை நேற்று கோலாலம்பூரில் தமிழ் அறவாரியத்தால் ஏற்பாடு செய்யப்படிருந்த வட்ட மேசை கலந்துரையாடலில் உரையாற்றிய அதன் தலைவர் அ. இராகவன் விடுத்திருக்கிறார்.
இந்த இருமொழித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் உட்பட, கல்வி அமைச்சினால் தேசியப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பின்பற்றியாக வேண்டும் என்று கல்வி அமைச்சு சமீபத்தில் வலியுறுத்தியுள்ளதாக இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த ஒரு பிரதிநிதி தகவல் அளித்தார்.
மலேசியாவிலுள்ள 131 இந்திய அரசுசார்பற்ற (என்ஜிஒ) அமைப்புகள் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் தேதி தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகத்தின் தலைமையில் தமிழ்ப்பள்ளிகள் இருமொழித் திட்டத்தில் பங்கேற்பது இரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்தன.
இந்தக் கோரிக்கைக்கு கல்வி அமைச்சின் துணைத் தலைமை இயக்குனர் கைரி அவாங் கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார்:
1. கல்வி அமைச்சு இந்த கோரிக்கையை அலட்சியம் செய்ய முடியாத ஒன்றாகக் கருதுகிறது;
2. பள்ளிகள் தேசியப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்; மற்றும்
3. நிபந்தனைகளைப் பின்பற்றாத பள்ளிகள் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு பிபிடிக்கு கடிதம் எழுத வேண்டும்.
கா. ஆறுமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தின் சாரம் மிகத் தெளிவானது. இருமொழித் திட்டத்தில் பங்கேற்கும் பள்ளிகள் தேசியப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் இதற்கு எந்த விதிவிலக்கும் கல்வி அமைச்சால் கொடுக்கப்படவில்லை.
நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத பள்ளிகள் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள மாநில கல்வி இலாகவுக்கு எழுத வேண்டும் என்பது ஒரு குறும்புத்தனமான ஆலோசனை என்று கூற வேண்டும் என்று கலந்துரையாடலில் பேசியவர் கூறினார்.
ஆனால், ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் உட்பட, இத்திட்டத்திலிருந்து அகற்றப்படுவதற்கு கல்வி அமைச்சின் துணைத் தலைமை இயக்குனரின் பதில் வழிவகுக்கிறது
நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத தமிழ்ப்பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நடந்தது. ஆனால், இதில் யாரோ ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் தலையீடு இருந்துள்ளது, இப்போதும் இருக்கிறது என்று கூறிய அந்தப் பிரதிநிதி, கல்வி அமைச்சின் கடிதப்படி நாம் அதன் கதவைத் தட்ட வேண்டியதில்லை. அது திறந்து இருக்கிறது. உள்ளே சென்று காரியத்தை முடிக்க வேண்டும். யார் செய்வது? அதுதான் கேள்வி என்றாரவர்.
1. தமிழ் பள்ளிகள் தமிழர்களுக்குக் கிடைத்த சுதந்திர மலாயாவின் விலை மதிப்பற்றப் பரிசு; சுதந்திரத்திற்காகப் போராடினோம்; போராடிச் சுதந்திரம் பெற்றோம்; அன்று உதயமானது சுதந்திர மலாயா. இதன் விளைவாகத்தான் சுதந்திர மலாயாவிற்கு முன் நடந்தப் முதற்ப் பொதுத் தேர்தலில் தமிழ், சீனப் பள்ளிகள் தொடர்த்திருக்குமென்ற உறுதி மொழி கூட்டணி அறிக்கையில் இடம் பெற்றது; சுதந்திரத் தந்தையும், நாட்டின் முதற்ப் பிரதமருமான துங்கு அவர்கள் நமக்களித்த சுதந்திர பரிசுதான் இந்தத் தமிழ்ப் பள்ளிகள். இதன் அடிப் படையில்தான் அன்று கல்விச் சட்டம் 1961 நாடாளுமன்றத்திலும் இயற்றப் பட்டது. முதலில் இந்த உண்மையை எல்லோரும் தெளிவாக உணர்ந்துக் கொள்வது நன்று. ஆனால் இன்று இந்தத் தமிழ் பள்ளிகளுக்கு சோதனை; நாம் இன்று நம் தமிழ் பள்ளிகளின் உரிமையைக் காப்பாற்றத்தான் போராடுகின்றோம்! இந்த உண்மையையும் அறிந்துக் கொள்வதும் நன்று.
2. இதேக் கூட்டணி அறிக்கையில் அனைவருக்கும் இன்னொரு
சுதந்திரப் பரிசாக சுதந்திர மலாயாவில் சுதந்திரமான சமய வழிப்பாடு என்ற உத்தரவாதமும், இன்றும் தேசத் தந்தை, சுதந்திரத் தந்தையென்று எல்லோராலும் போற்றி நினைவிற்க் கொள்ளுமளவிற்கான துங்கு அவர்களாலும் உறுதிமொழியாய்க் கிடைக்கப் பெற்றது. இப்போது இந்த சுதந்திரமான சமய வழிப் பாட்டிற்கும் சோதனை. இதற்கும் போராட்டம்! ஆகவே இந்த நியாயமான போராட்டங்களெல்லாம் நல்லப் படியாக வெற்றிப் பெற நம் அனைவரிடமும் இனிமேலாவது தாய்மொழியுணர்வும் மேலோங்க வேண்டும்; ஒற்றுமையும் வளரவேண்டும். மேலோங்கட்டும்; வளரட்டும்.