இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களுக்கும் குண்டர்தனத்திற்கும் அவ்வப்போதுத் தமிழ்ப்பள்ளிகளைச் சம்பந்தப்படுத்துவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுவது போலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். வறுமைக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருந்த போதிலும் ஏழைகளின் சரணாலயமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவற்றின் மீது வெறுமனே பழி சுமத்துவது அதன் தார்மீகத்தன்மையைப் பாதிக்கும்.
குற்றச்செயல்கள் குறித்த உண்மையையும் அதன் பின்னணியையும் மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது போன்ற அளவுக்கு மீறிய சாதாரண அனுமானங்கள் எழாது. அதோடு தமிழ்ப்பள்ளிகளின் அமைவுமுறை மீதான நம்பகத்தன்மையை மேலும் மெருகூட்ட இயலும்.
முதலாவதாக, இந்தியர்களுக்கிடையிலான வன்முறை குற்றச்செயல்களுக்கான காரணங்களில் தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றாக இருப்பதாகக் கூறப்படுவதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிற ஆய்வுகள் ஏதுமே இல்லை. அவ்வாறான உறுதியான நிலை கடந்த பத்து ஆண்டு காலத்தில் குற்றச்செயல் மற்றும் சமூகச் சீர்கேடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மலேசியத் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஸ்லினா அப்துல்லா, 2000 ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரையில் பள்ளிச் சிறார்களின் வன்முறை குற்றச்செயல்களிலிருந்து சிறு குற்றச்செயல்கள் வரையிலான சம்பவங்கள் குறித்த 150 ஆய்வுகளைப் பரிசீலனை செய்து “மலேசியாவில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளின் சமுதாயச் சிக்கல்கள் குறித்த ஆய்வுப் பொருள்கள் மற்றும் பிரச்சனைகள்” என்ற தலைப்பிலான மேலாய்வை வெளியிட்டுள்ளார்.
அதில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான காரணங்களை வகைப்படுத்தியுள்ளார். அதில் எதுவுமே கற்கும் கல்வி மொழியையோ, தமிழ்ப்பள்ளியையோ குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான தொடர்பு கொண்டதாக இல்லை.
அதே வேளையில், இத்தவறான கருத்துக்கு அடிப்படையாக இருப்பது வறுமையில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கற்பிக்கும் மையமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதுதான். நாற்பது விழுக்காட்டில் கீழ்மட்ட(B40) வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தியச் சமூகத்தில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட வறுமை சமூகமாக உருவாக்கப்படுதல்
மார்கஸ் ஓரிலியஸ், “வறுமை அனைத்துக் குற்றச்செயல்களுக்கும் தாய்” என்றார். நோபல் பரிசு பெற்றவரான பெர்ல் எஸ். பக், “பசி எந்த ஒரு மனிதனையும் திருடனாக்கும்”, என்றார். இக்கருத்துகள், ரோமானிய பேரரசுக்குப் பிந்திய நீண்ட மனித வரலாற்றில், வறுமை என்பது மக்களைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டும் ஆவேசமான ஓர் உந்துகோல் என்று கண்டனம் செய்துள்ளதை நினைவூட்டுகின்றன.
நமது நாடு ஒரு பணக்கார நாடு. இங்கு வறுமை தானாக ஏற்படுவதில்லை. சமுதாய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில் பிழித்தெடுக்கப்படும் ஒரு சாரார் குறைந்த வருமானத்தால் எப்போதுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் சுரண்டும் பொருளாதார அமைப்புமுறையில் தொடர்ந்து இவர்கள் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்.
வறுமை தானாக உருவாக்கப்படுவதில்லை. அது அரசமைப்பு முறையால் திட்டமிடப்படுகிறது. தற்போது, நமது அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரிம1,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அவர்களுக்குக் கீழ் இயங்கும் கஜானா ஆய்வுக் கழகம் அதன் 2016 ஆண்டிற்கான அறிக்கையில் 11.7 விழுக்காடு குடும்பங்கள், மாதத்திற்கு ரிம2,000 க்கும் குறைவான வருமானம் பெறுகின்றன என்று அடையாளம் கண்டுள்ளது. ஐந்து பேர் அடங்கிய ஒரு சராசரி அளவிலான குடும்பம் இந்த வருவாயில் வாழ இயலாது. இவை வரவுக்கும் மிஞ்சிய செலவில் கடனாளியாகத்தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். இவர்களுக்குச் சிறந்த வாழ்க்கை என்பதைக் கானல்நீராகத்தான் பார்க்க இயலும்.
2015 ஆம் ஆண்டில் த எக்கனோமிக் ஜெர்னல் ஆப் மலேசியா, யூனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவின் (USM) மூத்த உறுப்பினர்கள் முனைவர் சோர் ஃபூன் டாங் மற்றும் முனைவர் செஸாலி முகமட் டாரிட் ஆகியோர் ஒரு முக்கியமான ஆய்வை நடத்தினர். அதன் நோக்கம் நல்ல பொருளாதாரத்தை உருவாக்கக் குற்றங்களைக் குறைக்க வேண்டும். அதற்குக் குற்றச்செயல்களுக்கான காரணங்களைக் கண்டு பிடித்து அவர்றை சீர் செய்ய வேண்டும் என்பதாகும்.
அவர்கள் 1970 இல் இருந்து 2013 வரையிலான குற்றப்பதிவுகளை ஓர் அனுபவ அடிப்படையிலான வழிமுறைகள் யாவை என்ற வகையில் ஆய்வை மேற்கொண்டனர். வறுமை மற்றும் வேலையில்லாமை ஆகிய இரண்டும்தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்று அந்த ஆய்வின் முடிவு திட்டவட்டமாகக் கூறிற்று.
ஏப்ரல் 23, 2016 இல், நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர், வன்செயல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட 23,186 பேர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் மற்றும் 33 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று தெரிவித்தார். இவை மக்கள் தொகை விழுக்காட்டோடு ஒப்பீடு செய்யும் போது இந்தியர்கள் மக்கள் தொகையைவிட நான்கு மடங்கு அதிகம் உள்ளனர். அந்த அளவிக்கான பாதிப்பு என்கிறது ஆய்வு.
2004 ஆம் ஆண்டில், திரங்கானு-கிளந்தான் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 204 க்கும் கூடுதலானவர்களுடன் நடத்தப்பட்ட ஒரு புறவெளி ஆய்வில் யுஐடிஎம் (UiTM) திரங்கானுவின் முனைவர் ஹசான் பாரோம், சுமார் 80 விழுக்காட்டினரின் மாதக் குடும்ப வருமானம் ரிம1,000 க்கும் குறைவானது என்றும், அதில் 40 விழுக்காட்டினர் ரிம500க்கும் குறைவான குடும்பவருமானம் பெற்றவர்களாவர் என்றும் ஆவணப்படுத்தியுள்ளார்.
குறைந்த வருமானம் குற்றம் புரியத் தூண்டுகிறது
கோலாலம்பூர் அரச மலேசியப் போலீஸ் கல்லூரியைச் சேர்ந்த அமர் சிங் சிது 1990 ஆண்டிலிருந்து 2002 ஆண்டு வரையிலான குற்றங்கள் குறித்த தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்து 2005 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான முன்னோடி ஆய்வுப் படைப்பை வெளிட்டார்.
அதன் முக்கியச் சாரம், குறைந்த வருமானம் குற்றம் புரியத் தூண்டுகிறது என்பதாகும். பணமின்மை குற்றம் புரியும் மனப்பாங்குடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவை வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வுக்கு உட்படுத்திய 49,243 குற்றம் சாற்றப்பட்ட கைதிகளில் 95 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு ரிம1,142 க்கும் குறைவான வருமானம் பெற்றனர். இது உண்மையிலேயே ஓர் ஆபத்து எச்சரிக்கைச் சமிக்கை என்கிறார் அமர் சிங்.
அமர் அவரது ஆய்வில் நகர்ப்புற வறுமை இந்தியர்களைக் குண்டர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்குத் தள்ளுகிறது. அதனால்தான் இந்தியர்களின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்திற்கு ஒரு கூறாக அமைவாதாகக் கூறுகிறார்.
தேசிய நீரோட்டதிலிருந்து ஒதுக்கப் பட்ட நிலையில், தோட்டப்புறங்களை நம்பி வாழ்ந்த மக்கள், அங்கிருந்து விரட்டப்பட்டபோது அவர்களது தோட்டப்புற வாழ்வாதரப் பின்னணி சிதைந்தது. அதனால் ஒதுக்கப்பட்டனர், அதோடு ஓரங்கட்டப்பட்டனர். அவர்களது தனிமைப்படுத்தப்பட்ட சூழல் ஓர் ஏழ்மை பண்பாட்டை உருவாக்கியது. கிராம-நகர்ப்புற இடமாற்றம் அவர்களின் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வாழ்வியலை வேரறுத்தது.
தோட்டத்தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கடுமையாக உழைத்த, ஆக்கவளமுள்ளவர்களாக விளங்கிய தொழிலாளர்கள் எவ்விதச் சமூகப் பாதுகாப்புத் திட்டமும் அற்ற வகையில் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் கைவிடப்பட்டனர்.
சில பிரிவினர்கள் இதிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்தனர் என்றாலும், மற்றவர்கள் நகர்ப்புற வறுமையில் சிக்குண்டு செயலற்றவர்களாகி விட்டனர். அரசாங்கக் கொள்கைகளால் ஓரங்கட்டப்பட்ட அவர்களுக்கு இனபேதமின்றி வறுமையை ஒழித்துக்கட்ட 1970 இல் அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையில் இடம் அளிக்கப்படவில்லை. அது இன அடிப்படையில் அமுலாக்கமானது. அதன் வழி வறுமையில் வாழும் இந்தியர்கள் நலன் பெற அரசாங்க வழங்கிய பல்கலைக்கழக ஒதுக்கீடுகள், உபகாரச்சம்பளம், பொருளாதாரத்திட்டங்கள் போன்றவை கட்சி அரசியலில் சிக்கி வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கே பயனாக அமைந்தது.
அரசாங்க ஆதரவு இன்றி தனிமை படுத்தப்பட்ட இவர்கள் வேலையின்மை, போதுமான வேலையில்லாமை மற்றும் குறைத்த சம்பள வேலைகள் போன்ற சூழலால் பாதிப்படைந்தனர். இந்த நிலைதான் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டுகோளாக அமைந்தன.
தமிழ்க்கல்வி அல்லது கல்வியே இல்லை என்ற நிலை
தமிழ்ப்பள்ளிகளை மலேசியக் கல்வி அமைவுமுறைமையின் தத்துப்பிள்ளை என்று அழைக்கும் முனைவர் டி. மாரிமுத்து 1987 இல் அவரது முன்னோடிப் படைப்பில் அதை கீழ்க்கண்டவாறு சுருங்கக் கூறுகிறார்:
“அருகிலுள்ள தமிழ்ப்பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட ஏழை தோட்டப்பாட்டாளிகளின் குழந்தைகள் அப்பள்ளிகளைத் தங்களுடைய கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான வழியாகப் பயன்படுத்த இயலவில்லை.”
“இதற்குக் குடும்பச் சூழல் மற்றும் தரக்குறைவான கல்வி புகட்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து தொடங்கும் சமுதாய-பொருளாதார மற்றும் பண்பாட்டு கூறுகள் காரணங்களாக அமைகின்றன.”
“தோல்வி தனிமைபடுத்தப்படுகிறது. தனிப்பட்டவர் பழியைச் சுமக்க வேண்டும். தொழில் உலகில் திறமை தேவைப்படாத, குறைந்தபட்சத் திறமை தேவைப்படும் அல்லது பகுதித் திறமை தேவைப்படும் பணி வகைகளை நிரப்புகின்றனர். அன்றிருந்த நிலைமையே இப்போதும்: ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் சிறந்த தோட்டத் தொழிலாளியாக உருமாற்றம் காண்கிறான்.”
பொருளாதார நிபுணர் ஆர். தில்லைநாதன் அவரது ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு ஒன்று ‘தமிழ்க் கல்வி அல்லது கல்வியே இல்லை’ என்ற எச்சரிக்கையை 1988 இல் விடுத்திருந்தார்.
அவர் தாய்மொழிக் கல்வி ஒரு நெருங்கிய தொடர்பு கருவி என்றும் அதில் மட்டுமே அவர்களால் அடிப்படை திறன்களைப் பெற இயலும் என்கிறார். மேலும் தமிழ்பள்ளிகளின் அருகாமை, பிறமொழி பள்ளிகளில் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இல்லாத சுற்றுச்சூழல், ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த தமிழ் பேசும் குழந்தைகள் அடையும் பண்பாட்டு அதிர்ச்சி போன்ற கூறுகள் தமிழ்ப்பள்ளிகள்தான் இவர்களின் ஒரே தீர்வுப் பொருள் என்றார். இந்தக் கருத்துப்பாங்கில் உண்மை இருக்கிறது.
1998-இல் 15,000 இந்தியக் குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லை
1990 லிருந்து 2000 ஆண்டு வரையிலான தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை ஒப்பிடு அளவிலும் எண்ணிக்கை அளவிலும் பெரிய சரிவு உள்ளது. 1993 ஆம் ஆண்டு மிக அதிகமான, சுமார் 104,600 குழந்தைகள், தமிழ்ப்பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டதைக் கண்டது. ஆனால், 2000 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 90,280 க்கு வீழ்ச்சி கண்டது. ஆனால். அதே காலக்கட்டத்தில் பள்ளி செல்வோரின் இந்தியக் குழந்தைகளின் கணக்கெடுப்பில் அதிகரிப்பு இருந்தும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.
1998 ஆம் ஆண்டில், பள்ளியில் பயின்ற மொத்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை, மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்ததில், 6 லிருந்து 11 வயதுக்கிடையிலான சுமார் 15,000 இந்தியக் குழந்தைகள் எவ்வகை ஆரம்பப்பள்ளிகளிலும் பதிவு செய்யப்படவில்லை. இக்குழந்தகைகள் தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர மற்றப் பிரிவினர்களைச் சார்ந்தவர்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
இதற்கான ஒரு சரியான விளக்கம் 1990 லிருந்து 2000 வரையிலான காலம் நாட்டின் பொருளாதாரம் துரிதமான மேம்பாடு கண்டது, குறிப்பாக விவசாய நிலங்களின் மேம்பாடு. இது பெருமளவிலான தோட்டத் தொழிலாளர்கள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்தலுக்கு இட்டுச் சென்றது.
இதனால் தோட்டங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பதிவு மிகக் கடுமையான வீழ்ச்சி கண்டது. இது நகர்ப்புறப் பள்ளிகளின் பதிவில் சமமான அதிகரிப்புக்கு இட்டுச் செல்லவில்லை. இதன் பொருள் நகர்புறச் சுற்றுச்சூழலில் தமிழ்ப்பள்ளிகள் கிடைக்காததால் இந்த 15,000 குழந்தைகள் பள்ளி அமைவுமுறையில் இடம் பெறவில்லை என்பதாகும்.
மாணவர்களின் தரம் என்பது சமூகப் பொருளாதாரத்தைச் சார்ந்தது
தமிழ்ப்பள்ளி தரமான மாணவர்களை உருவாக்குவதில்லை என்ற வாதம் தவறாகும். தரத்திற்கும் கற்பிக்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை என்கிறார் முனைவர் ஆர். சந்திரம்.
கற்பிக்கும் மொழியை விடக் குழந்தைகளின் சமுதாய-பொருளாதார சூழல் முக்கியமானது. 1999 இல் வெளியிடப்பட்ட அவரது தேசியப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஆகிய இரண்டிலும் பயிலும் ஏழ்மையான சமுதாய-பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குழந்தைகள் பற்றிய முகடு சார்ந்த நுண்ணாய்வு அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு அவர்களின் செயலாக்கத்தில் எவ்வித முக்கியமான வேறுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை. ஒரு சிறிய வேறுபாடு மலாய் மொழியில் மட்டும்தான் இருந்தது என்கிறார் சந்திரம்.
தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் செயலாக்கம் இதர மொழிப்பள்ளிகளின் செயலாக்கத்தை விடக் கீழ்த்தரமானது என்பதை நிருபிக்க ஏதுமில்லை. மாறாக, தற்போது, தமிழ்ப்பள்ளிகள் மேல்நோக்கிய பொதுப்போக்கைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயலாக்கங்கள் தேசியச் சராசரியுடன் ஒப்பிடக்கூடிய அளவில் மாற்றம் கண்டுள்ளன. மேலும் உயரும் என்ற நம்பிக்கையும் உருவாகி வருகிறது.
முடிவுரை
தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமூகச் சீர்கேடுகள் மற்றும் வன்முறைக்கும் சம்பந்தம் கிடையாது. இப்படித் தொடர்புபடுத்தும் வகையில் எந்தச் சான்றும் கிடையாது. ஊக அடிப்படையில் கருத்து பதிவு செய்வது கண்டனதிற்குறியதாகும்.
சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமே தற்போதுள்ள மோசமான கொள்கை கட்டமைப்புதான். நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கை தாராளவாதத்தன்மை கொண்டது. தாராளவாதத்தன்மை என்பது பெரும் நிதிவளம் படைத்த நிறுவனங்கள் நமது நாட்டில் முதலீடு செய்து மேலும் பணம் சாம்பாதிக்க வசதி செய்து கொடுப்பதாகும். அதாவது பணம் கொண்ட முதலாளிகள் தங்களின் பணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் கொள்கைகள் வகுத்து ஊக்கம் கொடுக்கும். இது ஒருவகையான ஊழல் பொருளாதாரமாகும்.
செல்வ வளம் திரட்டுதலில் விரிவடைந்து வரும் சூழல் மற்றொரு நிலையில் வறுமையை அதிகமாக்கும். எளிமையாகச் சொன்னால், பள்ளத்தை வெட்டி மேட்டைக் கட்டுவதாகும். இதில் சமத்துவம் கிடையாது.
இந்தச் சமத்துவமின்மையை அரசாங்கக் கொள்கையற்ற நிலையில் சரிப்படுத்த இயலாது. பிரதமர் நஜிப் அவர்களின் கஜனா ஆய்வுக் கழகத்தின் 2016 ஆண்டின் அறிக்கையும் இதைத்தான் காட்டுகிறது. அதாவது, அவ்வப்போது கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டிக் குறைந்த சம்பளம் மாதம் ரிம 1,000 என்றால் எல்லளவும் வறுமை சமூகத்தின் பிரச்சனை தீராது. விலைவாசி ஏற்றத்தால் மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கையில் கீழ்மட்டத்தில் வாழும் மக்கள் கடனாளியாகவே வாழ வேண்டியுள்ளது. அவர்களுக்குத் தேவை அரசியல் சார்ந்த கொள்கைத் தீர்வுகள் ஆகும்.
இந்த கட்டுரையின் தலைப்பே தேவையற்றது ! சமூக சீர் கேடுகளுக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது ! 7வயதில் 1 ம் வகுப்பிற்கு சென்று 12 ம் வயதில் 6 ம் வகுப்பில் பயிலும் தமிழ் மாணவர்கள் எந்த விதமான
குற்ற செயல்களில் ஈடு படுகிறார்கள் ! இவர்களால் சமூக சீர் கேடுகளுக்கு எந்த விதத்தில் மிரட்டல் ! ” குறைந்த வருமானம் குற்றம் புரியத் தூண்டுகிறது ” அமர் சிங் , அரசியல் வாதிகளும் ! மந்திரிகளும் ! அரசாங்க உயர் அதிகாரிகளும் ! குறைந்த வருமானத்தால் தான் ! லஞ்சம் , மோசடி ! எல்லாம் நடக்கிறதோ ! பேராசையால் ! ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தால் நடக்கும் சமுதாய சீர் கேடுகள் ! இந்திய ஏழை சமுதாயம் தான் குற்ற செயல்களில் ஈடுபடுகிறதோ ! தமிழ் பள்ளி மாணவர்கள் தான் அதன் பின்னணியோ ! பழைய பல்லவியை பாடுவதை நிறுத்தி கொண்டு சமுதாயத்திற்கு அரசியல் ரீதியாக தீர்வு காண முயலவேண்டும் ! சமுதாய பற்று இல்லாமல் பணம் பண்ணுவதற்கும் ! பதவியை அலங்கரிப்பதற்கும் தலைமை ஏற்கும் தலைவர்கள் நமது சமுதாயத்தில் இருக்கும் வரை ! நமது முன்னேற்றமும் கட்டுரை வடிவிலும் ! அறிக்கையிலும் ! தலைவர்களின் வீர வசன வடிவிலும் தான் இருக்கும் ! இந்திய சமுதாயம் குறிப்பாக தோட்ட புற தமிழனின் வாழ்க்கை நிலை சீரழிந்து போனதற்கான காரணம் ! மறைக்க முடியாத , அனைவர்க்கும் , குறிப்பாக நமது சமுதாய தலைவர்களுக்கும் தெரிந்த உண்மை ! ஆணால் இதை களைவதற்கும் ! சீர்படுத்துவதற்கும் எவனுக்கும் எண்ணம் இல்லை ! நேரம் இல்லை ! குறிப்பாக வருமானம் இல்லை !!
1. எல்லாவகையான துன்பங்களுகளுக்கும் இன்று நம்மிடையேக் பரவலாகக் காணப்படும் சமுகச் சீர்கேடுகளுக்கும் வறுமையேக் காரணியென்பது கண்டறியப்பட்டதால் நம்மிடையே காணப்படும் வறுமையைக் குறைக்க நாம் என்னச் செய்யலாமென்பதை கண்டறியவேண்டும். வறுமையைப் போல் துன்பமானது வறுமையே எனச் சொல்வது குறள்; எரிகின்ற நெருப்பினில் தூங்கலாம்; ஆனால் வறுமையென்னும் நெருப்பினில் தூங்குவரிதென்று என அதேக் குறளும் கூறுகின்றது. சிறுச் சிறுச் குற்றங்களை சின்ன வயதிலேயே செய்யத் தூண்டச் சொல்வ்தும் இந்த வறுமைதான்; இன்று நம்மில் பலர் சிறைவாசம் அனுபவிப்பதும் இந்த சிறியச் குற்றச் செயல்களால்தான். நாமெல்லோரும் ஒன்றுச் சேர்ந்து முயற்சிக் செய்தால் இந்தக் குற்றச் செயல்களையும், சிறியக் குற்றங்களையும் குறைக்கலாம். கொஞ்சம் முயற்சிச் செய்தால் நாம் சமுகத்தின் மரியாதையைக் காப்பாற்றலாம். முயற்சிகள் செய்வோம். தேவையில்லாமல் நாம் இன்றும் செய்கின்ற இந்தத் தவறுகளுக் கெல்லாம் தமிழ் பள்ளிகள் மீதும் நாம் தாய் மொழி மீதும் வீண் பழிப் போட வேண்டாம்.
முதலில் புத்ரா ஜெயா உருவான கதையையும் ! அங்கு வாழ்ந்த தோட்டப்புற தமிழனின் நிலையையும் நமது அரசியல் தலைவர்களை விளக்க சொல்லுங்கள் ! எத்துணை தமிழ் பள்ளிகள் ! எத்துணை கோயில்கள் ! நம்மவர்களின் கடைகள் ! எங்கே போயின ! அமைதியாக வாழ்ந்த தமிழன் , வீடு வாசல் இழந்து ! வேலை இழந்து ! அங்கு வாழ்ந்தவர்களுக்கு எதாவது நஷ்ட்ட ஈடு கொடுத்தார்களா ! ஐந்து ,ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்திற்கு ஒரு புரா கூண்டு கொடுக்கப்பட்டது ! மேம்பாட்டு திட்டத்தில் தோட்டங்கள் கையக படுத்த பட்டது , தமிழன் தெருவில் நிற்க போகிறான் என்பது ! தானை தலைவனுக்கு தெரிந்தே நடந்தது என்பதை இந்த சமுதாயம் அறியும் ! கட்டுரை எழுதி தமிழனை புண் படுத்துவதை நிறுத்தி விட்டு ! தமிழ் வாழ்வதற்கும் தமிழன் உறுப்படுவதற்கும் வழியை தேடுங்கள் !! சமுதாயம் அழிவதற்கு வழி தேடும் ஒரு சில படித்த மேதாவிகளை புறக்கணித்தாலே போதும் , தமிழ் வாழும் ! தமிழன் தலை நிமிருவான் .
இந்த கட்டுரை ஒரு அரிய படைப்பு, ஒரு நல்ல வழி காட்டி! இதில் ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு நன்றாக உள்ளது ! அதுவும் முனிவர்களின் ஆராய்ச்சிகளை தொகுத்து, முனைவர்கள் தரத்திற்கு எழுத பட்டிருக்கிறது. “சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமே தற்போதுள்ள மோசமான கொள்கை கட்டமைப்புதான்.” என்ற முடிவுரையை அரசாங்கம் நன்கு ஆராய வேண்டும். இக்கட்டுரையில் உள்ள வாசகங்கள் போதுமானைவை. இந்த கட்டுரையை நிரந்தர கட்டுரையாக செம்பருத்தியில் நிலை நாட்ட வேண்டும் என்பது என் கருத்து. உண்மையிலேயே வாழ்த்துக்கள் !
ஏன் தமிழ் பள்ளிக்கூடங்களில் குண்டர் கும்பல் என்று ஒரு பாடம் உள்ளதா? அல்லது நன்னெறி பாடத்தில் ஒரு பகுதி குண்டர் கும்பலின் வீர தீரம் சாதனை எழுதியுள்ளதா? அடி முட்டாள்கள்தான் தமிழ் பள்ளிகளின் தலையில் போடுவார்கள் அல்லது தமிழ் சோறு போடுமா என்றும் பேசுவார்கள்.
இப்படி தமிழ் பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியின் மேல் குறை சொல்லுபவர்கள் . உண்மையில் சோம்பேறிகள் கேவல ஜென்மங்கள்
ஒரு உண்மை தெரிந்துகொள்ள வேண்டும் .தமிழ் மொழி என்பது பிட்சை பாத்திரம் அல்ல. தமிழன் மட்டும்தான் இந்த நாட்டில் பிச்சைக்காரன் .
தமிழ் என்பது அட்சயபாத்திரம் . புலம்பெயர்ந்த தமிழர்களில் மலேஷியா தமிழர்கள் தான் கேவலமாக வாழ்கிறார்கள் . குண்டர் குமபல், குடிகாரன் மற்றும் ஈன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறான்
நாம் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் குண்டர் கும்பல் உருவாவதற்கு தமிழ் பள்ளி காரணம் கிடையாது நாம் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டடிய ஒன்று நம் பிள்ளைகள் குடிகாரர்களாகவோ அல்ல திருடர்களாகவோ மாறுவதற்கு பெற்றோர்கள் தான் காரணம் பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவர்களை தட்டி கேட்பது இல்லை ஐந்தில் வளையாதது ஜபத்தில் வளையுமா ?சிறு வயதில் தண்டிக்க விட்டால் பெரியவர் ஆகியபின் தண்டிக்க முடியுமா ?ஆகையால் பெற்றோர்கள் சிறு வயதிலே பிள்ளைகள் செய்யும் தவர்களை கண்டிக்க வேண்டும் .ஆகையால் பள்ளியை குறை கூறுவதை நிறுத்துங்கள் .எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கயில் நல்ல குழந்தைகள் தான் அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே .
முடிந்த வரை நாம் இந்தியர்கள் வசிக்கும் இடங்களில் தமிழ் பள்ளி உருவாக வேண்டும். மலேஷியா இந்திய கங்கிரட்ஸ் தமிழர்களுக்காக போராட வேண்டும் .
மா இ கா தமிழர்களை அடமானம் வைத்து, 30 வருடம் ஆகிறது. அந்த தமிழின துரோகியின் பெயர் தானை தலைவர். அவனிடம் ஜால்ரா வேலை பார்த்து, இன்னமும் என்னென்னவோ செய்து, தங்களை வளர்த்து கொண்டவர்கள்தான் அங்கே உள்ளனர். எனவே அந்த மானங்கெடட பொழப்பில் இந்தியர்களின் எதிர்காலத்தை அடகு வைக்காதீர்கள்….. மா இ கா காரர்கள் நிற்கும் ஒவ்வொரு தொகுதியிலும், இந்திய பொதுமக்களும் இறங்கி தேர்தல் வேலை செய்து, இந்திய மக்களுக்கு புரிய வைத்து, மா இ கா வை சொற்ப எண்ணிக்கையில் தோற்கடித்து, முகத்தில் கரி பூச வேண்டும். இல்லையேல் வரும் காலத்தில் இந்தியர்கள், சிறுபான்மையில் சிறுபான்மையாக ஆக்க படுவார்கள்.
அந்த சாதனை தலைவர்தான் தான் வாழ குண்டர் கும்பலையும் ஜால்ராக்களையும் உருவாக்கி இருக்கிறானே . இப்பொழுதும் அவனோட குண்டர் கும்பல்தான் ம இ க . வேற என்ன புதுசா இவனுங்க தமிழ் சமுதாயாதை மாற்ற போறானுங்க .
இப்பொழுதே இன்னொரு இளம் தலைமுறை குடிகார குண்டர் கும்பல் உருவாகி விட்டதே . தாராளமாய் பார்க்கலாம் (கிள்ளான் , தலைநகரம், பத்து கேவ்ஸ், பினாங்கு, ஜோஹோர், ஈப்போ , இப்படி ஏராளம் இடத்தில பார்க்கிறேன்) இவர்களின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? பிள்ளைகளுக்கு பயந்து கைக்கட்டி வாழ்கிறார்களோ?
அதென்ன மஇக இந்திய சமுகத்தை அடகு வைத்து 30 வருடங்கள் ஆகிவிட்டதென்று சொல்கின்றீர்கள். முன்னாள் மஇக தலைவர் டான்ஸ்ரீ மாணிக்க அவர்கள் இறந்து 37 வருடங்களுக்கு மேலாகிவிட்டதே. என்று அவர் நம்மை விட்டுப் போனாரோ அன்றே நம்மைப் பீடை பிடித்துவிட்டது. இன்றுவரை அந்தப் பீடை இன்னும் நம்மை விட்டு இன்னும் நீங்கவில்லை. இதுதான் உண்மை.
அது ஏன் 30 வருடங்கள் ஆகிவிட்டதென்று சொல்கின்றீர்கள் என்று கேக்கிறார் PalanisamyT அவர்கள் ! அப்பொழுதுதான் பொருளாதார கொள்கை உருமாற்றம் ஏற்பட்ட்து. அதை மறைத்து , தமிழர்களை முடடாள் ஆக்கியது இந்த மா இ கா வும், அதனை வழிநடத்திய தானை தலைவரும் அவர் தவ புதல்வரும்….
ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரின் கடந்த கால தலைமைத்துவத்தைக் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாக்குவதும் தவறு. அன்று ‘நம்மவர்’ சுததிரப்பிரகடனத்தில் ‘சாட்சியாக’ மட்டும் கையெழுத்துப் போட்டாரோ அன்றே நம் தலையெழுத்தும் மாற்றப்பட சாசனம் தயாராகிவிட்டது. இப்போது கூவியும் பலனில்லை. கூக்குரலிட்டும் பலனில்லை.
நாம் இழந்தவரை போதும். இன்னும் இருப்பதையும் இழக்காதிருக்க என்ன செய்ய வேண்டுமோ அதுகுறித்து சிந்தித்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.
மா இ கா வால் ஏமாற்ற பட்ட்து ஒன்றல்ல இரண்டல்ல; ஒட்டு மொத்த 200 ஆண்டுகளின் இந்தியர்களின் இந்நாட்டு வரலாறு. இப்படி எல்லாவற்றையும் மன்னிப்பதிலும் மறப்பதிலும் திறமையை காட்டி காட்டி, இருப்பதை காபாட்ரி கொள்வோம் என்று சுயநலமாக யோசித்து, கடைசியில் ஒன்றுமே இல்லாமல் ஆனதுதான் மிச்சம். நினைவில் கொள்ளுங்கள், மலேசியர்கள் 85 % மக்கள் இன்னமும், தங்களின் வீடு கடனை கட்டி முடிக்க வில்லை …. எனவே ஒரு மக்கி போன காறும், கடன் கட்டி முடிக்காத வீடும் சொத்தாகி விடாது …
மிஸ்டர் ஜோக்கர் நீங்கள் சொல்வது எல்லாருக்கும் தெரிய வேண்டிய உண்மை. எனக்கு அன்றே தெரியும். என்ன செய்வது தூர நோக்கு இல்லா நம் தலைகளை என்ன என்று கூறுவது? நான் பல முறை கூறி இருக்கிறேன்– துங்குவை நம்பி நம்மை நட்டாற்றில் விட்ட மாபெரும் தலை. அவர்க்கு பின் வந்த தலைகளை பற்றி என்ன கூற முடியும்? நம்மையும் நம் உரிமைகளையும் தங்களின் வங்கி கணக்குக்கு தாரை வார்த்து விட்டனர். இன்று நாம் ஓரங்கட்டப்பட்ட சமூகம் – கை ஏந்தும் சமூகம்- இதை இன்றும் உணரமுடியாத சமூகம்.