மாண்புமிகு மலேசிய பிரதமர் அவர்களுக்கு,
நாட்டின் இந்திய இனத்தினருக்கு உதவுவதற்காக பல மில்லியன் ரிங்கிட்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளீர்கள் நன்றி.
இந்த அறிவிப்புக்கும் எதிர்வரும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதற்கும் நன்றி.
இந்த மாதிரி அறிவிப்புக்களை நாங்கள் கடந்த 60-ஆண்டுகளாக படித்து, பார்த்து கண்டு களித்து வருவதால் உங்களின் இந்த அறிவுவிப்பு எங்களை மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தவில்லை.
இந்தப் பெருந்திட்டத்தை நாடகம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள் நன்றி. காரணம் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் ‘அவருக்கு’ அளித்த அந்த முன்வரைவுத் திட்டமும் தேர்தலுக்குப் பின் நீங்கள் அவருக்குத் தந்த ‘பின்’விரைவும் இன்னும் எங்கள் நினைவை விட்டு அகலவில்லை.
11-ஆவது மலேசியத் திட்டத்தை மே 2015 இல் தாக்கல் செய்தபோது அளித்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியுள்ளீர்கள். அதாவது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு வருடம் என்றால் அந்த திட்டங்களை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள், எத்தனை தலைமைத்துவம் தேவைப்படும்? இதனிடையே தலைமைத்துவம் மாறிவிட்டால் மீண்டும் ஒரு பெருந்திட்ட அறிவிப்பு வரும் அப்படித்தானே? இப்படித்தானே 60- ஆண்டுகள் போய்விட்டன?
இந்த அறிவிப்பை நீங்கள் செய்தபோது அங்கு எழுந்தது அங்கு குழுமியிருந்த 2000 பேரின் சிரிப்பு அலைகள் அல்ல. மாறாக நக்கல் சிரிப்பு என்பதும் அந்த நக்கல் ஏன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா என்ன?
இப்பெருந்திட்டத்தில்,
1. ரிம20 மில்லியன் உயர்க்கல்வி உதவிக்கும்,
2. ரிம350 மில்லியன் தொழில்முனைவர்கள் கடன் பெறுவதற்கான ஒரு சுழல் நிதியை அமைப்பதற்கும்,
3. ரிம500 மில்லியன் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட்டின் கீழ் வைத்து இந்தியச் சமூகத்தின் கீழ்மட்ட 40 விழுக்காடு வருமானம் பெறுபவர்களுக்கு (B40) உதவுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த 10-ஆண்டு பெருந்திட்டம் ஓர் அரசியல் வாய்ப்பந்தல் என்றோ இது வெட்டிப் பேச்சு என்றோ நாங்கள் சொல்லவே இல்லை. நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
1. பிரதமரே உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய திட்டங்களுக்கு விண்ணப்பிக்க நாங்கள் போகும்போது எங்களுக்கு கிடைக்கும் மரியாதை…அப்பப்பா…விண்ணப்பித்து விட்டு அது கிடைக்குமா கிடைக்காதா என்று அறிய நாங்கள் படும்பாடு இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
2. இதுவரை அறிவிக்கப்பட்ட கடன்நிதி உதவிநிதி போன்றவை எத்தனை இந்தியர்களுக்கு போய்ச்சேர்ந்துள்ளன என்பதும் மீதம் உள்ள தொகை எங்கே போனது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்து கொள்ள முயற்சியாவது செய்தது உண்டா?
3. இந்தப் பெருந்திட்டத்தை தயாரிக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது, ஏனென்றால் இதற்கான கோட்பாடுகள், புள்ளிவிபரங்கள், எண்கள் மற்றும் பரிந்துரைகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்காக மாறாக அடிமட்ட மக்களிடமிருந்து வர வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. அப்படியானால் யார் அந்த அடிமட்ட மக்கள்? அப்படி நீங்கள் சந்தித்துப் பேசிய அந்த அடிமட்ட மக்கள் பெயர்கள் ஒன்று இரண்டையாவது சொல்லுங்களேன்.
4. “மலேசியாவின் பிறந்த 25,000 பேருக்கு குடியுரிமை இல்லை” இது இப்போதுதான் உங்களுக்குத் தெரிய வந்ததா?
உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 7 விழுக்காடா? இதை சம்மந்தப்பட்ட கல்வி நிலையங்களும் அதிகாரிகளும் ஏற்றுக்கொள்வார்களா?
அரசு பல்கலைக்கழகங்களிலும் பொதுச் சேவையிலும் இந்தியர்களின் பங்கு போதவில்லை என்று நாங்கள் காலம் காலமாக ஒப்பாரி வைப்பது உங்களுக்குக் கேட்கவே இல்லையா?
அரசு பொதுச் சேவையில் இந்தியர்களின் பங்கேற்றலை 2026 அளவில் 7 விழுக்காட்டிற்கு உயர்த்தும் இலக்கை நீங்கள் அடையும்போது எங்களின் மக்கள் தொகை 5% ஆகியிருக்குமே? அது தெரியாதா உங்களுக்கு? அப்போது உங்கள் அரசும் அதிகாரிகளும் என்ன சொல்வார்கள். உங்கள் மக்கள் தொகைக்கு ஏற்பத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்வார்களா மாட்டார்களா? மாட்டார்கள் என்று நீங்கள் சொல்ல வந்தால் ஒரே ஒரு வேண்டுகோள். இந்தியர்களின் மக்கள் தொகையைப் பார்க்காமல் அவர்களுக்கு உரிய 10 விழிக்காட்டு அரசாங்க பொது பல்கலைக்கழகங்களிம் உயர்கல்வி வாய்ப்பு, அரசாங்க பொதுச் சேவைத் துறையில் (தமிழ்ப்பள்ளி நீங்கலாக) 10% விழுக்காடு என்று இன்றே நீங்கள் அறிவிக்கவும் உடனே அமல்படுத்தவும் தயாரா?
இந்த பெருந்திட்டம் ஓரங்கட்டப்பட்ட இந்திய சமுதாயத்துக்கா? அல்லது புறந்தள்ளப்பட்ட தமிழர்களுக்கா?
இந்திய சமுதாயத்துக்கு என்றால் உங்கள் கண்ணில் படுவது ம.இ.கா மட்டும் தானா? இந்த நாட்டு இந்தியர்கள் எல்லோரும் ம.இ.கா வின் அடிமைகள் என்று எண்ணிவிட்டீர்களா? இந்திய சமுதாயத்தை கூறு போட்டதும், சுரண்டியதும் போதாதென்று இப்போது இந்த பெருந்திட்டத்தை அவர்களிடம் ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம். இந்த நாட்டு இந்தியர்களில் நியாயமான ஓர் இந்தியன் கூட உங்கள் கண்ணில் படவில்லையா?
திரு சுப்ரா அவர்களுக்கு,
1. இந்த பெருந்திட்ட நகலை பெறுவதற்கு நீங்களும் ம.இ.கா வும் தகுதியானவர்கள் தானா என்று கொஞ்சமாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? சிந்தித்திருந்தால் உங்கள் மனசாட்சி இடம் கொடுத்திருக்காதே?
2. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் ‘அவருக்கு’ தந்தது தானே இது? தேர்தல் முடிந்தபின் அவருக்குத் தந்ததையே உங்களுக்கும் தரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்
3. வரும் பொதுத் தேர்தலுக்காக ம.இ.கா சார்பாக நீங்களும் உங்கள் பரிவாரங்களும் வாக்கு சேகரிக்கும் போது கடந்த 4-ஆண்டுகளில் (4 ஆண்டுகளில் மட்டும் – அதற்கு முன்பு ‘செய்தது’ வேண்டாம்) இந்திய சமுதாயத்துக்குப் பெற்றுத் தந்தது என்ன. சாதித்தது என்ன? பொது பல்கலைக்கழகங்களில் எத்தனை பேருக்கு இடம் வாங்கிக் கொடுத்தீர்கள். பொதுச் சேவைத் துறையில் எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்தீர்கள். எத்தனை இந்தியகளின் பிறப்புப் பத்திரப் பிரச்சினை குடியுரிமைப் பிரச்சினை போன்றவற்றை தீர்த்து வைத்தீர்கள் என்பதை பட்டியல் இட முடியுமா? அப்படி பட்டியல் இட முடியாத பட்சத்தில் இந்தியர்களிடம் போய் ஓட்டு கேட்காதீர்கள்.
இந்திய சமுதாயத்துக்கு ஒரு வேண்டுகோள்.
1. தயவு செய்து இப்போதாவது விழித்துக்கொள். இப்போது விழிக்கவில்லை என்றால் இனி எப்போதுமே நீ விழித்துக்கொள்ளப் போவதில்லை. அப்படியே காலம் கடந்து நீ விழித்துக் கொள்ள நேர்ந்தாலும் உடுத்தும் உடையைக்கூட இழந்து நீ நிர்வணமாகியிருப்பாய். இனம், மொழி, கலாச்சாரம், பலகாரம் இப்படி எல்லாவற்றையும் இழந்து இனி இடுப்பில் இருக்கும் உடையைக் கூட இழக்கப்போகிறாயா, சொல்?
இறுதியாக,
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு டின் பீர் இவற்றுக்காக நீ விலை போனால் நட்டம் உனக்கு மட்டும் அல்ல. நீ சார்ந்திருக்கும் இந்திய சமுதாயத்துக்கும் தான் என்பதை மறந்து விடாதே…. அடுத்து வரும் 5 வருடங்கள் நமக்கு கருப்பு வருடங்கள் என்பதை கனவில் கூட மறக்காதே..
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெப்பொருள் காண்பது அறிவு.
வரும் 14-வது பொதுத் தேர்தலுக்காகவே ஐயன் வள்ளுவன் உனக்காகவே சொல்லிவிட்டுப் போன குறள்.
சிறு குறிப்பு:
கூஜா தூக்கிகள் யாரும் இதற்கு மறுமொழி இட வேண்டாம்.
–சாக்ரடீசு
சாக்ரடீசு அவர்களுக்கு ! உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் அதில் ஒரு குறைபாடு தெரிகிறது ! இந்திய சமுதாயத்திர்கு நீங்கள் விடுத்த வேண்டுகோளில் இன்று சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் எதிர்க்கட்சி தலைவர்களை கொஞ்சமும் தொட்டுகொள்ளவில்லை. பரவாயில்லை, நீங்கள் மறந்துவிட்டதை நான் தொடருகிறேன் !! முன்பு மகாதீரின் இரும்பு கரம் கொண்டு அடக்கி ஆளப்பட்ட எதிர்க்கட்சிகள் யாவும் 2007 ஆம் ஆண்டு நடந்த ஹிண்ட்ராப் பேரணியின் தாக்கத்தை பயன்படுத்தி, நாட்டின் 13 ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மற்றும் பினாங்கிலும் மக்கள் கூட்டணி அரசாங்கம் அமைத்தது !!! நல்ல வாயன் சம்பாதித்ததை நாற்ற வாயன் தின்ன கதையாக ஹிண்ட்ராப் அமைப்புக்கு சேரவேண்டிய எல்லா புகழையும் எதிர்க்கட்சிகள் மிக சாமார்த்தியமாக திருடி இன்று அரசியல் பிழைப்பு நடத்திகொண்டிருக்கிறது. சிலாங்கூரில் ஆட்சி செய்துவரும் மக்கள் கூட்டணி அந்த மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? என்றால் நிச்சயமாக இல்லை என்ற பதில்தான் மிஞ்சும். சிறிது வடக்கே சென்று பார்த்தோமானால், அங்கே துணை முதல்வர் பதவியை அலங்கரிக்கும் திரு ராமசாமி அவர்கள் முடிந்த தைப்பூச திருவிழாவில் தங்கரதத்தை தேரோட்டமாக விட்ட விளம்பரத்தோடு செம்ம திருப்தியில் லயித்து விட்டார் . பினாங்கு இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு உடனடியாக தேவைப்படும் திட்டங்களில் தங்கரதம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது ! ஒரு வேலை இந்த தங்கரத வருகையால் ஒட்டு மொத்த பினாங்கு வாழ் இந்தியர்கள் யாவரும் மாயாஜால கதைகளில் வருவதுபோல் ஒரு நொடிப்பொழுதில் செல்வந்தர்களாகிவிட்டார்கள் என்ற என்னமோ துணை முதல்வருக்கு !? கரையான் புற்றுஎடுக்க கருநாகம் புகுந்த கதையாக மகாதீர் இன்று புதுக்கட்சி ஒன்று ஆரம்பித்து லிம் கிட் சியாங் அவர்களோடு கலந்துவிட்டார் , இந்த இரண்டு வயதான அரசியல்வாதிகளின் குறிக்கோள் ஒன்றுதான் , இவர்களின் மகன்கள் இந்த நாட்டை ஆளவேண்டும் என்ற சுயநலமே அன்றி வேறொன்றும் இல்லை. ஆரம்பத்தில் ஹிண்ட்ராப் புகழ் வேதமூர்த்தி நாஜிப்போடு இணக்கமாக போனதால் பலரின் விமர்சனத்துக்கு ஆளானாலும் அவரின் அந்த முடிவு இந்திய சமுதாயத்தின் நலன் கருதி எடுத்த விவேகமான முடிவு என்று அரசியல் நிபுணர்களால் பாராட்டப்பட்டார். அவரும் அவருடைய பங்குக்காக ஒரு சில நல்ல திட்டங்களை வகுத்து நஜிப்பின் பார்வைக்கு கொண்டுபோனார். உடனே வெற்றிக்கனியை பறிப்பதற்கு அரசியல் கலம் ஒரு விளையாட்டு தளம் அல்ல என்பதை மறந்த அவர் அவசரபோக்கினால் கொடுத்த பதவிகளில் இருந்து விலகி நம் சமுதாயத்துக்கு மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றத்தை வெகுமதியாக கொடுத்தார் ! ஐயா சாக்ரடிசு, ஐந்து வருடம் கழித்து பெரிய மரமாகப்போகிறது என்றால் இன்று இரண்டு இளையாவது இருக்க வேண்டாமா நமது எதிர்க்கட்சிகளுக்கு ? இல்லையே !! இப்போது உங்கள் கருத்து முழுமை அடைந்து விட்டது என்று நம்புகிறேன் ஹீ…..ஹீ ……ஹீ .
தாப்பா பாலாஜி , உமது கருத்து நகைப்புக்கு உரியது. இதுதான் மா இ கா வை நம்பும் இந்தியர்களின் நிலை. அல்ப சுகத்திற்கு ஆசை பட்டு எதிர்காலத்தை இழக்கும் பலவீனமான இனமாக இருப்பது அறிவீனமாகும்.
மா இ கா வின் தில்லு முள்ளு ஒன்றும் லேசு பட்டதில்லை…. இவர்களின் குணத்தை புரிந்து கொண்ட பிரதமர்கள் …. பணத்தை நேரடியாக ஸ்ரீ முருகன் நிலையத்திற்கும் …. பேராசிரியர் ராஜேந்திரன் கீழ் வேலை செய்யும் SEDIC க்கும் தந்து விட்டார்கள் …. எனவே மா இ கா ஒப்புக்கு சப்பாணியாக திரிகிறது …. அவ்வளவே …. மதமாற்று விவகாரங்களிலும் , ஏழ்மை துடைத்தொழிப்பு விஷயத்திலும் , மதத்தை காப்பாற்றும் விஷயத்திலும் , ஏன் இவ்வளவு ? ஆணி புடுங்கும் விஷயத்தில் கூட , ஒரு ஆணியையும் புடுங்க முடிய வில்லை …
mannan அவர்களே ! அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம், கடந்த காலங்களில் ம.இ.கா தலைவர்களால் நான் நொந்து நூலான சம்பவத்தை சொல்கிறேன் . 1990 களில் ஒரு நாள் சாமிவேலு திடிரென்று சிறுதொழில் கடனுதவித்திட்டம் ஒன்றை அறிவித்தார் ! ஆதாயம் இல்லாமல் அவர் ஆத்தை கட்டி இறைக்க மாட்டார் என்ற ரகசியம் தெரியாத நானும் என் நண்பர்களும் அதுகுறித்து அவரை பலமுறை சந்தித்து கடைசியாக அவர் எங்கள் நெற்றியில் போட்ட நாமம் இன்னும் எங்கள் நினைவை விட்டு அகலவில்லை !! என் போதாதகாலம், அந்த நாமம் அழிவதற்கு முன்பே ஒரு நாமம் அரவாரியம் நடத்தும் ம.இ.கா தலைவரை சந்திக்க , நான் படும் அவமானம் போதாது என்று எண்ணி மகனையும் கையோடு அழைத்து சென்றேன். அந்த மகான் என் கண் முன்னே நின்றுருக்க அவரின் அழகிய PA டத்தோ இன்று அலுவலகம் வரமாட்டார் என்று சொன்ன அந்தப்பொய்யை கேட்டு நானும் என் மகனும் ” சிலர் சிரிப்பார் சிலர் அழுவார், நாங்கள் இருவரும் சிரித்து கொண்டே அழுதோம் !!! கதை இப்படி இருக்க நான் ஏன் எதிர்கட்சிகளை சாடினேன் என்பதை மன்னன் அவர்கள் உங்கள் நெஞ்சை தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், உண்மை தெரியவரும் !!!!
நன்று நண்பர் பாலாஜி அவர்களே. வரும் தேர்தலில் ஒரு புதிய அத்தியாயத்தை மலேசியர்கள் உருவாக்குவார்கள் என்று நம்புவோமாக. இல்லையேல் நம் நாட்டு மக்களை பற்றி பெருமை பட ஒன்றுமில்லை.