வேற்றுமை போக்கி ஒற்றுமை ஓங்கச் செய்ய போஆம் தோன்றியுள்ளது

இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தினரின் மேலாதிக்க உணர்வால் நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் இனவாதமும் மதவாதமும் பெரும்பாலும் ஆரவாரமின்றி கொதித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை தூண்டி விடுபவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அப்படி ஏதும் இல்லை என்பதைக் காட்டிக்கொள்வதற்காக இந்நாட்டின் வரலாறு கண்டிராத மிகப் பெரிய 1மலேசியா நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

உண்மையில் உருவாக்கம் கண்டிருப்பது 2மலேசியா – மலாய்க்காரர் மற்றும் மலாய்க்காரர் அல்லாதார். இந்த 2 மலேசியாவில் காதலிருந்து கட்டையில் போகின்ற வரையில், சாப்பாட்டிலிருந்து சாமி கும்பிடுதல் வரையில், பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரையில், வேலை வாய்ப்பிலிருது ஊழல் சாதனை வரையில், இன்னும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றிலிருந்து இன்னொன்று வரையில் இன மதவாத ஆதிக்கம் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

“நீங்கள் வேறு, நாங்கள் வேறு”

இனவாதம் மக்களை மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று பிரித்து பின்கூறப்பட்டுள்ள இரு இனத்திரையும் சிறுபான்மையோர் என்று முத்திரை குத்தி உரிமைகளை மறுக்கிறது. மதவாதம் அதற்கும் மேலே சென்று ஓரே இனத்தினரைக்கூட மதத்தால் “நீங்கள் வேறு, நாங்கள் வேறு” என்று வேறுபடுத்துகிறது.

கடந்த 50 க்கு மேற்பட்ட ஆண்டுகளில் மலேசியா இன மதவாத வேறுபாட்டை வளர்ப்பதில் மிகச் சிறந்த நாடாகியுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

இந்த இன மதவாத வேறுபாட்டால் இதுவரையில் உருவாகியுள்ள மனக் கசப்பையும் உள்ளூர கொதித்துக் கொண்டிருக்கும் வெறுப்புணர்வையும் தொடர்ந்து வளரவிடக்கூடாது, என்ற நல்லெண்ணம் கொண்ட மலேசியர்கள், சிவில் சமூக குழுக்கள் “பிணக்கத்திலிருந்து இணக்கத்திற்கு” இந்நாட்டு மக்களை இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் செயல்திட்ட கூட்டமைப்பு என்ற ஓர் அரசு சார்பற்ற அமைப்பை இன்று (நவம்பர் 13) கோலாலம்பூரில் தோற்று வித்தனர்.

இன்று கோலாலம்பூரில் கேஎல்சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் தொடங்கப்பட்ட மக்கள் செயல்திட்ட கூட்டமைப்பில் (Plan of Action 4 Malaysia (PoAM). Gabungan Bertindak Malaysia (GBM)) தற்போது 21 சிவில் சமூக அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் Kuala Lumpurn and Selangor Chinese Assembly Hall, Aliran, Tamil Foundation, Pertubuhan Jamaah, Majlis Perundingan Malaysia Agama Buddha, Kristian, Hindu, Sikh dan Tao ஆகிய அமைப்புகளும் அடங்கும்.

போஆம்மின் குறிக்கோள்

போஆம் அமைப்பின் கூட்டுத் தலைவர்களாக கேஎல்எஸ்சிஎஎச்சின் தலைவர் டான் இயு சிங் மற்றும் ஜிம்மின் தலைவர் ஸைட் கமாருடினும் இருக்கின்றனர்.

சமூகங்களுக்கிடையினான பிணக்குகளைத் தீர்ப்பதுதான் இந்த அமைப்பின் இறுதிக் குறிக்கோள் என்றாலும், இந்த அமைப்பு பல்லின மக்களையும் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அது எந்த அமைப்புடனும், மலாய் உரிமைக் குழு பெர்காசாவுடனும், பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கள் மேற்கொள்ளும் என்றார்.

போஆம் ஒரு தனித்தன்மை வாய்ந்த, சட்ட அடிப்படையிலான ஓர் அமைப்பு. இது குறிப்பாக எந்த ஒரு பிரச்னையைத் தற்காப்பதற்காகவே எதிர்த்துப் போராடுவதற்காகவோ திட்டமிடப்பட்டதல்ல என்று கூறிய இஸ்லாமிய குழுவான ஜிம்மின் தலைவர் ஸைட் கமாருடின், ஆனால் அது இணக்கத்தை வளர்ப்பதற்கு நேருக்கு நேர் எதிர்த்து நிற்காமல் ஆலோசனை, மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் இதர குழுக்களுடனும் அதிகாரத்தினருடனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவதாகும் என்றார்.

இவற்றுக்குத் தேவைப்படும் கொள்கை ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இத்தொடக்கக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சிலர் மலாய் உரிமைகள் போன்ற அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதை ஆதரித்தனர்.

“பெர்காசாவுக்கும் அதன் தலைவர் இப்ராகிம் அலிக்கும் இந்த உலகத்தில் இடமில்லை”, என்று கோமாஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோகன் டான் கூறினார்.இக்கூட்டமைப்பின் உறுப்பினர்களில் கோமாஸ்சும் ஒன்றாகும்.

“இனப் பதற்றத்தை ஏற்படுத்துவது போதுமான பலன் அளிக்காததால், அவர்கள் இப்போது மதப் பதற்றத்தை உருவாக்குகின்றனர்”, என்று தேசிய இண்டர்லோக் நடவடிக்கை குழு (நியட்) தலைவர் தஸ்லிம் முகமட் இப்ராகிம் கூறினார். நியட்டும் இக்கூட்டமைப்பின் ஓர் உறுப்பினராகும்.

போஆம் பட்டயத்தின் கூறுகள்

போஆம்மின் 15 கூறுகள் அடங்கியப் பட்டயத்தை பல்வேறு இனத்தையும் மதத்தையும் சார்ந்த 39 கல்விமான்கள் உருவாக்கினர்.

அக்கூறுகள்: நல்ல அரசு, அரசியல், நீதித்துறை, கூட்டரசு, உள்ளாட்சி, பொதுச்சேவை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், கல்வி, பெண்ணுரிமைகள், பூர்வீகக்குடி மக்களின் உரிமைகள், பண்பாடு, சமயம், ஊடகம், தேசிய ஒருமைப்பாடு.

இவற்றுடன் இன்னும் இரு கூறுகளும் – தொழிலாளர் மற்றும் இளைஞர் – பட்டயத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

போஆம் பட்டயத்திற்கு ஆதரவு தெரிவித்த அனாக் மூடா சரவாக்கின் ஒருங்கிணைப்பாளர் எவலின் தீனா தாவா, “இனப் பதற்றம் நம்மைப் பிளவுபடுத்தி விட்டது”, என்று கூறினார்.

பிஎஸ்சியின் பரிந்துரைகளுக்கு முன்னதாக தேர்தல்!

போஆம்மின் பட்டயம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், Talk Shows: From Discord To Harmony” என்ற உரையாடல் நிகழ்ச்சியில் அரசியல், சமயம், பொருளாதார சமநிலை இன்மை, கல்வி, மற்றும் வட்டார ஏற்றத்தாழ்வு – சபா மற்றும் சரவாக் ஆகியவை பற்றிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த உரையாடலில் அம்பிகா சீனிவாசன், பகாமி ரெஸ்ஸா, ஹெலன் எம்பாயிங், தஸ்லிம் முகமட் இப்ராகிம் மற்றும் தோ கின் வூன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாணவர் முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான ஹிசாமுடின் ராயிஸ் இந்த உரையாடல் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

பொருளாதார சமநிலை என்பது குறித்து பேசிய தோ கின் வூன் பல்வேறு தகவல்களை வழங்கியதுடன் மலேசியாவில் தனியார் மயம் பரவி வருகிறதென்றும் அது ஒரு சிலரின் வளப்பத்திற்கு வழிகோலினாலும் மற்றவர்கள் சுரண்டப்படுகின்றனர் என்றார்.

இந்த உரையாடலில் ஒவ்வொரு தலைப்பிலும் தமது கருத்தைத் தெரிவித்த அம்பிகா, பூர்வீகக்குடி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்றும் அவர்களுடைய நிலங்களை கைப்பற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நாட்டின் கல்வி முறை அரசியலாக்கப்பட்டு விட்டதாகும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் தலைமைத்துவம் வழங்கத் தவறி விட்டனர். அதை நாம் செய்ய வேண்டும் என்றாரவர்.

சமயங்கள் குறித்த விவகாரத்தில் அரசாங்கம் திடமாக எதனையும் செய்யவில்லை. சமயவாதிகள் அரசாங்கம் கடத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் அவற்றின் கடமையைத் துறந்து விட்டன என்று தெரிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தம் குறித்த விசாரணை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) முன் பெர்சே 2.0 அணியினர் சனிக்கிழமை வழங்கிய கருத்துகள் பற்றி விளக்க அளித்த அம்பிகா, பிஎஸ்சி அதன் விசாரணையை முடித்து அதன் பரிந்துரைகளை தாக்கல் செய்வதற்கு முன்பாக  பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறினார்.

இறுதியாக தமது விருப்பம் ஒன்றை அம்பிகா வெளியிட்டார்: “ஒரு பெண் நாட்டின் பிரதமர் ஆக வேண்டும்.”

சுமார் 200 பேர் கலந்து கொண்ட போஆம் தொடக்க நிகழ்ச்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடம் மாலை மணி 5.00 வரையில் நடைபெற்றது.