கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான ‘டிச் தி லேபிள்‘ அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக மூன்றில் ஒருவர் தெரிவித்துள்ளனர். தோற்றத்தை கொண்டு மற்றவர்களை கேலி,கிண்டல் செய்வது சமூக வலைத்தளங்களில் முக்கிய அம்சமாக உள்ளது.
தற்போதைய குழந்தைகள் வெறுப்புணர்வு கலாசாரத்தில் வாழ்வதாக நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் விடயங்கள் என்ன?
இந்த ஆய்வில் பங்கு கொண்ட 12 முதல் 20 வயதுக்குட்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் , இணையம் வழியாக அடுத்தவரை துன்புறுத்தும் பழக்கம் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மற்றவர்களை சமூக வலைத்தளங்கள் வழியாக கேலி, கிண்டல் செய்வதாக 70 சதவீத இளைஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 17 சதவீதம் பேர் தாங்கள் இணையத்தில் கேலி, கிண்டல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட பாதி பேர் (47%) தங்களுடைய வாழ்க்கையின் கெட்ட விடயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிப்பதில்லை மற்றும் பலர் தங்களுடைய வாழ்க்கை குறித்த பொய்யான தகவல்களையே தெரிவிக்கின்றனர்.
‘சமூக வலைத்தளங்களில் தங்களுடைய தோற்றம் மற்றும் குண நலன்கள் குறித்து விவாதிக்கும் போக்கு தற்போது இருக்கிறது. ஆனால் நிஜத்தில் அவர்கள் உண்மையை வெளியிடத் தயாராக இல்லை.’ என டிச் த லேபிள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி லியாம் ஹாக்கெட் தெரிவிக்கிறார்.
அவமானப்படுத்தும் வார்த்தைகளுடன் கூடிய கமெண்டுகள் அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக இன்ஸ்டாகிராம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
`இளைஞர்கள் சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இணையக் கொடுமைப்படுத்துதல் தொடர்ந்து வருகிறது` என ஹாக்கெட் கூறுகிறார்.
இணையத்தில் பதிவிடப்படும் கருத்துகளை தணிக்கை செய்யும் நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக அவை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பார்வை இங்கிலாந்தின் குழந்தைகளுக்கான ஆணையாளரான ஆன் லாங்ஃபீல்டின் கருத்திலும் எதிரொலிக்கிறது. சமூக வலைத்தளங்களுக்கும், பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அரசின் மத்தியஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பள்ளிகளில் `கட்டாய டிஜிட்டல் குடிகமன் வகுப்புகள்` நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள், இந்த மாத்த் துவக்கத்தில் வெளியான ஆக்ஸ்ஃபோர்டு இணைய கல்வி நிறுவனம் வெளியிட்ட முடிவுகளுக்கு முரணாக உள்ளன. இதன் ஆய்வு முடிவுகளில் இணைய கொடுமை ஒப்பீட்டளவில் அரிதானது எனக் கூறப்பட்டிருந்தது.
இணையத்தால் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா?
15 வயதுடையவர்களிடம் அதிகம் கவனம் செலுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், இணையத்தில் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுவதாக 30 சதவீதம் பேரும் ,இது போன்ற கொடுமைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் நடைபெறுவதாக மூன்று சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆய்வு முடிவுகளுக்கும் இடையிலுள்ள இந்த பெரிய வேறுபாடு என்பது, ஆய்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என கிட்ஸ்கேப் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரன் சீகர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
`இந்த ஆய்வுகள் சமூக வலைத்தளங்களில் உள்ள இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. ஆனால் இரண்டு ஆய்வுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இதற்கு ஆய்வுக்கான கேள்விகள் எப்படி கேட்கப்பட்டது, யாரிடம் கேட்கப்பட்டது, அவர்களுடைய வயது என்ன என்பவை காரணமாக இருக்கலாம்.` என அவர் கூறியுள்ளார்.
டிச் த லேபிள் அமைப்பின் ஆய்வு முடிவுகள் தனக்கு பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
`நாம் வெறுப்புணர்வு கலாசாரத்தில் வாழ்ந்து வருகிறோம். இதில் சோகமான அம்சம் என்னவென்றால், நம் குழந்தைகள் இந்த கலாசாரத்தில்தான் வளர்ந்து வருகிறார்கள்.`
மேலும் இளைஞர்களும் தங்களுடைய இணைய பயன்பாடு குறித்து யோசிக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
`குழந்தைகளுக்கு நிகராக பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக உள்ளனர். இது தங்களுடைய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை விட இன்னும் பல விடயங்கள் வாழ்க்கையில் உள்ளது என்பதை சொல்லக் கூடிய நேரம் இது.` என லாரன் கூறியுள்ளார். -BBC_Tamil