இன்று காலை நாம் தமிழர் அமைப்பின் தலைமையில் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக அரசாங்கத்திடம் மனு வழங்கப்பட்டது.
தமிழ்மொழிக்கல்விக்கும், தமிழ் வழிக்கல்விக்கும் ஆபத்தாக அமையும் டிஎல்பி (DLP) என்ற அரசாங்கத்தின் திட்டம், கொல்லைப்புறமாக திணிக்கப்பட்டு வருகிறது. அதை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை, எனவே உடனடி தீர்வாக திட்டத்தைத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து அகற்ற வேண்டும் எனக் கேட்டு கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உகந்த திட்டம் அல்ல. இதன் அமுலாக்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை அதிகரிக்காது. அதோடு அவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்ற புரியாத மொழியில் கற்றுக் கொள்ள இயலாத சூழலில் கல்வியில் மேலும் பின்தள்ளப்படுவர் என்ற வாதத்தை சான்றுகளோடு சமர்பித்த குழுவின் பிரதிநிதி, மு. அ கலைமுகிலன், அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு முன்பு இருமொழித்திட்டத்தை அகற்ற கோரி, 07.02.2017-இல் ஒரு மனுவும் 19.05.2017-இல் இன்னொரு மனுவும் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டது. இந்த மூன்றாவது மனு பிரதமருக்கு வழங்கப்பட்டது என்கிறார் இதன் ஏற்பாட்டாளர்களின் ஒருவரான தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் பொன்ரங்கன்.
மேலும், “பிரதம இலாகாவின் சார்பில் தனசீலன் மற்றும் நாகையா ஆகிய இருவரையும் சந்தித்து, நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம், எங்களை மீண்டும் சந்திக்க ஆவல் கொண்டுள்ளனர்” என்றார்.
இதில் கலந்து கொண்ட முரளி, இந்தப் பிரச்சனையை எளிதாக கையாள சூழல் இருந்தும், தமிழர்களை கொண்டு அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்கள் வக்கற்றவர்கள் எனச் சாடினார். கல்வி துணை அமைச்சர் கமலநாதன் இந்தப் பிரச்சனையை கையாளும் விதம் வேடிக்கையானது என்றார்,
“இது பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் ஆர்வம் கொண்டவர்களுக்காக உள்ள திட்டம்” என்று புறமுதுகு காட்டும் இவர் நேரிடையாகவே இந்த திட்டதிற்கு ஊக்குவிப்பு வழங்கி துணை போவது அருவருப்பாக உள்ளது என்கிறார். தமிழ்க் கல்வியின் அழிவுக்குத் துணை போகும் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க தேர்தல் பிரச்சாரம் தேவை எனக் கோடிகாட்டினார்.
மேலும், இதைப்பற்றி கருத்துரைக்கையில், சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டுள்ள இந்த இருமொழித் திட்டம் பெரும்பாலான குழந்தைகளின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதால், அது தேவையற்றது. ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு காவலன் என பறைசாற்றும் மஇகா தொடர்ந்து மௌனமாக அரசியல் விளையாடுவது வேடிக்கையாக உள்ளது, என்றார்.
தற்போதைய மஇகா தலைவர்கள் இந்த இருமொழித் திட்டம் சார்பாக இன்னமும் ஏனோதானோ என்று அமைதிகாப்பது வேடிக்கையாகவே உள்ளது. அவர்களின் அமைதி தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக அமையும் என்பது அவர்களுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்புகிறார் மே 19 இயக்கத்தின் தியாகு.
“இது என்ன ஒரு பெரிய ராக்கெட் அறிவியலா, மஇகா ஆழ்ந்த அமைதியில் பரிசீலனை செய்யவும் ஆய்வு நடத்தவும்?”, என சாடுகிறார் இதில் கலந்து கொண்ட கௌத்தம்.
இருமொழித் திட்டத்தில் கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படவில்லை, பள்ளிகளில் போதுமான பயிற்றுத் துணைப் பொருள்களோ, கருவிகளோ, மேற்கோள் நூல்களோ இல்லை. எனவே, இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்வதோடு கணிதம், அறிவியல் பாடங்களில் குழந்தைகளுக்கு வெறுப்பையே உண்டுபண்ணும். ஆங்கில மொழியறிவு இல்லாத குழந்தைகள், இந்தப் பாடங்களை சிறப்புடன் கற்றுத்தேர முடியாது என்பது போன்ற எளிமையான காரணங்கள் கூடவா புரியவில்லை? என்ற கேள்விகளை முன்வைக்கிறார் இதில் கலந்துகொண்ட மே 19 இயக்கத்தின் பாலமுரளி.
இன்றைய நிகழ்ச்சியில், தமிழ் தேசிய ஆதரவாளர் சாமூவேல் இராஜ், மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, சுவராம் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், தமிழ் அறவாரியத்தின் செயலவை உறுப்பிணர் ஜிவி காத்தையா, மே 19 இயக்கத்தின் தமிழ் இணியன் ஆகியோர் உட்பட சுமார் இருபது நபர்கள் கலந்து கொண்டனர்.
என் சிந்தனைக்கு புரியாத புதிர் : அரசாங்கம் ஆங்கிலமொழியினை மேம்படுத்தவே தமிழ் , சீனப்பள்ளிகளில் கணிதம் , அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கின்றது , அதுவும் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரிலே என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியாக இல்லை . அரசாங்கம் உண்மையிலேயே ஆங்கிலத்தை மேம்படுத்த விரும்பினால், அதனை முதலில் அரசாங்க இலக்காவிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் . பொது இடங்களில் அதற்கு முக்கியதுவம் கொடுக்கவேண்டும் . எந்தவொரு அரசாங்க இலாகாவில் முன்வாசலில் உள்ள அறிவிப்பு பலகையில் தேசியமொழியான மலாய் மொழிக்கு இணையாக ஆங்கிலமொழியிலும் எழுதப்பட்டிருக்கவேண்டும் , அங்குள்ள வரவேற்பு முகப்பில் மற்றும் சேவை முகப்பில் அமர்ந்துள்ள மலாய் குமாஸ்தாக்கள் , நாம் ஆங்கிலத்தில் பேசும்போது , ஏதேனும் விபரம்பெற ஆங்கிலத்தில் பேசும்போது , ” இஞ்செக் போலே சக்காப் பஹாசா மலேஷியா” (Encik boleh cakap Bahasa Malaysia ) என நம்மிடம் பதிலளிப்பது நமக்கு கேள்விக்குறியாக உள்ளது . வடக்கு தெற்கு நெடுஞசாலையில் உள்ள அறிவிப்பு பலகையில், மின்னியல் அறிவுப்பு பலகையில் தேசியமொழியுடன் சேர்ந்து ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கவேண்டும் , இன்னும் சொல்லப்போனால் பொது மருத்துவமனை, காவல் படை , பேருந்து நிலையம் , பள்ளிகள் , கடை தொகுதிகள் , விளையாட்டு மைதானம் என பலதரப்பட்ட பொது மக்கள் புழங்கக்கூடிய இடங்களில் தேசியமொழியுடன் சேர்ந்து ஆங்கிலமும் பயன்பாட்டில் இருந்திடவேண்டும் , அந்த ஆங்கில மொழியினை காணும் மக்களும் , குறிப்பாக பள்ளி மாணவர்கள் படித்து அறிந்து தெரிந்துகொள்வதுடன் ஆங்கிலம் மொழியினை கற்றிட பெரும் துணையாகஇருக்கும் . இதனை விடுத்து பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தால் அந்தந்த பள்ளியில் ஆங்கிலத்தில் கணிதம் , அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் போதிக்கலாம் என கல்வி அமைச்சு கூறுவது வேடிக்கையாக உள்ளது . இதனை பெற்றோர்களும் சிந்தனையில் ஆட்படுத்த வேண்டும் . அரசாங்க உத்தியோகத்தில் நம் இனத்தவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்பது நம் தமிழ் பள்ளியில் மட்டுமே , இவ்வாறுஇருக்க ஆங்கில சமாச்சாரத்தை உட்புகுத்தி தமிழ் , சீனம் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்க மற்ற இனம் உட்கொணரும் “மழைக்கு ஒதுங்கிய ஒட்டகம் ” கதையை போல நம் கண்ணில் மணலை தூவிக்கொள்ள வேண்டும் என நன்கு சிந்திப்போம் , செயல் படுவோம் . நன்றி .
சும்மா நாலு பேரு கூடி கோலாலம்பூரில் கூட்டம் போட்டு கூவிக் கொண்டிருந்தால் தமிழ் மொழி வளர்ந்திடாது. ஆரம்பத் தமிழ் பள்ளியில் தமிழ் கற்ற மாணவர் மூன்றாம் ஐந்தாம் படிவத்தில் தமிழ் மொழியை ஒரு தேர்வு பாடமாக எடுக்காமல் விலகிப் போவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்.
தமிழ் பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்பும் வசதி படைத்த பெற்றோரிடம் மறைமுக காரணம் உள்ளதை அறிந்து அதை நிவர்த்திச் செய்ய முயலுங்கள்.
குறைந்த எண்ணிக்கையில் உள்ள தமிழ் பள்ளிகளை அரசாங்கம் எந்த நேரத்திலும் மூடலாம். அதனால் தமிழர் அதிகமாக வாழும் பட்டணத்தில் மேற்கொண்டு தமிழ் பள்ளிகளைக் கட்ட அரசாங்கத்தை வற்புறுத்துங்கள்.
நிலம் இல்லையென்றால் அரசாங்கம் அந்த வேலையைச் செய்ய வேண்டுங்கள். அதை விடுத்து நாம் ஓடி ஆடி நிலத்தைத் தேடித் கொண்டிருக்கும் வேலையை விடுங்கள்.
மாநில அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் ம.இ.க. இதைக் கூட செய்ய முடியாது போனால் அவர்களுக்கு எதற்கு அரசியல் கட்சி?
கமலநாதன் இதில் எதட்காக ஆர்வம் காட்டுகிறார். சீன அமைசர் சீன சமுதாயத்தை மதித்து செயல்படுகிறார். இவர் நம்மை மிதித்து செயல்படுகிறார்
இன்றைய தொலைக்காட்சி தமிழ் செய்தி அறிக்கையில் திரு பாராசூட் மணியம்
அறிவியல் , கணிதம் ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலத்தில் பயில்வதால் தமிழ் மொழி பாதிக்கப்படாது என மகிழ்ச்சியுடன் அறிவித்தார் . மிக்க மகிழ்ச்சி . வரும் தேர்தலில் அவருக்கு முழு ஆதரவுடன் வாக்களிப்போம் .
1. இனிமேல் தமிழ்ப் பள்ளிகள் மஇக வை நம்பி இயங்குவதில் கொஞ்சமும் மரியாதையில்லை; நமக்கும் சுயமரியாதையுமில்லை; அவர்களுக்கு தமிழ்க் கல்விப் பற்றி என்னத் தெரியும்! முதலில் தமிழ்ப் பள்ளியென்றால் தமிழ்தான் போதனா மொழி; தமிழ்ப் பள்ளியில் தேசிய மொழி ஆங்கிலம் இந்தயிரண்டும் அவசியமான மொழிகள்; மறுப்பதற்கில்லை. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த முதற் கூட்டணிப் பொதுத் தேர்தல் அறிக்கையில் தமிழ் சீனப் பள்ளிகள் தொடர்ந்திருக்குமென்று பொன்னெழுத்துக்களால் எழுதப் பட்டுள்ளது; இந்தவுண்மை இன்றைய மஇக வினருக்குத் தெரியுமா? கூட்டணிக் கட்சியே தேசிய முன்னணியாக உருவெடுத்துள்ளக் கட்சி; கல்வி அமைச்சு இப்போது சிலப் தமிழ்ப் பள்ளியில் இருமொழித் திட்டத்தை அமுல் செய்ய முயற்சி செய்ததே சரியில்லை; இந்தச் செயல் கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறப் பட்ட உறுதிமொழிக்கு மிகவும் எதிர்மறையானச் செயல். ஆறு வருடம் தமிழ்ப் பள்ளியில் முடிந்தக் கையோடு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தேசியப் பள்ளிக்குத்தான் செல்கின்றார்கள்; தமிழ்ப் பள்ளியிலேயே தனிப் பாடங்களான ஆங்கிலம் தேசிய மொழி ஒழுங்காகப் போதிக்கப் பட்டிருந்தால் இடைநிலைப் பள்ளியில் அந்த மாணவனுக்கு எந்தச் சிரமங்களும் இருக்காது; ஆனால் தேசிய மொழி ஒழுங்காக தரமான ஆசரியர்களைக் கொண்டு தமிழ்ப் பள்ளிகளில் போதிக்கப் படுகின்றதா? முதலில் இதற்க்கு விடைக் காணுங்கள்; 2 மேலும் தமிழப் பள்ளியில் தேசிய மொழிப் பாடங்களை தமிழாசிரியர்களும் போதிக்கும்வாய்ப்புக்களும் வழங்கப் பட வேண்டும்; அப்படியில்லையென்றால் தேசிய மொழிப் பாடத்தின் தரம் தமிழ்ப் பள்ளியில் எப்படி உயரும்? 3. இனிமேல் நாம்தான் தமிழ்ப் பள்ளியின் காவலர்கள்; தேசிய அளவில் நாம் ஒரு வலுவான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; பொதுத் தேர்தலில் நமக்கு கிடைக்கும் மரியாதைதான் நாம் நம் சமுதாயத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் மரியாதை; அந்த வாய்ப்பை வரும் தேர்தலுக்குள் நாம் பூர்த்திச் செய்துக் கொண்டால் நன்று; அதற்க்காகத்தான் எல்லோரையும் – வாக்காளர்களாக பதிவுச் செய்யாத எல்லோரையும் – அன்புடன் அழைக்கின்றேன்; தபால் நிலையம் சென்றோ அல்லது தேர்தல் ஆணையம் அலுவலகம் சென்றோ உடனே வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொண்டால் நன்றாகயிருக்கும்! பின்பு ஆட்சியாளர்களும், அரசும் நம் தேவைகளென்னவென்றறிந்து நம் தேவைகளை பூர்த்திச் செய்வார்கள்; இந்த வாய்ப்பை நாம் நன்குப் பயன் படுத்திக்க கொள்வோம். இதுதான் உண்மை!