ஊழல் பலவிதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களும் அவர்களது அமைச்சுகளும் தங்களைத் தேர்வு செய்ததற்கு கைமாறாக மக்களின் பணத்தையே தொடர்ந்து கொள்ளையடிப்பது மலேசிய ஊழலின் தனிவிதம்.
அவர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினரும் சேர்ந்துகொள்கின்றனர். ஓர் அமைச்சரின் குடும்பமும் பிரதமர் நஜிப்பின் மகன்களில் ஒருவரும் இப்போது பேசப்படுகின்றனர்.
அமைச்சர்கள் கொள்ளையடித்தால், அவர்களுடைய அமைச்சுகளின் அதிகாரிகள் என்ன குருடர்களா? அவர்களும் கொள்ளையடிக்கும் தங்களுடைய கடமையைத் தவறாது செய்து வருகின்றனர்.
ஆண்டாண்டுதோறும் அழுகிறார் நாட்டின் தலைமைக் கணக்காய்வர். ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் ஆண்டுதோறும் கடமை தவறாமல் பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் தவறாது தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டும் செய்தார். மொத்தம் ரிம28பில்லியனை விழுங்கி விட்டனர். ஆனால், ஜொகூரில் ஒரு 12 வயது சிறுமி லட்சுமிக்கு இருதயத்தில் ஓட்டை. அதை அடைப்பதற்கு நாட்டில் பணம் இல்லை! அடுத்த ஆண்டும் இதே கொள்ளையர்கள் ஆட்சிக்கு வரவேண்டுமாம்!
2010 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வரின் அறிக்கையில் மாட்டிற்கு தீனி போட்டு கொழுக்க வைத்து வெட்டித் தின்பதற்காக உருவாக்கப்பட்ட என்எப்சி என்ற நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கிய மில்லியன், மில்லியன், மில்லியன் ரிங்கிட் கடன் (மொத்தம் ரிம260 மில்லியன்) என்ன ஆயிற்று என்று கேட்கிறார் கணக்காய்வர்.
நமது நாட்டின் தலைவர்கள் கருணையின் மறுபிரவிகள். வெப்ப மண்டல மலேசியாவில் மாடுகளுக்கு ஏர்கோன் கொண்டோ வேண்டுமே. அதற்காக ரிம9.8 மில்லியனுக்கு ஒரு சொகுசு கொண்டோ வாங்கப்பட்டது.
அடுத்து அரசாங்கப் பணத்தில் தின்று கொழுத்துப் போய் இருக்கும் (இது உண்மையாஎன்பது வேறு விசயம்) மாடுகளுக்கு உல்லாசப் பயணம் வேண்டுமே. மாடுகளின் சார்பில் அந்நிறுவனத்திற்கு சொந்தக்காரரான ஓர் அமைச்சரின் கணவரும் அவர்களது மூன்று குழந்தைகளும் ஒரு சிறிய தொகையை, (மக்களின் பணத்தை வீணாக்கக் கூடாதல்லவா?), ரிம800,000 மட்டும்தான், எடுத்துக்கொண்டு வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்துள்ளனர்.
அரசாங்கப் பணத்தை இப்படி சுயநலத்திற்காகப் பயண்படுத்தலாமா என்ற கேள்விக்கு கடுமையாக உழைக்கும் தமது குடும்பத்தினர்அதை அனுபவிக்கக்கூடாதா? அதற்கான தகுதி தமது குடும்பத்திற்கு உண்டு என்று வாதிக்கிறார் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில்.
நாற்பது வருடங்களுக்கு மேலாக அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும் அரசாங்க ஊழியர்களும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கக் கூடாது என்று பாடி வரும் லிம் கிட் சியாங், பிரதமர் நஜிப் என்எப்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடனைத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாடியுள்ளார். இன்னும் சிலர், சில பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட, அந்த அமைச்சர் பதவி துறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், துணைப் பிரதமர் முகைதின் யாசின், இவர் விவசாய அமைச்சராக இருந்த காலத்தில்தான் அந்தக் கடன் கொடுக்கப்பட்டது, இவ்விவகாரத்தில் அமைச்சர் ஷாரிஸாட் சம்பந்தப்படவில்லை. பதில் அளிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் உரிமையாளரான அவரது குடும்பம்தான் என்று அமைச்சரை தற்காத்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் ஷாரிஸாட்டிற்கு இதில் சம்பந்தம் இல்லை என்றால், அவர் ஏன் தமது குடும்பம் கடுமையாக உழைத்துள்ளதால் இந்தப் பணத்தைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளது என்று தமது குடும்பத்தைத் தற்காத்து பேச வேண்டும்?
அமைச்சர் ஷாரிஸாட்டை மட்டுமல்ல. அடுத்து முகைதின் யாசினும் அம்னோவினரும் பிரதமர் நஜிப்பை தற்காத்து பேசுவர் என்பதற்கு இது ஒரு முன்னோடிதான். தற்காப்பாரா அல்லது காலைவாரி விடுவாரா என்பது மகாதிர் கூறும் ஆலோசனையைப் பொறுத்திருக்கும் என்றும் கூறலாம். விரைவில், பிரதமர் வேறு, அவரது மகன் வேறு என்பார்கள்.
பிரதமர் நஜிப்பின் மகன்களில் ஒருவர், முகமட் நஸிபுடின் நஜிப், வயது 28, கடந்த மாதம் யாரும் கேள்விப்பட்டிராத ஹார்வெஸ்ட் கோர்ட் இண்டஸ்டிரிஸ் பெர்ஹாட் (எச்சிஇ) மரத்திலான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
நஸிபுடினின் நியமனத்திற்கு முன்பு அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு சந்தை விலை ரிம0.08 சென்தான். ஆனால் நவம்பர் 14, பிற்பகல் மணி 4 அளவில் அந்த 8 சென் பங்கின் விலை 2,575 விழுக்காடு உயர்ந்து ரிம2.14 ஆகியது. பின்னர் இன்னொரு 29 விழுக்காடு உயர்ந்து சந்தை மூடும் நேரத்தில் அதன் விலை ரிம2.13 ஆகியது.
நவம்பர் 4 இல், நஸிபுடின் அந்நிறுவனத்தில் இரண்டிலிருந்து மூன்று மில்லியன் (1.7 விழுக்காடு) பங்குகளை வாங்கியதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் ரேமண்ட் சான் 13.83 விழுக்காடு பங்கை வாங்கியுள்ளார்.
போர்ட் கிள்ளானிலிருந்து இயங்கும் இந்நிறுவனம் கதவுகள் போன்ற மரத்திலான பொருள்களைத் தயாரிக்கிறது.
நஸிபுடின், பிரதமர் நஜிப்பின் முதல் மனைவியின் புதல்வராவார். தொழிலதிபரான ரேமண்ட் சான் சாபாவில் சாகாஜூதா (சாபா) செண்ட். பெர்ஹாட்டில் பெருமளவிலான பங்குகளை வைத்திருக்கிறார். நஸிபுடின் சாகாஜூதா நிறுவனத்தின் தலைவர்!
மலேசிய பங்குச் சந்தையில் ஹார்வெஸ கோர்ட்டின் தரம் என்ன? கடந்த டிசம்பர் 2009 இல் அந்நிறுவனத்தின் தரம் பிஎன்17 (PN17) என்று பர்சா மலேசியா தரப்படுத்தியுள்ளது. பிஎன்17 என்றால் அந்நிறுவனம் நிதிப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளது என்பதாகும்.
2010 ஆம் ஆண்டில் அந்நிறுவனம் ரிம2.7 மில்லியன் நட்டம் கண்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அதன் பங்கின் மதிப்பு 6 லிருந்து 12 சென்னுக்கும் இடையில் இருந்து வந்துள்ளது. இப்போதுதான் அதன் மதிப்பு கவர்ச்சிகரமாக உயர்ந்துள்ளது.
28 வயதான நஸிபுடினுக்கு இத்தனை மில்லியன் பங்குகளை வாங்குவதற்கு எப்படி பணம் கிடைத்தது? பகாங் ஆற்றின் நடுவில் அணை கட்டி தண்ணீரை இரைத்து பிடித்த மீன்களை விற்று பணம் சேர்த்தாரா? இல்லை, பிரதமர் குடும்பங்களின் பாரம்பரியப்படி தூக்கிவிடப்பட்டாரா?
ஒரு காலத்தில், முன்னாள் பிரதமர் மகாதீர் தமது காதலியைச் சந்திக்க கார் இல்லாமல், கிர் ஜொகாரியின் காரை இரவல் வாங்கிச் சென்றாராம். ஆனால், அவருடைய மகன்களில் ஒருவர் இன்று கோடீஸ்வரர்! பிறகு, அப்துல்லா படாவி. இப்போது, நஜிப். இதெல்லாம் ஊழல்தானே!
இவர்களை மக்கள் நம்ப வேண்டுமாம். நம்பலாமா?