மில்லியன் கணக்கான அஞ்சல் வாக்குகள், குளறுபடியான வாக்காளர் பட்டியல் ஆகியவை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இடையில் நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒரு வழியாக அமைக்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்டது போல பெர்சே 2.0 இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஒரங்கட்டுவதற்கு அந்தத் தேர்வுக் குழு முயலுவது திண்ணம். நாட்டின் வரலாற்றில் நடப்பு தேர்தல் நடைமுறைக்குக் காட்டப்பட்டுள்ள மிகப் பெரிய எதிர்ப்பு ஜுலை 9 பேரணியாகும்.
தேர்வுக் குழுவின் ஆலோசனை உறுப்பினர்களாக பெர்சே 2.0 அமைப்பு அல்லது அதில் அங்கம் பெற்றுள்ள 62 அரசு சாரா அமைப்புக்களின் உறுப்பினர்களை அந்தக் குழு உண்மையில் நியமித்திருக்க வேண்டும்.
தேர்வுக் குழு என்பது கூடிய வரை மக்களுடைய கருத்துக்களை ஒன்று திரட்டுவதற்காக அமைக்கப்படும் நாடாளுமன்ற கருவியாகும். பெர்சே 2.0ஐ அதிலிருந்து விலக்கி வைப்பது பாரிசான் நேசனலின் அகங்காரத்தைக் காட்டுகிறது.
தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வரும் போது பெர்சே 2.0ஐ சேர்க்க அரசாங்கம் பிடிவாதமாக மறுப்பது, தேர்தல் மோசடிகள் தொடர்பாக மக்கள் கூறும் புகார்களை பாரிசான் நேசனல் கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் உணர்த்துகிறது.
ஆகவே நமது தேர்தல்களை தூய்மைப்படுத்தப் போவதாக பிஎன் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நோக்கத்தில் நான் அதிக நம்பிக்கை வைக்கவில்லை.
தேர்தல் மோசடிகள் மீது ஆயுதப்படை வீரர்களிடமிருந்து அண்மைய வாரங்களில் நமக்கு பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட அஞ்சல் வாக்களிப்பு முறையில் நிலவும் முறைகேடுகள் பற்றி அந்த முன்னாள் வீரர்கள் விளக்கியுள்ளனர்.
அஞ்சல் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படுவது ஊரறிந்த விஷயம்
நமது ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்ட வாக்களிப்பு முறைகேடுகள் பற்றிய அந்த விவரங்கள், சாதாரண மலேசியர்கள் நீண்ட காலமாகவே அறிந்து வைத்துள்ள ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றனவே தவிர வேறு ஒன்றுமில்லை.
நமது இராணுவ அஞ்சல் வாக்குகளின் ரகசியத் தன்மை வெகு காலத்துக்கு முன்பே விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் பெரும் எண்ணிக்கையிலான வாக்குச் சீட்டுக்கள் சில தனிநபர்களிடம் கொடுக்கப்பட்டு அவர்கள் விருப்பம் போல் குறியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அரை நூற்றாண்டு முடிந்து 12 தேர்தல்கள் நிறைவடைந்தும் அஞ்சல் வாக்குகளின் புனிதத்தன்மையைக் காப்பாற்ற எதுவும் செய்யப்படவில்லை.
நாட்டின் இராணுவம் அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என பிஎன் கருதுவதையே அது பிரதிபலிக்கிறது. அதனால் அஞ்சல் வாக்குகளுடைய புனிதத்தன்மை என்னும் கோட்பாடு மீறப்பட்டுள்ளது.
அந்தப் பிரச்னை தீரும் வரையில் இராணுவ வீரர்களுடைய அஞ்சல் வாக்குகளின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்கு பிஎன் நடவடிக்கை எடுக்காத வரை மலேசியாவில் தேர்தல் முறை சுதந்தரமானதாக தூய்மையானதாக இருக்கப் போவதில்லை. அதனால் முழு அஞ்சல் வாக்களிப்பு முறையும் கேலிப் பொருளாக மாறி விட்டது.
தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் தொடரும் வேளையில் இராணுவ வீரர்கள் செலுத்துகின்ற அஞ்சல் வாக்குகளுடைய சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது மீது எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.
என்னைப் பொறுத்த வரையில் அந்த ரகசியத்தன்மை நிலைநிறுத்தப்படாவிட்டால் மலேசியாவில் தேர்தல் முறையும் எபோதும் சீர்கெட்டுத் தான் இருக்கும்.
இராணுவ முகாம்களில் அஞ்சல் வாக்குகள் ஒரு போதும் ரகசியமாக இருக்கப் போவதில்லை. அன்றைய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுடைய சுதந்திரமான முழு ஆதரவையும் பெற்றிருப்பதாகவும் கூற முடியாது.
தேர்தல் சீர்திருத்தத்துக்கான அவசியம்
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் தேர்தல் முறையைத் தூய்மைப்படுத்தும் பணியை நிறைவு செய்ய முடியுமா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நமது தேர்தல் முறையில் குறிப்பாக அஞ்சல் வாக்குகளின் சட்டப்பூர்வத்தன்மையையும் ரகசியத்தையும் உறுதி செய்வதற்கு நமது நாடாளுமன்றம் நீண்ட காலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் அப்படியே இருக்கட்டுமே. அவசரப்பட்டு காரியங்களைச் செய்வதை விட பொறுமையாக முழுமையான பணியை மேற்கொள்வது நல்லது.
பல கட்சிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கருத்துக்களை ஒன்று திரட்டுவதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு பயனுள்ள அமைப்பாகும்.
1980களில் நம்பத்தகுந்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் மலேசியாவில் நாடாளுமன்றச் சீர்திருத்தம் மீது மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு முயற்சி பெருத்த வெற்றியைத் தரவில்லை. அப்போது அமைக்கப்பட்ட 1985ம் ஆண்டுக்கான அபாயகரமான போதைப் பொருள் (தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் மீது மக்கள் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் செல்வதற்கு முயற்சி செய்தது.
ஆரோக்கியமான நாடாளுமன்ற ஜனநாயக முறை மேம்பாடு காண வேண்டுமானால் நமது அரசியல்வாதிகள் கட்சி நலன்களுக்கு ஏற்ப இயங்கி, இறுதி முடிவுகள் மக்களுடைய கூட்டு விருப்பத்தைப் பிரதிநிதிப்பதை உறுதி செய்வதைப் பொறுத்துள்ளது.
கடந்த காலத்தில் கட்சி சார்பற்ற குழுக்கள் வெற்றி பெறவில்லை. அதனால் இந்த முறை கட்சி அல்லது பிரிவு நலனுக்கு மேலாக அரசியல் மூதறிஞர் போன்ற இலட்சியங்கள் வைக்கப்படும் என நாம் நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
உண்மையாகச் சொன்னால் தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு பல கட்சி அளவில் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிலும் நாம் இந்த முறையும் தோல்வி காண்போம் என நான் நினைக்கிறேன்.
ஆகவே நாடாளுமன்ற சீர்திருத்தம் நமது நாட்டில் எப்போதும் போல எட்டாக் கனியாக இருக்கும்.