‘ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 6, 2018. கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டத்தில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய அளவில் சலசலப்பும் மறுப்பும் எதிர்ப்பும் தொடர்ந்தாலும் அதைப்பற்றி யெல்லாம் கருதாமல், இந்த ஆண்டும் இருமொழித் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 88 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பது, ஐநா மன்றத்தின் கல்வி-அறிவியல்-பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ-வின் பன்னாட்டு கல்விக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது.
எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அந்தந்த மக்கள் பேசும் தாய்மொழிவழிதான் ஆரம்பக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரையும் கொள்கை முடிவும் ஆகும்.
ஒரு மாணவன், ஆரம்பக் கல்வியை தாய்வழி கற்றுக் கொண்ட மொழிவழியே கற்றுத் தெளிவதுதான் பயன் தரும். எத்தனையோ மொழிகளை அடுத்தடுத்து கற்றுக் கொண்டாலும், உயர்க்கல்வியை வேற்று மொழியில் மேற்கொண்டாலும் ஆரம்பக் கல்வியை மட்டும் தாய்மொழியில் பெற வேண்டும்.
தாய் மொழியில் தேர்ந்த மாணவர்களால்தான், மற்ற மொழிகளை எளிதில் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்பதை எத்தனையோ ஆய்வுரைகள் இந்த உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளன. மொழி அறிஞர்களும் சான்றோர்களும் இந்தக் கருத்தைதான் வலியுறுத்தியுள்ளனர்.
ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மக்களும் தங்களின் ஆரம்பக் கல்வியை ஆரம்ப மொழியில்தான் பெறுகின்றனர். அதனால்தான், இத்தகைய நாடுகளின் மக்கள் அறிவியல் சிந்தனையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பட்டுத் திகழ்கின்றனர்.
இவை போதாதென்று, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ மன்றத்தால் பேரளவில் கொண்டாடப்படும் உலகத் தாய்மொழி நாள் விழா தொடர்பாகவும் தாய்மொழிக் கல்விதான் வலியுறுத்தப்படுகின்றது. ஒரு மாணவன், உயர்நிலைப் பள்ளியிலும் உயர்க்கல்வி நிறுவனத்திலும் எந்த மொழியிலும் கல்வியைத் தொடரலாம். ஆனால், பாலர் கல்வி, ஆரம்பக் கல்வி உள்ளிட்ட அடிப்படைக் கல்வியை தாய்மொழியில்தான் பெற வேண்டும்.
உண்மை நிலை இவ்வாறிருக்க, மலேசிய கல்வி அமைச்சு எதையும் உணர்ந்து பாராமல் பெரும்பாலான மக்களின் கருத்தையும் சீர்தூக்கிப் பாராமல் இப்படி இருமொழி பாடத்திட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப் படுத்துவது, உள்ளபடியே நாட்டு மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக, அறிவியல்-கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொடுப்பதால், அந்த இரு பாடங்கள் சம்பந்தப்பட்ட தாய்மொழி கலைச் சொற்களை மாணவர்கள் அறியாமல் போய்விடுவர். இது, காலப் போக்கில் அந்தந்த மொழி பேசும் மாணவர்களின் தாய்மொழி வளர்ச்சியில் பின்னனடைவை ஏற்படுத்தும். இந்த நிலை தொடர்ந்தால், பொதுவாக, தாய்மொழிவழி பள்ளிகளின் எதிர்காலத்திற்கும் கேடு விளையும்.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த கல்வி ஆண்டுமுதல் இருமொழித் திட்டம் அமலில் இருக்கும் 1,215 பள்ளிகளிலும் அடுத்த வாரம் முதல் இருமொழி வகுப்புகள் தொடரும் எனக் கல்வி அமைச்சு தற்பொழுது தெரிவித்துள்ளது. இவ்வாண்டு முதல் மேலும் 88 பள்ளிகளில் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ள நிலையில், நிகழும் கல்வி ஆண்டில் நாட்டில் 1,303 பள்ளிகளில் இருமொழித் திட்டம் நடப்பில் இருக்கும்.
மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் புலமையும் ஆற்றலும் தேவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, ஆங்கிலப் பாடத்தை இன்னும் செம்மையாக பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக கூடுதல் வகுப்புகளுக்குக்கூட அந்தந்தப் பள்ளியில் ஏற்பாடு செய்யலாம். பெற்றோர்கூட தனிப்பட்ட முறையிலும் மிகைநேர வகுப்பின் மூலமாகவும் ஆங்கில மொழி அறிவை தங்கள் பிள்ளைகள் வளர்த்துக் கொள்ள ஆவண செய்யலாம்.
நடைமுறையில் இத்துணை வழி இருக்கும்போது, தாய்மொழிப்பள்ளிகளுக்கும் தமிழ், சீன மாணவர்களின் தாய்மொழி வளர்ச்சிக்கும் சறுக்கலை ஏற்படுத்தும் இந்த இருமொழிக் கல்வி எதற்கு என்பதுதான் புரியவில்லை.
இது குறித்து, மத்தியக் கூட்டரசு இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாய தருணம் இது!