அமைச்சருக்கு எதிராக எஸாம் செய்த புகார் என்னவாயிற்று?, ஜீவி காத்தையா

பிகேஆரில் முக்கியமானவராகவும் (இளைஞர் பிரிவு தலைவர்) அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்மிற்கு மிக நெருங்கியவராகவும் விளங்கிய எஸாம் முகமட் நோர் தமது தலைவரின் தலைமைத்துவத்தில் திருப்தி கொள்ளாதலால் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இப்போது பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹுசேன் அலி மூலம் வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இது எஸாம் ஓர் அம்னோ அமைச்சருக்கு எதிராகச் செய்திருந்த புகார் என்னவாயிற்று என்ற கேள்வியை எழுப்புகிறது.

பிகேஆர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், எஸாம்  ஜனநாயகம் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற ஓர் அரசு சார்பற்ற அமைப்பின் (கெராக்) தலைவரானார்.

அதன் தலைவராக இருக்கையில் எஸாம், அம்னோ அமைச்சர் ஒருவர்  பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள ஒரு நிறுவனத்திலிருந்து ரிம30 மில்லையனை சுருட்டி விட்டார் என்று அவருக்கு எதிராக 632 பக்கங்கள் கொண்ட ஒரு புகாரை ஜூன் 2007 இல் பிரதமர் அப்துல்லா படாவியின் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அம்னோ அமைச்சருக்கு எதிராக பிரதமர் அப்துல்லா படாவியிடம் அளிக்கப்பட்ட அப்புகாரை அவர் படித்து விட்டாரா என்று அடுத்த நாளே லிம் கிட் சியாங் பிரதமரை கேட்டார். அதற்கு, “இன்னும் படிக்கவில்லை, பிறகு படிக்கிறேன்” என்று பிரதமர் பதில் கூறியிருந்தார்.

அம்னோ அமைச்சருக்கு எதிரான எஸாமின் புகார் தாக்கல் செய்து நான்கு வருடங்களுக்கு மேலாகி விட்டது.

அப்புகாரை அன்றைய அம்னோ தலைவரும் பிரதமருமான அப்துல்லா படாவி படித்தாரா? தெரியாது. படிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று படிக்காமலே முன்னாள் பிரதமர் ஆகிவிட்டார் என்று கருதலாம்.

அப்துல்லா படாவிக்குப் பின்னர் நஜிப் பிரதமர் ஆனார். அவருக்கும் அப்புகாருக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையா? அம்னோவின் தலைவரான நஜிப்புக்கு கடந்த பொதுத்தேர்தலில் அவரது கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாக இயங்கிய எஸாம் ஓர் அம்னோ அமைச்சருக்கு எதிராகக் கொடுத்த புகார் பற்றி தெரியாமலா இருக்கும்!

அப்துல்லா படாவிக்கும் நஜிப் ரசாக்கும் தங்களுடைய அமைச்சரவை சகா மீது கைவைப்பது கட்சியின் சுரண்டும் பாரம்பரியத்திற்கு முரணான செயலாகிவிடும் என்பதால் அவர்கள் அதைப் புறந்தள்ளி இருக்கலாம்.

ஆனால், ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் தலைவர் என்ற முறையில் ஓர் அமைச்சருக்கு எதிராகச் செய்த புகார் குறித்து இந்த நான்கு ஆண்டுகளாக எஸாம் மௌனமாக இருந்து வருகிறார். ஏன்?

எஸாம், அமைச்சரவையின் மூத்த உறுப்பினருக்கு எதிராகச் சுமத்திய குற்றச்சாட்டும் கடுமையானது. மேலும், அக்குற்றச்சாட்டை தயாரிப்பதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். அக்குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட புகாரை பிரதமரை தவிர வேறு எவரிடமும் கொடுக்க அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்புகார் குறித்த ஆவணங்களைத் தன்னுடன் வைத்திருக்கவும் அவர் விரும்பவில்லை. பிரதமர் அப்துல்லா படாவி வேலை நிமித்தம் பேராக் மாநிலத்தில் இருந்ததால், வேறு வழி இன்றி அப்புகாரை பிரதமரின் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னர், அந்த அமைச்சருக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக தொடங்கலாம் என்று நம்புவதாக எஸாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சரவையின் மூத்த உறுப்பினரான அந்த அமைச்சர் 10 ஆண்டுகளுக்கு முன்பு (1997 இல்?) தனது சொந்தக் கடனைத் தீர்ப்பதற்காக பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள ஒரு நிறுவனத்திலிருந்து ரிம30 மில்லியனை அபகரித்து விட்டார் என்பது எஸாமின் புகார் ஆகும்.

அந்த அமைச்சர் ஓர் அம்னோ அமைச்சர் என்பதைத் தெரிவித்த அவர் வேறு விபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

“அந்த அமைச்சருக்கு எதிராக பல வழக்குகள் இருக்கின்றன. ஆனால் ஒன்று தெளிவானது, அவர் பொது நிறுவனம் ஒன்றின் நிதியிலிருந்து ரிம30 மில்லியனை தமது சொந்தக் கடன்களைக் கட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளார்”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் எஸாம் கூறினார்.

632 பக்கங்களைக் கொண்ட அந்தப் புகாரைத் தயாரிக்க கெராக் இயக்கத்துக்கு ஆறு மாதங்கள் ஆயிற்று.

அதில் அந்த பொது நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் 1998 ஆம் ஆண்டில் செய்த இரு போலீஸ் புகார்கள், மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அறிக்கைகள், “ஆயிரக்கணக்கான ரிங்கிட்” சம்பந்தப்பட்ட ரசீதுகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. 13 பிற்சேர்க்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த அமைச்சர் யார் என்று கூறாத எஸாம், “எங்களுக்கும் பிரதமரின் அலுவலகத்திற்குமிடையில் ஓர் உடன்பாடு உண்டு. அதை அவர்கள் அறிவிப்பார்கள், நானல்ல. (பெயரை) அறிவிக்கும் சிறப்புரிமையை நான் அவருக்கு அளிக்கிறேன்”, என்றும் தெரிவித்தார்.

“இது ஒரு கிரிமினல் நம்பிக்கை மோசடி வழக்காகும். வேறு எந்த ஒரு நபரோ, மலேசிய குடிமகனுக்கோ எதிராக தெளிவான ஒரு நம்பிக்கை மோசடி வழக்கு இருக்குமானால், அவர் கைது செய்யப்படுவார். ஆக, இந்த அமைச்சர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்”, என்று கூறிய எஸாம் இச்சம்பவம் அவர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்தது என்று மேலும் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீது உடனடியாக நடவடிக்கை, அதுவும் கைது நடவடிக்கை,  எடுக்கப்படுவதை வலியுறுத்தியிருந்த எஸாம் அப்படி எந்த ஒரு நடவடிக்கையும்   எடுக்கப்படாத நிலையில், பிரதமர் அப்துல்லா படாவியின் முன்னிலையில் அம்னோவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

2008 ஆம் ஆண்டில், எஸாம் செனட்டராக நியமிக்கப்பட்டார். அமைச்சருக்கு எதிரானப் புகார் என்னவாயிற்று?

எஸாம் நொடித்துப் போய் இருக்கலாம். பணத்திற்காக கட்சி மாறவில்லை என்றும் கூறலாம். ஆனால், அவர் அரிச்சந்திரனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே. மலேசியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் அரிச்சந்திரன் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்க முடியாது. அவர்களில் எஸாமும் ஒருவராக இருக்கலாமல்லவா?