-கி.சீலதாஸ். ஜனவரி 16, 2018.
ஜெர்மனியின் அதிபர், சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் மற்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் கொம்பனாக விளங்கினார். ஐரோப்பிய நாடுகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பது அவரின் பேராசை. ஜெர்மனி வம்சமே உயர்வானது, தனித்தன்மை வாய்ந்தது. அது மட்டுமே ஆளும் தகுதி கொண்டது என்று பிரச்சாரம் செய்தார். பெரும்பான்மையான ஜெர்மனியர் அவரை நம்பினர், முழுமையாக ஆதரித்தனர்.
ஹிட்லரின் மண்ணாசையைப் பலர் கண்டித்து சாடினார்கள் இதெல்லாம் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் நெவில் செம்பர்லெய்ன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருந்தது. ஹிட்லரின் போக்கு உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் எச்சரித்தார். அதையும் புறக்கணித்தார் செம்பர்லெய்ன். ஹிட்லர் போலந்து மீது போர் நடவடிக்கை மேற்கொண்டதும் பிரிட்டன் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தது.
இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் பிரதமராக இருந்த செம்பர்லெய்ன் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதும், சர்ச்சில் பிரதமரானார். சில காலமாகவே அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டவர் சர்ச்சில். தமது அறுபத்தாறாம் வயதில் பிரதமர் பொறுப்பை ஏற்றதும் அவரின் பரம விரோதியான கம்யூனிஸ்ட் ரஷ்யாவுடன் உடன்பாடு கண்டார். ஹிட்லரின் மனநிலையை உணர்ந்த ரஷ்யா பிரிட்டனோடு இணக்கம் காண எடுத்துக்கொண்ட முயற்சிகள் செம்பர்லெய்ன் நிர்வாகத்தின்போது மதிப்பளிக்கப்படவில்லை. சர்ச்சில் நிர்வாகத்தில் மாற்றம் காணப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிராஞ்சு ஆகிய நாடுகள் கண்ட கூட்டணி பலத்த உயிர் சேதங்களுக்குப் பிறகு ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளைத் தோற்கடித்தது.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இங்கே கவனிக்க வேண்டியது என்ன? தம் நாட்டுக்கு ஆபத்து எனும்போது சித்தாந்த வேறுபாடுகளுக்கு வழிவிடாமல் பொதுநலனுக்கு மதிப்பளிப்பதே.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கும் ஒரு பெரிய வரலாற்று சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இந்திய அரசியலில் முன்னணி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார். இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் (கவர்னர் ஜெனரல்). காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். இவரை ராஜாஜி என்று அழைப்பார்கள். இருமுறை மதராஸ் (இப்பொழுது தமிழ் நாடு) மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் போக்கு நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தீர்மானித்துப் புது அரசியல் கட்சி ஆரம்பித்தார். அதுதான் சுதந்திரா கட்சி. அறிஞர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு உடன்பாடு கண்டு 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி காணப்பட்டது. அதற்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் பின்தங்கிய நிலையில்தான் இன்றும் இருக்கிறது. ராஜாஜி காங்கிரஸ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது அவருக்கு வயது எண்பத்தெட்டு. அந்த வயதிலும் அரசியல் ஆர்வம் மிகுந்து காணப்பட்டதற்குக் காரணம் நாட்டின் மீது அவருக்கு இருந்த பற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது நாம் சிந்திக்க வேண்டியது என்ன? எதை எல்லாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்?
நாட்டின் நிலை எப்படி இருக்கிறது? நாட்டுத் தலைவர்களின் நாணயம் எந்த அளவில் உயர்ந்து நிற்கிறது? அல்லது அவர்களின் நாணயத்தில் சந்தேகம் ஏற்படுகிறதா? நாட்டில் ஊழல் எந்த அளவில் காட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது அல்லது ஊழலை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கின்றனவா? இதுவரை நாட்டில் நடந்த சம்பவங்கள் எப்படி நாட்டின் கௌரவத்தைப் பாதித்துவிட்டது? இதுவரை சம்பந்தப்பட்டது தலைவர்களின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளா? நாட்டு நடப்பு எந்த அளவுக்கு வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது? அவர்கள் மலேசியர்களைத் திறம் மிக்கவர்கள் பட்டியலில் சேர்த்தார்களா? இல்லை, நாட்டு நிலவரம் மலேசியர்களைத் தலைகுனிய வைக்கிறதா? இவை யாவும் சிந்திக்க வேண்டிய கேள்விகள், பிரச்சனைகள்.
அதைவிடுத்து எதிர்க்கட்சியினர் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீரின் வயதை ஒரு பிரச்சனையாக கிளறுவதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. முதிர்ந்த வயதைக் காரணம் காட்டுவதைப் பார்த்தால் அவரின் நிர்வாக தகுதியை ஏற்றுக்கொள்வதாகவே நினைக்கச் செய்யும். நாடு போரை எதிர்கொள்ளும்போது போர் வீரர்கள் இளம் வயதினராக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குப் போர் வியூகங்களை வழங்குவது அனுபவமிக்க வயதானவர்கள் என்பதை மறந்தால் நாட்டிற்குக் கேடுதான்.
வாக்காளர்கள், ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலையைக் கைவிட்டு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்திக்க ஆரம்பித்தால், நன்று.
இந்த கட்டுரை தொகுப்பாளர் பல வயது முதிர்ந்த தலைவர்களை உதாரணம் காட்டி கட்டுரையை திரு. கி.சீலதாஸ் முன் வைத்த கருதுக்கள் வர வரவேற்கும் வேலையில் அதில் அந்த தலைவர்கள் செய்த சேவைகள் எந்த துறையில் முன்னேரினர்கள் என்பதை கட்டுரை ஆசிரியர் பார்க்கவேண்டும். வயது முதிர்ந்த பிரதமர் பதவிக்கு வயது ஒரு கட்டுப்பாடா? என தலைப்பு கொடுத்து விட்டு கட்டுரையை வகுத்தது அதுதான் சிக்கலான கேள்வி. கடுரையாளர் பின்நோக்கி பார்க்க வேண்டும். நம் நாட்டிற்கு வந்த பிரதமர்கள் எல்லோரும் வயது முதிர்ந்த பின்னரே தலைமை பொறுப்பை பிடித்தவர்கள் மறுப்பு இல்லையே. இதில் வேடிக்கை என்ன வென்றால் நீங்கள் கட்டுரையில் கூறிப்பட்ட தலைவர்கள் வெவ்வேறு திசையில் ஆற்றல் பெற்றவர்கள். அனால் பணத்தின் மீது மோகம் கொள்ளவில்லை. ஒரே திசை ஒருவர் ராணுவத்தில் கொம்பனாக விளங்கினார், அடுத்தவர் பொது நலனுக்கு மதிப்பளித்து இருந்தவர். முன்றாம் மவர் இவரை ராஜாஜி இவரை சொல்லவே வேண்டாம் மிக புத்திசாலித்தனம் கொண்டவர். அடுது இபோது இருக்கும் வட கொரியா ஜனாதிபதி வயது 8 January 1984 (age 33) பார்த்திர்கள இந்த இளம் வயதில் பல வல்லரசு நாடுகளை கதி கலங்க வைக்கிறார். விசயத்திற்கு வருவோம் நமது நாட்டின் முன்னால் பிரதமர் இருந்த காலத்தில் அவருக்கு மிக நெருக்கதல் கொடுத்து மக்கள் விலக சொன்னார்கள். அப்படி உள்ளவர்களை மறுபடியும் வர வேண்டும் என்பது சிறப்பாக இருக்காது. நமது நாட்டில் பல இளம் வயது முதலமைச்சர்கள் மிகவும் திறம்பட மாநிலங்களில் சேவை செய்கிறார்கள்… இன்றும். நாம் எதிர்பர்ப்பது ஒரு துய்மையான மனிதர். மக்களின் மனதை நன்கு அறிந்து சேவை செய்பவரை. அதில் இளம் வயது பிரதமர் வந்தால் தவறு இல்லை என்பதே என் கருத்து. இப்போ இருக்கும் நமது பிரதமர் கூட மிக இளம் வயதில் PAHANG முதலமைச்சர் இருந்தவர். இன்றுவரை அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
கட்டுரையாளர் சொல்வது வரவேற்க கூடிய ஒன்றுதான் ! பிரதமர் ஆவதற்கு வயது ஒரு தடை இல்லைதான் ! ஆனால் இந்த முன்னாள் பிரதமர் 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்து நாட்டை மேம்படுத்தியதோடு தன்னையும் உயர்த்திக்கொண்டு பதவி விலகியவர் ! இவர் மீண்டும் பிரதமராக ஆசைப்படுவது அவரின் சுயநலத்தையும் ! தனக்கு சாதகமாக இல்லாத இன்றைய பிரதமரை பதவி இழக்கச்செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கத்தில் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைபவர் ! மொகிதீன் ஏன் பிரதமர் வேட்பளராக முன் மொழிய படவில்லை ! வான் அஜிசா ஏன் பிரதமராக வேட்பளராக முன் மொழியப்படவில்லை ! தான் பிரதமராகி முன்பு அவர் தலைமையில் ஒரு நாடகம் அரங்கேறியதே ! பதவி விலகுகிறார் என்றவுடன் அம்னோ மகளிர் தலைவி கண்ணீர் விட்டு கதறினாரே அதைபோல் ! விலகுவது போல் விலகி மகன் முக்ரிஸ் சை பிரதமராக்கிவிடலாம் எனும் சுயநல திட்டம் ! ஆசைக்கு வயது கட்டு பாடு கிடையாது !
அருமையான கட்டுரை ஐயா…அதற்காக என் நன்றிகள்.
முதுமை வயது ஒருபுறம் இருக்கட்டும்.
பதவியை விட்டுப் (விரட்டப்பட்டு) போகும் போது ‘ம—- சமுதாயத்துக்கு இன்னும் நான் நிறைய செய்திருக்க முடியும். நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்னவந் யாரென்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவன் குறிப்பிட்ட அதே ‘ம_____ மக்கள் அவனை நோக்கி இப்போது உமிழ்வதையும் நாம் அறிவோம்.
அந்த ‘ம—-” மக்களுக்கு அவன் எந்த குறையும் வைக்கவில்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு அள்ளி அள்ளி கொடுத்தான். போத்தாததற்கு மற்ற இனத்தவரிடமிருந்தும் பிடுங்கியும் கொடுத்தான்.
அப்படிப்பட்டவனை நாங்கள் ஆரத்தி எடுத்து மீண்டும் உயர்பதவியில் அமர வைக்க வேண்டுமா? இது என் கேள்வி மட்டும் அல்ல அவனது காலத்தில் ஒடுக்கப்பட்டு உரிமையை இழந்த ஒரு சமுதாயத்தின் கதறல் இது.
அப்படி அமர வைத்தால் இருப்பதையும் இழந்து விட்டு உடுத்தியிருக்கும் உடைகளோடு மீண்டும் பழைய ‘தர்ம ஆர்டர்’ பெறவேண்டியிருக்கும். பரவாயில்லையா?
ஆட்சி மாறக்கூடாது என்பது என் வாதம் அல்ல. என் விவாதம் எல்லாம் நாம் பழைய குருடர்களாக ஆக வேண்டுமா? என்பது தான். இந்த வாலிபக் கிழவனை விட்டால் உயர் பதவியில் அமரக்கூடிய எவரேனும் எதிரணியில் இல்லையா?
‘இல்லை’ என்பது இங்கே பதிலாகத் தரப்படுமானால் அவனது காலத்துக்குப் பின் எதிரணியும் எதிரணிக்கு நம்பி வாக்களித்தொரும் அனாதைகளா?
இல்லை இல்லை அது அப்படி இல்லை அவனது காலத்துக்குப் பின் உயர்பதவிக்கு ஆள் அடையாளம் காணப்பட்டு விட்டது என்பது பதிலாகுமானால் அவர்களில் ஒருவரை இப்போதே உயர் பதவிக்கு சுட்டிக்காட்டலாமே…?
ஆட்சியைப் பிடிக்க மட்டுமே இந்த தலைமைத்துவம் என்றால் தனிப்பட்ட ஒருவனை நம்பியா எதிரணி தேர்தலில் போட்டியிடப் போகிறது? ஆட்சியைப் பிடித்த பின் பதவிப் போராட்டம் வராது என்பது என்ன நிச்சயம். இந்த கேள்விகளுக்கு எதிரணி பதில் வைத்திருக்கிறதா?