-சீ. அருண், கிள்ளான்
அரசன், அரசு ஆகியோரின் தன்மையினைப்பற்றி திருவள்ளுவர் மிகத் தெளிவாக குறித்துள்ளார்:
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு. (384)
உரிய முறைமையைத் தவறாமல் அறம் அற்றதை நீக்கி வீரத்துடன் செயலாற்றுபவனே மானமுடைய அரசன் ஆவான். இத்தகைய அரசனைத் தலைவனாகக் கொண்டே அரசு நற்பேறு உடைய அரசு ஆகும். இங்கே அரசன் என்பவனைத் தலைவனுக்குரிய குறியீடாகக் கொள்ள வேண்டும். நல்லாற்றலும் நற்பண்பும் கொண்ட தலைவனை எல்லாரும் போற்றிடுவர்.
‘இடம், பொருள், ஏவல் அறிந்து பேசு’ என்றொரு சொலவடை தமிழர்களிடையே உண்டு. மாந்த வாழ்வியலுக்குரிய மிக நுட்பமான கருத்தினைக் குறிக்கின்றது இத்தொடர். உலகின் மிகக் கூர்மையான ஆயுதம் ‘நாக்கு’ எனப் பெரியோர் சொல்வர். நாக்கு என்னும் கூற்று வாயினுள் உள்ள உறுப்பினைக் குறிக்கவில்லை. மாறாக வாய், நாக்கு ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படும் சொற்களையே குறிக்கின்றது. போர்ப் படையைவிட வலிமையானது சொல் என்பது இயல்பான சிந்தனையாகும்.
சொல்லும் கருத்தை இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றினையும் அறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே இத்தொடரின் விரிவாகும். இடத்திற்கு ஏற்ற கருத்தினை வெளிப்படுத்த வேண்டும், வெளிப்படுத்தும் கருத்தின் பொருள் தேவைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய கருத்தே நற்பயன் விளைவிக்கும் கருத்தாகும். இக்கூறுகளின்றி வெளிப்படும் கருத்து வெற்றுப் புலம்பாக இருக்கும். இதனால் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் பயனில்லை.
எதனையும் பொருட்படுத்தாமல் வெளிப்படுத்தும் கருத்தால் பெரும் துன்பம் விளையும். தனக்குத் தானே துன்பத்தைத் தேடிக் கொள்ளும் தன்மையாக அமையும். இதனால் பயனொன்றும் விளைவதில்லை. மாறாகத் தீமையே விளைந்திடும். இதற்குச் சான்றாகத் தவளையின் செயல் அமைந்துள்ளது. எதையும் பொருட்படுத்தாமலும் இடம், பொருள், ஏவல் அறியாமலும் ஒலியெழுப்பும் தன்மை கொண்டது தவளை. எங்கு, எதற்கு, எவ்வாறு ஒலியெழுப்ப வேண்டும் என்பதை அறியாமல் தவளை கத்துகின்றது. தவளை எழுப்பும் ஒலியால் அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன பாம்பும் இன்னபிற உயிரிகளும். சற்று நேரத்தில் இவற்றுக்கு இரையாகின்றது தவளை. தவளை தன் வாயால் கெட்டது, அழிந்தது.
இதே நிலைக்கு ஆளாகியுள்ளார் முன்னால் பிரதமர் மகாதீர் அவர்கள். தான் பிரதமராக இருந்தபோது தேர்தல் செயலாக்கத்தில் நிலவிய குழறுபடிகளைப்பற்றிய கருத்தினைக் கீழுள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளார்:
“என்னுடைய காலத்தில் எதிர்க்கட்சிகள்கூட அத்தகைய தந்திரங்களில் ஈடுபட்டுள்ளன. ஒரு சமயத்தில் ஒரு வீட்டில் 50 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அங்கு இருந்தனர். அந்தத் தொகுதிக்குள் அந்த வாக்காளர்களை அவர்கள் எப்படி பதிவு செய்ய முடிந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை”. (தமிழ் நேசன் : 19.8.2011)
மகாதீர் அவர்களின் இக்கூற்று பல்வகை ஐயங்களுக்கு இடமளித்துள்ளது. தான் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது நிகழ்ந்த குழறுபடியைத் தீர்க்காமல் வாளாவிருந்தது ஏன்? தேர்தல் ஏமாற்றுச் செயலுக்குத் துணைபோனதுபோல் அல்லவா இச்செயல் அமைந்துள்ளது? நாட்டில் ஏற்பட்ட குழறுபடியைத் தடுக்காமல் வாளாவிருந்த பிரதமராக மகாதீர் வெளிப்பட்டுள்ளார். இகுற்றத்தைப் புரிந்ததற்கான சான்றாக இவரின் கூற்று அமைந்துள்ளது.
“என்னுடைய காலத்தில் எதிர்க்கட்சிகள்கூட அத்தகைய தந்திரங்களில் ஈடுபட்டுள்ளன”, இத்தொடரில் “எதிர்க்கட்சிகள்கூட” என்னும் சொல் எதனை உணர்த்துகின்றது. எங்களுடன் சேர்ந்து அவர்களும்கூட செய்தார்கள் என்னும் நிலையினை உணர்த்துகின்றது அல்லவா?
தேர்தல் செயலாக்கத்தில் ஏற்படும் குழறபடிகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டியவர்கள்? தேர்தல் ஆணையம், தேசியப் பதிவகம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினர் இதற்குரிய பொறுப்பாளர்களாவர். இவர்களுள் தேர்தல் ஆணையத்தினரும் தேசியப் பதிவகத்தாரும் முதன்மை இடத்தில் உள்ளனர். இவ்விரண்டு தரப்பினரும் தம் பொறுப்பினைச் செறிவாக மேற்கொண்டிருந்தால் இத்தகைய குழறுபடிகள் ஏற்பட வாய்ப்பில்லை. தங்கள் கடமையின் எல்லையினை அறிந்து அதற்கேற்றவாறு திட்டங்களையும் செயல்களையும் மேற்கொண்டிருந்தால் கள்ள வாக்குகளோ ஆவி வாக்குகளோ விழுவதற்கான வய்ப்பில்லை.
தோட்டத்து மக்கள் எளிய தொடர் ஒன்றினைச் சொல்லுவர். கற்றறிந்தோர் சிந்தனையில் பதிய வேண்டிய கூற்று. ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா?’, தேர்தலில் குழறுபடிகளும் ஏமாற்றுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது யார்? நூல் நுழைவதற்கு ஒப்புதல் கொடுத்தது எது? இதற்குரிய விடை ஊசிதானே? தேர்தல் ஆணையம் தானே? தேசியப் பதிவகம் தானே?
இத்தகைய குழறுபடிகளையும் ஏமாற்றுகளையும் பார்த்துக் கொண்டு வாளாவிருந்தது யார்? முற்றும் கற்றறிந்த மகாதீரர் அவர்கள் தானே?
ஒரே வீட்டில் ஐம்பது வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அஃது ஏமாற்று வேலையின் உச்சம்தானே. மக்களாட்சி தேர்தல் செயலாக்கத்தில் இவ்வாறு நிகழலாமா? இது மக்களாட்சிக்கு இழிவு ஏற்படுத்தும் செயலன்றோ? இதைத் திருத்துவதற்கான வழி என்ன? நடந்தேறிய தேர்தல் மக்களாடசிக்கு ஏற்ப நிகழவில்லை. ஆகவே, இத்தேர்தல் வாயிலாகத் தெரிவு செய்யப்பட்ட அரசில் நம்பகத்தன்மை இல்லை. அரசினைக் கலைத்து மீண்டுமொரு புதிய தேர்தலை நடத்தியிருக்க வேண்டாவா? ஏன் செய்யவில்லை மகாதீர் அவர்கள்? ஆக, குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டுகின்றாரா நம் அன்பிற்குரிய மகாதீர் அவர்கள்?
அறம் சார்ந்த நெறியில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே நாடாளுமன்றம், அமைச்சரவை, மாநிலச் சட்டமன்றம், மாநில ஆட்சி மன்றம் முதலியவற்றில் பொறுப்பேற்க வேண்டும். மக்களாட்சி முறையில் இதுதானே நெறி. அரசு, தேர்தல் ஆணையம், தேசியப் பதிவகம் ஆகிய மூன்று தரப்பினர்தாமே இதனை உறுதிபடுத்த வேண்டும். இதை உணராமல் தவற்றினை மக்கள் மீது சுமத்துவது ஏன்?