மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டுமென பி.கே. குமார் கோரிக்கை
மலேசியாவில் நடந்து முடிந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 200 கூட்டங்களில் பேசியது போல இது மலேசியர்களின் சுனாமி. ஒட்டுமொத்த நவீன தகவல் சாதனங்கள் வழி இளைஞர்களின் மறுமலர்ச்சி.
ஓர் அரசியல் மாற்றத்தை விவேகமாகவும், அறிவுப்பூர்வமாகவும் சனநாயகரிதியாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது இந்நாட்டில் நடக்குமா..? என சந்தேகித்தவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
இந்த மாற்றம் இளைஞர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வெற்றி பெற்றுள்ள அனைத்து பாக்காத்தான் அரப்பான் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக சிறந்த அனுபவமும், ஆற்றலும், திறமையும் மற்றும் தூரநோக்குச் சிந்தனையும் கொண்ட துன் மகாதீர் அவர்கள் கரங்களில் பிரதமர் பதவி ஒப்படைக்கப் பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான மலேசியாவில் இருப்பதாக உணருகிறார்கள்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள அனைத்தையும் விரைவில் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவார்கள் என மலேசியர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
92 சதவீத சீனர்களும் 85 சதவீத இந்தியர்களும் (தமிழர்கள்) பாகாத்தான் அரப்பானுக்கு வாக்களித்து ஆட்சியில் அமருவதை உறுதி செய்திருக்கிறார்கள். இனம் பிரித்து காட்டுவது நமது நோக்கமல்லா விட்டாலும் கூட உண்மையைச் சொல்வதில் தவறில்லை. மலாய்க்காரர்களின் வாக்குகள் பாசு, அம்னோ, அமானா, அடிலான் என்று பிரிந்து சென்றிருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.
இனப்பாகுபாடற்ற ஓர் அரசாங்கம் மலேசியர்களை பிரதிநித்து ஒரு முழுமையான அமைச்சர்கள் துன் மகாதீர் தலைமைத்துவத்தில் அமையவிருக்கிறது. துன் மகாதீர் அவர்களும் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.
இந்தியர்களைப் பொருத்தவரையில் கடந்த காலங்களை போல இல்லாமல் வாக்களித்த இந்திய வாக்காளர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகதவகையில், முழு அமைச்சர் துணை அமைச்சர் பதவிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அரசு சார்பற்ற இயக்கங்கள், பொது நிலையாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
மலேசியா இளைய தலைமுறையினர் ஆட்சி மாற்றத்தின் வழி தங்களுக்குறிய இடங்கள், எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் கருதுகின்றனர்.
22 ஆண்டுகால பிரதமர் பதவி வகித்துள்ள துன் மகாதீர் அவர்களுக்கு மக்களின் நாடித்துடிப்பு நன்கு தெரியும். மாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதில் நிச்சயம் சிரமமிருக்காது.
40-க்கும் மேற்பட்ட அரசுத் துறை தலைமை பொறுப்புகளில் இன நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மலேசியர்கள் என்ற பார்வையில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்புகள் பெறுவதை பாக்காத்தான் அரப்பான் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் பெற்றுள்ள நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என சமூக ஆர்வலரும் மக்கட்செல்வர் பி.கே. குமார் கூறினார்.
பேராக் மாநிலத்தில் புதிய முதல்வராக மாண்புமிகு பயிசால் அசுமு (Faizal Azumu) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பேராக் மாநிலத்தில் அமையப்போகும் ஆட்சி குழுவில் தங்கள் பிரதிநிதித்துவமும், சபாநாயகர் பதவி விட்டுப்போகாமல் இருக்க வேண்டுமெனவும் இந்திய வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். அதனைப் பேராக் மாநில முதல்வர் நிறைவு செய்து வைப்பார் என தாம் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக பி.கே. குமார் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல அனைத்து மாநிலங்களிலும் இந்தியர்கள் (தமிழர்கள்) பிரதிநிதித்துவம் இருப்பதை மாநில அரசாங்கங்களும் உறுதி செய்ய வேண்டுமென தாம் இந்திய வாக்காளர்கள் சார்பாக கேட்டு கொள்வதாக திரு. பி.கே. குமார் தெரிவித்தார்.
திரு. பி.கே. குமார் அவர்கள் தேர்தலுக்கு முன்னமே நந்நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவாகப் பல கருத்துக்களை எழுதி புலனத்தின் வழி பரவி வந்தார். இன்று அவர் செம்பருத்தியில் கருத்தை முன் வைப்பது வரவேற்கத்தக்கது.
#இந்தியர்களைப் பொருத்தவரையில் கடந்த காலங்களை போல இல்லாமல் வாக்களித்த இந்திய வாக்காளர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகதவகையில், முழு அமைச்சர் துணை அமைச்சர் பதவிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அரசு சார்பற்ற இயக்கங்கள், பொது நிலையாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.#
கட்டுரையாளரின் மேற்கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.
கடந்த அரசாங்கம் இந்தியர்களுக்கு மாநியங்கங்களை வழங்கும்போது இந்தியர்களை அவர்தம் தாய்மொழி வாரியாக பிரித்து ஆண்ட முறையை நந்நம்பிக்கை கூட்டணி தவிர்க்க வேண்டும்.
ம.இ.க. தலைவர்களின் புத்தி வழி போகாது, இந்தியர்களின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு மாற்று வழிகளைக் காண வேண்டும்.
முதற்படியாக பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் இருக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர் குடும்பத்தில் ஒருவருக்காவது அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அரசாங்கத்திலும், அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். இது அக்குடும்பங்களைச் சுயகாலில் நிற்க உதவிடும்.
இரண்டாவது, இந்திய மாணவர்கள் ஐந்தாம் படிவத்தோடு கல்வி நிலையைத் துண்டித்துத் தகாத வழிக்குச் செல்வதை நிறுத்த கல்வி அடைவில் குறையுடையவர்களை தொழிற்கல்வி பள்ளிக்கூடங்களில் அதிகமாகச் சேர்க்க ஆவண செய்ய வேண்டும். கல்வி நிலையில் உயர்ந்த தகுதி பெற்றவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு உயர்கல்விக்கூடங்களில் மேற்படிப்பைப் பெறுவதற்கு தக்க வழிவகைகளைச் செய்திட வேண்டும்.
மூன்றாவது, ஏழ்மை நிலையில் வாழும் இந்திய குடும்பங்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு PPRT (Program Perumahaan Rakya Miskin) வீடுகளை அரசாங்கம் கட்டித் தர முன் வர வேண்டும்.
நான்காவது, இந்தியர்கள் நடுத்தர மற்றும் சிறிய வியாபாரத்துறைகளில் முன்னேற தற்சமயம் இருக்கும் அரசாங்க உதவித் திட்டங்களை செம்மைப்படுத்தி மேலும் வலுவடையச் செய்ய வேண்டும்.
ஐந்தாவது, இந்தியரிடையே இருக்கும் குண்டர்கும்பலை வேரறுக்க வேண்டும். இதற்கு காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறாவது, இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும் மாநியங்களில் கோயிலுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒதுக்கப்படும் மாநியங்கள் வரன்முறை படுத்த வேண்டும். சமயத்தை வளர்க்கப் பயன்படாத கோயில்கள் இருந்தென்ன? போயியென்ன?. ஆதலால், கோயில்களுக்கு ஒதுக்கப்படும் மாநியமானது ஒவ்வொரு வட்டாரத்தின் தேவைக்கேற்ப கொடுக்கப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் உதவி என்பதும் கூட கடந்த அரசாங்கத்தில் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. தேவை இருக்கும் இடத்திற்கு மாநியத்தை ஒதுக்காமல் தேவையில்லாத பள்ளிகளுக்கு அளவுக்கு அதிகமாக மாநியத்தை ஒதுக்கிக் கொடுத்து அப்பணம் வெறுமனே விரயமாக்கப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் அரசாங்கப் பள்ளிகளாக மாற்றுவதில் இனியும் சாக்கு போக்கு சொல்லித் தவிர்ப்பதை நிறுத்த வேண்டும். எங்கெங்கு இந்திய மாணவர்கள் குறைந்துள்ளனரோ அப்பள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றிற்குப் பதிலாக இந்தியர் அதிகமாக வாழும் பட்டணங்களில் புதிய தமிழ்ப் பள்ளிகளை நிறுவ ஆவணச் செய்ய வேண்டும்.
இப்படி பல நல்லச் செயல்களை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியர் விரும்புகின்றனர். அதற்குச் சரியான பூசாரி வேண்டும்.