‘ஞாயிறு’ நக்கீரன். மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பதவி இழந்த 55-ஆவது நாளில் ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார்.
அரச முதலீட்டு நிதியத்தில் இருந்து கோடிக் கணக்கான வெள்ளி மடை மாற்றப்பட்டது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, ஊழல் ஆகியவற்றின் பெயரில் கைது செய்யப்பட்ட அவர், அன்றைய பொழுது முழுவதும் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அடுத்த நாளே(ஜூலை 04) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
நம்பிக்கை மோசடி தொடர்பான நான்கு குற்றச் சாட்டையும் மறுத்து தற்பொழுது 10 இலட்ச வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர மலேசியாவில் இப்படிப்பட்ட அரசியல் – நீதிமன்ற நடவடிக்கை இதுதான் முதல் முறை.
1976 முதல் இளம் வயதில் இருந்தே மத்தியக் கூட்டரசில் துணை அமைச்சர், அமைச்சர், மந்திரி பெசார், பிரதமர் பதவி என்றெல்லாம் பொறுப்பு வகித்து நீண்ட அரசியல் அனுபவமும் பாரம்பரியமும் கொண்ட தலைவரான நஜிப்பிற்கு இப்படி நிகழ்ந்திருக்கூடாது. ஆனாலும், இதை தேடிக் கொண்டது, அவரேதான்.
உலக பொதுமறை நூலை வடித்த திருவள்ளுவர், நில உலகில் வாழும் அனைத்து உயிர்களும் மழையையும் வெம்மையையும் அளிக்கும் வானத்தை எதிர்நோக்கி வாழ்வதைப் போல, ஒரு நாட்டின் குடி மக்கள் அனைவரும் தங்களின் தலைவனை எதிர்பார்த்துதான் வாழ்கின்றனர் என்பதை
“வான்நோக்கி வாழும் உலகெலாம் மன்னவன், கோல்நோக்கி வாழும் குடி” -என்னும்(542-ஆவது) குறளின் மூலம் சொல்லி இருக்கிறார்.
மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்காததற்கு இப்பொழுது மன்னிப்பு கேட்கும் நஜிப், பதவியில் இருந்த காலத்தில் அரசாளும் தலைவன் என்னும் அடிப்படையில் தன்னை மட்டுமே நம்பியிருந்த மக்கள் பொருள் விலை ஏற்றத்தால் பட்ட இன்னலைப் பார்த்து, பொருள் விலையேற்றத்தால் வாழ்க்கை சுமை கூடியுள்ளதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஓர் அமைச்சசை விட்டு கூற வைத்தார்; கொஞ்ச நாள் கழித்து, பொருள் விலை ஏற்றம் என்பது கடவுளின் செயல்; மாறாக இதற்கும் தேசிய முன்னணி அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இன்னோர் அமைச்சரை விட்டு கூற வைத்தார்.
அதைத் தவிர, தன்னுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட நிதி குறித்து, இது கட்சிக்கான நிதி என்றும் வெளிநாட்டினர் வழங்கியது என்றும் நஜிப் அப்போது சொன்னார். அருள் கந்தா, அதற்கு ‘ஆமாம் சாமி’ என்பதைப் போல அறிக்கை மேல் அறிக்கையும் விட்டுக் கொண்டிருந்தா. இப்பொழுதோ, “தவறுதான்; ‘1எம்டிபி’ அதிகாரிகளை முழுமையாக நம்பினேன் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர்” என்று அவர்கள்மீது பழி சுமத்துகிறார். ஆகக் கடைசியாக, இந்த விவகாரம் தேசிய வங்கியின் அப்போதைய ஆளுநரான டான்ஸ்ரீ ஸெத்திக்கும் தெரியும் என்று அவர்மீதும் நஜிப் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பின் இரு நாட்கள்கூட தாக்கு பிடிக்க முடியாத நஜிப், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் தேசிய முன்னணித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதை யெல்லாம் உணர்ந்து, ஒருவேளை தேர்தலுக்கு முன்பே அவர் செய்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கலாம்.
அவர் அப்படி யெல்லாம் செய்யாத நிலையில், பதவி ஒன்றே இலக்கு என்றிருந்த சூழலில் தேர்தல் தோல்விக்குப் பின் அவர் தொடர்புடைய வீடுகளில் இருந்து பொன், பொருள், பணமெல்லாம் வண்டி வண்டியாக அள்ளிச் செல்லப்பட்டன.
அப்போது, பணமெல்லாம் கட்சிக்கு சொந்தமானது; பொருளும் பொன் ஆபரணமும் மனைவி, மக்களுக்கு பல கட்டங்களில் பலரால் அன்பளிப்பு செய்யப்பட்டவை என்றார். அந்தக் கட்டத்தில், பிரதமர் துன் மகாதீர், நஜிப் மீது குற்றம் சாட்ட போதிய ஆதாரங்கள் இன்னும் கிட்டவில்லை என்று கூறினார்.
உடனே, நஜிப் வேறு விதமாக இதைப் பிரதிபலித்தார். என் மீதும் தேசிய முன்னணி அரசு மீதும் குற்றம் சுமத்த எந்த ஆதாரமும் இல்லை என்பவர்கள், தேர்தலுக்கு முன், எங்கள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியே ஆட்சியைப் பிடித்தனர் என்றார்.
மகாதிர், சற்று இடைவெளிக்குப் பின், நஜிப் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்த போதிய ஆதாரங்கள் கிடைத்துவிட்டன என்றதும், நஜிப்பின் போக்கில் மாற்றம் தெரிந்தது.
வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் இருந்த உணவுப் பண்டத்தை துப்பறியும் போலீசார் சாப்பிட்டனர்; தன் மக்களுக்கும் மறுமக்களுக்கும் பரிசாக வழங்கப்பட்ட பொருட்களையும் போலீசார் அள்ளிச் சென்றனர். பேரக் குழந்தையின் செருப்பைக் கூட போலீசார் கவர்ந்து சென்றனர் என்று சொன்னார். அத்துடன், நான் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்றார்.
இதில் மிகவும் அபத்தமானது, அமெரிக்க மேநாள் குடியரசுத் தலைவர் பராக் ஓமாமாவின் மனைவியும் சௌதி இளவரசரிடம் இருந்து இலட்சக் கணக்கான டாலர் மதிப்புடைய பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றார் என்றார். மிச்செல் ஒபாமா மட்டுமல்ல; அமெரிக்காவின் அனைத்து அரச தந்திரிகளும் பெறும் பொருள் யாவும் வெள்ளை மாளிகையின் வெள்ளை ஏடுகளில் வெண்மையாக பதிவு செய்யப்படும் என்பதை நஜிப் அறிந்திருக்கவில்லை.
இவர் பதவியில் இருந்த காலத்தில் மக்கள் நலத் திட்டங்களையும் புதுமையான கொள்கைகளையும் வகுத்ததைவிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தேடி தேடி பண அனுகூலத்தை மானியம் என்ற பெயரில் வழங்கியதுதான் அதிகம். அதற்குக் காரணம், இவர் பக்கம் இருந்த அளவுக்கதிகமான பணமா அல்லது பலவீனமா?
அரசாளும் தலைவரைப்பற்றி, மக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோ அடிகள் சொன்ன கருத்தை இங்கே ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். இறைவனையும் மன்னனையும் வாழ்த்தியும் நாயகனாகக் கொண்டுமே பெரும்பாலான பழந்தழிம் இலக்கியங்கள் படைக்கப்பட்ட வேளையில், இளங்கோ அடிகள் ஒருவர் மட்டுமே பொது மக்களில் ஒருவனான ஒரு வணிகக் குடிமகனைத் தலைவனாகக் கொண்டு ஒரு பெருங்காப்பியமான சிலம்பு அதிகாரத்தைப் படைத்தார். அதில்,
அர(ரை)சியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
என்னும் மூன்று கருத்துகளை முத்தாய்ப்பாக முன் வைத்திருப்பார்.
அரசியலில் தவறு செய்வோரை அறமே தண்டிக்கும்; கற்புக்கரசியாக வாழும் பத்தினியை வானோரும் போற்றுவர்; அனைவரையும் அவரவரின் ஊழ்வினைப் பயன் தவறாது தொற்றிக் கொள்ளும் என்னும் கருத்துகளைத்தான் இந்த மூவரிகளின் மூலம் இளங்கோ அடிகள் இந்த உலகிற்கு சொல்லி உள்ளார்.
அரசாலும் தலைவனே அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவது தகுமா என்பதற்கும் அப்படி முறைகேடாக பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் அறமே உரிய நடவடிக்கைக்கு விதையாக இருக்கும் என்பதையும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு மக்கள் காவியம் எடுத்தியம்பி உள்ளது. இந்தக் கருத்து நாடாள்வோருக்கு மட்டுமல்ல; தன் குடியாளும் ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும்.