தனிநாயகர் அடிகளார் பெயரில் அயலக நாட்டில் தமிழுக்காகவும் இலக்கியத்திற்காகவும் தீவிர செயல்பாடு கொண்டவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘தனிநாயகர்-தமிழ் நாயகர்’ விருதை பெரும் முதல் நபராக மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் திகழ்கிறார்.
இந்த விருதை கடந்த 05.07.2018-இல் தஞ்சை அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கியது.
அயலகத்தில் தமிழ் பல்கலைக்கழகங்கள், தமிழ் ஆய்விருக்கைகள் உருவாக பெரும் பணியாற்றியவர்களில் முக்கியமானவர் தனிநாயகர் அடிகளார். தமிழ்வேள் கோ.சாரங்கபாணியுடன் இணைந்து செயலாற்றியவரும்கூட. அவரின் பெயரில் இந்த விருது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்ப்ட்டது.
கெடாவில் வசிக்கும் தமிழாசிரியரான பாலமுருகனின் படைப்பாற்றலையும் அவருடைய சிறார் இலக்கியத்தின் மீதான தீவிர ஈடுபாட்டையும் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு முதல் எழுதிக் கொண்டிருக்கும் பாலமுருகன் 2010ஆம் ஆண்டில் தன் நாவலுக்காகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து ‘கரிகாற்சோழன்’ என்கிற விருதைப் பெற்றவர். மீண்டும் அதே தஞ்சை மண் தன் படைப்புலகத்தைத் தீவிரமாகத் திறனாய்வு செய்து ‘தனிநாயகர் தமிழ் நாயகர்’ என்கிற விருதை அளித்தமைக்காகப் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளின் கல்வி மீதான அக்கறையையும் கல்வியில் நவீனப் புரட்சி ஏற்படவேண்டுமென்றும் எழுதுபவர் பாலமுருகனின். இவரின், ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற மலேசியாவின் முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவலை திறனாய்வு செய்த அக்கல்லூரியின் பேராசிரியர் திரு.எழிலரசன், சிறார்களை வசிகரிக்கும் எழுத்தை மலேசியாவில் மட்டுமல்ல கடல் கடந்தும் உருவாக்கியவரில் கே.பாலமுருகன் தனித்த இடத்தைப் பிடித்திருப்பதாக தன் ஆய்வில் முன்வைத்துள்ளார்.
அதோடு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு.தெ.வெற்றிச்செல்வன் அவர்கள் ‘கே.பாலமுருகனின் படைப்புலகம்’ என்கிற தலைப்பில் அவருடைய சிறுகதைகள், சினிமா கட்டுரைகள் ஆகியவற்றை பற்றிய தன் திறனாய்வு பார்வையை முன்வைத்தார். மலேசியாவிற்கு வருகை தரும்போதெல்லாம் கே.பாலமுருகனின் சிறுகதைகளில் வெளிப்படும் நவீன உத்திகளைப் பற்றி பல முறை தான் கவனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறுவர் நாவல் படைப்பது, சிறுவர் இலக்கிய மேற்கோள் அகப்பக்கத்தை வழிநடத்துவது, சிறார் சிறுகதை பட்டறைகளைக் கடந்து ஏழு ஆண்டுகளாக நடத்துவது, என்று மலேசியாவில் அடுத்த தலைமுறையிடம் இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவிக்க எழுத்தாளராக இருந்து கொண்டே செயல்படும் கே.பாலமுருகனின் முயற்சிகளைப் பாராட்டும் வகையிலே இவ்விருது அவருக்குத் தஞ்சையில் வழங்கப்பட்டது.