வெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும் அரசே காரணம்!

‘ஞாயிறு’ நக்கீரன், 206 எலும்புகளைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ள மனித உடல் என்னும் கோட்டையின் உயரம் என்னவோ ஆறு அடிதான். ஆனால், அப்படிப்பட்ட மனிதன் எழுப்பும் கட்டடக் கோட்டைக்கும் கற்பனைக் கோட்டைகளுக்கும் எல்லை இல்லை. இதற்கெல்லாம் காரணம், ஆறடி மனிதக் கோட்டைக்குள் குடி கொண்டிருக்கும் மனக்கோட்டைதான்.

உருவம் இல்லாத அந்தக் கோட்டையை எவரும் காண இயலாது. ‘என் மனதில் பட்டதைத்தான் சொல்கிறேன்’ என்று ஒருவர் தன் நெஞ்சில் கை வைத்து சொன்னால்கூட, நெஞ்சக்கூட்டில் மனம் இல்லை. அது ஒரு மாய உணர்வு; அப்படிப்பட்ட மனம் எப்பொழுதும் கொந்தளிப்பாதகத்தான் இருக்கும். எப்பொழுதும் உணர்ச்சிப் பிழம்பாகத்தான் இருக்கும். அதனால்தான், நாம் ஆனந்த வேளையிலும் கண்ணீர் வடிக்கிறோம்.

இதனால்தான், சதாவதானி(ஒரேப் பொழுதில் நூறு அவதானம் செய்தவர்) செய்குதம்பி பாவலர், “மனம் என்னும் அடுப்பை ஒருபோதும் அணைத்துவிடாதீர்கள்” என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் நேசப் படைகளின் சார்பில் இந்த உலகையே ஆட்டிப் படைத்த வின்ஸ்டன் சர்ச்சில், குறும்புக்கார சிறுவனாக வளர்ந்து, அடாவடி இளைஞனாக விளங்கியவர். அப்படிப்பட்ட சர்ச்சிலுக்கு இன்றளவும் அடையாளமாக இருப்பது பெரிய சுருட்டுதான்.

புகையிலையைப் பதப்படுத்தி சுருளாக சுருட்டிப் பயன்படுத்துவதால், சுருட்டு என்னும் காரணப் பெயரைச் சூட்டிக் கொண்டது சுருட்டு. சுருட்டைப் பற்றவைத்து அதன் புகையை உள்ளிழுத்து விடும்பொழுது, புகையிலையில் உள்ள நிக்கோடின் என்னும் வேதிப் பொருள் இரத்தத்தில் கலந்து இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதால், இனங்காண முடியாத ஒரு வகையான புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. வெண்சுருட்டு என்னும் ‘சிகரெட்’, பீடி எல்லாமும் இந்த வகையில்தான் மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், “இந்த சுருட்டு, சிகரெட், பீடி இவற்றால் மனிதனுக்கு சுறுசுறுப்பு   கிடைக்கிறது என்பது மாயை. அது ஒரு போலியான உணர்வுதான். தேநீர், குளம்பியம்(காஃபி) உள்ளிட்ட சுவை நீரைப் பருகுவதும் இப்படித்தான். நான் வெறும் சுடு நீரைப் பருகியே இந்தப் புத்துணர்ச்சியை பெறுவேன்” என்று கூறும் நடிகர் சிவகுமார் வாழ்வதும் இதேப் பூமியில்தான்; சுருட்டுப் பிரியர் சர்ச்சில் வசித்ததும் இதேப் பூமியில்தான். எல்லாம் அவரவரின் மனதை பொறுத்தது.

சிகரெட், சுருட்டைப் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு அதிகம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லைதான். ஆனாலும், எவரையும் அதட்டி, மிரட்டி பணிய வைக்க முடியாது.  எவரும் தானாக முடிவெடுத்து சிகரெட் புகைப்பதை நிறுத்தினால்தான் உண்டு; சட்டம் போட்டோ, ஒவ்வொருவரின் பின்னாலும் காவலரை நிறித்தியோ தடுக்க முடியாது.

ஓர் ஆடவர், தேநீர் கடையில் அமர்ந்து வெண்சுருட்டை ஊதித் தள்ளுகிறார். அவரின் இடப் புறத்தில் கர்ப்பினி மனைவி அமர்ந்திருக்க, வலப் புறத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க மகள் அமர்ந்திருக்கிறார். அவரின் மடியிலோ இன்னொரு குழந்தை அமர்ந்திருக்க, தன் முன்னால் மேசை மீதி இருக்கும் தேநீரைப் பற்றிக் கூட ஆர்வம் காட்டாமல், வெண்சுருட்டை இழுத்து புகையை விடுவதில்தான் இன்பம் காண்கிறார்.

தன் சொந்த குடும்ப உறுப்பினர்களைப் பற்றியேக் கவலைப் படாத அவ்வாடவர், மற்றவர்களைப் பற்றி எங்கே அக்கறைப் பட போகிறார்?. இத்தகையவர்கள், என்னதான் விலை ஏற்றப்பட்டாலும் வெண்சுருட்டு சுகத்தை விடமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில், ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் வெண்சுருட்டின் விலையை அரசு ஏற்றுவது பொருத்தமில்லை;

மாறாக, உள்ளாட்சி மன்றம், மாவட்ட மன்றம், நகராட்சி மன்றம், ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள் தீயணைப்பு-மீட்புத் துறை ஆகிய அமைப்புகளின்வழி இடையறாது வெண்சுருட்டின் பாதிப்பை எடுத்துரைத்து, அதன்வழி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,

ஆனால் அரசாங்கமோ, இந்தப் பிரச்சினையை ஆழமாக எண்ணிப் பார்க்காமல், மக்கள் நல சிந்தனையுடன் அணுகாமல் விலையை ஏற்றும் வேலையை மட்டும் கச்சிதமாக செய்து வருகிறது. புகைக்கும் பழக்கத்திற்கு ஆளான ஒருவர், அவராக அதை நிறுத்தினால்தான் உண்டேத் தவிர விலை ஏற்றத்தைக் கண்டெல்லாம் எவரும் அசரப் போவதில்லை.

அத்துடன் கள்ளச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் சிகரெட்டை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். மொத்தத்தில் சிகரெட் கடத்தலுக்கும், கள்ள சந்தையில் சிகரெட் சில்லறை விற்பனைக்கும் மொத்த விற்பனைக்கும் அடிப்படைக் காரணம், நல்ல சிகரெட்டிற்கு அரசு விதிக்கும் தொடர் விலையேற்றம்தான்.

இதைப் போலத்தான், சம்சுவும் மலிவு சாராயமும் கள்ளத் தன்னமாகவும் நல்லத்தன்மாகவும் எங்கெங்கும் விற்கப்படுகின்றன.

பிராண்டி, விஸ்கி, ரம், ஜின், ஒயின், பீர், தென்னங்கள், பனை மரத்து கள், சாராயம், அந்தமானில் ஒரு வித மரத்தின் வேரில் வடியும் நீர் என எல்லா மதுவும் ஒரேக் குப்பைதான்; ஒரேக் குட்டையில் ஊரும் மட்டையைப் போலத்தான்.

இதை அருந்தும் ஒரு மனிதனின் முகுளம்தான் முதலில் பாதிக்கப்படுகிறது. காரணம், மதுவில் உள்ள ‘ஆல்கஹால்’ என்னும் வேதிப் பொருள் இரத்தத்தில் கலந்து  இரசாயன் மாற்றாம் செய்வதால், அது முகுளத்தை தடுமாற வைக்கிறது. மூளைக்கு உத்தரவு இடுவதே முகுளம்தான். முகுளம் சோர்ந்து தடுமாறுவதால் மூளையும் நிலைமாறுகிறாது.

இந்தத் தடுமாற்றாம்தான் போதைக்குக் காரணம். இப்படிப்பட்ட போதைச் சுகத்திற்குத்தான் மனிதர்கள் தங்களை ஆட்படுத்திக் கொள்கின்றனர். இதில், பீர்தான் மிகவும் குறைந்த ஆல்கஹால் உடையது. இது, உண்மையில் நல்ல பானம். அளவாகப் பயன்படுத்தினால் இவ்வகை மதுவினால் உடலுக்கு கேடு இல்லை.

ஆனால், இவ்வகை மதுவிற்கு வாரந்தோறும்  விலையை ஏற்றிக் கொண்டே போனால் எப்படி? இதனால்தான் மதுப்பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள், மலிவாகக் கிடைக்கிற சம்சு, சாராயத்தை நாடுகின்றனர். அதுவும் விலையேற்றம் கண்டுவிட்டதால், கள்ள சம்சுவையும் கள்ள சாராயத்தையும் நாடுகின்றனர். போதாக் குறைக்கு தற்பொழுதெல்லாம் மதுக் கடைக்கு வகை தொகை இன்றி உரிமம் வழங்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில்கூட மதுக் கடைக்கு அனுமதி கொடுக்கின்றனர். ஒரே கடை வீதியில் இரண்டு கடைகளுக்கு உரிமம் அளிக்கின்றனர். அதுவும், காலையிலேயே மதுக்கடையை திறக்க அனுமதிக்கின்றனர். இதனால், நாள்தோறும் மில்லியன் கணக்கான வெள்ளி, பொது மக்களிடம் இருந்து சுருட்டப்படுகிறது.

இது இரண்டு வகையில் நாட்டிற்கு பெருநட்டத்தைத் தரக்கூடியது. ஒன்று அரசுக்கு வரவேண்டிய வருவாய்; மற்றது மக்களின் உடல் நலம். குடி மக்களின் உடல் நலம் கெட்டால், அதனால் எழும் சுகாதாரப் பிரச்சினைகளுக்ககுத் தீர்வு காண வேண்டிய கடப்பாடும் அரசின் தலையில் விழுகிறது.

எனவே, வகை தொகையின்றி சிகரெட்டிற்கும், மதுவிற்கும்(பீர்) அடிக்கடி விலையை ஏற்றும் சிந்தனையை மத்தியக் கூட்டரசு கைவவிட்டு, தன் நிலையை உடனே பரிசீலனை செய்ய வேண்டும்.