மனிதவள அமைச்சர், இளஞ்செழியனை நியமித்ததில் நியாயமுண்டு!  

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும், எச் ஆர் டி எப் (HRDF) எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைமை நிருவாக அதிகாரியாக இளஞ்செழியன் வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவிக்கு தகுதியானவரா என்ற வினாவை சிலர் எழுப்பியுள்ளனர்.

இப்படி கேள்வி எழுப்புவர்களின் ஆதங்கம் என்ன? நம்பிக்கை கூட்டணியின் வெற்றிக்காக பலர் தங்களின் உழைப்பையும் பொருளாதார உதவிகளையும் அயராத நிலையில் தியாக உணர்வுடன் அளித்துள்ளனர்.  இவர்களில் ஒருவருக்கு அப்பதவியை கொடுக்காமல் தேசிய முன்னணி ஆட்சியின் போது அந்த அரசாங்கதிற்கு சில நிலைகளில் செயலாற்றியுள்ள இவருக்கு அந்தப் பதவியை அளிக்க காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அயல்நாட்டில் கல்வி பயின்ற இளஞ்செழியன் நல்ல கல்வித்தகுதியையும் ஆற்றலையும் கொண்டவர். தகுதி என்று பார்க்கும் போது அவர் ஒரு திறமையானர் என்பதில் ஐயமில்லை. அவரால் இந்தப் பணியை சிறப்பாக செய்ய இயலும் என்ற நம்பிக்கையை மனிதவள அமைச்சர் பெற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது.

ஆனால், அவரின் இந்த தேர்வு எவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டது?  இது சார்பாக மலேசிய இன்று  மேற்கொண்ட கருத்து குவிப்பின் சாரம் இதுதான்.

இளஞ்செழியன் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர். சிறந்த மாணவராக திகழ்ந்தவர். 1994 முதல் 2001 வரையில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் பொறியியல் துறையில் முதல் நிலை சிறப்பு தேர்ச்சியுடன் பட்டம் பெற்றவர்.

அமெரிக்காவில் படித்த காலத்தில் சமத்துவக் கொள்கை தேவை என்ற அடிப்படையில் மின்னஞ்சல் குழுக்களில் பலத்த விவாதம் செய்ததாகவும், அவரின் கருத்தை ஆமோதித்த எஸ். நாகராஜன் (பிரபல ஆங்கில நாளேட்டில் துணை ஆசிரியராக இருந்தவர்) அவரை வாய்வீரர் என்றும் செயலாற்ற வேண்டுமானால் மலேசியாவுக்கு திரும்புமாறும் சவால் விட்டார்.

10 ஆவது  பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஆர்வமுள்ள குடிமக்கள் (Group of Concerned Citizens (GCC)) என்ற ஒரு குழு துவங்கப்பட்டது. சார்ல்ஸ் சந்தியாகோ, கா. ஆறுமுகம், மனோகரன் மாரிமுத்து, கந்தசாமி பழனியாண்டி, எஸ். நாகராஜன், முனைவர் நடராஜா ஆகியோர் இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். இது நாடு தழுவிய அளவில் 51 மக்கள் சந்திப்புகளை நடத்தி இறுதிக் கட்டமாக ஜூலை 11, 1999 –இல் சிலாங்கூர் சீன சமூக மண்டபத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் (தேசிய  முன்னணி பங்கேங்க மறுத்து விட்டது) ஒரு கூட்டு ஒப்பந்ததை உருவாக்கி கையேழுத்திட்டது.  அதில்  சனநாயக செயல் கட்சியின் லிம் கிட் சியாங், மக்கள் நீதி கட்சியின் வான் அசிசா இஸ்மைல், பார்டி ராயாட் கட்சியின் சைட் உசேன் அலி, சோசிலிச கட்சியின் முகமட் நாசிர், பாஸ் கட்சியின் முஸ்தபா அலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.  இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இளஞ்செழியன் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு, அதன் ஆவணங்களை தொகுத்ததோடு, அதன் கொள்கை பரப்பு ஆதரவாளராக  செயல்பட்டார். அதன் தொடர்ச்சியாக இளஞ்செழியன், தேசிய முன்னணிக்கு எதிராக  ஒரு புதிய அரசியல் விழிப்புணர்வு மலேசியாவுக்கு தேவை என்ற வகையில் ஆழ்ந்த உணர்வுடன் ஈடுபட்டார்.

2001-இல் நடத்த கம்போங் மேடன் இன வன்முறை சம்பவம், அமெரிக்காவில் இருந்த இளஞ்செழியனின் மனதை பாதித்தாகவும், தான் மலேசியாவுக்கு திரும்ப அதுவே காரணமாகவும் இருந்ததாகவும் நாகராஜன் கூறினார்.

வெட்டிபேச்சு (www.vettipechu.org) என்ற வலைத்தளத்தை அமைத்த இளஞ்செழியன், அதன்வழி மாற்று அரசியல் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி அமைத்தார். இந்த வலைத்தளம் வழியாக விவாதங்களில் ஈடுபட்டவர்களில் ஜோமோ சுந்தரம், ஜெயகுமார் தேவராஜ், பி. இராமசாமி, நாகராஜன் மற்றும் கா. ஆறுமுகம் ஆகியோரும் அடங்குவர். அச்சமயத்தில் வெஸ்ட் போர்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரின் மாற்று அரசியல் பாதையை மாற்றுமாறு நிறுவாகத்திடம் இருந்து நெருக்குதல் வந்தது. நிலைப்பாட்டை மாற்ற விரும்பாததால், வேலையை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இந்தியர்களின் சமூக பண்பாட்டு மாற்றங்களுக்காக இளஞ்செழியன் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக, 2005-இல் எம்சிஇஎப்புக்குச் (MCEF) சென்ற பின், தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை உருவாக்க குழந்தை மேம்பாட்டு முனைப்பு (Child Development Initiative) என்ற அமைப்புடன் இணைந்து ஐந்து பாலர் பள்ளிகளை உருவாக்கினார். இதன் ஆலோசகராக தான் சிறி ரேமன் நவரத்தினம் இருந்தார். அதன் வழி உருவாக்கப்பட்ட பாலர் பள்ளிகளில் எடின்பர்க் தமிழ்ப்பள்ளி,. சிகாம்புட் தமிழ்ப்பள்ளி, அப்பர் தமிழ்ப்பள்ளி, தம்புசாமி தமிழ்ப்பள்ளி மற்றும் இரசாக் தமிழ்ப்பள்ளி ஆகியவை அடங்கும்.

தொடர்ந்து தமிழ் அறாவாரியத்தின் வழி அறிவியல் விழா என்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிவியலில் ஆர்வத்தையும் அலசலையும் உருவாக்க ஒரு முக்கிய நபராக இளஞ்செழியன் இருந்துள்ளார் என்று தெரிகிறது. அதோடு இந்திய மாணவர்களைத் தொழிற்திறன் பயிற்சி மையங்களுக்கு அனுப்பும் திட்டங்கள், தமிழ்பள்ளிகளில் வாரியங்களைத் தொடக்கும் திட்டம் போன்றவற்றில் இவர் முன்னோடியாக இருந்து செயலாற்றி வந்துள்ளார். தமிழ் அறவாரியத்தின் நிருவாகச் செயலாளராகவும் அதன் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு இல்ஹாம் திட்டத்தை எம்சிஇஎப் முன்னெடுத்தது, இதன் அமலாக்கத்தில் இளஞ்செழியன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.  இத்திட்டத்தில் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போது கல்லூரியில் பயில்கின்றனர். குறிப்பிடும்படியாக மூவர் இதற்கு முன் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த உலகின் தலைசிறந்த ஒக்ஸ்போர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில்  தற்போது படித்துக்கொண்டிருக்கின்றனர்.

கணினி மென்பொருள் அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் 2002-ஆம் ஆண்டு முதற்கொண்டு மென்பொருள்களைத் தமிழாக்கிக்கொண்டு வந்துள்ளார். அதன் நீட்சியாக 2011, 2014-ஆம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துப் பிழை திருத்தியும் சொற்பிழைத் திருத்தியும் உருவாக்கி இலவசமாகவே வெளியிட்டார்.  தமிழின் முதல் இலக்கணப் பிழைத்திருத்தி அவருடையதுதான் என்றால் பலர் வியப்படைவார்கள்.

தன்னை இந்த அளவுக்கு தமிழர்களின் வளர்ச்சிக்காக ஈடுபடுத்திக் கொண்டுள்ள இவர் தனது குழந்தைகளை தமிழ்பள்ளிக்கு அனுப்புகிறார் என்பதில் எந்த வியப்பும் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

தேசியமுன்னணி  கடந்த 60 வருடங்களாக ஆட்சியில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழர்களின் வளர்சிக்கும் மேம்பாட்டுக்கும் பணியாற்ற விரும்புவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது உரிமை அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து போரட்ட உணர்வுடன் செயலாக்கதிற்காக உழைப்பது. இன்னொன்று நடைமுறையில் உள்ள அரசு இயந்திரங்களை தமிழர்களின் சமூக பண்பாட்டு வளர்சிக்காக வியூக அடிப்படையில் ஊடுருவி அல்லது அவர்களுடன் இணைந்து செயலாற்றுவது. இளஞ்செழியன் தனது பாதையை இரண்டு வகையிலும் மேற்கொண்டுள்ளார் என்பதை உணர முடிகிறது.

இவர் முன்னாள் கல்வி துணையமைச்சர் கமலநாதன் அலுவலகத்தின் வழியும், சில காலக்கட்டத்தில் செடிக் என்ற அமைப்பின் ஆலோசகர் என்ற வகையிலும் செயல்பட்டுள்ளார். இவ்வகையில் செயல்பட்டதால் இவரின் அரசியல் பார்வை தேசிய முன்னணியின் ஊழல் அரசுக்கு உடந்தையாக இருந்தாக பொருள்படாது. அரசியல் போராளிகள் என்ற வகையில் இவரை காண இயலாது. ஆனால், ஆர்வமும் உணர்வும் கொண்ட ஒரு சமூக சிந்தனைவாதியாக பார்க்கலாம்.

இளஞ்செழியனின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கையை ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் கண்டால் இவரின் உண்மையான அடையாளத்தை காண இயலும். அரசாங்கத்தின் பூமிபுத்ரா கருவூல அமைப்பான கஜானா நேசனல் பெர்ஹட் நிறுவனத்தில் உதவி தலைமை நிறுவாகியாகவும் பணியாற்றியுள்ள இவர் ஒரு தரமான நேர்மையான நிறுவாகியாக செயலாற்ற இயலும் எனபதில் ஐயமில்லை.

இப்படிப் பட்ட பின்னணிகளைக் கொண்ட இளஞ்செழியனை மனித வள அமைச்சர் அடையாளம் கண்டு அவரை மனிதவள மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைமை நிருவாக அதிகாரியாக நியமித்திருப்பதில் நியாயம் உள்ளது. அவ்வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளதால், இதில் குறைபாடுகளை காண்பவர்கள் மீண்டும் தங்களின் நிலைப்பாட்டை சீராய்வு செய்ய வேண்டும்.