விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே இல்லை! – கா. ஆறுமுகம்

பேராசிரியர் இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரை விசாரணை செய்யும்படி 50க்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதனால் போலிஸ் அவரை விசாரணை செய்கிறது. இராமசாமி போலிஸ் புகார் செய்தவர்களையும் விசாரிக்க கோரியுள்ளார்.

இதன் சாரம், இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவரை ஒரு தீவிரவாதி என்றும், அதற்காக அவரைப் பிடித்து அவர் மீது தீவிரவாதி என்ற முத்திரை குத்தி அதற்காக அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும்.

தமிழீழ விடுதலை

உலக அரங்கத்தில் தமிழ் என்ற சொல்லையும் தமிழர் என்ற மனிதர்களையும்  கௌரவமான வகையில் அறிமுகப்படுத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

சொந்த மண்ணில் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை தகர்க்கப்பட்ட சூழலில், இவர்கள் அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளின் வழி தங்களது சுய நிர்ணய உரிமைக்கான ஆயுதப் போரட்டத்தைத் துவக்கினார்கள். புறநானூற்று வீரத்தை நம் கண்முன் கொண்டு வந்து வைத்தார்கள்.

அதன் பின்னணியில் தமிழ் தேசியம் என்ற அரசியல் சித்தாந்தம் வலுப்பெற்றது.

அமைதி ஒப்பந்தமும் தடை நீக்கமும்

2002-இல் விடுதலைப் புலிகளின் போரட்டம் ஒரு புதிய திருப்பத்தைப் பெற்றது. அமைதி ஒப்பந்தம் முன்மொழியப்பட்டது. இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் தடையை  நீக்கியது.

இராமசாமி மட்டுமில்லாமல், உலக அளவில்  இலட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதற்குக் காரணம் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு பிறக்கும் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளும் இலங்கை அரசினரும் கொடுத்தார்கள். அப்போது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே இல்லை எனலாம்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் இராமசாமி போன்றோர் அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அது போன்ற அனுபவம் 2004-இல் சென்று வந்த எனக்கும் கிடைத்தது.

அமைதி உடன்படிக்கை என்று நம்பிய தமிழர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு என்பது 1976-இல் ‘தந்தை’ செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்ட  வட்டுக்கோட்டை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதாகும். அது தன்னாட்சி அரசியல் உரிமைகள் அடங்கிய தமிழர்களுக்கான ஒரு தாயகத்தை உருவாக்குவதாகும்.

இராணுவத் தாக்குதல்

ஆனால், அந்த அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. 2006 இல் இலங்கை ஆகாயப்படை தமிழர்கள் உள்ள மவில் ஆறுவில் குண்டு போட்டனர்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் இரண்டு பிரிவினரும் யுத்தத்தில் இறங்கினர். 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் ஒரு காட்டுமிராண்டித் தாக்குதலை மேற்கொண்டு சுமார் 40,000 அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது, தமிழீழ மக்களை சின்னபின்னம் ஆக்கியது. இலட்சக்கணக்கான தமிழர்களை  இடம்பெயரச் செய்தது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் போரட்டம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதோடு 2002 இல் தடை நீக்கம் செய்யப்பட்ட விடுதலை புலிகளின் இயக்கத்தை இலங்கை அரசு 2009-இல் மீண்டும் தடை செய்தது.

போர்க்குற்றங்கள்

அதன்பிறகு வெளியான தகவல்கள் இலங்கை மேற்கொண்ட இனஒழிப்பையும் போர்க்குற்றங்களையும் அம்பலப்படுத்தின. இவை பிரிட்டன்  சேனல் 4 தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகியது, அதோடு ஐக்கிய நாட்டுச் சபையின்  பொதுச்செயலாளர் பன் கீ முன் அமைத்த நிபுணத்துவக் குழுவின் அறிக்கை இனஒழிப்பையும் போர்க்குற்றங்களையும் மேலும் உறுதிப்படுத்தின.

உண்மையான தகவல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டினை மறுஆய்வு செய்தனர். அவ்வகையில் 2012 இல் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கான தனது ஆதரவை மலேசியா மீட்டுக்கொண்டது ஒரு திருப்பு முணையாகும்.

இராமசாமியின் ஈடுபாடு அமைதி ஒப்பந்தம் சார்புடையது. அவர் ஈடுபட்ட காலக்கட்டம் விடுதலைப் புலிகளுக்கான தடைகள் அகற்றப்பட்ட சூழலைக் கொண்டது. இதில் எப்படி அவர் ஒரு தீவீரவாதியாக இருக்க முடியும்?