இன, மத வெறுப்புணர்வை தடுக்கச்  சட்டம் இயற்றப்பட வேண்டும்

-கி.சீலதாஸ்., ஆகஸ்ட் 8, 2018.   

 

துன்  டாக்டர்  முகம்மது  தலைமையிலான  இணையாட்சி  அரசு  இன,  சமய  உணர்வுகளைச்  சீண்டும்  பேச்சுகளைத்  தடை  செய்யும்  சட்டங்களை  இயற்றும்  என்ற  அறிவிப்பு  மிகவும்  முக்கியமானது,  இக்காலத்துக்கு  ஏற்றது,  வரவேற்கத்தக்கது.  இதுபோன்ற  சட்டங்கள்  இங்கிலாந்தில்  நடப்பில்  இருக்கின்றன. பிற  இனங்களை  தரக்குறைவாகப்  பேசுவதைக்  கண்டிக்கும்  சட்டத்தை  இயற்றினான்  பொதுக்காலத்தில்  வாழ்ந்த  அசோக  சக்கரவர்த்தி.  இதுவே,  இந்திய  நாகரீகம்  உலகுக்கு  வழங்கிய  அற்புதமான  விவேகம்.  உலக  நாடுகள்  இன,  சமய  சமத்துவத்தை  கருத்தில்  கொண்டு   துவேஷ மனப்பான்மையை  தடுக்கவும்,  கண்டிக்கவும்  துணிந்தது  வரவேற்கத்தக்கது – அவர்களின்  முதிர்ச்சியை தெளிவுப்படுத்துகிறது.  நம்  நாடும்  அந்த  வரிசையில்  இடம்பெறுவது  போற்றத்தக்கதாகும்.

கடந்த  பல  ஆண்டுகளாகவே  இனங்களைப்  பழிப்பது,  வந்தேறிகள்  என்று  சொல்லுவது  நம்  நாட்டில்  பழக்கமாகிவிட்டது.  அது  போலவே,  சமய  வெறுப்புணர்வுகளைத்  தூண்டிவிடும்  பேச்சுகளும்  அதிகரித்து  வருவதையும்  கண்டோம்.  பல  இனங்களைக்  கொண்டது  நம்  நாடு,  பல  சமயங்களை  சேர்ந்தவர்களைக்  கொண்டிருப்பதை  மறக்கக்கூடாது.  குறிப்பாக  இன  வெறுப்பு  உணர்வு,  பிறரை,  சிறுபான்மையினரை  வந்தேறிகள்  என்று  வேறுபடுத்துவது  சர்வசாதாரணமாகிவிட்டது.   மன உளைச்சளை  உண்டாக்கும்  கருத்துகள்  பேசப்படுவதைத்  தவிர்த்திருக்கவேண்டும்.  அவ்வாறு  பேசுவதைத்  தவிர்க்கும்  பண்பாட்டை,  குணத்தை  வளர்த்திருக்க  வேண்டும்.  அதை  பள்ளிக்கூடங்களில்  ஆரம்பித்திருக்க  வேண்டும்.  அவ்வாறு  செய்யாதது  கவனக்குறைவு  என்பதா  அல்லது  இப்படி  எல்லாம்  சிறுபான்மையினரை  இழிவுப்படுத்தினால்  அவர்கள்  மனம்  நொந்து  வேறு  எங்காவது  போய்விடுவார்கள்  என்ற நோக்கமா?  அல்லது  பெரும்பான்மையினரின்  உயர்வானத்  தரத்திற்கு  மதிப்பளிக்க  வேண்டும்  சிறுபான்மையினர்  என்ற  அகந்தையா?  பெரும்பான்மையினர்  எப்படிப்பட்ட  உரிமைகளைத்  தர முன்வருகிறார்களோ  அதைப்  பெற்றுக்கொண்டு  அடங்கி  வாழ  வேண்டும்  என்ற  எண்ணமா?  இதுபோன்ற கருத்துக்கள்,  எண்ணங்கள்  வளர்வதைத்  தடுத்திருக்கலாம்.  அது  நடைபெறவில்லை.  சட்டத்தை  இயற்றினால்  மட்டும்  போதாது பாராபட்சமற்ற  அமலாக்கமும்  தேவை.  அதுதான்  முக்கியம்.

இப்படிப்பட்டச்  சூழ்நிலையில்தான்  நம்மவர்  பல  நூற்றாண்டுகளுக்கு  முன்பு  வந்த  நமது  மூதாதையர்களைக்  கவனத்தில்  கொள்ளவேண்டிய  நிலைக்கு  உந்தப்பட்டார்கள் நம்மவர்  வரலாற்று  உண்மைகளைத்  தெரிந்து  கொள்வதில்  ஆர்வம்  கொண்டபோது  உண்மைக்கும்,  கற்பனைக்கும்  உள்ள  வேறுபாட்டை  உணர  மறந்தனர்  அல்லது  மறுத்தனர்  என்றாலும்  தகும்.

இந்த  நாட்டுக்கு  தமிழர்கள்  ஈராயிரத்து  ஐந்நூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  வந்தார்கள்  என்ற  கருத்தை  ஒருவர்  அல்ல  பலர்  சொல்கிறார்கள்.  கடாரத்தைச்  சுட்டிக்  காட்டுகிறார்கள்.  இராஜேந்திர  சோழனின்  படையெடுப்பைப்  பற்றி  சொல்கிறார்கள். அந்தச்  சம்பவம்  பதினோறாம்  நூற்றாண்டில்  நிகழ்ந்தது.  இராஜேந்திர  சோழனின்  படையெடுப்பு  குறித்து  எழுத்து  வடிவத்தில்  எந்தத்  தடயமும்  தமிழில்  கிடையாது  என்பதை  ஒப்புக்கொள்ள  வேண்டிய  நிலையில்  இருக்கிறோம்.  அதே  சமயத்தில்  சீன  வரலாற்று  ஆசிரியர்கள்  அந்த  இராஜேந்திர  சோழனின்  வருகையைப்  பற்றி  குறிப்பிட்டிருப்பதை  காணலாம்.  எனவே,  சுமார்  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு  நிகழ்ந்ததை  ஈராயிரத்து  ஐந்நூறு  என்று  சொல்வதைக்கேட்டு  பிறர்  நகைப்பார்கள்.  நமது  வரலாற்று  அறிவை  மெச்சமாட்டார்கள். எப்போது  வந்தோம்,  எந்தச்  சூழ்நிலையில்  வந்தோம்  என்பதல்ல  முக்கியம்.  இன்றைய  நம்  நிலை  என்ன?  பிற  இனங்களோடு  ஒற்றுமையாக  வாழ  கற்றுக்கொண்டோமா,  அப்படிப்பட்ட  மனப்பக்குவத்தை  வளர்த்துக்கொண்டோமா?  இப்படிப்பட்ட  கேள்விகளுக்குப்  பதிலைத்  தேடுவதில்  கவனம்  தேவை. முயற்சி  தேவை,. பலனளிக்காத  விவாதத்தில்  அல்ல.

மலேசியாவின்  இணையாட்சியும்   மாநில  அரசுகளும்  ஒன்றை  உணர்வது  முக்கியமாகும்.  இன,  சமய  குரோதத்தைத்  தடுக்கும்  சட்டத்தை  விரைவில்  இயற்றி,  அமல்படுத்தி  மலேசிய  சமுதாயம்  இனிமேலாவது  ஒற்றுமை  உணர்வோடு  வளர்ச்சிபெற,  வளம்பெற  பல  நல்ல  நடவடிக்கைகளில்  ஆர்வம்  காட்டி  நடைமுறைக்குக்  கொண்டுவரவேண்டும்.  குறிப்பாக  ஆரம்பப்  பள்ளிகளில்  இன,  சமய  ஒற்றுமையை  வலியுறுத்தும்  பாடங்களைக்  கற்பிக்க  வேண்டும்.  பிறரை  நம்ப  வேண்டும்.  எல்லா  மொழிகளும்,  பண்பாடு,  சமய அறிவு  உணர்வுகள்  யாவும்  மதிக்கத்தக்கவை  என்பதை  அனைவரும்  உணரவேண்டும்.  அப்போதுதான்  நம்  மலேசியா  உயர்ந்த  நிலையை  அடைய  இயலும்.  அதுவே  நமது  குறிக்கோளாக  இருக்கவேண்டும்.  அதுதானே  முக்கியம்!  இன,  சமய  ஒற்றுமை  மேலிட்டால்தான்  நாடு  செழிப்படையும்.  மக்களிடம்  நம்பிக்கை ஊன்றிவிடும்.  அதுதான்  நாட்டின்  எதிர்காலத்திற்கு  நல்லது.