ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்

கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று.

  1. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் ஆகஸ்டு 13, 1926 அன்று கியூபாவில் உள்ள பிரான் எனும் கிராமத்தில் பிறந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அவரது தந்தை ஏன்ஜல் மரியா படிஸ்டா காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ் ஸ்பெயினில் இருந்து கியூபா குடிபெயர்ந்த ஒரு பெரு விவசாயி ஆவார்.

  2. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் கரும்பு விவசாயம் செய்து வந்த ஏன்ஜல் மரியாவின் முதல் மனைவி இறந்தபின், தனது வீட்டின் பணியாளாக இருந்த கியூப பெண் லினா ரஸ் கொன்சலஸ் உடன் அவர் வாழத் தொடங்கினார்.

  3. இந்த தம்பதிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் முதல் குழந்தை ஃபிடல். ஏன்ஜல் மரியா மற்றும் லினா ஒரே வீட்டில் வாழ்ந்தபோதும் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தபின்தான் திருமணம் செய்து கொண்டனர். இரண்டாவதாக பிறந்த குழந்தை ராவுல் காஸ்ட்ரோ. அடுத்த ஐவரும் பெண் குழந்தைகள்.

  1. பள்ளிக் காலங்களில் படிப்பைவிட விளையாட்டில் அதிக கவனம் செலுத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, 1940களில் ஹவானா பல்கலைகழகத்தில் படித்தபோது அரசியலில் ஈடுபடத் தொடங்கியதுடன் தனது பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.

  2. பல்கலைக்கழக மாணவரான ஃபிடல் காஸ்ட்ரோ 1946இல் அப்போதைய கியூபா அதிபர் ராமோன் கராவ் சான் மார்ட்டின் அரசின் ஊழலுக்கு எதிராக நிகழ்த்திய உரை அப்போது மிகவும் பிரபலமானது.

  3. 1947இல் டோமினிக்க குடியரசின், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ரஃபேல் டிரோஜிலோவின் அரசைக் கலைக்கும் முயற்சியில், கியூபாவில் இருந்த டோமினிக்க குடியரசு மாணவர்களுடன் கடல் வழியாகக் கிளம்பினார். இம்முயற்சி அமெரிக்க ஆதரவுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

    Castro Cuba

  4. காஸ்ட்ரோ – மிர்தா டையாஸ் பாலார்ட் திருமணம் 1948இல் நடந்தது. இரு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம் இது.

  5. அதிபர் கார்லஸ் ப்ரியோவின் அரசுக்கு எதிராக ராணுவப் புரட்சி மூலம் 1952இல் கியூபா அதிபரானார் ஜெனரல் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. அவரது ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜூலை 1953இல் மான்கடாவில் இருந்த ஆயுதக் கிடங்கைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட காஸ்ட்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகினர்.

  6. காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும்,பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 19 மாதங்களுக்கு பிறகு மே 1955இல் விடுதலை செய்யப்பட்டார்.

  7. அதே ஆண்டு மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ, அங்கு தனது வருங்கால சக போராளி மற்றும் நண்பரான எர்னஸ்டோ ‘சே’ குவேராவை சந்திக்கிறார்.

  8. நவம்பர் 1956இல் ஃபிடல், ராவுல், சே உள்ளிட்ட 81 போராளிகள், 12 பேர் மட்டுமே பயணிக்க உகந்த கிரான்மா எனும் சிறிய படகில் புரட்சியில் ஈடுபட மெக்சிகோவில் இருந்து கியூபா திரும்பினர். 1959இல் கியூப புரட்சி வெற்றிபெறும் வரை, மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்து இந்தக் குழு கொரில்லா போரில் ஈடுபட்டது.

    Castro Che Guevara

  9. கியூபப் புரட்சி 1959 ஜனவரியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மனுவேல் உருசியா லியோ கியூப அதிபரானார். அவரது அரசில் ஜோஸ் மிரோ கார்தோனா பிரதமரானார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் ஆறு வாரங்களில் பதவி விலகியதால், காஸ்ட்ரோ 1959 பிப்ரவரி மாதம் பிரதமர் பொறுப்பேற்றார்.

  10. அதே ஆண்டு ஜூலை மாதம், கருத்து வேறுபாடு காரணமாக மனுவேல் பதவி விலகியும் ஃபிடல் பிரதமராகவே தொடர்ந்தார். ஓஸ்வால்டோ டோர்டிகோ தொராடோ அப்போது புதிய அதிபரானார். ஆனால், அதிபர் பதவி, பிரதமரைவிட அதிகாரம் குறைந்த ஒரு சம்பிரதாய பதவியாகவே இருந்தது. 1976 டிசம்பரில் அரசியலமைப்பு மாற்றப்படும் வரை அவர் அதிபர் பதவியில் நீடித்தார்.

  1. அதன் பின் பிரதமராக இருந்த காஸ்ட்ரோ, அதிபர் பதவியேற்றார். அப்பதவியில் பிப்ரவரி 2008 வரை காஸ்ட்ரோ நீடித்தார். காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமர் மற்றும் அதிபராக இருந்து ஆட்சி செய்த ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு 10 பேர் அதிபராக இருந்தனர்.
    Cuba
  2. புரட்சிக்கு பிறகு கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்களை வைத்து 1961இல் பே ஆப் பிக்ஸ்-இல் கியூபாவால் தோற்கடிக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்பட, கம்யூனிச அரசை கவிழ்க்க பல முயற்சிகளை அமெரிக்கா செய்ததாக கியூபா குற்றம் சாட்டியது.

  3. ஆப்ரேஷன் மங்கூஸ் (Operation Mongoose) எனும் திட்டம் மூலம் காஸ்ட்ரோவின் சிகரெட்டில் நஞ்சு தடவி கொல்ல முயன்றது, அவரது அடையாளமான தாடியை உதிர வைக்க முயன்றது என காஸ்ட்ரோ மீது அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பல தாக்குதல் முயற்சிகளை நடத்தியது.

    Fidel Castro

  4. அமெரிக்க சொத்துகளை காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிச அரசு, 1960இல் தேசியமயமாக்கியத்தைத் தொடர்ந்து அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் பலவும் இன்றும் நீடிக்கின்றன.

  5. பதவி விலகியபின்பு பொது வாழ்வில் ஒதுங்கி இருந்த காஸ்ட்ரோ இரு ஆண்டுகள் கழித்து ஜூலை 2010இல் தொலைக்காட்சியில் தோன்றினார்.

  6. உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரு நாட்டு அரசின் தலைவராக பதவி வகித்தவர்களில் ஒருவரான காஸ்ட்ரோ நவம்பர் 25, 2016 அன்று தனது 90ஆம் வயதில் காலமானார்.

  7. லட்சக்கணக்காக கியூபா மக்களால் வெறுக்கப்பட்ட காஸ்ட்ரோ, கோடிக்கணக்கான கியூபா மக்களால் நேசிக்கப்பட்டார். அவர்கள் அருகில் உள்ள அமெரிக்கா எனும் கோலியாத்தை எதிர்க்கும் டேவிட்டாகவே காஸ்ட்ரோவைப் பார்த்தனர். -BBC_Tamil