மீண்டும்  உள்ளாட்சித்  தேர்தல்.

– கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 18, 2018.

அறுபதுகளின்  பிற்பகுதியில்  நிறுத்தப்பட்ட  உள்ளாட்சித் தேர்தலை  மீண்டும்  நடத்தப்படுவதற்கான  சட்டத்திருத்தங்கள்  செய்யப்படும்  என்ற  இணையாட்சி  அரசின்  முடிவு  மக்களாட்சிக்குக்  கொடுக்கப்படும்  மரியாதையாகும்.  முழுமையான மக்களாட்சி  செயல்படவும்  மக்கள்  தங்களின்  அன்றாடப்  பிரச்சினைகளுக்கு,  தேவைகளுக்குத்  தீர்வுகாணவும் உதவும்.

இந்த  நாட்டுக்குச்  சுதந்திரம்  நல்கப்படும்  என்று  பிரிட்டன்  ஒப்புக்கொண்ட  போதிலும்  1948ஆம்  ஆண்டு  காலகட்டத்தில்  கம்யூனிஸ்டுகளின்  போராட்டம்  கடுமையாக  இருந்தது.  இதன்  விளைவு,  நாட்டின்  பொருளாதாரம்  பாதிப்புற்ற  நிலை.  இராணுவ  நடவடிக்கைகளால்  மட்டும்  கம்யூனிஸ்டுகளின்  செல்வாக்கை,  ஆயுதப்  போராட்டத்தைத்  தோற்கடிக்க  முடியாது  என்பதை  உணர்ந்திருந்த  காலனித்துவ  பிரிட்டன்  வேறு  ஆக்ககரமான  வழிகளையும்  காணமுற்பட்டது.

பிரிட்டனின் ஹைகமிஷனர்  சர்  ஹென்றி  கர்னி,  பிரிட்டனின்  பல  காலனிகளை  நிர்வகித்த  அனுபவம்  பெற்றவர்;  மற்றும்,  காலனி  மக்களின்  உரிமைகளில்  கவனமிக்கவர்  என்ற  கருத்து  பரவலாகவே  இருந்தது.  எனவே, சர்  ஹென்றி  கர்னி  மலாயாவுக்கானத் ஹைகமிஷனராம  நியமிக்கப்பட்டதும்  மலாயாவை  மருட்டிக்கொண்டிருந்த  கம்யூனிஸ்ட்  பிரச்சினையை,  கருத்தில்  கொண்டு  அரசியல்,  பொருளாதார  சமுதாய  நிலைகளில்  மக்கள்  முன்னேற்றங்கள்  காண  வேண்டும்  என்பதில்  ஆர்வம் காட்டினார்  என்றும்  சொல்லப்பட்டது.  இப்படிப்பட்ட  காலனி மக்களின்  உணர்வுகளை  அறிந்து,  அவர்களின்  உரிமைகளைப்  பாதுகாக்கும்  திட்டங்களை  வகுத்து  அமலாக்கினால்  அது  கம்யூனிஸ்டுகளுக்கு  எதிரான  இராணுவ  நடவடிக்கைக்குப்  பக்கபலமாக  இருக்கும்  என்பதும்  அவரின்  கருத்தாகும்.  இந்தக்  கொள்கையை  மனதிற்கொண்டுதான்  உள்ளாட்சித்  தேர்தலுக்கான  ஏற்பாடுகளை  மேற்கொண்டார்.  இதன்  வழி  அரசியல்  உரிமையில்  உள்நாட்டு  மக்களின்  அதிகாரத்தை  அதிகரிப்பது  மட்டுமல்ல,  மலாயாவின்  அரசியல்  உணர்வுமிகுந்தவர்களுக்கு  நிர்வாக  அனுபவம்பெறவும்  உதவும்  என்பதாகும்.

கர்னியின்  அடிப்படை  நோக்கம் கம்யூனிஸ  எதிர்ப்பு.  ஜனநாயகத்தில்  நம்பிக்கை  வலுவடையும்பட்சத்தில்  கம்யூனிஸ்டுகளின்  வன்முறைவழி  அரசியல்  அதிகாரத்தைப்  பெறலாம்  என்பதற்கு  சவாலாக  அமையும்.  அதுதான்  முக்கியம்.  மலாய்  ஆட்சியாளர்கள்  உள்ளாட்சித்  தேர்தல்  நடத்தப்படுவதை  ஆதரிக்கவில்லை.  அவசரகாலத்தை  முடிவுக்குக்  கொண்டு  வருவதில்  தீவிரம்  தேவை  என்பதே  அவர்களின்   கருத்தாக இருந்தது.  கர்னி  மசியாது,  1951ஆம்  ஆண்டில்  உள்ளாட்சித்  தேர்தல்  நடத்தும்  முடிவில்  உறுதியாக  இருந்தார்.  பல  நகராட்சி  மன்றங்களுக்கானத்  தேர்தல்கள்  நடந்தன.  உள்ளாட்சி  நிர்வாகத்தில்  பெரிதளவு  ஆர்வம்  காட்டாத  மக்கள்  மத்தியில்  இந்தப்  புது  அரசியல்  நடவடிக்கை  புத்துணர்வை  ஏற்படுத்தியது.

இந்த  உள்ளாட்சித் தேர்தல்  அறிவிக்கப்பட்டபோது  கோலாலம்பூரில்  அம்னோவும்,  மசீசவும்  இணைந்து  தேர்தல்  களத்தில்  இறங்கின.  மஇகா  அப்பொழுது  டத்தோ  ஓனின்  மலாயா  சுதந்திர  கட்சியோடு  இணக்கமாக  இருந்தது.  அம்னோவை ஆரம்பிப்பதில்  முக்கியமானவராக  இருந்த  டத்தோ  ஓன்  அம்னோவின்  இனவாதப்போக்கை  கைவிடும்படி  முன்வைத்த  கோரிக்கை  மறுக்கப்பட்டதால்  அவர்  புதுக்கட்சியை  ஆரம்பித்தார்.  துங்கு  அப்துல்  ரஹ்மான்  அம்னோவின்  தலைமைப்  பொறுப்பை  ஏற்றார்.  அம்னோ  தனது  இனவாத  கொள்கையை  கைவிடத்  தயாராக இல்லை  என்பது  தெளிவாயிற்று.  பிற்காலத்தில்  துங்கு அம்னோவின்  தலைமைப்  பதவியைத்  துறந்து  ஒதுங்கிய  வேளை  அம்னோ  மலேசியா  இஸ்லாமிய  நாடு  என்பதை  அவர்  மறுத்து,  மலேசியா  மத  சார்பற்ற  நாடு என்றார்.  கண்கெட்ட  பின்    சூரிய  நமஸ்காரம்  பலன்தருமா?

பினாங்கு  உள்ளாட்சித்  தேர்தலில்  டி.எஸ். ராமநாதனின்  தலைமையிலான மலாயா  தொழிற்கட்சி  போட்டியிட்டது.  ஸ்ரீலங்க  தமிழரான  இவர்  வெற்றி  பெற்றார்.  மலாயாவின்  முதல்  மேயர் (நகரத்  தந்தை)  என்ற  பெருமையும்  பெற்றார்.

நாட்டின்  நிர்வாகத்தில்  உள்ளாட்சி மன்றங்கள் மிகமுக்கியமானப்  பங்கை  வகிக்கின்றன.  அவை  மக்களின்  தேவைகளை  உணர்ந்து  செயல்படவேண்டும்.  கடந்த  காலத்தில்  உள்ளாட்சி  மன்றங்கள்  இடையே  ஒரு  பொதுவான  கொள்கை  இருக்கவில்லை.  எனவே  ஒவ்வொரு  உள்ளாட்சி  மன்றமும்  அதன்  பெரும்பான்மை  உறுப்பினர்கள்  அவர்கள்  சார்ந்த  கட்சிக்  கொள்கையை  அமல்படுத்துவதில்  தீவிரமாயிருந்ததாகக்  குற்றம்  சாட்டப்பட்டது.

1964ஆம்  ஆண்டு  மலாயா  மாநில மற்றும்     நாடாளுமன்றத்திற்கான  பொதுத்தேர்கல்களும் நடந்தன.  அது  மலேசியா  அமைந்தப்  பிறகு  நடந்த  முதல்  தேர்தல்  ஆகும்.  அப்போதைய  ஆளுங்கட்சி  கூட்டணிக்கு  பலத்த  போட்டியை  தரும்  வலிமைமிகுந்த  அரசியல்  இயக்கமாக  விளங்கியது  சோஷலிஸ்ட்  முன்னணி. இது  மலாயா  தொழிற்கட்சி,  மக்கள்  கட்சி  ஆகிய  இரண்டுமே  இணைந்து  தேர்தல்  களத்தில்  இறங்கி  படுதோல்வியைக்  கண்டன.

ஜனநாயக  மரபுகளுக்கு  இணங்க  தேர்தல்வழி  மக்களின்  கவனத்தைப்  பெறுவதை  விடுத்து  தெரு  போராட்டங்களில்  ஆர்வம்  காட்டத்  தொடங்கியது  மலாயா  தொழிற்கட்சி.  குறிப்பாக,  அதன்    கவனம்,  ஆர்வம்  இந்தத்  தெரு  போராட்டப்  புரட்சியில்  மிகுந்திருந்தது.  இந்த  போராட்டத்தின்  ஓர்  அங்கமாக   படிப்படியாக  உள்ளாட்சி  உறுப்பினர்களின்  படிப்படியான  ராஜிநாமாக்கள் அமைந்திருந்தது. அதாவது  இவ்வாறு  உறுப்பினர் ராஜிநாமா  செய்யும்பொழுது  அந்தத்  தொகுதிக்கு  இடைத் தேர்தல்  நடத்தியாக  வேண்டும்.  அதை  வைத்து,  தனது  அரசியல்  நோக்கத்தை  விரிவுபடுத்தமுடியும்  என்று  நம்பி  செயல்பட்டது  தொழிற்கட்சி.  இந்த  அடிக்கடி  நடந்த  படிப்படியான  ராஜிநாமா  அதைத்  தொடர்ந்து  இடைத்  தேர்தல்களைப்  பற்றி  குறிப்பிட்ட அன்றையப்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  எதிர்க்கட்சி,  குறிப்பாக  மலாயா  தொழிற்கட்சி  ஜனநாயகத்தில்  நம்பிக்கை  கொண்டிருக்கவில்லை  என்றார்.

அடுத்தடுத்து  உள்ளாட்சிமன்றத்  தேர்தல்  செலவை அதிகரிக்கும் அது  பலனளிக்காதப்  போராட்டம்  எனலாம்.  ஆனால்,  இங்கே  மற்றுமொரு  உண்மையை  கவனிக்கவேண்டும்.  பெரும்பான்மையான  உள்ளாட்சி  மன்றங்களை  எதிர்க்கட்சிகளின்  கையில்  இருந்தன.  அதுவும்  கூட்டணிக்கும்,  கூட்டணி  அரசுக்கும்  கசப்பாக  இருந்தது  எனலாம்.  நிற்க,  எல்லா  உள்ளாட்சிமன்றங்களும்  பொதுவான  கொள்கையைக்  கொண்டிருக்கவில்லை.  உள்ளாட்சிமன்றங்கள்  மாநில  அரசின்  கட்டுப்பாட்டிற்கு  உட்பட்டவையாக  இருந்தாலும்,  நகர்புறங்களின்  நிர்வாகம்  நகராண்மைமன்றத்திடமே  இருந்தது. இதுவும்  கூட்டணிக்கு  எரிச்சலைத்  தந்திருக்கக்கூடும்.  எனவே,  தொழிற்கட்சியின்  வித்தியாசமானப்  போராட்டம்  கூட்டணி  அரசுக்கு  உள்ளாட்சி  தேர்தலை  நிறுத்தும்  வாய்ப்பை  நல்கியது.  தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்பட்ட  உள்ளாட்சித்  தேர்தல்கள்  காலப்போக்கில்  நிரந்தரமாக நிறுத்தப்பட்டன.

உள்ளாட்சி  நிர்வாகத்தை  சீர்படுத்தி,  எல்லா  ஊராட்சிமன்றங்களும்  பொதுவான  விதிமுறைகளைப்  பின்பற்றும்  பொருட்டு  தேசிய  அளவில்  அவை  அமலாக்குவதில்  நாடாளுமன்றம்  கவனம்  செலுத்தியது.  1976ஆம்  ஆண்டு  உள்ளாட்சிமன்ற  சட்டம்  அமல்படுத்தப்பட்டது.  உள்ளாட்சிக்கானத்  தேர்தலுக்கு  அதில்  இடமளிக்கப்படவில்லை.

1976ஆம்  ஆண்டு  உள்ளாட்சி  சட்டம்  அமல்படுத்தப்பட்டதிலிருந்து மக்கள்  விருப்பத்திற்கு இடமளிக்காமல்  ஆளும்  கட்சிக்கு  ஆதரவு  தருவோருக்கு  முதலிடம்  தந்து  உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டார்கள். இந்த  நியமன  உறுப்பினர்கள்  யாவரும்  நாணயமான  முறையில்  நடந்து கொள்ளவில்லை.   ஆனால்,  உள்ளாட்சிமன்றங்கள்  ஆளும்  கட்சியின்  கைபாவையாகச்  செயல்படுவதாகக்  கூறப்பட்டது.  அங்கேயும்  ஊழல்  மலிந்துவிட்ட  நிலை.  எனவே,  இப்படிப்பட்ட  அழிவுச்  செயல்களில்  இருந்து  மீட்கப்பட்டு  மக்களுக்கு  தங்களின்  ஜனநாயக  உரிமையை  திருப்பி  ஒப்படைப்பதுதான்  உள்ளாட்சி  தேர்தல்  நோக்கம்.  நகராண்மைக்  கழகங்களில்  ஜனநாயகம்  மீண்டும்  திரும்பும் – ஊழல்கள்,  அதிருப்தி  மிகு  நிர்வாகம்,  அதிகாரத்  திமிர்  போன்றவை  அடக்கப்படலாம்.  மக்கள்  தங்கள்  உரிமையைச்  செவ்வனப்  பயன்படுத்தலாம்.