இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அளிக்கப்பட்டால், அது அந்த விருதுக்கு பெருமையாக அமையும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சென்னயில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு ஆகஸ்ட் 22-ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் சென்ற இராஜேந்திரன், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளரளிடம் பேசியபோது, மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களை தமிழகத்துடன் இணைத்திருப்பது கலைஞரின் இலக்கியப் படைப்புகள்தான் என்றார்.
அவர் ஆட்சியில் இருந்த காலத்திலும் சரி, இல்லாத வேளையிலும் சரி, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் சந்திப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டிய தலைவர் கலைஞர் மு.கருணாநிதி.
ஆனால், கலைஞருக்கு இந்த இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே!.
இதற்கு முன்பு தமிழகத்தின் முதல்வர்களாக இருந்த காமராஜருக்கும், எம்.ஜி.ஆர்.கும் இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. இதற்கான காரணங்களில் அரசியல் கலந்த பார்வையும் உள்ளதாக கருதப்படுகிறது.
கலைஞரைப் பொருத்தமட்டில் அவர் வடநாட்டு ஆதிக்கத்தை முற்றாக எதிர்த்தவர். குறிப்பாக இந்திமொழி எதிர்ப்பில் முன்னிலை வகுத்தவர். தமிழ்மொழிக்காக வாழ்ந்தவர்.
அதோடு தற்போது தமிழ்நாட்டில் அவருடைய கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த சூழலில் மத்திய அரசு கலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் இல்லையென்று கூறலாம்.
எப்படியிருப்பினும், கலைஞருக்கு இந்த விருது வழங்கப்பட்டால் உலகத் தமிழர்கள் அனைவரும் உளம் மகிழ்வார்கள்.
‘ஞாயிறு’ நக்கீரன்