கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை எதிர்கொண்டு அடையாள ஆவணங்களுக்காக இதுவரை பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3853 பேர். மாறாக, தேசிய முன்னணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிகளாலும் தடை-களாலும் அடையாள ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களையும் விண்ணப்பித்தும் கடந்த 60 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டவர்களையும் சேர்த்தால் அடையாள ஆவணம் இல்லாத மக்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை எட்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் அடையாள ஆவண சிக்கலை எதிர்கொண்டிக்கும் இந்தியர்கள், தங்களின் அடையாளப் பத்திரங்களை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகளைச் சற்று எளிமைப்படுத்தவும் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் துயரத்தைத் தணிக்கவும் உரிய வழிமுறை குறித்து உள்துறை அமைச்சுடன் தேசிய ஒற்றுமைத் துறை சார்பில் தற்பொழுது ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பன்னிரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன், சிலாங்கூர் மாநிலத்தில் 40 ஆயிரம் இந்தியச் சிறார்கள் பிறப்புப் பத்திரம் இல்லாமல் இருக்கின்றனர் என்று அப்போதைய மந்திரி பெசார் டாதோஸ்ரீ முகமட் கிர் தோயோ குறிப்பிட்டதுடன், இந்தச் சிக்கலைக் களைய ஒரு சிறப்புக் குழுவை அமைக்கும்படி உள்துறை அமைச்சரை கிர் தோயோ கேட்டுக் கொண்டது தேசிய முன்னணி ஆதரவு நாளேடான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்-இல் 21-01-2008 ஆம் நாள் வெளியானது.
அடையாள ஆவணம் இல்லாத இந்தியப் பிள்ளைகள் மட்டுமே அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே 40,000 பேர் என்றால் அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பதை, இது குறித்து இப்போது அறிக்கைவிடும் தேசிய முன்னணி தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதுவும் ஒரு மாநிலத்தில் மட்டுமே இத்தகைய நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள், கணவன்-மனைவி பிரச்சினையால் கைவிடப்பட்ட பிள்ளைகள், படிப்பறிவு இல்லாததால் பிறப்புப் பத்திரம் எடுக்கப்படாத பிள்ளைகள், வெளிநாட்டுப் பெண்களை மணம் புரிந்த தம்பதியரின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் வளர்ந்தபின் அடையாள ஆவணம் இல்லாததால் திருமணப் பதிவு செய்யாமலும், கோயில்களில் குருக்களின் முன் தாலி அணிந்து கொண்டும் கணவன் மனைவியாக வாழும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு வாழ்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இப்படிப்பட்டோரின் பிள்ளைகள் வளர்ந்தபின் வெட்கம், அவமானத்தின் காரணமாகவும் வெளியில் தெரிந்தால் காவல்துறையினரோ அல்லது பதிவுத் துறை அதிகாரிகளோ பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சத்திலும் பெரும்பாலும் வெளியில் சொல்வதில்லை. இப்படித்தான் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பெருகிக் கொண்டே இருக்கிறது.
தேசிய முன்னணி அரசின் அப்போதைய குடிநுழைவுத் துறை துணைப் பொதுத் செயலாளர் ராஜா அசாகான் ராஜா அப்துல் மானாப், நாட்டில் அடையாள ஆவணம் இல்லாதோரின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கிறதென்று சொன்ன தகவல் ஸ்டார் நாளேட்டின் இணையப் பக்கத்தில் 2011, ஜனவரி 23-ஆம் நாள் வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹிண்ட்ராஃப் எழுச்சிக்குப் பின் அடையாள ஆவண சிக்கல் குறித்து சமுதாயத்தில் பேரளவில் பேசப்பட்டதால், மஇகாவும் தன் பங்கிகிற்கு பிரதமர் துறை அலுவலக ஒத்துழைப்புடன் ‘மை டஃப்தார்’ இயக்கத்தை மேற்கொண்டது. 2011 பிப்ரவரி 19-ஆம் நாள் தீபகற்ப மலேசியாவில் பல இடங்களில் தொடங்கப்பட்ட இந்தப் பதிவு இயக்கத்தின்வழி எட்டே நாட்களில் 14,882 விண்ணப்பங்கள் பதியப்பெற்றன. ஆனாலும், பல்வேறு காரணங்களை சொல்லியும் தேவையான ஆவணங்கள் இல்லை என்றும் இந்த விண்ணப்பங்களில் பல தேசிய முன்னணி அரசால் ஒதுக்கப் பட்டன.
அப்படிப்பட்ட இந்தியர்கள் எல்லாம் இந்த நாட்டில் பல்வேறு துன்பத் துயரத்தை எதிர்கொண்டு இன்றளவிலும் வாழ்ந்துதான் வருகின்றனர். தேசிய முன்னணி அரசால் பல்லாயிரக் கணக்கில் புறக்கப்பட்டவர்களின் நிலையைப் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல், தேசியப் பதிவு இலாகாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிகையை மட்டும் கருத்திற் கொண்டு இப்பொழுது அறிக்கை விடுகின்றனர். அவர்களுக்கு பாதிக்கப் பட்டுள்ள மக்களின் அவலத்தைப் பற்றி என்றுமே கவலையில்லை.
எனவே, கடுமையான விதிகளைத் தளர்த்தி, எவரையும் கைது செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் அடையாள ஆவணம் இல்லாத மக்கள் அனைவரையும் பதிவு செய்வதற்காக அழைத்தால், அனைவரும் தயக்கம் இன்றி முன்வருவார்கள்.
அப்பொழுதான், அடையாள ஆவணங்கள் இல்லாதவர்களின் முழு விவரமும் எண்ணிக்கையும் சரியாகத் தெரியவரும் என்றும் ஒருவேளை இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகவும் இருக்கக்கூடும் என்றும் .வேதமூர்த்தி, இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.