குறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின் கண்ணியத்தை மகாதிர் விற்றுவிட்டார்

கருத்து | பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கிற்கு, குறைந்தபட்ச சம்பளமாக RM1,050 அறிவித்தது, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் கௌரவத்தை விற்பனை செய்ததற்கு ஈடானது, அத்தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது ஒரு பயங்கர மோசடி!

மகாதிர் பிரதமராக இருந்த 22 ஆண்டுகளில், குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தை அமலாக்கம் செய்ய அனுமதிக்கவில்லை; அவரது மகன்கள் மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று, மில்லியனர்களாக இருந்த போதினும் கூட.

2012-ல், குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இயற்றப்பட்டபோது, சாதாரண மக்களும் தொழிற்சங்கங்களும் மகிழ்ச்சியடைந்த வேளை, மகாதிர் முற்றிலும் அதிருப்தி அடைந்தார்.

மகாதிர் 2.0, பெரிதாக மாறியதாகத் தெரியவில்லை.

ஜூலை 17-ம் தேதி, தேசியக் குறைந்தபட்ச சம்பளக் கவுன்சில் (எம்.ஜி.எம்.என்.) நடத்திய அவசரக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட குழுக்களில் மலேசிய சோசலிசக் கட்சியும் (பி.எஸ்.எம்.) இருந்தது.

அக்கூட்டத்தில், 2018 ஜூலை 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் RM1500 –ஆக உயர்த்தப்பட வேண்டுமென பி.எஸ்.எம். முன்மொழிந்தது.

குறைந்தபட்ச சம்பள மதிப்பாய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், இறுதியாக, கடந்த ஜூலை 1, 2016-ஆம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அதே கூட்டத்தில், மலேசியத் தேசியத் தொழிற்சங்கம் (எம்.டி.யூ.சி), குறைந்தபட்ச சம்பளம் RM1800 கோரிக்கையை முன்வைத்தது.

தொடக்கத்தில், பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையை மேற்கோள் காட்டி, எம்.ஜி.எம்.என். தீபகற்ப மலேசியாவிற்குக் குறைந்தபட்ச சம்பளமாக RM1250 முன்மொழிந்தது. ஆனால், மலேசியா முழுவதும் சம்பளம் தரநிலைப்படுத்தப்பட வேண்டுமானால், நாடு முழுவதும் RM 1170-ஐ முன்மொழிந்தது.

இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், முதலாளிகள் ஜனவரி 2019-ல் RM50 அதிகரிக்க முன்மொழிந்துள்ளதுதான், அதாவது 2019 தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் RM1050 என்று பொருள்.

நேற்று, முதலாளிகள் முன்மொழிந்ததை மகாதீர் அறிவித்தார்.

தொழிலாளர்கள் நலன்களை ஏலமிட்டு, துன் மகாதிர் முழுமையாக வியாபாரம் செய்கிறார் என இதற்கு அர்த்தம் அல்லவா?

அமைச்சரவைதான் இறுதி முடிவை எடுக்கும் என்றால், எம்.ஜி.எம்.என். இருப்பது நியாயமற்றது, தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்.

எனவே, எம்.ஜி.எம்.என். உறுப்பினர்கள், ஒரு கௌரவமான நடவடிக்கையாகக் கருதி, தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென பி.எஸ்.எம். அழைப்பு விடுக்கிறது. ஏனெனில், முதலாளிகள் மற்றும் செல்வந்தர்களின் குரல்கள் மட்டுமே மதிக்கப்படுகிறது, கவனம் செலுத்தப்படுகிறது, கேட்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, எம்.ஜி.எம்.என். நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கிவிட்டது, குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு இடம் இல்லாத பட்சத்தில். அந்தப் பணத்தை வேறொரு அனுகூலமான, பயனளிக்கும் விஷயத்திற்கு பயம்படுத்தி இருக்கலாம்.

‘மாண்புமிகுகளின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்’

ஹராப்பானின் தேர்தல் அறிக்கையின் படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் RM1550-ஆக சம்பளம் உயர்த்தப்பட, RM450 அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

மகாதீர் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதால், அவர் பதவிக்கு அடுத்து வரவிருப்பவருக்கு இது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

அடுத்தப் பிரதமரின் தலைவிதியைப் பற்றி மகாதிர் கவலைப்படவில்லை என்று நான் நம்புகிறேன். இதில் மிகவும் கவலை அளிப்பது என்னவென்றால், பிஎன் காலத்தின் போது குறைந்தபட்ச சம்பளம் RM100-ஆக உயர்தப்பட்டதுதான்.

ஹராப்பான் நம் நாட்டு தொழிலாளர்களை ஏமாற்றமடைய செய்துவிட்டது.

பிரதமரின் அவமதிப்புக்குரிய இந்த அறிக்கையை எதிர்த்து நிற்க, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் கௌரவத்திற்காகவும் இதுவரை குரலெழுப்பி வந்த ஹராப்பான் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? இல்லை வாய்மூடி கிடக்கப் போகிறார்களா?

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய பிரதமரின் அறிக்கையை எதிர்த்து நிற்க அவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா?

அவர்கள் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்து, தொழிலாளர்களின் பக்கம் நிற்கப் போகின்றனரா? அல்லது மகாதிர் மற்றும் அவரது பணக்கார நண்பர்களை வணங்கி, வாய்மூடி கிடக்கப் போகின்றனரா?

நான், எம். குலசேகரன், அப்துல்லா சானி, சார்லஸ் சாண்டியாகோ, முகமத் சாபு, ஹனிஃபா மைடின், பி. ராமசாமி, மரியா சின் அப்துல்லா, ஆர்.சிவராசா, தியான் சூவா மற்றும் நூருல் இஸ்ஸா போன்ற தொழிலாளர்களின் நலனுக்காக முன்னர் குரல் கொடுத்து வந்த மாண்புமிகு நண்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

எஸ்.அருட்செல்வன்

பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர்