தீபகற்ப மலேசியாவில் வாழும் மூவின மக்கள், சபா-சரவாக் வாழ்மக்கள் என அனைத்து மக்களும் இந்த நாட்டில் சுபிட்சமாக வாழ வேண்டும்; குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் தேசிய நீரோட்டத்தில் தங்களை முழு மனதுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே இலக்கும் இலட்சி-யமும் ஆகும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி செப்.23 ஞாயிறு வசந்தம் நேர்காணல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய காலத்தில் ஒரு சிறிவ வட்டத்தில் பொது வாழ்க்கை இணைந்த சொந்த வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த எனக்கு, முந்தைய ஆட்சியில் இந்திய சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டுதான் நான் போராட்டவாதியாக மாற நேர்ந்தது என்று குறிப்பிட்ட தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வேதமூர்த்தி, 2013 பொதுத் தேர்தலுக்கு முன் இந்திய சமுதாப் பிரச்சினைகளைப் பற்றி 22 முறை நம்பிக்கைக் கூட்டணியுடன் பேச்சு நடத்திய பின்னும் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில்தான், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அனுப்பிய தூதர்களுடன் ஓர் இடைக்கால இணக்கம் காண ஒத்துக் கொண்டோம் என்றார். ஆனால், 2013 மே 5-பொதுத் தேர்தலுக்குப் பின் ஆள்பலமும் கிடைக்க வில்லை; நிதி ஆதாரமும் கிட்டவில்லை. இந்திய சமுதாயத்திற்கு நாங்கல்கள்தான் எல்லாமும் என்ற நிலையில் இருந்தவர்களும் முட்டுக்கட்டை-யாக இருந்ததால் எட்டு மாதங்களுக்குப் பின் துணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக நேர்ந்ததாக விளக்கம் அளித்தார்.
அந்த நேரத்தில் இந்தியச் சமுதாயத்தில் எழுந்த பிரதிபலிப்பை சரிகட்டுவதற்-காக செடிக் அமைப்பை அவசரமாக ஏற்படுத்தினார் முன்னாள் பிரதமர். பொது அமைப்புகளின்வழி நல்ல தொண்டாற்றுபவர்கள் இந்த சமுதாயத்தில் இருக்கும் அதேவேளையில் வெறும் காகிதத்தில் மட்டும் எல்லாவற்றையும் காட்டிவிட்டு மானியத்தை குறிவைக்கும் போக்குடையவர்களும் உள்ளனர். இவர்கள் எல்லாம் அடையாளம் காணப்படாமல் செடிக்-வழி நிதி பரிவர்த்தனை செய்யப்பட்டது. தற்பொழுது, செடிக் அமைப்பு தன்னுடைய அமைச்சின்கீழ் வந்திருப்பதால், அந்த நிலையெல்லாம் சீர்செய்யப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் புதிய பெயருடன் செடிக் அமைப்பு புதுப்பாங்குடன் செயல்படத் தொடங்கும் என்றும் அந்த நேர்காணலின்போது அமைச்சர் விவரித்தார்.
குறிப்பாக, இந்திய சமுதாயத்தின் கல்வி-சமூக மேம்பாட்டிற்கும் வர்த்தக வாய்ப்பு குறித்தும் திட்டமிட்டு வருகிறோம். வரும் வாரத்தில் மேலை நாட்டு பயணம் மேற்கொள்ள இருக்கும் சூழ்நிலையில், இங்குள்ள இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வர்த்தக நிதி முதலீட்டிற்கு அடித்தளம் இடப்படுவது பற்றியும் சிந்தித்து வருவதாக அவர் சொன்னார்.
இப்பொழுது புதிய ஆட்சி அமைந்ததும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இது உண்மைதான்; ஆனாலும் 61 ஆண்டுகளாக இந்தியச் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை சீர் செய்ய கொஞ்ச காலம் ஆகும். எனவே, மக்கள் குறைந்தது ஓர் ஆண்டு காலத்திற்காவது எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக பி-40 பிரிவினர் மீட்சி, வேலை வாய்ப்பு, வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கைச் சூழல், அடையாள ஆவண சிக்கல் குறித்தெல்லாம் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். உள்துறை அமைச்சர் தற்பொழுது விடுப்பில் இருப்பதால், அடையாள ஆவண சிக்கல் குறித்து சற்று காத்திருக்க வேண்டி உள்ளது.
தவிர, இந்தியச் சமுதாயத்திற்காகவும் இந்து சமயத்திற்காகவும் மட்டும் குரல் கொடுக்கும் தனிப்போக்கு எங்களிடம் இருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப் படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை சிலர் புரிந்து கொள்வதில்லை. 1970-ஆம் ஆண்டுகளுக்குப்பின் ஏறக்குறைய எட்டு இலட்ச இந்தியர்கள் தோட்டப் புறங்களில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டதால் அவர்கள் தமிழ்க் கல்வியைத் தொடர முடியாத நிலை, இருப்பிட சிக்கல், வேலை வாய்ப்பின்மை, வழிபாட்டு இட சிக்கல் என்றெல்லாம் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
எனவே, இந்த நாட்டில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொத்தாம் பொதுவாக எடைபோடுவது பொருத்தமற்றது. தோட்டப் புறங்களில் இந்தியச் சமுதாயம் இருந்தபொழுது ஏராளமான கல்விமான்களும் நாட்டிற்கு பெருமையைத் தேடிந்தந்த தேசிய விளையாட்டாளர்களும் உருவாயினர் என்பதை எல்லாம் மறந்துவிட்டனர் என்ற ஆதங்கத்தையும் முன்வைத்தார் அமைச்சர்.
இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அமைச்சர் அவையில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் மட்டும்தான் தீர்க்க வேண்டும் என்பதில்லை. அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்களிடமும் தங்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வு காண முயற்சிக்கலாம். உதாரணத்-திற்கு கல்வித் துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் அனைத்து இன மக்களுமான அமைச்சர் என்பதை பொது மக்கள் உணர வேண்டும். அத்துடன், தத்தம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரையும் மக்கள் நாடலாம் என்றார். அதற்காக எங்களை நாட வேண்டாம் என்பது பொருளல்ல; அனைவரையும் வரவேற்க எந்த நேரத்திலும் காத்திருக்கிறோம் என்று சமுதாயத்திற்குச் சொன்னார் அமைச்சர்.
நாங்கள் எவ்வளவுதான் மக்கள் நலத் தொண்டாற்றினாலும் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் உறுதியான நிலைப்பாட்டிற்கும் இந்தியச் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் இந்தியச் சமுதாயத்தை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கவும் ஓர் அரசியல் இயக்கம் வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதியக் கட்சியைத் தொடங்கி அதன்பொருட்டு இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மக்களுக்கு முனைப்புடன் தொண்டாற்ற தயாராகி வரும் அதேவேளை, அதற்காக திட்டமிட்டும் வருகிறோம். எனவே, குறைந்தபட்சம் வரும் டிசம்பர் மாதம் வரையிலாவது இந்திய அமைச்சர்களுக்கு பொதுமக்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அந்த ஒரு மணி நேர வசந்தம் நேர்காணலின்போது போராட்டாவாதியாக இருந்து அரசியல் தலைவராக பரிணாமம் பெற்றுள்ள அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.