அறம் பிறழும் அரசியல்!

குடியாட்சியும் முடியாட்சியும் இணைந்த மலேசியாவில், அரசியலின் போக்கு பிறழ்ந்து வருகிறது. இத்தகைய நிலை, காலமெல்லாம் தொடர்வதுதான்; ஆனாலும், தற்பொழுது இந்த நிலை எல்லையை மீறுகிறது.

இதனால் பரிதாபத்திற்கும் பாதிப்பிற்கும் ஆளாகுபவர்கள் பொதுமக்கள்தான்.

கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அல்லாமல், பொது மக்களுக்கும் தலைமை ஏற்பவர்கள், தாங்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவும் பதவியில் இருப்பவர்களை அதில் இருந்து இறக்கவும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை தற்பொழுது தாராளமாக நிலவுகிறது.

உயர்க்கல்வி மாணவர் கடன் நிதியத்திடம்(PTPTN) இருந்து கடன் பெற்றவர்கள், அதைத் திரும்பச் செலுத்துவதில் தடுமாறவும் திக்குமுக்காடவும் செய்கின்றனர். காரணம், வேலை வாய்ப்பில் சுணக்கம், வாழ்க்கைச் செலவில் ஏற்றம், குறைந்த வருமானம் என்றெல்லாம் உயர்க்கல்வி முடித்த இளைஞர்கள் கைகளை பிசைந்து கொண்டு நின்றாலும் உயர் ஊதியத்துடன் நல்ல வேலையில் இருப்பவர்களும் தாங்கள் பெற்ற கடனைத் திரும்ப செலுத்த வேண்டும் என்ற அறிவு நாணயத்தை இழந்து வாழ்கின்றனர்.

இதனால்தான், சலிப்படைந்த முந்தைய தேசிய முன்னணி அரசு, உயர்க்கல்வி மாணவர் கடன் நிதியத்திற்கு கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை கருப்புப் பட்டியல் இட்டது.

இதைக் கடுமையாக எதிர்த்த நம்பிக்கைக் கூட்டணி, ஆட்சிக்கு வந்ததும் அத்தகைய கருப்புப் பட்டியலை நீக்கி, தன் கரிசனப் போக்கை வெளியிட்டது. கொஞ்ச நாள் கழித்து இப்பொழுது,”‘பிடிபிடிஎன் கடனை திரும்ப செலுத்தாத உங்களுக்கு வெட்கம் இல்லையா?” என்று இருக்கிற கொஞ்ச மானத்தையும் கப்பலில் ஏற்றும் விதமாக நடந்து கொள்கிறது நம்பிக்கைக் கூட்டணி அரசு.

தவிர, நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தை அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று புத்தம் புதிதாக இன்னொரு அதிரடியைப் படைத்துள்ளது நம்பிக்கைக் கூட்டணி; ஆனால், தேர்தலுக்கு முன் இப்படி யெல்லாம் பேசவில்லை.

அதைப்போலத்தான், பொருள்-சேவை வரி(ஜிஎஸ்டி)யை நீக்குவதைப் பற்றி ஆகா ஒகோ என்று முழங்கியவர்கள், விற்பனை-சேவை வரி குறித்து காதோடு காது வைத்த மாதிரி சொல்லிவிட்டு, இப்பொழுது விற்பனை-சேவை வரியை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.  இதனால், கடந்த ஆட்சியில் பொருள் விலையால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருந்தனரோ அந்த நிலைதான் இன்னமும் தொடர்கிறது. குறிப்பாக, சமைத்த உணவுப் பண்டங்களின் விலை முன்னைவிட அதிகமாக இருக்கிறது.

இதற்கெல்லாம் அவர்கள் சொல்லும் காரணம், அரசாங்க நிதி நிலைமை எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதுதான்; அப்படியே போகிற போக்கில் முன்னாள் பிரதமரை பழி சுமத்துவது. பணம் புரட்டுவதும் அதைச் சுருட்டுவதும்தான் கடமை என்றிருந்த கடந்த ஆட்சி சரியில்லை என்பதால்தான் மக்கள் உங்கள் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தனர். எனவே, ஆக வேண்டிய வேலையைச் செய்யாமல், இப்படியே எத்தனைக் காலத்திற்குத்தான் சமாளிக்கிறீர்கள் என்பதை வாக்காளர்கள் கவனத்தில் கொண்டுதான் வருகின்றனர்.

நாட்டின் மேம்பாட்டிலும் மக்களின் நலனிலும் அக்கறைக் கொள்வதைவிட, பதவிப் பரிமாற்றம்.., அதை நீட்டிப்பது.., பதவியைத் தற்காப்பது என்பதிலேயே நம்பிக்கைக் கூட்டணியின் முதல்நிலைக் கட்சியும் கடைநிலைக் கட்சியும் அடுப்படி சண்டை போட்டுக் கொள்வதும் தேர்தல் வாக்குறுதி என்பது ‘பைபிள்’ அல்ல என்பதும், நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை; அத்துடன் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் அதற்கு நெருக்கடி கொடுக்கவே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தோம் என்பதும் என்ன ஜனநாயகம் என்று தெரியவில்லை. பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக நிறைவற்ற முடியாதது என்று தெரிந்தும்  மக்களிடத்தில் உறுதி அளிக்கலாம் என்னும் புதிய அரசியல் இலக்கணத்தை உருவாக்கும் புதிய போக்கு துளிர்விட்டு கிளைவிட்டுள்ளது.

இத்தகையப் போக்கு இங்கு மட்டும் இல்லை; எங்கும் இடம்பெறுகிறது;

2014 தொடக்கத்தில் “வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கருப்பு பணத்தை மீட்டு வந்து, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைச் செலுத்துவோம்” என்றார் நரேந்திரமோடி. ஆனால், பதவிக்கு வந்தபின், அதைப்பற்றி வாயேத் திறக்கவில்லை. இப்பொழுது, ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயில், நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை; அதனால் அப்படி சொன்னோம் என்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், தேர்தலுக்கு முன் மோடி அப்படி சொல்லவே இல்லை என்று அந்தக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவரான தமிழிசை சொன்னதுதான். பழுத்த காங்கிரஸ்காரரான குமரி அனந்தனுக்குப் பெண்ணாகப் பிறந்த இந்தத் தமிழிசை, இந்த அளவிற்கு பொய்யும் பித்தலாட்டமும் புரிவது எதற்காக?

உலகெங்கும் இப்படி பொய்யுரைத்து அரசியல் புரிவதற்கான போக்கு தொடர்வது, உலக அளவில் ஜனநாயகத் தன்மை நசிந்து வருவதைக் காட்டுகிறது.

  • ஞாயிறு’ நக்கீரன்