டாக்டர் ஜெயக்குமார் : புதிய தனியார் மருத்துவமனைகளை அரசாங்கம் முடக்க வேண்டும்

புதிய தனியார் மருத்துவமனைகள் நிர்மாணிக்கப்படுவதை, அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் கூறுகிறார். இந்நடவடிக்கை அரசாங்க மருத்துவமனைகளின் சேவைத் தரம் மோசமடைவதை நிறுத்தும் எனத் தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளின் அதிகரிப்பு, அரசாங்கப் பொது மருத்துவமனைகளில் இருக்கும் நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கையை இன்னும் குறைக்க வழிவகுக்கும் என்று மருத்துவருமான அவர் கூறினார்.

“புதிய தனியார் மருத்துவமனைகள் தங்கள் நிபுணத்துவ டாக்டர்களை எங்கிருந்து பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

“அவர்கள், அரசாங்க மருத்துவமனைகளில் இருந்துதான் இழுப்பார்கள், இதனால், அரசாங்க மருத்துவமனைகளில் நிபுணத்துவ டாக்டர்கள் பற்றாக்குறை பிரச்சினை முடிவடையாது.

“நம்மால் அரசாங்க மருத்துவமனைகளின் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையை ஒருபோதும் நிறுத்த முடியாது,” என நேற்று, ‘கேலென் சென்டர் ஃபோர் ஹெல்த் & சோஸியல் போலிசி’ (கேலன் சுகாதார மற்றும் சமூகக் கொள்கை மையம்) எனும் ஒரு சுகாதார நலன்புரி குழுவினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

தனியார் துறைக்குச் சென்றுவிடும் பெரும்பாலான மூத்த மருத்துவர்கள், புதிய டாக்டர்களைப் பயிற்றுவிப்பதில் இருந்து தானாகவே தங்களை ஒதுக்கிக் கொள்வர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரசாங்க சேவையில் இருக்கும் மூத்த மருத்துவர்களைத் தக்க வைக்க, அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

“தனியார் மருத்துவமனைகளில் நீங்கள் சிறந்த ஊதியத்தைச் சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான், ஆனால் இதனால், நீங்கள் புதிய மருத்துவர்களுக்குப் பயிற்சியளிப்பதை நிறுத்திவிட்டீர்களே.

“இதனால் என்ன நடக்கிறது? அரசு மருத்துவமனைகளில் குறைந்த நிபுணர்களே இருப்பார்கள். இதனால், அங்கு வரும் நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

“பிரச்சனை அதோடு முடிவதில்லை, அரசாங்க மருத்துவமனைகளுக்கு, இந்த நிபுணர்களை நம்பி சிகிச்சைக்குச் செல்லும் ஏழை (பி40) மக்கள், பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். காராணம், அவர்களால் அதிகப் பணம் செலுத்தி, தனியார் மருத்துவமனையில் இருக்கும் நிபுணர்களைத் தேடிச் செல்ல முடிவதில்லை,” என்றார் ஜெயக்குமார்.

சுகாதார அமைச்சின் ‘சமூகநலக் காப்பீட்டுத் திட்டம்’ கவலையளிக்கும் ஒரு திட்டம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு இடையிலான உறவு அதில் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

“RM10,000 பாதுகாப்புத் தொகை, தொடக்கத்தில் உதவியாக தோன்றலாம், ஆனால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கட்டணம், RM10,000 தொகையை எளிதில் கடந்துவிடும் என்பதை பி40 மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.”

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி, அரசு மருத்துவமனைக்குத் திரும்புவது கடினமானது, அது அவர் நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்தது. இதனால் ஏற்கனவே நோயினால் அவதிப்படும் ஒருவர், மேலும் கடினமான நிலைக்கேத் தள்ளப்படுவார்,” என்று அவர் கூறினார்.

டாக்டர் மகாதிர் முகமட், முன்பு பிரதமர் பதவியில் இருந்தபோது, அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்கள் (ஜி.எல்.சி.) சொந்தமாக மருத்துவமனைகளை எழுப்ப அனுமதித்ததால் ஏற்பட்ட ஒரு தவறு அது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“டாக்டர் மகாதிர் அதை அனுமதித்தது தவறு என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஜி.எல்.சி.கள் மருத்துவமனைகளில் இருந்து இலாபம் ஈட்டுவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளன,” என்று மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மலேசியாவில் மருத்துவச் சேவைகள் “பெரிய தொழிலாக”, பெறும் பணம் சம்பாதிக்கும் இடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“மற்ற நாடுகளில், அவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு மனித உரிமை என்று பேசுகின்றனர். ஆனால், நம் நாட்டில்…”

கடந்த ஆகஸ்ட் மாதம், அடுத்த ஆண்டு தொடக்கம் பி40 மக்களுக்கு ஒரு சமூக சுகாதார காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

இத்திட்டம் பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையில் ஒரு பாகமாகும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளை எண்ணி, சுகாதார ஆர்வலர்கள் பலர் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான ஆய்வுகள் முடிவடையாத நிலையில், இத்திட்ட அமலாக்கத்தைத் தாமதப்படுத்த வேண்டுமெனவும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஹராப்பான் அரசாங்கம், அதன் முடிவில் ஏன் அவசரப்படுகிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.