வல்லினம் தனது 10 ஆண்டுகளின் நிறைவை ஒட்டி இவ்வருடம் வெளியீடு செய்த 10 நூல்களில் ஐந்தினை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வெளியீடு செய்துள்ளது.
நவம்பர் 18-இல் தனது பத்தாவது கலை இலக்கிய விழாவைக் கொண்டாட இருக்கும் வல்லினத்தின் இந்த அறிய செயல் பாராட்டத்தக்கது.
சென்னை மற்றும் மதுரை வெளியீடுகளின் மூலம் தமிழக எழுத்தாளர்களான ஜெயமோகன், சு.வேணுகோபால், இமையம், சுனில் கிருஷ்ணன், பவா செல்லதுரை, இளங்கோ போன்ற ஆளுமைகளின் விமர்சனத்தில் மலேசியாவின் சமகால இலக்கியம் பரவலான தமிழக வாசகர் பரப்புக்குக் கொண்டுச்செல்லப்பட்டது.
ஜீவ கரிகாலன் பொறுப்பில் இயக்கும் யாவரும் எனும் பதிப்பகத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த வெளியீடுகளில் மலேசிய எழுத்தாளர்களான ம.நவீன், மா.சண்முக சிவா, சரவண தீர்த்தா, விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டதுடன் மலேசிய இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் தத்தம் ஏற்புரையில் வழங்கினர்.
தமிழகத்தில் வெளியீடு கண்ட இந்த நூல்கள் நவம்பர் 18-இல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் மலேசியாவிலும் அறிமுகம் காணும் என்கிறார் வல்லினத்தை வழி நடத்தும் ம.நவீன்.
மலேசியாவில் அயராத முயற்சியுடனும் ஆழ்ந்த விமர்ச கண்ணோட்டத்துடனும், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வல்லினம் தொடர்ந்து தனது அரிய இலக்கிய பணியை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.