இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு (22.11.2018) பிறகு 147 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் தரை மட்டமாகி மண்ணோடு மண்ணாய் தவிடு பொடியாகும் அபாயத்தில் உள்ளது.
பண பலமில்லாத , அதிகாரமில்லாத ஆலய நிர்வாகமும், சில நல்ல உள்ளங்களும் தங்களால் இயன்ற மட்டும் அவர்களின் சக்திக்கு மீறி இந்த ஆலயத்தை அதே இடத்தில நிலை நிறுத்த அள்ளும் பகலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பறந்து விரிந்த ரப்பர் தோட்டம், ஆங்காங்கே நீண்டு கிடந்த சின்னஞ் சிறு வீடுகள்.பாட்டனும் பூட்டனும் வெற்றுக்கால்களோடு உலா வந்த செம்மண் சாலைகள்.
பச்சிளம் சிசுக்களை நம்பிக்கையோடு தாய் மார்கள் விட்டுச் சென்ற ஆயாக் கொட்டகைகள். உழைத்து உழைத்து பின் உயிர்விட்ட எம் தமிழ் தேகங்கள் புதைக்கப்பட்ட அல்ல எரிக்கப்பட்ட இடுகாடும் சுடுகாடும் இன்று நவீன கட்டிடங்களின் காலடியில் சுவடுகளே இல்லாமல் போன மாயம்.இந்நாட்டின் வளர்ச்சிக்கு யாராலும் கவனத்தில் கொள்ளப்படாத நம் தியாகத்தின் தொடர்வுகள். இன்று மிஞ்சி நிற்பது இந்த மாரியம்மன் ஆலயம் ஒன்றுதான்.
எத்தனை திருமணங்கள்? எத்தனை பெயர் சூட்டு நிகழ்ச்சிகள்?
எத்தனை காது குத்து சடங்குகள்? எத்தனை திருவிழாக்கள்?
எத்தனை குட முழக்குகள்? எத்தனை இனிய நினைவுகள்?எத்தனை வரலாற்று பதிவுகள் அங்கே பிறந்து வளர்ந்த எம்குல தமிழ் இனத்திற்கு?
அத்தனையும் நவம்பர் 22 க்கு பிறகு தவிடு பொடியாகி மண்ணோடு மண்ணாய் நம் புதிய மலேசியாவின் பெருமையை பறை சாற்றும் உன்னத மஹோற்சவமாய் கிடைப்பதற்க் கரிய காட்சியாய் நம் முன்னே அரங்கேறப் போகிறது.
வாக்குகளை மாற்றி போட்டோம். ஆட்சியை பிரட்டிப் போட்டோம். நம் மீது இவர்களின் பார்வை திரும்பும் என்று.
மேடையில் முழங்கி. நம் பிரச்சனைகளை முன் வைத்து இன்று வரலாற்றில் புதுமையாய் 4 இந்திய அமைச்சர்கள் . என்ன பயன்?
உப்பு சப்பில்லாத பிரதிநிதித்துவம் ….60 ஆண்டுகள் நம் காதுகளுக்கு
புளித்துப் போன அதே …. அட போங்கையா….
அன்பான சகோதரர்களே இறுதியாய் இந்த ஆலயத்தை… இந்த வரலாற்று பொக்கிஷத்தை காப்பாற்றும் பனி நம் கைகளில்தான் இருக்கிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்…
ஆங்கிலேயன் நம் முன்னோர்களை தமிழகத்தில் இருந்து வேரோடு பெயர்த்து இங்கே கொண்டு வந்து நடு காட்டில் விட்டான். நம் பூர்விகம் அறியாமல் தெரியாமல் 4 ஆம் சந்ததியாய் நாம் நிற்கிறோம்.
இன்னும் 150 ஆண்டுகளில் தோன்றப் போகும் பச்சிளம் பாலகன் ஒருவன் கேட்பான் ‘ அப்பா இந்நாட்டில் நம் முன்னோர்கள் எங்கிருந்து பயணத்தை தொடங்கினார்கள்?’ என்று.
அவனை பார்த்து ‘ ஐயா சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் சீ பீல்டு என்ற தோட்டத்தில் இருந்துதான் இந்நாட்டில் நம் பயணம் தொடங்கியது. அந்த தோட்டம் இப்போது அங்கு இல்லை.
ஆனால் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்கள் வழிபட்ட மாரியம்மன் ஆலயம் அதே இடத்தில இன்றும் இருக்கிறது.
‘நான், என் அப்பா , என் தாத்தா, என் பூட்டனார் அவரின் தந்தை, என அனைவரது கால் சுவடுகளும் பட்ட இடம் அந்த ஆலயம். நிச்சயம் அங்கே உன் பாத சுவடுகளையும் பதிப்போம்’ என்று சீ பீல்டு தோட்ட சந்ததியினர் வரலாற்றை நிலை நிறுத்த வேண்டும் என்றால் அது உங்களின் கைகளில்தான் உள்ளது.
இந்த ஆலயம் உடைபடமால் அதே இடத்தில நீடித்து நிலைத்திருக்க ஒன்று திரளுங்கள்… நம் சரித்திரம் நம் கையில்… அரசியல் வாதிகளின் கைகளில் இல்லை.
கி.தமிழ்ச்செல்வன் – சீ பீல்டு ஆலய பாதுகாப்பு குழு உறுப்பினர்களில் ஒருவர்.