சீ பீல்டு அம்பாள்  தேர்வு வைத்திருக்கிறாள்!- சாமானியன்

சுமார் 147 ஆண்டுகள் வரலாற்று பின்னணியைக் கொண்ட சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் உடைபடும் ஆபத்தில் இருக்கிறது. மலேசிய இந்துக்களின் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த  அச்சுறுத்தல்.

இத்திரு நாட்டில் இந்து  ஆலயங்கள் முன்னேற்ற திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து பகடை காய்களாக உருட்டுப்படுவது நம் மனதை நோகடிக்கிறது.

அசைக்க முடியாத ஆல மரமாய் நின்ற பாரிசன் நேஷனல் அரசின் ஆணி வேரை நறுக்கி எரிய கம்போங் கருப்பையா , பாடாங் ஜாவா மாரியம்மன் உடைப்பு சம்பவம் ஆற்றிய பங்கை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியாது. அது ஒரு வரலாற்று பிழையாய்  அமைந்தது.

அந்த சமயத்தில் எதிர் அணியில் இருந்த இன்றைய அமைச்சர்கள் இன மத பேதமின்றி கொந்தளித்தனர். ஜீரணிக்க  முடியாத , எவ்வகையான காரணமும் கற்பிக்க முடியாத அநியாயமென்று நாடு முழுதும் கொதித்தெழுந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மலேசிய இந்தியர்கள் மத்தியில் இவர்கள் அவதார புருஷர்களாய் போற்றப்பட்டனர். வஞ்சிக்கப்பட்டு நெடுங் காலமாய் ஓரங்கட்டப்பட்டு கிடந்த இந்தியர்களின் கண்களுக்கு தங்களின் துயர் நீக்க தோன்றிய தேவ தூதர்களாய் தெரிந்தனர்.

காலம் உருண்டோடியது . வாக்காளர் பெருமக்கள் ஏற்படுத்திய அடுத்ததடுத்த ஊழி அலைகளால் அன்று எதிர் அணியில் இருந்தவர்கள் இன்று ஆட்சி பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

இந்தத்  தருணத்தில்தான் வரும் நவம்பர் 22ஆம் தேதி வரையில் சீ பீல்டு மஹா மாரியம்மன் ஆலயத்திற்கு கெடு விதித்திருக்கிறதாம் கட்டுமான நிறுவனம் ஒன்று.

நீதிமன்ற ஆணையை கையில் வைத்துக்கொண்டு, கலகத் தடுப்புப் போலீசார் துணைகொண்டு, நகராட்சி அதிகாரிகள் வரிந்து கட்டிக்கொண்டு 147 ஆண்டுகளாக எழுந்தருளி பல்லாயிரம் பக்தர்களின் அசைக்க முடியாத பக்திக்கு பாத்திரமான  அம்பாளை தூள் தூளாக நொறுக்கித் தரைமட்டமாக்க வந்தவர்களைத் திடமாக எதிர்த்து திருப்பி அனுப்பியது நம் இளைஞர்கள் சக்தி. இந்த சம்பவம் நிகழ்ந்தது   25 அக்டொபர்  2018-இல்.

அன்று நடந்து பேச்சு வார்த்தையின் போதுதான் 22 நவம்பர் 2018 வரை கொடுக்கப்பட்டிருக்கும் இந்த காலக் கெடு.

இந்த கெடு முடிவதற்குள் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்த தன்னார்வள நல்லுங்களும்  ஆலய பராமரிப்பாளர்களும் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சி நம் மனதை கசக்கி பிழியும் வேதனை அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

நிலைமை அவ்வாறிருக்க , நம் மனதில் தோன்றும் கேள்வி ஒன்றுதான்: எங்கே சென்றார்கள் அந்த அவதார புருஷர்களும் தேவ தூதர்களும்?

சீ பீல்டு ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த மீண்டும் மக்கள்தான் போராட்டமும் எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டுமா?

நிலைமையைக் கேள்விப்பட்டதும் விரைந்திருக்க  வேண்டாமா இன்று அதிகார ஆட்சியில்  மக்கள்   பிரதிநிதிகளாகவும் , அமைச்சர்களாகவும்,  முதல் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள். பிரச்னையை தங்கள் கையில் எடுத்து தீர்வை மக்களுக்கு அளித்திருக்க வேண்டாமா இந்நேரம்?

இன்று இந்நாட்டை பாரிசான் நேஷனல் ஆட்சி புரிவதாக ஒரு கற்பனை செய்து பார்த்தால் , எதிரணியில் இருந்திருக்க கூடிய இவர்கள்  இந்நேரம் எத்தனை எத்தனை அறிக்கைகள் , போராட்டங்கள் நடத்தி இருப்பார்கள்? நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் , ஐக்கிய நாடு சபை அலுவலகத்திற்கும் ,  நீதிமன்றத்திற்கும் , புத்திரா ஜெயாவிற்கும்  ஏன் மாமன்னர் அரண்மனைக்கும் நடையாய் நடந்திருக்க மாட்டார்களா?  நீதி கேட்டு கொக்கரித்திருக்க மாட்டார்களா?

ஆனால் இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு, சிறு முயற்சி எடுத்தாலே பிரச்சனைக்கு தீர்வை எட்டக் கூடிய நிலையில் இருந்து கொண்டு மௌனித்து கிடப்பதேனோ?

எங்கே மாற்றம் ? எங்கே தீர்வு ? எங்கே நீதி?

தமக்கு நேரமில்லை என்று ஒருவரும் , என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று ஒருவரும் , நீதிமன்ற ஆணையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று ஒருவரும்,  இது என் தொகுதியே இல்லை என்று ஒருவரும் கை விரித்தால் இந்த தன்னார்வள நல்லுங்களும் ஆலய பராமரிப்பாளர்களும் எங்கே செல்வார்கள்? நம் இந்திய சமூகம் எதிர்நோக்கி நிற்கும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வுகள் கிடைக்கும்?

சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் இன்றிருக்கும் அதே இடத்தில நீடித்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களா அல்லது பொதுமக்களா?

பொதுமக்கள்தான் தீர்வு காண வேண்டும் என்றால் ஆட்சி மாற்றத்தின் பலன்தான் என்ன?

காற்றோடும், நீரோடும், தீயோடும், ஆகாசத்தோடும் நிலத்தோடும் மறையும் வாக்குறுதிகளை நம்பி, நம்பி, நம்பி ஏமாந்த நம் சமூகத்திற்கு விடியால்தான் எப்போது?

இதோ சீ பீல்டு அம்பாள்  ஒரு தேர்வு வைத்திருக்கிறாள்.

மக்களின் பிரச்சனைக்கு தீர்வைத் தரும் அரசியல்வாதிகளா அல்லது ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்கு பிச்சை கேட்டு பதவி மோகம்  பிடித்த அரசியல் வியாதிகளா இவர்கள் என்று?

தேர்வு முடிவு எப்படி அமைய வேண்டும் என்று முடிவெடுக்க இன்னும் சிறிது அவகாசம் இருக்கிறது. மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.